Sunday, December 26, 2010

எவ்ரிடே இஸ் சண்டே - 2



குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். போனா போகுதுன்னு நம்ம பிளாக்கை படிக்க வருபவர்களை பெர்சனல் விஷயங்களை சொல்லி இம்சிக்க கூடாது என நீண்ட நாட்களாய் ஒரு கொள்கை வைத்திருந்தேன்.  ஆனால் ஞாயிறுகளில் அதிகம் பேர் படிக்கமாட்டாங்களாமே.. அதனால அதிக சேதாராம் இருக்காது என்கிற நம்பிக்கையோடு.... வாழ்வை ரசிப்பதை தொடர்கிறேன்.


சினிமா




■   இணையம் தந்த அருட்பெரும் கொடைகளில் ஒன்று, பிற மொழியில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ள வழிசெய்வது. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தை இந்த விமர்சனம் படித்து ஒரு சனிக்கிழமை இரவு விடிய விடிய இரண்டு முறை பார்த்தேன். மனதை கனமாகவும் லேசாகவும் ஆக்கக்கூடிய திரைப்படம். உணர்வுபூர்வமாக செல்லும் கதை நிறையவே என்னை பாதித்தது. பாதித்தது என்பதை விட முடிவில் இனம்புரியாத உற்காகம் கொடுத்தது என்று கூட சொல்லலாம். வசனங்களும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு அருமையாக இருக்கும். ரசித்து ரசித்து நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் இதுதான். ஆண்டி டூப்ரென்ஸ் என்கிற கதாநாயகன் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் தருணம். வாழ்க்கையின் பெரும் வரம் சுதந்திரம் என்பதையும் அந்த சுதந்திரம் தரும் ஆனந்தத்தையும் அந்த காட்சியில் நாம் உணர முடியும். மிஸ் பண்ணக்கூடாத படம்!


 பயணம்








■    பொறுமையாய் வயல் வெளிகள் சூழ்ந்த நெடுஞ்சாலையில் பச்சை வாசனை காற்றை சுவாசித்தபடி பைக்கில் நெடுந்தூரம் செல்வது வெகு ரசனையான பயண அனுபவம். உயிர் நண்பன் கிருஷ்ணாவின் திருமணத்திற்காக கடைசி நிமிடம் வரை பேனர் டிசைன், வாழ்த்து அட்டை தயாரிப்பு என நேரம் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி கடைசி நிமிடத்தில் நான்கு நண்பர்கள், இரண்டு பைக்குகளில் கிளம்பினோம். சென்னையிலிருந்து ஆரணி. நான்கு மணி நேர பயணம். வேகம் காட்டாமல் ஆட்டம் போடாமல் நிதானமாய் சாலைகளை ரசித்துக்கொண்டே சென்றோம். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தும் வழியில் கிடைத்தவற்றை சுவைத்தும் என நினைவில் நிற்கும் பயணம். 


வரைகலை





■    மற்ற மாதங்களில் எப்படி சோர்வுற்று இருந்தாலும் மார்கழியில் அம்மாவிற்கு இருபது வயது குறைந்துவிடுவது சிறுவயது முதலே எனக்கு ஆச்சரியமான விஷயம். கலர் பொடிகள் வாங்கி வைத்து கலக்கி, பேப்பரில் அன்றைய கோலத்தை வரைந்து பார்த்து, தெருவில் வண்ணச் சேர்க்கையுடன் அவர் இறங்கி கோலமிடும் போது, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார். அவ்வப்போது பல கோணங்களில் மாறி மாறி நின்று பார்த்து கோலம் சரியாக வருகிறதா என செக் செய்து கொள்வார். சிறு வயதில் ஆர்வத்தில் கெஞ்சி கெஞ்சி கேட்டு கோலப்பொடி வாங்கி வண்ணம் சேர்க்க தெரியாமல் கடும் திட்டு வாங்கிய அனுபவங்கள் ஏராளமாய் உண்டு. 

அம்மா தரையில் கோலம் போடுவதும் இன்று கணிணியில் நான் தொழில் நிமித்தமாய் டிசைனிங் செய்வதும் என இரண்டுமே ஒன்று என்றாலும் ரசனையான ஈடுபாடு என வரும்போது இன்னும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாய் இருப்பதாகவே நினைக்கிறேன்.




"என்னடா ஏதோ கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன்.  சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.

அப்படி கடந்த மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த மாடு மாதிரி ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்!



Saturday, December 18, 2010

ஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு




சில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார்.  இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.

அமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.

இதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.

ஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழிலதிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.

இந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.  வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.

வீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.

இந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே.! வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை "நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)

முதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் -  அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.

இந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, December 8, 2010

அழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு





சரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.  ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

 தாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும்,  பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.

இது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே இருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.





அதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார்.  லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..

கதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.

அந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.

படத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார். 

'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது...