Thursday, October 31, 2013

ஆரம்பம் | வலைமனை



ஆரம்பம்!

காதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்!

மங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்!

மங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார்.

ஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது.

ஸ்பாய்லர் :
கதையென்று பார்த்தால் அதேதான். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, உயிரை விடும் நண்பன், வெகுண்டெழுந்து பழி வாங்கும் ஹீரோ. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம், மேக்கிங் எல்லாமே ரொம்பவும் புதுசு. 

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் எனும் வகைப்படம். எங்கும் போர் அடிக்கவில்லை, எங்கும் தொய்வில்லை. விருந்து சாப்பிட்ட திருப்தி.
ஆர்யா, நயன், கிஷோர், டாப்ஸி என அஜித்தின் நேரத்தை மற்ற பல பேர் எடுத்துக் கொள்வதால் விருந்து சாப்பிட்டாலும் 'தல'வாழை  மட்டும் இல்லாதது போன்ற சிறிய குறை.

பாடல்கள் கேட்பதற்கு சுமார்தான் என்றாலும் அதனை ஈடுகட்டுகிறது படமாக்கப்பட்ட விதம். ஓப்பனிங் சாங்கில் அஜித் முடிந்தவரை டான்ஸ் ஆடுகிறார். சில ஸ்டெப்களில் உடல் வலியை அவரது முகமொழி பிரதிபலித்தாலும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார்.

என் புயூஸ் போச்சு, மெல்ல வெடிக்குது ஆகிய இரண்டும் கவனத்தை கவர்கின்ற பாடல்கள். காதல் வயப்பட்டதும் ஆர்யாவுக்கு முளைக்கும் பறவைச் சிறகு, டாப்ஸிக்கு முடிவில் முளைக்கும் பட்டாம்பூச்சி சிறகு என லவ்லி கிரியேட்டிவ் ஐடியா. மொத்தப் பாடலின்  பின்னணிக் காட்சிகளும் அவ்வகையே. அடுத்ததாக மெல்ல வெடிக்குது பாடல் கண்களுக்கு நல்ல விருந்து. ஹோலி வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.

அஜித், விஷ்ணுவர்த்தன் என்னும் இரண்டு ஆளுமைகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. பாடல்களில் கோட்டை விட்ட யுவன், பின்னணி இசைக்கு முகம் கழுவி காபி சாப்பிட்டுவிட்டு மியூசிக் போட்டிருக்கிறார். சுபாவின் டச், அந்த ஷார்ப்னெஸ் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் இரண்டரை மணி நேர பக்கா ஆக்ஷன் ட்ரீட் இந்த ஆரம்பம் !

Friday, October 11, 2013

கிராவிட்டி (2013) - தொழில்நுட்பத்தின் சாறு




ஹீரோவின் விசேஷ உபகரணத்தின் லேசர் கதிர் பட்டு உடல்கிழிந்து பச்சை ரத்தம் பீறிட உயிர் விடும் ஏலியன்கள், பூமிக்கு மேலே சரியாக அமெரிக்க மாநகரின் மேல் நிறுத்தப்படும் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள்,  கூட்டம் கூட்டமாக செத்து மடியும் பூமிவாசிகள், ஏலியன்களை கொல்ல ஹீரோவினால் கடைசியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய யுக்தி...  இப்படி மலிந்துவிட்ட சயின்ஸ் பிக்ஷன் மசாலாக்களில் இருந்து தனித்து நின்று தெளிவான, சுவாரஸ்யமான தனி முத்தாக ஒளிவிடுகிறது 'கிராவிட்டி'.

ஸ்பாய்லர் :  ......................................................
முதன்முறையாக  தனது விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயோ மெடிக்கல் பொறியாளர் ரயான் ஸ்டானும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் மேட் கவால்ஸ்கியும் ஹப்பிள் டெலஸ்கோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் வேளையில் எதிர்பாராமல் விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் விபத்தில் சக வீரர் உயிர் விட விண் ஓடமும் பாதிக்கப்படுகிறது. பூமியுடனான தொடர்பும் துண்டித்துப்போகிறது. 

இதன் பின்னர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஷ்டேஷனுக்கு சென்று தப்பிக்க அவர்கள் முயல்வதும், பின்னர் கவால்ஸ்கியுன் இறப்பினால் தனித்து விடப்படும் ரயான் பல்வேறு மன மற்றும் உடல் போராட்டங்களை சமாளித்து பூமிக்கு திரும்பி கிராவிட்டியை சுவைப்பதே படம்.
......................................................

நேற்று மாலை S2 பெரம்பூரில் 3D - டால்பி அட்மாஸ் வசதி செய்யப்பட்ட ஸ்கிரீனில் பார்த்தேன்.  90 நிமிடங்கள். நாம் விண்வெளியில் மிதக்கிறோம். சுழல்கிறோம். விண்வெளிக்குப்பைகளால் தாக்கப்படுகிறோம். பூமி நமக்கெதிரே சுழல்கிறது. அண்டம் நமக்கெதிரே விரிந்து கிடக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பும், கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டதன் அடையாளமே தெரியாமல் துல்லியமான நிஜ காட்சிகளாய் படைக்கும் திறன் பெற்றுவிட்ட மனிதனின் ஆற்றலும் ஒன்றுசேர்ந்து பரவசப்படுத்துகிறது.

3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரிய பலம்.  பூமியின் விளம்பில் பட்டு தெரிக்கும் ரம்மியான ஒளிக்கதிர்கள், பேனா,  புத்தகங்கள், நெருப்புக்குமிழி, கண்ணீர்த்துளி, பிரபஞ்ச வெளியில் மிதக்கும் வீரர்கள் என வெறும் திரைப்படம் என சொல்லிவிட முடியாதபடி ஒரு பிரமிப்பான அனுபவமாக உணர வைக்கிறது. இதனுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும் கைகோர்த்துக்கொள்ள மொத்தத்தில் அருமையான விருந்து.

தாகம் எடுத்த வேளை நல்ல பழச்சாறின் சுவையில் மெய்மறப்பதை போன்று, தொழில்நுட்பத்தின் சுவைமிகுந்த சாறினை ருசிக்க நல்ல ஒளி ஒலி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள். மகிழுங்கள்.