Thursday, September 5, 2013

வலைப்பதிவர்கள் திருவிழா | வலைமனை


கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து வகையிலும் விழா சிறப்பாக நடந்தேறியது. விழா குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கொஞ்சம் தாமதாகத்தான் செல்ல முடிந்தது. முன்னரே விழாவிற்கு அழைத்து எனது வருகையை உறுதிசெய்து கொண்டு அதை பட்டியலில் வெளியிட்ட பதிவர் ஆரூர் மூனா செந்தில் இன்முகத்துடன் வாயிலில் வரவேற்றார்.

எனது பதிவுலக குரு கேபிள் சங்கர், தல ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், வீடு திரும்பல் அண்ணன் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவக்குமார் ஆகியோரை உள்ளே நுழைந்ததும் சந்திக்கும் பேறு பெற்றேன்.

 அரங்கில் நுழையும் முன், பெயர், வலைதள முகவரியை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை தந்தார்கள். அந்த பதிவு உள்ளே மேடைக்கு சென்று சில நிமிடங்களில் பதிவர் அறிமுகத்திற்காக மேடைக்கு அழைத்தார்கள்.

மேடையில் பேசும்பொழுது, முகத்தில் பதட்டத்தையும், வயித்தில் தொப்பையையும் மறைக்க வேண்டி முழு கவனமும் சென்றதால் வேறு ஏதும் பேசத்தோன்றாமல் விழா குழுவினருக்கு வாழ்த்து சொல்லி இறங்கினேன்.

  
பிரபு கிருஷ்ணா உடன்...



இறங்கி அமர்ந்ததும் இதுவரை சந்தித்திராத பதிவுலக நண்பர் பிரபு கிருஷ்ணாவை சந்திக்க முடிந்தது. அவருடனே உணவு இடைவேளை வரை அமர்ந்திருந்தேன். சிறப்பு விருந்தினர் பாமரன் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது.  பின்னர் சுவையான அசைவ மற்றும் அசையாத உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

 எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் சிறப்பான பேச்சு, புத்தக வெளியீட்டு விழா என மதிய நிகழ்வுகளும் குதூகலமாக அரங்கேறின.  காலையில் வர இயலாத பலரை  மதியம் காண முடிந்தது.

சதீஷ் சங்கவி எழுதிய 'இதழில் எழுதிய கவிதைகள்'  மோகன் குமார் எழுதிய 'வெற்றிக்கோடு' சுரேகா எழுதிய 'எஸ்கேப்'  உள்ளிட்ட 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா மாலை நடைபெற்றது. இதில் வெற்றிக்கோடு புத்தகத்தின் முகப்பு அட்டையை நான் வடிவமைத்திருந்தேன். அதற்காக அந்நிகழ்வின் போது மோகன்குமார், மேடையேற்றி பொன்னாடை போர்த்தி அன்பு செலுத்தினார். இது எனக்கு முதன்முறை என்பதால் வெரி ஷை ஆக இருந்தது.

THAT MOMENT : VERY SHY


நான் அறிந்த வரையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பிலாசபி பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில், கே.ஆர்.பி.செந்தில், பட்டிக்காட்டான் ஜெய், மெட்ராஸ் பவன் சிவக்குமார், சதீஷ் சங்கவி, மோகன் குமார்ஆகியோரை கடைசியில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து  தெரிவித்தேன். பெயர் விடுபட்ட மற்றவர்களுக்கு இப்பதிவின் மூலம் என மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன்ஸ் அகநாழிகை வாசுதேவன் மற்றும் கேபிள் சங்கர் உடன் ...


முதன் முறையாக பதிவர்கள், பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஷித், மயிலன், பாலகணேஷ் உள்ளிட்டோரை சந்தித்ததும்,  பலாபட்டறை ஷங்கர், கே.ஆர்.பி.செந்தில், அகநாழிகை பொன்வாசுதேவன், கார்க்கி, சதீஷ் சங்கவி, தல பாலபாரதி, உண்மைத்தமிழன் , நிகழ்ச்சியை சுவையாக தொகுத்து வழங்கிய அண்ணன் சுரேகா ஆகிய பழகிய நண்பர்களை சந்தித்ததும் என மிக இனிமையான நாளாக அமைந்தது.

ஆச்சரியமான விஷயமாக, நான் இதன் முன் சந்தித்திராத பதிவர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , வலைமனை மற்றும் போட்டோ கமெண்ட்ஸ் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பாராட்டினார்கள். இப்பொழுது ஏன் அதெல்லாம் எழுதுவதில்லை என கேட்டவர்களுக்கு, "திருந்திட்டேன் பாஸ்" என ஜாலியாக சொல்லிக்கொண்டிருந்தேன்.

பதிவர் திருவிழாவிற்கு சென்று பதிவர்களை பார்த்த பிறகாவது ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில் 6 மாத காலம் கழித்து பாழடைந்த மண்டபமாக இருந்த வலைமனைக்கு சுண்ணாம்பு அடித்து, ஹெட்டர் பேனர் எல்லாம் மாற்றி ஒரு பதிவு போடும் இத்தருணம், வெகுநாட்களாய் காணாமல் போன  பிடித்த பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் பொழுது எழும் திருப்தியை தருகிறது.