வலைமனை பெஸ்ட்ஸ்

'Chill morning.. Enjoying hot coffee @Cafe day' என மொபைலில் ஸ்டேட்டஸ் போடுகிறார் ஷேர் ஆட்டோவில் அருகில் இருக்கும் இளம்பெண். இல்ல... நான் கேக்குறேன்.. என்ன இது? பேஸ்புக்குக்குன்னு ஒரு தர்மம், நியாயம் இல்ல..? Withனு போட்டு பக்கத்துல இருக்க என் பேரை டேக் பண்ண வேணாம்?


-  ஃபீலிங்ஸ் 12 11 14 இல் இருந்து


•••

சூளைமேடு மெயின்ரோடை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் வடகிழக்கு மாணவ மாணவிகளை பார்க்கலாம். சுரீரென மண்டையைப் பிளக்கும் சென்னை வெயிலையே 'போடா வெண்ணெய்' என சொல்வது போல் இவர்களது நிறம் மட்டும் எத்தனை வருடம் இங்கிருந்தாலும் மாறுவதே இல்லை. படிக்க வரும்பொழுதே ரிசர்வேஷனில்தான் வருவார்கள். அதனால் இவர்களை ஜோடியாகத்தான் பார்க்க முடியும். 

அன்றொருநாள் நெல்சன் மாணிக்கம் சாலையில் பைக்கை ஓரங்கட்டி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அதிசயமாக தனியாக ஒரு வடகிழக்கு பெண்ணை பார்த்தேன். என்னை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தார். 

"ஆஹா... இவங்க பாஷை நமக்கு புரியாதே.. அவசரத்திற்கு நமக்கு வாயில இங்கிலீஷ் வேற வராதே.. லிப்ட், கிப்ட் கேட்டா பைக்குல பெட்ரோல் வேற இல்லையே" என மனதில் பல குழப்பங்களுடன் அந்த பெண்ணை எதிர்நோக்க, அவரோ "அண்ணா ... வேர் இஸ் ஸ்கைவாக்..?" என சிம்பிளாக கேட்டார். 'அண்ணா'வில் 'ண'கர உச்சரிப்பு கூட அவ்வளவு சுத்தமாக இருந்தது.

அன்றுதான் தெரிந்துகொண்டேன். ஊருக்கு வந்த உடன் முதல் வேலையாக உள்ளூர் பாஷையில் 'அண்ணா' என்கிற வார்த்தையை வடகிழக்கு பெண்களும் கற்று வைத்துக்கொள்கிறார்கள் என்று.

- ஃபீலிங்ஸ் 23 07 14 இல் இருந்து

•••

அம்மா உள்ளே சென்றது முதலே அதகளப்பட்டது பேஸ்புக். அவர் வெளியே வந்த அன்று என் டைம்லைனில் ஒரு போஸ்ட் கண்ணில் பட்டது.  "வெற்றி.. வெற்றி.. அம்மாவுக்கு ஜமீன் கிடைத்தது". ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு. இதுல புதுசா ஜமீனோட சொத்தையும் சேர்த்து கணக்கெடுத்தா என்னாகுறது? இதுக்குதான் 'அமைதியா இருங்க அப்ரசண்டீஸ்களா'ன்னு அம்மா வெளிய வந்ததும் அறிக்கை விட்டாங்க. 

ஃபீலிங்ஸ் 29 10 14 இல் இருந்து
•••

கடந்த வாரம் Times Now சேனலில் மோடியின் மேடிஸன் ஸ்கொயர் அமெரிக்க நிகழ்வினை பார்த்துக் கொண்டிருந்தேன். ஷங்கர் படத்திற்கு இணையான மேக்கிங்கில் இருந்தது.தேசிய கீதத்தின் போது மோடியின் முகம் மீது ஒரு லேயரில் தேசிய கொடி பறக்கிறது.  30 வருடங்களுக்கு முன்னரே ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதி வைத்த கட்டுரைகளை ஒத்த கருத்துக்களை ஹிந்தியில் பிரதமர் பேச அமெரிக்க இந்திய கொடிகளுடன் மோடியின் உருவம் பொறித்த பதாகைகளை அசைத்தபடி 'மோடி மோடி' என அரங்கமே அதிர்கிறது. இது போதாதென்று எந்த பிரதமருக்கும் இல்லாத பிரம்மாண்ட வரவேற்பு என மோடி பராக்கிரமங்களை கீழே ஸ்க்ரோலிங்கில் ஓட விட்டுக் கொண்டிருந்தது சேனல்.இதையெல்லாம் உடன் பார்த்துக் கொண்டிருந்த நண்பன், நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி 'மோடிஜிதான்டா அடுத்த பிரதமர்.. அவருக்குதான் ஓட்டு போடுவேன்.. மன்மோகன் சிங்கை வீட்டுக்கு அனுப்பனும்' என்கிறான். ஃபன்னி ஃபெல்லோ..!# தட் 'தேர்தல் முடிஞ்சிடுச்சில்ல.. பிரசாரத்தை எப்போ சார் முடிப்பீங்க...?' மொமண்ட்!

ஃபீலிங்ஸ் 08 10 14 இல் இருந்து

•••
தியானம், யோகாவை காட்டிலும் ஒரு அரை மணி நேரம் பொதிகை சேனல் பார்த்தால் போதும் போல. பரபரப்பு, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என அனைத்தையும் சட்டென்று குறைத்து பட்டென்று படுத்து தூங்க வைத்துவிடுகிறது. 
வாழ்க தூர்தர்ஷன்! வளர்க அப்டேட்டே இல்லாத நின் வெர்ஷன்!
டவர் பார்க்கில் காற்றுடன் கலந்து பறக்கும் ஸ்கேட்டிங் செல்லும் சின்ன குழந்தைகளை அமர்ந்து பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படி சமீபத்தில் அமர்ந்திருந்தபோது அருகே அனைவரும் வாக்கிங் செல்லும் நட்ட நடு நடைபாதையில் மூன்று பெண்கள் கால் மணி நேரமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி கஷ்டப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். இவர்களைப் பற்றிய கவனமே இல்லாமல் இங்கிதம் அற்ற பொது ஜனம் குறுக்கே புகுந்து வாக்கிங் சென்றவாறே இருந்ததால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். பேஸ்புக்கிற்காய் புகைப்படம் எடுப்பவர்களது உணர்வை மதிக்காத சமுதாயம் வாக்கிங் போனால் மட்டும் ஆரோக்கியமானதாகி விடுமா என்ன? அட போங்கப்பா!

ஃபீலிங்ஸ் 02 07 14 இல் இருந்து


•••

நேற்று மதியம் டைடல் அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுது வண்ணத்தாள் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்கள் சகிதம் அருகே பைக்கில் ஒரு காதல் ஜோடி. தாமதமாக வேலன்டைன்ஸ் டே கொண்டாடுகிறவர்களாக இருக்கும் என நானாய் நினைத்துக் கொண்டேன். அவர் ஏதோ சொல்ல சொல்ல இந்தப் பெண் வெட்கப்பட்டுக்கொண்டே கேட்டது அவ்வளவு அழகு.

சிக்னல் விட்டு முன்னே அவர்கள் சென்றதும்தான் கவனித்தேன், பெண் டிஷர்ட்டில் "Love - Not War" என்ற வாசகம். அதைப் பார்த்ததும் சட்டென, திருமணம் முடிந்ததும் இதே பெண் அவரை தூக்கிப் போட்டு மிதிக்கும் காட்சி கண்முன்னே விரிய எனக்கு தாங்க மாட்டாத சிரிப்பு. 

'ராஜீவா பாரத் சுலோஷனா' என வாயில் நுழையாத என்னத்தையோ அழகாய் பாடி ஓட்டு கேட்கும் ராகுல் காந்தியை தோற்கடிக்கின்றனர் காதலிகள்.

ஃபீலிங்ஸ் 17 02 14 இல் இருந்து


•••

ன்னடா, கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன். சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.



அப்படி சில வருடங்கள் முன்பு ஓரு மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த 'மாடு மாதிரி' ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்.

ஃபீலிங்ஸ் 25 01 12 இல் இருந்து


•••

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் நான்காம் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சனிக்கிழமை இரவு வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்த்தேன். 3டி எஃபெக்ட்ஸ் அட்டகாசம். காட்டு பிரதேசங்கள், கடல் என பைரேட்ஸ் சீரிஸில் ஒரு அருமையான 3டி அனுபவம். ஆனால் கதைதான் ஒரு கண்றாவியும் புரியவில்லை. 3டிக்கு ஆசைப்பட்டு ஆங்கிலத்தில் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  படத்தில் நகைச்சுவை வரும் இடங்களில் அவ்வளவு பேர் புரிந்து கொண்டு சிரிப்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. இந்த அவமானத்தை துடைக்க சீக்கிரமே தமிழில் பார்த்து சிரிக்க வேண்டும்.

ஃபீலிங்ஸ் 23 05 11 இல் இருந்து


•••

காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. "படம் பார்க்க வர்றவங்களை படம் பிடிச்சு நெட்ல விட்ராதீங்கப்பா..." என கமெண்ட் அடித்தபடியே அதைப் பார்த்து பார்த்து சிரித்தோம்.  மானேஜரைப் பார்த்து முறையிட்டாலே ஆச்சு என அடம்பிடித்தான் நண்பன். 

"அட நீ வேற.. இதுக்கெல்லாம் அவரை போய் கேட்டுக்கிட்டு.. இந்த மாதிரி வீணா போன விஷயத்துக்காகத்தான நான் பிளாக்கு வச்சிருக்கேன்,.. நாளைக்கு நியாயம் கேட்டுடலாம் விடு" என அவனை சமாதானப்படுத்தியபோது சந்தானம் போல முறைத்தான்.  (மானேஜர் சார்.. அப்படியே இன்டர்வெல்ல வாங்குன கார்ன் பப்ஸ்ல எண்ணெய் கசடு அடிச்சது.. பேலன்ஸ் கொடுத்த இருபது ரூபாய் நோட்டு கிழிஞ்சு இருந்ததுங்க... இதுக்கும் சேர்த்து ஏதாவது நியாயம் சொல்லுங்க)

ஃபீலிங்ஸ் 25 01 11 இல் இருந்து


•••


ஸ்டேடியத்துக்கு போகிற பாலம் சரிஞ்சு விழுது, குஸ்தி அரங்க மேற்கூறை இடிஞ்சு விழுது, டெங்கு தொரத்துது, பாத்ரூம் படுத்துது, வீரர்கள் படுக்கை விரிப்புல நாய் உச்சா போயிருக்கு, போகிற போக்குல தீபாவளி டப்பாசு மாதிரி ரெண்டு பங்காளிங்க டூரிஸ்டை சுட்டுட்டு போறானுங்கன்னு காமன்வெல்த் கேம்ஸ்ல எக்கச்சக்க சொதப்பல்.  நாம எல்லாம் இலவசமா காமெடி பண்ற நேரத்துல கவர்ன்மென்ட் மட்டும் லட்சம் கோடின்னு செலவு பண்ணி காமெடி ஷோ பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன். 


பேசாம நம்ம லலித் மோடிக்கிட்ட காமன்வெல்த் கேம்ஸை ஒப்படைச்சிருந்தா சூப்பரா ஆர்கனைஸ் பண்ணி அட்டகாசம் பண்ணியிருப்பாரு. என்ன.... ஒரு தொள்ளாயிரம் லட்சம் கோடி ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்கும் அவ்வளவுதான்.

ஃபீலிங்ஸ் 24 09 10 இல் இருந்து

•••

'வான் எ டான்ஸ்?' என ஹிரிதிக் அழைப்பதும் அந்த பெண் 'ஐ கான்ட்' என புன்னகைப்பதும்,  பின்னர் ஹிரிதிக் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்துக்கொண்டு காட்டுவதும் அதற்கு அந்த பெண் பின்னாலேயே சென்று டான்ஸ் ஆடுவதும் என மகா காமெடியான விளம்பரம் ஒன்று ரொம்ப நாட்களாய் ஓடுகிறது. நிஜத்தில் ஏதாவது ஒரு பெண்ணிடம் இப்படி பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினால் நான் என்ன நாய்குட்டியா என பட்டென்று அடிதான் விழும். எந்த எந்த விளம்பரத்துக்கோ 'இதை முயன்று பார்க்காதீர்கள்'னு கேப்ஷன் போடுறாங்க.. முதல்ல இதுக்கு போடுங்கப்பா..

ஃபீலிங்ஸ் 16 09 10 இல் இருந்து


•••

வரும் சுதந்திர தினத்திற்கு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான டிரைலர் போட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை, திரைப்படங்கள், திரை முன்னோட்டங்கள் என சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளாக இருக்கிறதே என யோசித்த போதுதான், மானாட மயிலாடவில் தேசிய கொடியுடன் சிலர் டான்ஸ் ஆட, கலா மாஸ்டர் கண்ணில் நீர் பொங்க என உணர்ச்சிகரமான கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டது.

கடைசியில் மானாட மயிலாடதான் உண்மையான தேச பக்தி நிகழ்ச்சி என்பதை அறியும் பொழுது எனக்கும் கண்ணில் நீர் பொங்குகிறது. ஜெய்ஹிந்த்!

ஃபீலிங்ஸ் 13 08 10 இல் இருந்து


No comments: