Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Tuesday, April 7, 2020

தி ஷசாங்க் ரெடம்ப்ஷன்







கொரோனா எனும் கிருமியால் நவீன உலகம் அனுபவித்திராத சூழ்நிலை. யாவரும் வீட்டிற்குள். வேலைகள், தொழில்கள் முடக்கம். வரும் மாதங்கள், பொருளாதரம் குறித்த கவலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாத நம்பிக்கை ஒளி. இந்நிலையில் நம்மை நாமே ரீசார்ஜ் செய்துக் கொள்ள, எதிர்காலம் குறித்த நம் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.  ஒரு திரைப்படம்!


தி ஷசாங்க் ரெடம்ப்ஷன் (The Shawshank Redemption)


உலக திரைப்படங்கள் குறித்த தகவல்களை தரும் IMDB.com இல்  உலக அளவில் ரசிகர்களது வாக்குகளின்படி டாப் ரேட்டட் திரைப்படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்து நிற்கிறது ஷசாங்க் ரெடம்ப்ஷன். வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களை ஆட்கொள்ள அப்படி என்னதான் இருக்கிறது இத்திரைப்படத்தில்...?


நாம் எவ்வாறான சூழ்நிலையில் சிக்கி சிறைபட்டு இருந்தாலும், ஒரு நாள் எல்லாம் நாம் விரும்பியபடி மாறும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தால், முயற்சி செய்து கொண்டேயிருந்தால், நம் நிலை நாம் விரும்பியது போல் ஒரு நாள் நிச்சயம் மாறும். மாற்ற முடியும். நாம் கொண்ட  நம்பிக்கை வீண் போகாது என்பதே இத்திரைப்படத்தின் சாராம்சம்.


கதைக் களம் : 


தனது மனைவி மற்றும் அவரது காதலனை கொன்றதாக இரட்டை ஆயுள் தண்டனையுடன் ஷசாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார் வங்கி உயர் அதிகாரி ஆன்டி டுப்ரென்ஸ்.  வார்டன் நார்ட்டன் மற்றும்  கேப்டன் ஹேட்லியின் இரும்புப் பிடியில் கைதிகள் அவதியுறும் சிறைச்சாலை அது. 


இங்கு ஏற்கனவே கைதியாக இருப்பவர் ரெட். வெளியிலிருந்து சிகரெட், மதுபானம் மற்றும் சிற்சிறிய பொருட்களை வரவழைத்து உள்ளிருக்கும் கைதிகளுக்கு தருவிப்பதில் வல்லவர்.  ஆன்டியும் ரெட்டும் விரைவில் நண்பர்களாகிவிடுகின்றனர். தொடக்கத்தில் சிறையில் இருக்கும் மற்றொரு கும்பல் மூலம் ஆன்டிக்கு சுயபாலின துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது.


ஒருமுறை கேப்டன் ஹேட்லிக்கு ஏற்படும் நிதி கையாளுதல் பிரச்சனையை தக்க யோசனை தந்து உதவி புரிகிறார் ஆன்டி. இதன்மூலம் வார்டனின் பார்வை ஆன்டியின் மீது திரும்புகிறது.

சிறைச்சாலை, கைதிகளின் உழைப்பை பயன்படுத்தியும் ஆன்டியின் நிதி நிர்வாகத் திறனின் உதவியினாலும் வார்டன் ஊழல்கள் புரிந்து பெரும் பணம் ஈட்ட துவங்குகிறார். இதற்கு மாற்றாக ஆன்டி சிறைக்குள் இருக்கும் நூலகத்தை விரிவாக்கவும், கைதிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கவும்  வார்டன் தடையாக நிற்பதில்லை.

19 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் சிறைக்கு வரும் மற்றொரு  கைதி மூலமாக ஆன்டி குற்றமற்றவர் எனத் தெரிய வருகிறது.  இதன் மூலம் தன்னை விடுவிக்க வேண்டும் என ஆன்டி வார்டனின் கேட்கும் நிலையில் தனது ஊழல் குற்றங்கள் வெளியே கசிந்துவிடும் என்பதால் வார்டன் கடுமையாக மறுக்கிறார்.

ஏமாற்றமும் விரக்தியுமாய் காணப்படும் ஆன்டி ரெட்டிடம் வினோதமாக பேசுகிறார். நம்பிக்கையின் சக்தி குறித்தும் விடுதலைக்கு தான் தகுதியானவன் எனவும் கூறுகிறார். என்றாவது ரெட் விடுதலையானால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்.

ஆன்டியின் இத்தகைய பேச்சுக்களினால் கவலையுறும்  ரெட் மற்றும் நண்பர்கள் குழாம் அவர் தற்கொலை செய்து கொள்வாரோ எனப் பயப்படுகிறது. அன்றைய நீண்ட இரவை கடினமாக கழிக்கிறார் ரெட்.

மறுநாள் காலை ஆன்டியின் செயல் அந்த சிறைச்சாலையையே திகைப்புக்குள்ளாக்குகிறது. அங்கிருந்து நாம் எதிர்பாராத திசையில் பயணிக்கும் திரைப்படத்தை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

ஆன்டியின் முடிவு என்ன, அத்தனை வருடங்களும் தனது புத்திக் கூர்மையால் சிறைக்குள்ளேயே அவர் செய்தது என்ன, வார்டனின் முடிவென்ன, ரெட் இறுதியாக ஆன்டி சொன்ன நம்பிக்கையின் வீர்யத்தை உணர்ந்தாரா என்பது ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் மீதிக்கதை.

இந்தத் திரைப்படத்தை பார்த்து முடிக்கையில் ஏற்படுத்தும் பாசிட்டிவ்வான பாதிப்பு அளவிட முடியாதது. மேலோட்டமாக மட்டுமே இப்பதிவில் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கடைசி அரை மணி நேரம் நமக்கு தரும் உத்வேகம், எதிர்பாராத கிளைமேக்ஸ், ஆழமான வசனங்கள், கைதேர்ந்த கலைஞர்களின் நடிப்பு என நம் மனதை சலவை செய்து புத்துணர்வாக்கி விடும் வல்லமை கொண்டது ஷசாங்க் ரெடம்ப்ஷன்.


இன்றும் இத்திரைப்படம் நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு காரணம், இது சொல்லும் சேதி.. அது..

"நம்பிக்கை அளவில்லாத சக்தி கொண்டது.... என்றும் வீண் போகாது."


சில சிறைச்சாலை வன்முறைக் காட்சிகள்,  டைட்டிலில்  சில நொடிகள் வரும்  காட்சிகள் மட்டும்  சிறியவர்களுக்கு ஏதுவானது அல்ல.


- சுகுமார் சுவாமிநாதன், வலைமனை



Tags : The Shawshank Redemption in Tamil, ஷஷாங்க் ரெடம்ப்ஷன், ஷசாங் ரிடெம்ப்ஷன், ஷசாங் ரெடம்ஷன்

Saturday, February 7, 2015

என்னை அறிந்தால் | ஹாட்ரிக் என்னாச்சு?



அஜித்திற்கு ஹாட்ரிக் வெற்றி நிகழுமா என்பதும் கவுதமிற்கு ஹாட்ரிக் தோல்வி தவிர்க்கப்படுமா என்பதும் 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட்டை பொறுத்து இருந்தது.

நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என கடைசி இரண்டு படத்தில் சறுக்கல். மேலும் 'கவுதம் சரியா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலை' என்கிற சூர்யாவின் ஸ்கூல் மிஸ் கம்ப்ளெயின்ட். ஆகவே எதுவும் ரிஸ்க் எடுத்து சொதப்பி விடக்கூடாது. என்ன பண்ணலாம்..? சறுக்கிய ந.நவின் ஓவர்டோஸ் காட்சிகளோ, நீ.எ.பொ படத்தின் டோஸே இல்லாத காதல் காட்சிகளையோ அறவே தவிர்த்து விட வேண்டும். பிறகு?

பெயரைத் தந்த வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தான்டி வருவாயா, வாரணம் ஆயிரம் படங்களின் ரசிக்கப்பட்ட போர்ஷன்களை எடுத்துக் கொண்டு அதில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர் எல்லாரையும் பொருத்தி  சோளிகளை குலுக்கி போடுவது போல போட வேண்டியதுதான்.

ஆனாலும் அப்படி போடப்பட்ட இந்த 'என்னை அறிந்தால்' குலுக்கல் அழகாகவே விழுந்திருப்பது ஆச்சரியம். வெட்டுப்படாமல் தப்பிக்கவோ பழம் பழுக்கவோ ஆட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் விழுந்த தாயம் போல, கவுதமிற்கு மீண்டும் நற்பெயரை இந்த படம் நிச்சயம் வாங்கி தரும். (அதுக்காக அடுத்த படத்துக்கும் சோளியை கையில எடுத்து எங்க சோலியை முடிச்சுப்புடாதீங்கப்பு.)

அனுஷ்காவில் கதையை ஆரம்பித்து, அப்படியே அஜித்தை இணைத்து, அங்கே அருண் விஜய்யை கொண்டு வந்து பர பரவென மிக சுவாரஸ்யமாய் துவங்குகிறது படம். அஜித்தின் அந்த மெல்லிசான கோடு பிளாஷ்பேக்கை சொல்லி அவர் அந்தப் பக்கம் போய்விட்டார் என அருண் விஜய் உடனான கேங்ஸ்டர்  எபிசோடை தந்து சடாரென இந்தப் பக்கத்திற்கு ஷிப்ட் அடிப்பதில் இன்னும் கலக்குகிறது ஸ்கிரிப்ட்.

அதன் பின்பு திரிஷா, அவருடனான காதல், இழப்பு, பழிவாங்கல் என இடைவேளை வரை படம் போவதே தெரியவில்லை. அதன் பின்பு பாசம், பயணம், ஆக்ஷன் என சென்று மீண்டும் அனுஷ்காவில் வந்து முன்பாதியில் விட்ட இடத்தில் அழகாக இணைகிறது. இதன் பின்புதான் பெரியதாக ஒரு டிவிஸ்ட்டோ சஸ்பென்ஸோ இல்லை. ஆனாலும் சேசிங், ஷார்ப் வசன மோதல் என போரடிக்காமல் சென்று சொதப்பாமல் முடிவது ஆறுதல்.

சும்மா நின்றாலே ரசிர்களுக்கு ஹேன்ட்ஸமாக அருள் பாலிப்பவர் அஜித். இதில் கவுதமின் ஆராதனையில் எப்படி இருப்பார்? கேங்ஸ்டர், ஐ.பி.எஸ், சால்ட் அண்ட் பெப்பர் என மூன்று தோற்றங்களிலும் அவ்வளவு லவ்லியாக இருக்கிறார். ஆசிஷ் வித்யார்தியிடம் தன் வீட்டில் கோபப்படும் இடம் ஆகட்டும், மேத்யூ கூட்டத்தை ஒழிக்க துப்பாக்கி எடுக்கும் இடம் ஆகட்டும், லுங்கியை கட்டிக்கொண்டு நாக்கை மடித்து ரசிகர்களுக்காக செம குத்து குத்தும் இடம் ஆகட்டும், பள்ளி வாகனத்தை மறித்து பெண்ணை கூட்டிக் கொண்டு பயணிப்பது ஆகட்டும்..  வழக்கம் போல தொண்டை கிழிய 'தல.. தல' என கத்தி மாளாமல் அமைதியாய் அதே உற்சாகத்துடன் அஜித்தை ரசிக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு வித்யாசமான  ட்ரீட்.

திரிஷாவிடம் புரபோஸ் செய்யும் அந்த ரொமான்ஸ் காட்சியில் மட்டும் 'எனக்கு இதுல எல்லாம் இன்டிரஸ்ட் இல்லைப்பா' என்பது போலவே நடித்திருக்கிறார். இது வலிந்து செய்யப்பட்டதாக இருக்கலாம். (இந்த அம்சம் அன்புச்செல்வனில் இருந்தும்  ராகவனில் இருந்தும் சத்யதேவை வேறுபடுத்தி காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.)  *இப்படியும் பாஸிட்டிவ்வா சொல்லிக்கலாம்.

"யாராச்சும் பத்த வைங்கடா.. நான் எப்படி வெடிக்கிறேன் பாருங்க.."  என்பது போல் இருக்கும் சரவெடியாய் அருண்விஜய். பாண்டியா, அமுதன்-இளமாறன் போன்றவர்களின் குரூரத்தினை வெளிப்படுத்தாத ஆனால் அதே நேரம் நட்பை நம்பி ஏமாந்துவிட்ட வெறியுடன் தரமான வில்லனாக வெடித்திருக்கிறார். ஒரு நடிகர் கவுதமின் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை விட வேறென்ன பாராட்டு பெற்று விட முடியும்? பட்டாசு பாஸ்!

திரிஷாவா இது...? மை காட். பிளெயின் காட்டன் சாரியில் ஜெஸ்ஸியாக கவுதம் கைவண்ணத்தில் மின்னியவர்.. அப்படியே நேரெதிராய் சர்வ அலங்காரத்துடன் கண்களில் மையுடன் நடனத் தாரகையாக  ஜொலிக்கிறார். திரிஷாவுடன் ஒப்பிடுகையில் வெயிட்டான ரோல் அனுஷ்காவிற்கு இல்லை. கொடுத்த ரோலை செய்திருக்கிறார். "என் ரோலை வேணும்னா அவங்க பண்ணட்டும்" என கவுதமிடம் அனுஷ்கா சொன்னதாக செய்திகள் வந்ததே. அதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது. (வெவரம் மேடம் நீங்க!)

மியூசிக்கல் ப்ளே பார்த்திருக்கிறீர்களா.. பாடிக்கொண்டே முழுக் கதையையும் நடித்து காட்டிவிடுவார்கள். ஏறக்குறைய என்னை அறிந்தால் முதல் பாதி ஒரு லவ்லி மியூசிக்கல் ப்ளே. ஹாரிஸ் விளையாடி இருக்கிறார். சூப்பர் பாஸ்! தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை போல கொஞ்ச நாளாவது ஹாரிஸை யாரும் கலாய்க்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு மனிதர் உழைத்திருக்கிறார். ('நான் முன்ன மாரி இல்ல இப்போ.. ரொம்போ மாறிட்டேன்'னு அனேகன்ல ஒரு லைன் வருதே.. செம டைமிங் பஞ்ச் பாஸ் அது..! ஆஹா நானே கலாய்ச்சிட்டேனே.. மன்னிச்சூ மன்னச்சூ..)

‘பில்லா 2வில் விட்டது. ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சொல்லி அடித்துவிட்டு, மூன்றாவதாக அஜித் 'என்னை அறிந்தால்' படத்தை தந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் அடித்தது. அடுத்ததாக நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் இரண்டிலும் சறுக்கிவிட்டு  இப்போது கவுதம் 'என்னை அறிந்தால்' படத்தை சிறப்பாக தந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்திருக்கிறார்.

விவரிக்க முடியாத விஷுவல்ஸ், ஜில்லென்ற இசை, பற்றி எரியும்  மோதல், பசுமையான காதல் என 'என்னை அறிந்தால்' தமிழ் சினிமாவின் உன்னதம். இங்கிலீஷ்ல சொன்னா எக்ஸலென்ட்!

ஏன் தமிழ், இங்கிலீஷ்ல சொல்றோம்னா... கவுதம் படம்னா எல்லாம் அப்படித்தான்!

Friday, January 16, 2015

ஷங்கரின்? ஐ!




முதலில் பாஸிடிவ் விஷயங்களை பார்த்துவிடுவோம். விக்ரம் உடலையும் உயிரையும் உருக்கி நடித்திருக்கிறார். பிரம்மாண்டமான செட்கள், அழகான லொக்கேஷன்கள், கண்ணில் ஒத்திக் கொள்ளும் ஒளிப்பதிவு, டிரென்டி பாடல்கள், வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் எமியின் பொருத்தமான வாயசைப்பு என  வழக்கமாக ஷங்கர் படத்தில் கைகூடி வரும் தரமான தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது. ஆனால் ஷங்கர்தான் இல்லை.

சின்ன சின்ன ரோலில் வருபவர்கள் கூட சங்கர் சிமென்ட் போல காலத்திற்கும் உறுதியாய் மனதில் நிற்கும் வகையில் இருக்கும் ஷங்கரின் கதாபாத்திர தேர்வு திறன் சொதப்புவது இதுவே முதல்முறை. சுரேஷ் கோபி, கதாநாயகின் அம்மா, ஆட் ஏஜென்சி முதலாளி போன்றவர்களால் ஷங்கர் படங்களின் உயர் தரம் இதில் மிஸ்ஸிங்.

 டிவிஸ்ட்களை(!) கொண்ட முக்கிய கதாபாத்திரத்தின்  'அந்த கொழந்தையே நீங்கதான் சார்' போன்ற நடிப்பில் இரண்டு சீன்களிலேயே அவர்தான் வில்லன் என குழந்தை கூட கண்டுபிடிக்கும். குறும்பட இயக்குனர்கள் கூட இந்தா சாப்டு என டிவிஸ்ட்களுக்கே டிவிஸ்ட் வைக்கும் காலத்தில் இவ்வளவு அரதப் பழசான ஒரு டிவிஸ்ட் ஷங்கர் படத்திலா?

அவ்வளவு அழகான டாப் ரேட்டட் மாடல், ஒரு பிரேக் அப்பிற்கு பிறகு யாருமே அவளை திருமணம் செய்ய முன்வரவில்லையாம்.. உடனே அவரது அம்மா இந்த அங்கிளை திருமணம் செய்ய சொல்கிறாராம்.. ஷங்கர் சார், இரண்டாயிரத்து பதினைந்திலா இருக்கிறீர்கள்..?

ஒரு திருநங்கை கதாபாத்திரம் வந்த உடனேயே 'புளியமரம்' பாடலை கைகொட்டி ஷங்கர் படத்திலா பாடுகிறார்கள்? வழக்கமான முக்கோண காதல், ஏமாற்றம், பழிவாங்கல் வேண்டாம் என நீங்கள் மாறுதலாய் நினைத்து ஒரு பெண்ணிற்கு பதில் திருநங்கை பாத்திரத்தை வைத்திருக்கலாம். ஆனால் அவரது காதல், சீரியசாக காண்பிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா..? விக்ரம் அவரை உதறி விட்டு வந்ததும் அவர் படுத்துக்கொண்டே அழுகையில் தியேட்டரில் எல்லோரும் சிரிக்கிறார்கள். கடைசி வரை அவர் காதலிக்கும் போர்ஷன்கள் காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கிறதா.. இல்லை சீரியசாக சொல்கிறீர்களா என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருந்ததால், அவர் பழிவாங்க கிளம்புவது சத்தியமாக மனதில் ஒட்டவில்லை.

அடுத்த பழிவாங்கி ராம்குமார். கம்பீரமான அவரது தோற்றம், உடைகள் எல்லாமே ஓகே. ஆனால் குரல், டோன் சரியாக இருக்கிறதா..? முக்கிய இடங்களில் அவர் இழுத்து இழுத்து பேசுவது பெரும் பின்னடைவு.

இன்னுமொரு முக்கிய வில்லன், அந்த விளம்பர மாடல் ஹீரோ. அவர் இன்னும் சுத்தம். அவரும் கதாநாயகியின் அம்மாவாக வருபவரும் பெண் பார்க்க வருபவரும் இஷ்டம் போல இந்தியில் பேச, கொஞ்சம் கூட சின்க் ஆக்க கஷ்டப்படாமல் தமிழில் டப்பிங் பேசி இருக்கிறீர்கள். ஒருவேளை பாலிவுட்டுக்கு பயன்படட்டும் என விட்டீர்களோ என்னவோ.. ஷங்கர் படம் பார்க்கிறோமா அல்லது பாலிமர் சேனலில் டப்பிங் சீரியல் பார்க்கிறோமா என்பது போல் இருந்தது.

ஷங்கருடன் ஏ.ஆர் என்றால் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும்..? ஜெ.மே துவங்கி எந்திரன் வரை ஒவ்வொரு படத்தின் இசையும் சீன் பை சீன் மனப்பாடமாய் மனதில் இருக்கிறது. ஆனால் 'ஐ'யில்.. ?

வேறு மாடல் வேண்டும் என்கிற நிலையில் லோக்கல் விளம்பரங்களில் நடிக்கும் நடிப்பே வராத விக்ரமை பிடித்துக் கொண்டு அவருக்காக காதலிப்பது போல நடிக்கும் அளவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம்தான் எமிக்கு என்ன..  அவரது லைனில் நடிக்க தெரிந்த வேறு ஆணழகர்களே இருக்க மாட்டார்களா?

உருவ அவலட்சணங்களை குரூரமாக கிண்டல் செய்து ஒரு காமெடி டிராக் ஷங்கர் படத்திலா? பிரம்மாண்டங்களின் ரசிகர் நீங்கள். அதற்காக இவற்றையும் பிரம்மாண்டமாக்கி அதையும் காமெடி செய்கிறேன் என புண்படுத்தி.. சாரி சார்.. இவ்வகையில் எந்திரன் உங்கள் கனவு என்றால், 'ஐ' கெட்ட கனவு!

விக்ரம் - படத்தின் பிளஸ் பாயின்ட். மைனஸ் பாயின்ட் என்னவெனில் அவர் மட்டுமே பிளஸ் பாயின்ட் என்பதுதான். முன்பு சச்சின் காலத்தில், 'நீங்க விளையாடி ஜெயிச்சா ஓ.கே. எங்களையெல்லாம் கூப்பிடாதீங்க' என்பது போல் அவருக்கு பிறகு வரும் அனைவரும் வரிசையாக அவுட் ஆகி செல்வார்கள்.  அது போல, விக்ரம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கதற கதற நடித்திருக்கிறார். என்ன பயன்.. சச்சின் செஞ்சரி... ஆனால் இந்தியா தோற்றது  கதைதான்!

ஒரு பாடலில் வெறும் நுரையுடன் வரும் ஏமி, திருநங்கை பாத்திர சித்தரிப்பு, யூடியூப் போன்ற வசனங்கள், உருக்குலைந்தவர்களை கிண்டல் செய்வது என இந்த படம் ஒரு புதிய ஜானரில் வந்திருக்கிறது.

ஆக இதை முன்னோடியாக வைத்து, இனி இது போல படம் எதுவும் வந்தால்  U சான்றிதழுக்கு மேலே U/A  அதுக்கும் மேலே A என இருந்தது போக, இனி அதுக்கும் மேலே 'I' சான்றிதழ் வழங்கலாம்.


இணைப்பு : ஷங்கரை வியக்கவும் ரசிக்கவும் தவறியதில்லை!
http://www.valaimanai.in/2012/01/blog-post_13.html
http://www.valaimanai.in/2010/10/blog-post_08.html

Saturday, May 24, 2014

கோச்சடையான் | வலைமனை

கோச்சடையான் வந்தே விட்டது. முதல் நாளான நேற்றே இரண்டு முறை பார்த்துவிட்டேன். காலையில் பி.வி.ஆரில் முதல்காட்சியும், இரவு எஸ் 2 விலும். பி.வி.ஆரில் இருந்த அளவு ஏனோ எஸ்2 வில் காட்சி பளிச்சென்று இல்லை. எதற்கும் இன்னொருமுறை சத்யமில் பார்த்து விட வேண்டும்.



தீபிகா பொம்மை எப்பொழுதும் தூங்கி எழுந்த மாதிரியே இருக்கிறது. சின்ன கவுண்டர் மனோரமா போல சின்ன ரஜினி பொம்மை சிரித்த மாதிரியே இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் முகஜாடையில் பெரிய ரஜினி பொம்மை இருக்கிறது. கேரக்டர்ஸ் ஓடுவது, நிற்பது, நடப்பது எதுவும் சரியில்லை.  டான்ஸ் ஆடுவது ரொம்பவும் சரியில்லை. இப்படியும் கோச்சடையானை பற்றி சொல்லலாம்.

நல்ல கதை. விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகும் காட்சிகள். அரண்மனை, கோட்டை, காடு, மலை, தோட்டம், போர்க்களம் என எல்லா பின்னணிகளிலும் சரி.. உடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் சரி.. துல்லியமான, அழகிய வேலைப்பாடுகள். ஒவ்வொரு பிக்சலிலும் பார்த்து பார்த்து டிஜிட்டலில் செதுக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் காட்சியமைப்புகள், வசனம், இசை என பல பெரிய பிளஸ்களால் மேலே உள்ள மைனஸ்கள் மிகச் சிறியதாகி போகின்றன. தமிழில் புதிய அனுபவம். இப்படியும் சொல்லலாம். நான் இப்படி சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். 
...
இயக்குனர் சௌந்தர்யா தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல விஷயம் டிரைலரிலும் டீசர்களிலும் 'பொம்மை படம்' என பெயர் பெற வைக்கும் மோசமான காட்சிகளை சேர்த்தது. (அந்த டால்பினில் ரஜினி எகிறும் காட்சி எல்லாம் படு சுட்டி டி.வித்தனம்). ஆகவே மோசமான தாக்குதலுக்குள்ளாக தயார் நிலையில் சென்றால் ஆச்சரியமாக அடி ஒன்றும் அவ்வளவு பலமாக விழவில்லை. உண்மையில் மிகத் தரமான பல கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றை மட்டும் டிரைலரில் காட்டி திரையரங்கத்திற்கு வரவழைத்திருந்தார்கள் எனில் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

கேரக்டர்களின் முக அமைப்புகள், நிற்பது, நடப்பது அதிக டான்ஸ் மூவ்மென்ட்கள் அனைத்திலும் 'ஏதோ வந்த வரை' செய்திருக்கிறார்கள். ஆனால் ராணா படையை மீட்டு வரும் இடத்திலிருந்து கதைக்குள் இழுக்கப்பட்டு விடுவதால் பொம்மை பிரச்சனையை மனது விட்டுவிடுகிறது.

கேரக்டர்களின் தனிப்பட்ட அசைவுகளும், பாவனைகளும்தான் சரியில்லையே தவிர, மொத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் பிரமாதமாகவே இருக்கிறது. 
டைட்டில் காட்சிகளிலும், சூப்பர் ஸ்டார் எழுத்துக்களிலும் 3டி யை அள்ளித் தெளித்து 'இந்தா சாப்டுக்கோ' என வந்ததும் குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி போல அதற்குப் பிறகு மெயின் படத்தில் கண்களுக்கு முன்னால் வரும் 3டி எலிமென்ட்ஸ் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.  ஒவ்வொரு லேயர்களுக்கும் இடையே தெரியும் 3டி ஆழமும் பெரிதாக இல்லை. சிவாஜி 3டி யில் கூட படம் முழுவதும் 3டி எலிமென்ட்ஸ், மிக அருமையாக இருந்தது.

இடைவேளை விட்டதும் பாப்கார்ன் வாங்க செல்லாமல், இடைவேளை முடிந்ததும் தீபிகா சரக்கடித்துவிட்டு ஆடுவது போல் ஒரு பாடல் வரும் பாருங்கள்.. அப்பொழுது சென்றீர்களானால் கூட்டத்தில் சிக்காமல் பாப்பகார்னும் வாங்கலாம். உங்களுக்கும் சேதாரம் இருக்காது.  இரண்டு முறை பார்த்த போதும் இந்த பாடலை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

உடல்நிலை சரியில்லாத மோஷன் கேப்சர் டெக்னாலஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினியின் குரல், இன்னொன்று ரஹ்மானின் இசை. வீரமிக்க, விவேகமிக்க தளபதியாக ராஜா காலத்து ரஜினி என்னும்போழுதெ அள்ளிக் கொள்கிறது. "நெம்மதியா ஸந்த்தோஷமா இருங்க" என்பது போன்ற அவரது வழக்கமான தனித்துவ உச்சரிப்புகளால் பொம்மையை மறக்க வைக்கிறார். 

அடுத்தது ரஹ்மான். இவரெல்லையென்றால் படமே இல்லை. "ராணா.. ராணா.." என ஒலிக்கும் அந்த ஒரு தீம் மியூசிக் போதும். எங்கு தொட்டால் எங்கு வெடிக்கும் என்பதில் வல்லவர் ஏ.ஆர். இது மாதிரியான வித்யாசமான வடிவத்திற்காக ரஹ்மானும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சரியான ஒலி விருந்து.

நாகேஷ்! நல்ல ஐடியா. அவருக்கு குரல் கொடுத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு. நாகேஷை கொண்டு வந்ததும் சரி, அடுத்தடுத்து தேவைப்பட்டால் சீக்வெல்களை ரிலீஸ் செய்துகொள்ள வசதியாக படத்தை முடித்ததும் சரி.. மிக பிரமாதமான ஐடியா. 

நாகேஷை கொண்டு வந்தது போல், அடுத்தடுத்த பாகங்களில் (வந்தால்) எம்.ஜி.ஆரை கொண்டு வரலாம்! சிவாஜியை.. சுருளிராஜனை.. யோசித்து பாருங்கள்...  இந்த வசதியே படத்திற்கான  பலத்தையும் அதன் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடும். அடுத்தடுத்து வெர்ஷன்களில் படத்தின் தரமும் உயர்ந்திருக்கும். முக்கியமாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி (என்று நம்புவோமாக). 

டிரைலரில் பயமுறுத்தி தியேட்டரில் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் சௌந்தர்யா .. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உடன் உழைத்த உங்கள் குழுவினருக்கும்!

சிலையை கண்டால் அங்கே கடவுள் இல்லை. கடவுளைக் கண்டால் அது சிலை இல்லை என்பது போல், உங்களுக்கு பொம்மைப் படமாக தெரிந்தால் அங்கு கோச்சடையான் இல்லை. கோச்சடையானாக பார்க்க முடிந்தால் அங்கு பொம்மைகள் இல்லை!

Sunday, March 17, 2013

பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை


எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான  திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.

இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.

அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த  அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால்  அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.

இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.

பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங்  சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.

ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக  கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.

அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.

கடந்த நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும்  சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.


பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.

Friday, February 1, 2013

உப்பில்லா கடல்




எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!

வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும். 

ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து  வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது. 

'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம்.  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.

பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது. 

டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட  பயன்படுத்தாதது ஏமாற்றம்.

அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.

துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து  பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.

கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________

பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html


Friday, December 14, 2012

டால்பி அட்மாஸில் அதிரும் சிவாஜி 3டி





"சிவாஜியை... விடுதலை செய்" என ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலிருந்து வீசப்படும் ஆரஞ்சு பழம் ஒன்று நம் மீது விழுவதில் ஆரம்பிக்கிறது சிவாஜி 3டியின் பிரமிப்பூட்டும் இன்னிங்ஸ்! 3டி தொழில்நுட்பத்திலேயே எடுக்கப்பட்டதாக கூறப்படும் பல ஹாலிவுட் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது போன்ற அசத்தலான, நம்ப முடியாத தொழில்நுட்பத்தில் 2டி சிவாஜியை 3டி மயமாக்கி இருக்கிறார்கள்!

பாடல் காட்சிகளில் 3டி தொழில்நுட்பத்தின் ஆழத்தையும், தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டையும் உழைப்பையும் காண முடிகிறது. முன்னால் ஆடும் ரஜினி நயன்தாரா தொடங்கி, குரூப் டான்ஸர்கள், பின்னால் தெரியும் ஏரி, கடைசியில்  தெரியும் மலை வரை, லேயர் லேயராக மிகத் துல்லியமான டெப்த் அசத்துகிறது!

ஆங்கில 3டி படங்களில் கூட காண முடியாத கண்களுக்கு அருகே வரக்கூடிய 3டி எலிமென்ட்ஸ் இப்படத்தில் அதிகம். ஷங்கர், தோட்டாதரணி, கே.வி.ஆனந்த் பல்லேலக்கா பாடலில் செல்போனை தூக்கி வீசுகையில் அது சுழன்று சுழனறு நம் மேலே வந்து விழுகிறது!  சண்டைக்காட்சிகளில் பொருட்கள் நம் மேல் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் நமக்கும் பூ தூவுகிறார்கள். கிளைமேக்ஸில் தியேட்டர் முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறப்பது உச்சகட்ட திரில்.

(பணத்தை விடுங்க பாஸ்... வாஜி பாடலில் ஷ்ரேயா நீச்சல்குளத்தில் குளிக்க, அவர் குளித்த தண்ணீர் அப்படியே நம் மீதும் தெளிக்கிறதே.. விடுங்க பாஸ்.. அதையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்! ஹி..ஹி..)


http://en.wikipedia.org/wiki/Dolby_Atmos

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏப்ரல் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டால்பி அட்மோஸ் என்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உலகெங்கும் இதுவரை வெளிவந்திருக்கும் வெகு சொற்ப திரைப்படங்களில் சிவாஜி 3டியும் ஒன்று என்பது இதன் சிறப்புகளுக்கு மணிமகுடம். அதுவும் இவ்வாறான தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படமும் கூட.

http://www.dolby.com/us/en/professional/technology/cinema/dolby-atmos-video.html

படம் முழுவதிலும் டால்பி அட்மோஸ் பட்டையை கிளப்புகிறது. அதிலும் கிளைமேக்சில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும்பொழுதும், சண்டைக் காட்சிகளிலும் அப்படி ஒரு பிரமிப்பான ஒலி அனுபவத்தை தந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருக்கும் சீட்டும், கால் வைத்திருக்கும் தரையும் அதிருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்போதைக்கு இந்தியாவிலேயே டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் திரையரங்கங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சத்யம்-செரின், மற்றொன்று எஸ்கேப்-ஸ்ட்ரீக்! நான் முதல் நாள் இரவுக்காட்சி எஸ்கேப்பில் பார்த்தேன். நம்ப முடியாத பிரமிப்பூட்டும்  திரை அனுபவம்! முடிந்தவரை டால்பி அட்மோஸில் பார்க்க முயற்சி செய்யுங்கள்!

ஏ.வி.எம் லோகோ கருப்பு வெள்ளையில் கம்பீரமாய் துவங்கும் காலம் முதல் இன்று முப்பரிமாணத்தில் ஒளியும் டால்பி அட்மோஸில் ஒலியும் சேர்ந்து கொண்டு துவங்குவதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தான் என்றுமே ஒரு ஜாம்பவான் என்பதை நிருபித்திருக்கிறார்கள் ஏ.வி.எம். 

இத்தகைய சிறப்பான முயற்சியை மேற்கொண்ட ஏ.வி.எம்மிற்கும்,  பிரமிக்க வைக்கும் பணியினை செய்திருக்கும் பிரசாத் லேப் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Sivaji 3d Review Movie Experience Dolby Atmos - Satyam Serene - Escape Streak - AVM Productions - Prasad Lab - Rajni 12 12 12

Thursday, November 15, 2012

விஜயிஸம் இல்லாத துப்பாக்கி | வலைமனை



"துப்பாக்கி சூப்பரா இருக்கு. விஜய் படம் மாதிரியே இல்ல." என முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
கேபிள்ஜி, "அதனாலதான் நல்லாயிருக்கு" என ரிப்ளையிட்டிருந்தார்.

உண்மை! விஜய், டைரக்டர்ஸ் ஹீரோவாக தனது கேரியரில் இரண்டாம் இன்னிங்ஸை நிதானமாக துவக்கி வெற்றிகரமாக ஆடி வருகிறார்.

என்னதான் காவலன், நண்பன் என துப்பாக்கிக்கு முன்னரே இரண்டு படங்களில் 'விஜயிஸம்' தென்படவில்லை என்றாலும், குருவி, சுறா, எறா, புறா என பெயர் கூட ஞாபகம் இல்லாத தொடர் விஜய் படங்களில் செமத்தியாய் நாம் அடி வாங்கி இருந்ததால் காவலன், நண்பன் முதலிய படங்களின் மூலம் ரிலீஃப் கிடைத்ததே தவிர நாம் ரிக்கவர் ஆகவில்லை.

ஆனால், துப்பாக்கி படம், விஜயிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாய் குணப்படுத்துகிறது. அமைதியாய், அழகாய், ஸ்மார்ட்டாய், க்யூட்டாய் என காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக காலத்தில் நம் வீட்டு சமத்துப் பிள்ளையாக பெயர் பெற்றிருந்த விஜயை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.

இதே படத்தில் 'விளம்பர தளபதி சூர்யா' நடித்திருந்தால், ஓவர் ஸ்மார்ட்னெஸ் சிரிப்புடன், சட்டையை கழற்றி வீசி சிக்ஸ் பேக்குடன் என சூர்யாயிஸத்தை தெணற தெணற அடித்திருப்பார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் விஜய்க்கும் நாம் முதலில் நன்றி சொல்லிக்கொள்வோம்.

எப்பொழுதும் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலும் நயாபைசாவிற்கு கூட தேறவில்லை. பாட்டு ஹிட்டடிக்குது படம் மொக்கை வாங்குதே என யோசித்து வேண்டுமென்றே ரிவர்ஸ் டெக்னாலஜியில் பாடல்களை மொக்கையாக இசையமைத்தாற் போலிருக்கிறது.

ஆங்.. அப்புறம் படத்தில் காஜல் இருக்கிறார். எனக்கென்னவோ மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி மஹதீராவிற்கு பிறகு காஜலுக்கு சரியான கேரக்டர் மட்டும் அல்ல சரியான காஸ்ட்யூம் கூட தரப்படவில்லையென்ற குறை இருக்கிறது.

எனர்ஜியான், ஒலிம்பிக், டி.என்.ஏ, விஞ்ஞானம் என பல விஷயங்களை கலக்கியெடுத்து கே.வி.ஆனந்த் மாற்றானிலும், ஜுடோ, பேட்மேன், அயன்மேன், சுத்தியல் என மிஸ்கின் முகமூடியிலும் வரிந்து கட்டிக்கொண்டு மானாவாரியாக கதையை கொத்து போட்டு வெத்து ஆக்கியது போல அல்லாமல் 'ஸ்லீப்பர் செல்ஸ்' என்கிற ஒரேயொரு டாபிக்கை தேசபக்தி கொண்ட கதாநாயகன் மூலம்  சுவாரஸ்யமாகவும் சிம்பிளாகவும் குழப்பாமல் சொல்லி ஜெயித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இனிமேல் விஜய் படங்களிலும் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்து அவரது அடுத்த படத்தை சாமான்ய ரசிகரையும் எதிர்பார்க்கச் செய்ய வைத்த வகையில் துப்பாக்கி மாபெரும் வெற்றி பெறுகிறது!

வெல்கம் பேக் விஜய்! வி ஆர் வெயிட்டிங்!