Monday, May 23, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 23 05 11




லைவர் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்நிலையில் ஊரெங்கும் இஷ்டத்திற்கும் வதந்திகள் உலா வருகின்றன.  சனிக்கிழமையன்று தனுஷ் டிவிட்டரில் இந்த படத்தை வெளியிட்டார். இதிலும் பின்னால் காலண்டரில் இருக்கும் மேரி மாதாவை சுட்டிக்காட்டி இப்படம் இசெபெல்லாவில் எடுத்த பழைய படம் என பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியோ, ரஜினி மீண்டும் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பி வருவார்.

 ரஜினி வாழ்க்கையில் எதிர்கொண்ட சோதனைகளில் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன். அவர் பூரண குணமடைய பெற எனது பிரார்த்தனைகள். ரஜினி மருத்துவமனையை விட்டு ஆரோக்யமாக வந்தால் போதும் என யாவரும் விரும்பும் இந்நிலையில் ராணா படம் அடுத்த வருடம் வந்தே தீரும் என கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி கொடுத்திருப்பது எல்லாம் தேவையில்லாதது.


ப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் நடந்தது. பெங்களூரை வீழ்த்தி முதல் இடத்தில் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சூப்பர் கிங்ஸ் தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்த மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா மேட்ச் ஆவலை அதிகரித்தது. மும்பை ஜெயித்தால் சென்னை முதல் இரண்டு இடத்திற்குள் வரும் என்ற நிலையில் நானும் அந்த மேட்சை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டும்.

அந்த ஓவரை பாலாஜி வீசினார். முதல் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக ஃபோர், கடைசி பந்தில் சிக்ஸர் என விளாசி மும்பை வெற்றி பெற்று சென்னை ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. சென்னை அணியின் இந்நாள் வீரர்கள் செய்யாவிட்டாலும் முன்னாள் அணி வீரர் பாலாஜி அதை செய்திருக்கிறார் என  என நினைக்கும்பொழுது பெருமையாக இருக்கிறது.

பாவம் அங்க என்னா கும்மு கும்முறாங்களோ தெரியல....



பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் நான்காம் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சனிக்கிழமை இரவு வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்த்தேன். 3டி எஃபெக்ட்ஸ் அட்டகாசம். காட்டு பிரதேசங்கள், கடல் என பைரேட்ஸ் சீரிஸில் ஒரு அருமையான 3டி அனுபவம். ஆனால் கதைதான் ஒரு கண்றாவியும் புரியவில்லை. 3டிக்கு ஆசைப்பட்டு ஆங்கிலத்தில் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  படத்தில் நகைச்சுவை வரும் இடங்களில் அவ்வளவு பேர் புரிந்து கொண்டு சிரிப்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. இந்த அவமானத்தை துடைக்க சீக்கிரமே தமிழில் பார்த்து சிரிக்க வேண்டும்.



கோ மூன்று முறை பார்த்துவிட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் ஒரு பத்திரிக்கையாளனாக இருப்பது கூட இருக்கலாம். ஒரு பத்திரிக்கைகாரன் என்னவெல்லாம் துணிச்சலாக செய்ய முடியாதோ அதையெல்லாம் திரையில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் வடிகால் உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம்.

மூன்றாம் முறை அம்மாவை அழைத்து சென்றேன். படத்தை பார்த்துவிட்டு, இதுக்குதான் நீ பத்திரிக்கை ஆபிஸ்ல வேலை செய்யறதே பயமா இருக்குங்கிறேன் என்றார்.

அது சரி நமக்கு பைக்கை நேராவே ஓட்ட தெரியாது, இதுல எங்க ஜீவா மாதிரி தலைகீழா எல்லாம் ஓட்டுறது. இதெல்லாம் சும்மாம்மா என்றேன். அப்படியும் அவர் அமைதியானதாய் தெரியவில்லை.

ஒருவேளை ஜீவா மேலே மேலே வந்து விழும் பியா போன்ற ஃபிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும் என நினைத்து சொல்கிறாரோ??
Sukumar Swaminathan | Blog post | Feelings May 2011 | Valaimanai |
Notes on Rajni's Health, Pirates of the Carribean - on Stranger Tides, Ko movie experience | IPL Season 4 Match 70 KKR Vs MI, Chennai Super KIngs gains second spot 


Wednesday, May 11, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 11 05 11



டையாரில் எங்கேயோ 'பக்கட் பிரியாணி' விற்கிறார்கள், சூப்பராக இருக்கும் என கேள்விப்பட்டு கடந்த ஞாயிறு கோயம்பேட்டிலிருந்து 'பிரியாணித்தோம். '  அடையாறில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பின்புறம் உள்ள தெருவில் ஒரு வீட்டில் முன் இருக்கும் இடத்தில் ஷெட் அமைத்து, அங்கேயே சமைத்து செமையான பிரியாணி விற்பனை நடைபெறுகிறது. சனிக்கிழமையே போனில் ஆர்டர் எடுத்து விடுகிறார்களாம். அதற்கேற்றார் போல் சமைக்கிறார்கள். நாங்கள் போனபோது மணி 12. அப்பொழுதே எல்லாம் தீர்ந்திருந்தது. வந்திருந்தவர்களிடம் மீண்டும் ஆர்டர் எடுத்து மறுபடி சமைத்து கொடுத்தார்கள். ஒரு ஷேர் மட்டன் பிரியாணி ரூ.800. ஏழு பேர் சாப்பிடலாம். மக்கள் வந்து நின்று வாங்கி செல்கிறார்கள். சமைத்த பிரியாணியை அப்படியே பக்கெட்டில் அள்ளி அள்ளி மக்களுக்கு பார்சல் செய்து தருவது கண்கொள்ளாக் காட்சி. 


வெயிலில் அலைந்து சென்று வாங்கியதற்கு பலனாக நல்ல சுவையான பிரியாணி. மட்டன் பீஸ்களை தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். நல்ல டேஸ்டாக இருக்கிறது.


முயன்று பாருங்கள். செல்லும்பொழுது தேவைக்கேற்ப பாத்திரம் எடுத்துச்சென்றுவிட்டால் வசதியாக இருக்கும். ஏமாற்றங்களை தவிர்க்க சனிக்கிழமையோ அல்லது ஞாயிறு காலையோ ஆர்டர் கொடுத்துவிட்டால் நலம்.


தொடர்புக்கு : உஸ்மான் பிரியாணி - 044 24918581






சென்னையில் கோடை காலம் வரப்போகிறது என அறிவிக்கும் முதல் ஆள் அண்ணன் தர்பூசணிதான். ஆளை அடித்துப்போடும் பளீர் சிவப்பில் தடாரென சென்னை சாலைகளில் பிப்ரவரி மாதமே வரிசை கட்ட ஆரம்பித்துவிடும்.  இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை ஒரு ஸ்லைஸ் விலை ரூ.5 ஆக இருந்தது. தற்போது சற்றே நீளமான ஸ்லைஸ் போட்டு வைத்து ரூ.10 என விற்பனை செய்கிறார்கள். சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் துண்டுகளாக வெட்டிப்போட்டு அதில் ஒரு பல் குத்தும் குச்சியை சொருகி வைத்து விற்பனை செய்வது தர்பூஸ் விற்கும் தமிழனின் அப்டேட்டட் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ்!


ஞ்சா கலர், ரோஸ் கலர் மருந்து சீட்டு போல் இருந்த டிக்கெட்டை மாற்றி தற்போது கோயம்பேடு ரோஹிணி தியேட்டரிலும் கம்ப்யூட்டர் பிரிண்ட் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எதை மாற்றினாலும் விலையை டிக்கெட்டில் குறிப்பிடாததை மட்டும் மாற்ற மாட்டோம் என்பதில் மட்டும் உறுதியாய் இருக்கிறார்கள் போலும்.  இந்த டிக்கெட்டில் விலை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஹன்சிகா மோத்வானியின் கையெழுத்திடப்படாத பரிசு பொருள் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.




ஃபிளாட்டில் இருக்கும் வாண்டுகள் கிரவுண்டுக்கு அழைத்துப்போக தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தனர். ஒருநாள் எல்லாத்துக்கும் லீவு விட்டு டிரஸ்ட்புரம் கிரவுண்டில் வெயிலை வீணாக்காமல் கிரிக்கெட் விளையாடியதில் எனக்குள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்ட ஒரு மினி தோனியே ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்தேன். ஹி..ஹி..



வெளியூர் பயணங்கள் புறப்படும் பொழுதோ, ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதோ தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் அம்மா ஒரு ரூபாய் போடுவது வழக்கம். ஓட்டு போட கிளம்பும் அன்று தெருமுனை பிள்ளையார் கோவில்ல நிக்கிறேன் வா.. என்று கூறி நடந்தார். எதுக்கும்மா என கேட்டால், நல்ல ஆட்சி வரனும்னு ஒரு ரூபாய் போட போறேன் அதான் என்றார்.