Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts
Friday, October 8, 2010
என் திறன் உணரவைத்த எந்திரன்
எந்திரனை நேற்று மூன்றாம் முறையாய் பார்த்தபோது, முதல் இரண்டு முறையை விட பாசிட்டிவ்வாக தோன்றியது.
ஏ.ஆர்.ரஹ்மான்
போரா, சிட்டியிடமிருந்து நியூரல் ஸ்கீமாவை டவுன்லோட் செய்யும்பொழுது ஆரம்பிக்கும் டெரர் மியூசிக், சிட்டி 2.0 வின் அரக்க குணத்திற்கு எக்ஸலென்ட் மேட்ச். வில்லன் சிட்டியின் சேட்டைகள மிரட்டலாக உணர வைப்பதில் ரஹ்மான் இந்த ஒரே இசையை வைத்தே பல இடங்களில் மிரட்டியிருக்கிறார்.
ஐஸ்வர்யாவை மண்டபத்திலிருந்து கடத்தி வரும் வழியில் ரேபோ போலீசாருடன் சண்டையிடும்பொழுது 2.0 என ஒரு தீம் மியூசிக் வருகிறது. கொஞ்சம் காமிக்கல் உணர்வினை இந்த இசை தருவதால் பயமுறுத்த ஆரம்பிக்கும் வில்லத்தனத்தின் வீரியம் குறைகிறது.
படத்திற்கான பாடல்களையே மாற்றி மாற்றி பின்னணி இசையாக வடிவமைப்பது ரஹ்மானின் ஸ்டைல். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இது படத்தில் வரும் பாடலின் மெட்டு என நாம் உணரவே முடியாதபடி அமைப்பது அவரது ஸ்பெஷாலிட்டி.
உதாரணத்திற்கு சிவாஜியில் ரஜினி சொத்தை இழந்து, ஷ்ரேயா இனி தேடி வராதீங்க என சொல்லிய பின் கையேந்தி பவனுக்கு செல்லும் வழியில் சோகமாக ஒரு 'ஆஆ....' இசை வரும். கூர்ந்து கவனித்தால் அது பல்லேலக்கா பாட்டில் வரும் காவிரி ஆறும் வரி மெட்டில் அமைந்திருக்கும்.
இதே போன்று இந்த படத்தில் முதல் பாதி சிட்டி ரோபோவிற்கான பின்னணி இசை இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டில் இருந்து மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெயினில் ஐஸை காப்பாற்ற தண்டவாளத்தில் ஸ்கேட் பண்ணும்பொழுதும், சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் காப்பாற்ற வரும்பொழுதும், நெருப்பில் காப்பாற்றும் காட்சிகளிலும் வரும் இசை 'பீட்'கள் இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டுக்கள். இந்த சூழ்நிலைகளுக்கு அது மிக கம்பீரமாக பொருந்தியிருக்கிறது.
அதேபோல், சிட்டி ரேபோவுக்கு உணர்ச்சிகள் வரும் வேளையில் ரஹ்மான் ஒரு இசை கொடுத்திருக்கிறார் பாருங்கள். இந்த இசையால் மிகவும் வினோதமான ஒரு உணர்வு வருகிறது.
படத்தின் மெயின் வில்லன் சிட்டி 2.0விற்கு ஒரு இசை என்றால் சாஃப்ட் வில்லன் போராவிற்கு இன்னொரு வகையான இசை. கருத்தரங்கில் சிட்டி அறிமுகத்தின்போது போரா அறிமுக காட்சியிலும், ஏ.ஐ.ஆர்.டி அப்ரூவலில் ரஜினியை நிராகரிக்கும்பொழுதும் வரக்கூடிய இசைகள் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.
புதிது புதிதாய் இசை அனுபவத்தை நமக்கு தந்துவிட்டு இந்த மனிதரால் கொஞ்சம் கூட கண்ணில் கர்வம் இல்லாமல் எப்படித்தான் அப்புராணியாய் புன்னகைக்க முடிகிறதோ தெரியவில்லை.
ரத்னவேலு
சில இடங்களில் டூப், மாஸ்க், ஸ்டண்ட் என வேறு ஆட்களை பயன்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் ஒரே சீன்களில் வரும் வேறு விதமான ரஜினிக்களுக்கேற்ப மண்டை குழம்பாமல் காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் பிரமிக்க வைக்கிறார். பின்னால் அமைக்கக்கூடிய சி.ஜி.க்களுக்கேற்ப முன்னாலேயே, காட்சியை பதிவு செய்யும்பொழுதே வெளிவரக்கூடிய முழு சீனையும் கற்பனை பண்ணி ஸ்ப்பா... எப்படியும் பெண்டு நிமிர்ந்திருக்கும். ஆனால் முழுப்படத்தையும் பார்க்கும் பொழுது இவை எதுவுமே நமக்கு தெரிவதில்லை. அதுதான் ஒளிப்பதிவாளரின் வெற்றி. ஆனாலும் ஈசியாய் நொல்லை சொல்லிவிட்டு போய்விடுகிறோம்.
பெருங்குடி குப்பை கிடங்கில் பார்ட் பார்ட்டாக கிடக்கும் ரேபோவை காரில் போரா ஏற்றிச்செல்லும் காட்சியில் கேமரா ஆங்கிள் சூப்பர். படமே தலை கீழாய் திரும்ப போகிறது என்பதற்கேற்ப காட்சியமைப்பு அது.
ராணுவத்தில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்யும் ஆங்கிளும், கிளிமஞ்சாரோவில் கையில் கேமராவை எடுத்துக்கொண்டு படம் பிடித்துள்ள சில ஷாட்களும் சூப்பர்.
ஐஸ்வர்யாவை பார்க்க பிடிக்காதவர்களுக்கு (?!) பின்ணணியில் ஆங்காங்கே மச்சு பிச்சுவின் எழிலையும் காண்பிக்கிறார்.
ஐஸ்வர்யா
இரும்பிலே ஒரு இருதயம் பாடலில், தங்க வண்ணத்தில் பாடல் பாதியில் மாறும் இடத்தில் "யூ வான் டு..." என ஆரம்பிக்கும் ஆங்கில வரிகளை பாடிக்கொண்டே ஒரு கருப்பு டிரஸ்ஸில் ஐஸ் ஆட ஆரம்பிப்பார் பாருங்கள்.. அட அட அட.. செய்யும் வேலையை ரசித்து செய்திருக்கிறார் ஐஸ். வெகு நளினமான நடனங்கள். குறிப்பாக இந்த பாடலிலும் கிளிமஞ்சாரோ பாடலிலும்.
நடிப்பு.. ஐஸ் அதிலும் கலக்குகிறார். சிட்டியிடம் காதலை நிராகரிக்கும்பொழுது கொடுக்கும் விளக்க உரை, கொசுவை பிடித்து வந்து முத்தம் கேட்கும்போது 'சிட்டி..' என அலுத்துக்கொள்வதும், பிளாக் ஷீப் காட்சியில் ரஜினி வெறுப்பேற்றும்போது தவிப்பை மறைத்து புன்னகைக்க முயற்சிப்பதும் என ஐஸ் ஐஸ்தான்.
ஷங்கர்
கனவு படத்தையும் எடுக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் ஸ்கிரீனை கிழிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இரண்டையும் பாலன்ஸ் செய்து பெடல் அடித்து வண்டி ஒட்டியிருக்கிறார் ஷங்கர்.
ஷங்கரின் கனவிற்காக ரஜினியும், ரஜினியின் இமேஜிற்காக ஷங்கரும் பரஸ்பரம் தியாகங்கள் செய்திருக்கிறார்கள என்பதே நிஜம்.
படம் பார்த்த என் நண்பர் ஒருவர்,
"ஷங்கரின் பத்து வருஷ கனவிற்கு ஏற்றார்போல படம் இல்லை" என்றார்.
நான் அவரிடம் சொன்னது இதுதான்,
"இது அவரோட கனவு நண்பா.. நீங்க எதிர்பார்ப்பது போல வேணும்னா நீங்கதான் கனவு கண்டு படம் எடுக்கனும்."
ஜேம்ஸ் கேமரூனின் கனவான அவதார் என்னை எந்த அளவிற்கு பிரமிக்க வைத்ததோ அதே அளவிற்கு ஷங்கரின் கனவான எந்திரனும் பிரமிக்க வைக்கிறான்.
இரண்டு வருடங்களில் இவ்வளவு வேகமாய் உழைத்து படத்தை கொண்டு வருவது எனில் எவ்வளவு நட்டு கழண்டிருக்கும் என உணர முடிகிறது.
கதை சரியில்லை, கிராபிக்ஸ் சரியில்லை என ஏதேதோ சரியில்லைக்களை பட்டியிலிட்டு சொல்லலாம். ஆனால்... தமிழ், தெலுங்கு பிராதானம். டப் செய்யப்பட்டு ஹிந்தி, ஜப்பானிஸ் மொழிகள் போனஸ். சப் டைட்டிலில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கொசுறு. இதுதான் படத்திற்கான மார்கெட். இதை வைத்துக்கொண்டு இப்பேற்பட்ட தொழில்நுட்ப தரமான படத்தை இன்றைய காலகட்டத்தில் கொடுத்தமைக்கு ஷங்கரை பாராட்டியே ஆகவேண்டும்.
ரஜினி
பொசஸிவ்னெஸ்ஸில் சிட்டியால் கடுப்புறும் விஞ்ஞானி, வசீகரன் தன்னை உடைக்கும் பொழுது உயிர் வாழ கெஞ்சும் சிட்டி, மே மே... என மிரட்டும் ரேபோ 2.0 என ரஜினியின் ஆதிக்கம் படம் முழுவதிலும் இருக்கிறது. ஆனால் அவரது நடிப்பிற்காக பாராட்டுவதை விட அவரது உழைப்பிற்காக பாராட்டுவதே பொருத்தமாக இருக்கும்.
60 வயசு. ரிட்டையர் ஆகி ஓய்வெடுக்க உடல் கெஞ்சும் தருவாயில், கதை கேட்கும்பொழுதே கதி கலங்க செய்யும் புராஜக்டை கையில் எடுத்து அதை அனுபவித்து நடித்துக்கொடுத்திருக்கும் ரஜினி சிறந்த மாபெரும் உழைப்பாளி.
ஆனால் அவர் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறாரே?
சும்மா உட்கார்ந்து ஓப்பி அடித்து கோடி கோடி கணக்கில் பணம் சுருட்டும் அரசியல், ஊழல்வாதிகள் இருக்கும் நாட்டில் உழைத்து பணம் சம்பாதிக்கும் ரஜினி எவ்வளவ்வோ மேல்.
அதுக்காக அவர் சும்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடி வசனம் பேசறதுக்கு கோடி கணக்கில் பணமா..?
இது சும்மா வேலைதான் என்றால் இதே வேலையை நீங்களே நானோ செய்ய முடியாது. என்னால் செய்ய முடியும் வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என சொல்கிறீர்களா.. வாய்ப்பை யாரும் தேடி வந்து கொடுக்க மாட்டார்கள். தேடி தேடி அடிபட்டு மிதிபட்டுதான் ரஜினி இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் சும்மா ஆகிவிடவில்லை சூப்பர் ஸ்டார்.
டிரெயின் சண்டை காட்சி, ரோபோ பாடல் காட்சிகளில் மாஸ்க் போட்டு வேறு யாரோ பொர்பார்ம் செய்ய, புகழ் மட்டும் இவருக்கா?
அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டோ அல்லது வேறு முகம் போல வடிவமைத்து போட்டுக்கொண்டு பெர்பார்ம் செய்தாலோ அவர்களுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை. இந்த முகத்தை இத்தனை வருட உழைப்பில் மக்கள் மனதில் நிறுத்தியது தான் ரஜினியின் பெர்பார்மன்ஸ். மாஸ்க் போட்டு உழைத்திருக்கும் கலைஞர்களை மட்டம் தட்டவில்லை. அவர்களுக்கான பாராட்டு கண்டிப்பாய் உண்டு. ஆனால் அவர்களது முகத்தை, அவர்களது திறமை மற்றும் உழைப்பின் மூலம் அவர்கள்தான் மக்கள் மனதில் நிறுத்த வேண்டும்.
எந்திரன்
ஏ.ஆர், ஐஸ், ரத்னம், ஷங்கர், ரஜினி என அவரவர் தனித்தன்மையான கூட்டு உழைப்புகளால் உருவாகி இருக்கும் எந்திரனை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பு மட்டுமே ஏற்படுகிறது.
சினிமா என்பதும் ஒரு தொழில்தான். இதே போன்றதொரு புதிய சிந்தனையை, புதிய தொழில்நுட்பம் நாடும் தேடலை சிறப்பான உழைப்பை நமது வேலையில், நமது தொழிலில் நாம் முயற்சித்து பார்க்கிறோமா என்பதை மட்டுமே நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நமது சமகால தமிழர்கள் வட இந்தியாவை, உலகை, பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இதேப்போன்ற பிரமிப்பை நமது தொழிற்சர்ந்த சாதனைகளால் நாமும் நிகழ்த்த முடியும் என்கிற பாசிட்டிவ் உணர்வினை எனக்கு தந்த எந்திரனுக்கு நன்றி!
Friday, October 1, 2010
எந்திரன் பார்த்து என்னத்த கிழிச்சோம் - வலைமனை விமர்சனம்
காலை 8 மணி காட்சி. உட்லண்ட்ஸ் திரையரங்கில் எந்திரன். நண்பர்களுடன் 7.30க்கே சென்று விட்டேன். ரசிகர்கள் கொண்டாட்டம் அவ்வளவாய் இல்லை. பார்க்கிங்கில் ஒரு சுமோவில் எந்திரன் பாடல்களை சத்தமாய் வைத்துக்கொண்டு நாலைந்து பேர் ஆடிக்கொண்டிருந்ததை தவிர.
ரஜினி பேனருக்கு இருவர் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தனர். படத்தின் காஸ்ட்லி பட்ஜெட்டுக்கு ஏற்ப ரசிகர்கள் 'ஆரோக்யா' பால் ஊற்றிக்கொண்டிருந்தது, படத்திற்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.
ஸ்கிரீன் அருகே இரண்டு போலீஸ் அதிகாரிகள். என்ன இருந்தாலும் போலீஸ் பந்தோபஸ்துடன் படம் பார்ப்பது தனி மரியாதைதான். சன் பிக்சர்ஸ் டைட்டிலுட்ன் படம் ஆரம்பித்தது. 7.55க்கே படத்தை போட்டுவிட்டார்கள். கடைசியில் பல வருடங்களாய் காத்திருந்த எந்திரனை பார்த்தே விட்டேன்.
மெதுமெதுவாய் படம் ஆரம்பிக்கிறது. ரோபோவை அசெம்பிள் செய்யும் விஞ்ஞானி ரஜினி சர்வசாதாரணமாய் இன்ட்ரொட்யூஸ் செய்யப்படுகிறார். ஒரு ரசிகனாய் இதனால் ஏமாற்றம் அடைந்தாலும் பின்னர் தான் தெரிகிறது மற்ற ரஜினி படங்களில் ஒரே ஒருமுறை வரும் இன்ட்ரொடக்ஷன் காட்சியின் விறுவிறுப்பு , இப்படத்தில் அடிக்கடி வந்து பட்டையை கிளப்புகிறது. சிட்டி ரேபோ உருவாவது, வில்லன் ரோபோ அவதாரம், கிளைமேக்ஸ் கிராஃபிக்ஸ் கலக்கல் எல்லாம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.
படத்தில் பல இடங்களில் வசனம் பளிச்சிடுகிறது. பாடல் காட்சிகளில் கிளிமாஞ்சாரோ டான்ஸ் சூப்பர், சிட்டி தீம் மியூசிக்கில் நடனம் அட்டகாசம், அரிமா அரிமா பாடலும் நைஸ் மற்றதெல்லாம் நாட் பேட்.
முதல் பாதி எந்திரன் அட்டகாசமாய் பறக்கிறது. சிட்டி ரோபோ செய்யும் சாகசங்களும் காமெடிகளும் அமர்க்களம். சென்டிமென்ட் காட்சிகளும் படத்தில் உண்டு. உணர்ச்சிகளை அறியாத எந்திரன் தீவிபத்தில் பெண்ணை காப்பாற்றும் காட்சியும், உணர்ச்சியூட்டிய பின்னர் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சியும் மனதில் நிற்கின்றன.
முதல் பாதி முடிந்து கொஞ்ச நேரம் படம் ஸ்லோவாக செல்கிறது. ஆனால் அக்குறையை போக்க வில்லன் அவதாரம் எடுக்கும் ரோபோ கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்ட ஆரம்பித்து கிளைமேக்சில் கலக்கி எடுக்கிறது.
முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இரண்டும் வேறு வேறு ரகம். முதல் பாதியில் டிரெயின் சண்டையில் சிட்டி ரோபோ சாகசங்கள் ரசிகர்கள் கூச்சலை அதிகரித்தபடியே இருக்கிறது. இரண்டாம் பாதியில் கடைசி அரை மணி நேர கிராபிக்ஸ் கலக்கல் இருக்கிறதே.. அதைப்பார்த்தால்தான் புரியும். என்னதான் ஆங்கில படங்களில் நாம் இதேப்போல் பார்த்திருந்தாலும், இங்கு சற்று புதுமையாக அதுவும் நம் தமிழ் மொழியில் செய்திருக்கிறார்கள் எனும் போது கண்டிப்பாய் பாராட்டியே ஆகவேண்டும்.
ரஜினி! பெரிய இமேஜ் வட்டத்தை வைத்துக்கொண்டு இது மாதிரியான புது மாதிரி கதையை ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். சிட்டி ரோபோ, விஞ்ஞானி, வில்லன் ரேபோ என ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை காட்டுகிறார். விஞ்ஞானி கேரக்டரை கொஞ்சம் சொங்கி மாதிரியும், சிட்டியில் படு சுட்டியாகவும், வில்லன் ரேபோ 2.0 வில் பழைய கால வில்லன் ரஜினி போலவும் கலக்கியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ஐஸ்வர்யாதான். அவரை சுற்றி கதை வருவதால் கொஞ்சம் வெயிட்டான ரோல்தான். வெகு சொற்ப இடங்களில் வயது தெரிவதை தவிர்த்து படம் முழுவதும் வெகு அழகாக இருக்கிறார் என்பதை நான் சொல்ல வேண்டும் என்பதில்லை. நடனங்களில் அவரது நளினம் அபாரம்.
நான் பார்த்த திரையரங்கில் சவுண்ட் சிஸ்டம் சுமார்தான். ஆனால் ரஹ்மான் கண்டிப்பாய் கலக்கி இருக்கிறார் என்பது மட்டும் ஆங்காங்கே புரிந்தது.
சந்தானம், கருணாஸ் பாத்திரங்கள் கடைசிவரை குழப்ப நிலைதான். ரஜினியை அங்கங்கே துண்டு துண்டாக பார்ப்பது கொஞ்சம் என்னவோ போல் இருக்கிறது. உணர்ச்சிகளை போர்டில் எழுதி வைத்து பாடம் எடுத்தால் ரோபோ ரஜினி புரிந்து கொள்கிறது. அது எப்படி சாத்யம் என யோசித்தாலும், சுஜாதாவின் கதை என்பதால் அவர் சொன்னா சரியாய்தான் இருக்கும் என மனதை தேற்றிக்கொண்டு மேலே பார்த்தேன்.
இதுபோன்ற சிற்சில குறைகள் படம் பார்க்கும் போது தோன்றினாலும், ரஜினியின் அட்டகாசத்தாலும், ஷங்கரின் திறமையான காட்சியமைப்பினாலும், சன் பிக்சர்ஸின் கோடிக்கணக்கான கிராபிக்ஸ் காட்சிகளினாலும் திரையரங்கத்தை விட்டு வெளி வரும்முன் அவற்றை மறந்து போய்விட்டேன்.
இதற்கு மேல் ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு சிறப்பான விருந்து யாராலும் வைக்க முடியமா தெரியவில்லை. சுஜாதா இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஷங்கரின் பல வருடக் கனவு நன்றாகவே நனவாகியிருக்கிறது.
அதெல்லாம் சரி பதிவு பெயர்க்காரணம் சொல்லுங்கன்னுதானே கேக்குறீங்க... ரஜினி படத்துக்கு ஃபர்ஸ்ட் ஷோ போறோம்.. பேப்பர் கிழிச்சி எடுத்துட்டு வாடானு இந்த கிஷ்ணா பையன்கிட்ட சொன்னா பய வெறுங்கையா வந்து நிக்கிறான். அதான் தியேட்டர் பக்கத்துல இருந்த பொட்டிகடையில இன்னிக்கு வந்திருந்த நல்ல தரமான ஆங்கில தினசரி நாலு வாங்கிட்டுப்போய் உள்ளே உட்கார்ந்து கிழி கிழின்னு கிழிச்சி வீசிக்கிட்டே பார்த்தோம்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமா சரித்திரத்திலேயே எந்திரன் என்கிற ரோபோ ஒரு தைரியமான முயற்சி. அந்த முயற்சியில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்!!
Tags : Enthiran Review, blog, blogger, sukumar swaminathan, robot endhiran endiran entiran endhtiran rajnikanth aishwarya rai, a r rahman sun pictures movie review
Monday, August 9, 2010
எந்திரன் கபர்தார்
Friday, August 6, 2010
எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா
// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //
ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, படம் வரும்போது பிளாக்ஸ் எல்லாம் பிளாங்க் ஆகுற மாதிரி செய்ய முடியாதா... கண்ணை மூடுனா கனவுல ராவணன் பட விமர்சனமா தான் வருது...
ஏதோ உலக அழகிங்கிறதால தப்பிச்சீங்க.. இல்லைன்னா கல்யாணம் ஆயிட்டா எங்க ஊர்ல மெகா சீரியல்ல தள்ளி உள்ளூர் கிழவி ரேஞ்சுக்கு ஆக்கி இருப்பாங்க...
"மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்று, எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு..." இந்த வரிகள் சத்தியமா ரோபோ கேரக்டருக்குதான்... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு இப்பவே ஒரு அறிக்கை விடலாமுன்னு இருக்கேன்..
'புதிய மனிதா பூமிக்கு வா' பாட்டைக் கேட்கும்போதெல்லாம்...
'எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல.. எந்திரிச்சு அரசியலுக்கு வா'ன்னு ரசிகர்கள் பாடுற மாதிரியே கிலியா கேட்குது...
எந்திரன் பஞ்ச் டயலாக் கேக்குறீங்களா... ஐஸ் அழகு நிலையம் போனா அஞ்சு வயசு குறையும்.. நான் இமய மலை போனா இருபது வயசு குறைஞ்சிடும்....
______________________________________________________________
ரசிகர்கள் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போயிடுற ரஜினி மாதிரி.. பதிவை படிச்சிட்டு ஓட்டு பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களே பாஸ்...
Tuesday, August 3, 2010
என் இனிய எந்திரன்
எந்திரன் பாடல்களை கேட்கும்பொழுது, ஆனந்த விகடன் சிவாஜி பட விமர்சனத்தில், படத்தை ரஜினி ரசிகர்களை குறிவைத்து ஷங்கர் விட்டிருக்கும் ராக்கெட் என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. ரஜினியை வைத்து ஷங்கர் சிவாஜியில் பின்னியிருந்தார். தற்போது, தொழில்நுட்பம், மாபெரும் பிரம்மாண்டம் எல்லாம் சேர்ந்து வெகுவாக எதிர்பார்த்த எந்திரன் பாடல்கள் புதிய பரிமாணத்தில் நன்றாகவே வந்திருக்கிறது.
சமீபத்திய ரஜினி படங்களில் கண்டிப்பாக தமிழன், தமிழ் மண், தமிழ்நாடு என ஒரு வரி வரும். தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன், என்னை வாழ வச்சது தமிழ் பால் என ரஜினி அந்த வரிகளை ரசிகர்களை நோக்கி பாடும்போது ஏற்கனவே அதிர்ந்து கொண்டிருக்கும் அரங்கம் இன்னும் கொஞ்சம் அதிக டெசிபல் அலறும். இதற்கு ஷங்கரும் விதிவிலக்கல்ல. சிவாஜியில் "அப்போ நான் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத் தமிழன்" என லைட்டாய் உபயோகப்படுத்தியவர், இப்போது எந்திரனில் "ரோபோ ரோபோ பன் மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா..." என ரோபோ பாடுவது போல வித்யாசமாய் அமைத்திருக்கிறார்.
இதுபோன்ற வார்த்தைகளும் டிரைலரில் ரோபோ செய்யும் மேஜிக்குகளும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக எந்திரன் இருக்கும் என உறுதி செய்கிறது. இந்த வரி வரும் புதிய மனிதா பாடல் ஒரு புதிய அனுபவம். அனைத்து பாடல்களிலுமே வரும் சிற்சில இசை துணுக்குகள் இந்த பாடலின் பின்னணியில் நிறையவே ஒலிக்கிறது. மெதுவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் ஏற்றம் அடையும் போது பாடல் நம்முள் உற்சாகத்தை விதைக்கிறது.
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்.. அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை என்ற வார்த்தைகள் ரொம்பவும் ஆழமானது. ஹேட்ஸ் ஆஃப்....
அனைத்து பாடல்களிலும் அதி உற்சாகமான பாடல் கிளிமஞ்சாரோதான். கிழிகிறது டிரம்ஸ்.. துள்ளலோ துள்ளலாக ரஹ்மான் துள்ளியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பாடலில் அக்கக்கோ என்ன பின்னிக்கோடி வரும்போது பகவான் ஆசிரமத்தில் போதையேறிய பக்தர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதை போல தியேட்டரில் ரசிகர்கள் பேயாட்டம் போடப்போவது உறுதி. தயவு செய்து அமைதியாய் படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த பாடலின்போது எழுந்து தம் அடிக்க போய் விடுங்கள். டங் டிவிஸ்டர் போல வார்த்தைகளை வைத்து பெண் குரல் க்யூட்டாக விளையாடுகிறது.
அடுத்ததாய் காதல் அணுக்கள்.. உடம்பை லேசாக்கி பறக்க வைப்பது போன்ற பாடல். பாடல் முழுவதும் வரும் கிடார் இசை தலை முதல் கால் வரை பரவி லைட்டான போதையை தருகிறது. காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என கிக் ஆக ஆரம்பிக்கும் குரல் லவ்லி.. டிரைலரில் அதை ரஜினி வாயசைத்துப் பார்த்த பின் பாடல் இப்பொழுதே மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது.
அரிமா அரிமா பாடலையும் அறிமுக பாடல் என சொல்லிவிட முடியாது. பாடல் முழுவதும் ஒரு கம்பீர பீட் வருகிறது. இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்.. என ரஹ்மான் கரிஸ்மாட்டிக் குரலில் பாடுகிறார். இதை விட நிறைய போற்றி பாடடி பெண்ணேக்களை தற்போதைய ஹீரோக்களுக்கு கேட்டு காது பஞ்சர் ஆகி போனாலும் ரஜினிக்கு வரும் போது அதன் தரமே தனிதான். புகழ் பாடுவதை சூப்பர் ஸ்டாரே இரண்டே வரிகளில் சுருக்கி விட்டிருப்பதை மற்றவர்கள் கவனித்து கொஞ்சம் திருந்தலாம்.
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே பாடல் மட்டும் எனக்கு அதிருப்தி.. பாடல் வரிகளை தவிர இசை அந்தளவிற்கு மனதில் ஒட்டவில்லை. மற்ற பாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த பாடல் ரொம்ப சுமார்தான்.
பூம் பூம் ரோபோ டா... ரோபோ டா.. ரோபா டா பாடலை கேட்கும்போதும், டிரைலரை பார்க்கும்போதும் திரையில் ரோபோ ரஜினியின் கலக்கல் காக்டெயில் அட்டகாசங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எப்படியும் இந்த பாடலுக்கே ஐந்து கிலோ பேப்பர் கிழிசல்கள் தேவைப்படும். தயவு செய்து நான் போகப்போகும் தியேட்டருக்கு வீக்கான ஹார்ட் உள்ளவர்கள் வராதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)


















