Sunday, March 17, 2013

பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை


எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான  திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.

இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.

அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த  அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால்  அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.

இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.

பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங்  சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.

ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக  கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.

அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.

கடந்த நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும்  சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.


பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.