Thursday, October 27, 2011

வேலாயுதம் - ஏழாம் அறிவு - டிரா மேட்ச்




அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றுதான் இல்லை. மற்றபடி  உணர்வுப்பூர்வமாக இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் மோதிய இரண்டு பெரிய படங்கள் ஏழாம் அறிவும் வேலாயுதமும்.


சூர்யாவை விட விஜய்க்கு அதிகம் இருக்கும் மாஸ் ஃபேக்டர், ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேனர், எம்.ராஜா இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோர் செய்த நிலையில் விஜய் ஆண்டனி சிக்சர்கள் அடித்திருந்தது என வேலாயுதத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவியிருந்தது.


அதே நிலையில், நல்ல விளம்பரங்கள், கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்ட ஹைப்,  போதி தர்மன் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஹாலிவுட் பட கதைகள் போன்ற தோற்றத்தை விளைவித்த டிரைலர்,  நிறைய தியேட்டர்களை பிடித்தது, முன்கூட்டியே புக்கிங் ஆரம்பித்தது, ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தது என வேலாயுதத்தை விட ஒருபடி ஏழாம் அறிவுக்கே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

25ம் தேதி இரவு கமலாவில் ஏழாம் அறிவு பார்த்தேன். சொல்லப்பட்டிருக்கும் செய்திக்காக சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் இது என்பது என் கருத்து. 

பாடல்களை திரையில் பார்க்க விரும்பிய ஒரே காரணத்திற்காக 26ம் தேதி தீபாவளியன்று காலை பி.வி.ஆரில் வேலாயுதம் பார்த்தேன்.  இதுவரை எந்த விஜய் படத்துக்கும் முதல்நாள் போனதில்லை.

விஜய் படம் பார்க்கிறோம் என மனதை தயார் செய்து கொண்டு உட்கார்ந்தால், ஆச்சரியப்படும் விதமாக முதல் பாதி முழுவதும் கலக்கலான காமெடியுடன் செம ஜாலியாக சென்றது வேலாயுதம்.  இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் அதிகமான ஆக்ஷன் மசாலாவினால் நெடி ஏறுகிறது.

கொடுக்கும் காசுக்கு மேலாகவே விஜய் ஆண்டனியும், சந்தானமும் திருப்திப்படுத்தி விடுகிறார்கள்.  முதல் பாதியின் கிராமத்து எபிசோடினை சொல்லிய விதம் செம அட்டகாசம்.  சென்னைக்கு வந்ததும் சந்தானமும் சேர்ந்துவிடுவதால் படம் இன்னும் வேகத்தில் பறக்கிறது. சுபாவின் வசனம் கண்டிப்பாக படத்திற்கு பெரிய பலம்.

மற்றுமொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் கண்ணில் பூச்சி பறக்க விடாமல் எதேச்சையாக விஜய் சூப்பர் ஹீரோவாக உருமாறும் விதம் நிம்மதியான விஷயம். கிராமத்தில் அடிக்கும் லூட்டிகள், சந்தானத்துடன் அன்டர் பிளே, ஹன்சிகாவுடன் திணறுவது என கில்லிக்கு பிறகு விஜய்யின் காமெடி பசிக்கு வேலாயுதம் நல்ல தீனி போட்டிருக்கிறது.

படத்தில் விஜய், சந்தானத்திற்கு அடுத்து இயக்குனர் நம்பிய விஷயம் ஹன்சிகாவின் இடுப்பு.  அம்மணியை மாப்பிள்ளை, எங்கேயும் காதலை விட அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மாமா மாமா என அவர் சுற்றி வருவது செம க்யூட். அவர் முன் ஜெனிலியா ஏதோ சுமாரான பிகர் போல் இருக்கிறார்.

எனக்கு வெகுவாக பிடித்திருந்த 'ரத்தத்தின் ரத்தமே..', 'சில்லாக்ஸ்', 'மொளச்சு மூணு..' பாடல்கள் சிறப்பாக திரையில் வந்திருக்கிறது.

இன்றைய அ.தி.மு.க. கட்சிக்கூட்டங்களில் "நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...." பாட்டு கட்டாயம் ஒலிப்பது போல் எதிர்காலத்தில் விஜய் கட்சிக்கூட்டங்களில் இந்த 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் அவசியம் அலறும். அதிலும் அந்த ஓ..ஓஹோ என வரும் ராகம் செம சூப்பர். எனக்கு பெர்சனலாக இந்த பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

ஆகவே மக்களே.. இரண்டாம் பாதியில் உள்ள ஒரு சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு ஒருமுறை பார்க்க கூடிய படமாக அமைந்திருப்பதனால் என்னைப்பொறுத்த வரை வேலாயுதமும் ஏழாம் அறிவுடன் டிரா ரிசல்ட் ஆகிறது.


பின்குறிப்பு : சத்தியமா நான் விஜய் ஃபேன் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்ற :
http://valaimanai.blogspot.com/2011/10/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/08/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/02/blog-post_23.html
http://valaimanai.blogspot.com/2010/12/blog-post_20.html




Velayudham Velayutham velayudam velayutam vijay ilaya thalabadhi vijay jaym m raja oscar ravichandran velayaudam vimarsanam blogger blog review valaipadhivu vimarsanam
velayaudam reivew by tamil blogger sukumar swaminathan

Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவு - மன்மதன் அம்பு - ஜெயித்தது எது?




சில மாதங்கள் முன்பு ஒரு விழாவில் : 


"மன்மதன் அம்பு படத்துடன் ஆரோக்கியமான போட்டி போடுகிறோம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் ஜெயிக்கிறது பார்த்துவிடுவோம்" - ஏ.ஆர்.முருகதாஸ்


போதி தர்மன் எபிசோட் உள்ளிட்ட, தமிழர்களுக்கு இந்த படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கும் செய்திகளுக்காக பாராட்டப்பட வேண்டி படங்கள் வரிசையில் அமர்கிறது ஏழாம் அறிவு!

போதி தர்மன் என்றால் யார் என்பது தமிழகத்தில் அனேகமாய் யாருக்குமே தெரியாத நிலையில், நம்மிடையே மறக்கடிக்கப்பட்ட, தேசம் கடந்து இன்றும் பெருமையாய் நினைவு கூறப்படும் ஒரு தமிழனின் சரித்திரத்தை தூசு தட்டி எடுத்து லேட்டஸ்ட் கேமராக்களினாலும், டிஜிட்டல் ஒலிகளினாலும் செல்லுலாய்டில் செதுக்கி, பயங்கரமாக மார்க்கெட்டிங் செய்து, ஒரு நல்ல தீபாவளி நாளாய் பார்த்து அமளி துமளியாய் சில லட்சம் தமிழர்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்.  இவ்வகையில் போதி தர்மன் சரித்திரத்தை புத்தகமாக அச்சடித்திருந்தால் சில நூறு பிரதிகள் மட்டுமே போணியாகி இருக்கும். அதனால் சொல்லப்பட்ட செய்திக்கு ஏ.ஆர்.முருகதாசுசுக்கு நன்றிகள்.

முதல் அரை மணி நேரம் மட்டும் மிஸ் செய்துவிடாதீர்கள். கண்ணுக்குளிர்ச்சியான சைனா எபிஸோட். போதி தர்மனின் வரலாறை சுருக்கமாகமாகவும் கம்பீரமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதன் பிறகு தற்காலத்திற்கு திரும்புகிறது கதை. போதி தர்மரின் மறக்கடிக்கப்பட்ட வரலாறை போலவே நம்மிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட நமது பாரம்பரியம், நமது வீரம், மருத்துவம் உள்ளிட்ட நமது பண்டைய பெருமைமிகு மகத்துவங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை, மிரட்டும் வில்லன், அழகிய கதாநாயகி, அட்டகாசமான ஒளிப்பதிவு, விஞ்ஞானம் அஞ்ஞானம் எல்லாம் கலந்து சொல்வதே ஏழாம் அறிவு.

இந்த வாரம் முழுமைக்கும் ஏற்கனவே டிக்கெட் ஃபுல் ஆகிவிட்டது. டிக்கெட் எடுத்தவரில் நீங்களும் ஒருவர் என்றால், இத்துடன் எஸ் ஆகிவிடுங்கள். இல்ல பரவாயில்ல நீ சொல்லு என்பவர்கள் மேலே தொடரலாம்.

தையின் கரு என்னவென்றால்,

அந்த காலத்தில் தமிழர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும் இருந்தார்கள். 'யம்மா யம்மா', 'ரிங்கா ரிங்கா' போன்ற மொக்கையான பாட்டுகளை தேவையற்ற இடங்களில் திணித்தாலோ, படம் நெடுகிலும் ஹிப்னாடிசம் செய்தே  சாகடிக்கும் காட்சிகளை வைத்து இம்சித்தாலோ, அந்த கால தமிழர்களாக இருந்தால், நெட்டில் 250  ரூவா கொடுத்து டிக்கெட் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானத்தோடு வெளிநடப்பு செய்திருப்பார்கள்.

ஆனா நேத்து படம் பார்த்த நான் உள்ளிட்ட தற்போதைய தமிழர்கள் காசு போகுதே என்கிற ஒரே காரணத்துக்காக முழு படத்தையும் மாடு மாதிரி உட்கார்ந்து பார்த்தோம்.

ஒருவேளை இயக்குனர், இக்கால தமிழர்கள் நமது பாரம்பரிய வீரத்தை மறந்துவிட்டோம் என்பதை பிராக்டிக்கலாக உணர்த்த விரும்பினாரோ என்னவோ...?

போதி தர்மர் போன்ற நாம் அறிந்திராத ஆச்சரியமான போர்ஷனை சொல்லி,  எடுத்துக்கொண்ட அருமையான கதைக்களனிற்கு ஈடாக, கஜினி, ரமணா போன்ற சுவாரஸ்யமான பிரசன்டேஷன் 7ஆம் அறிவு படத்தில் அமைக்கப்படவில்லை என்பதை மிகுந்த ஏமாற்றத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் கஜினி தந்த ஏ.ஆர்.முருகதாஸா இது...? அவ்வளவு கற்பனை வறட்சியான காட்சிகள்.

பாடல்கள் படத்தை விட்டு தனியே விலகி நிற்கிறது. முன் அந்தி, எல்லேலம்மா பாடல்களில் ஸ்ருதி கண்ணிற்கு குளுகுளுவென இருப்பதால் ஏதோ மன்னித்து விடலாம்.  படத்தின் அடுத்த சோதனை ஸ்ருதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீ......ள தமிழ் வசனங்கள். டப்பிங் ஆவது கொடுத்திருக்கலாம்.

அழகிய போதி தர்மா எபிசோடுக்கு திருஷ்டி பொட்டு அந்த டாக்குமென்டரி போன்ற வாய்ஸ் ஓவர். முருகதாஸ் அந்த போர்ஷனையும் கதையாகவே அமைக்க முடியாதவரா என்ன?

மிரட்டல் வில்லன் ஆரம்பத்தில் அசத்தினாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக அவர் ஹிப்னாடிஸத்தில் (நம்மளையும்) சாவடிப்பது அலுப்பை தருகிறது.

ஆனால் இதுபோன்ற குறைகள் ஒருபுறம் இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் ஏழாம் அறிவு.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மன்மதன் அம்பு படத்துடன் போட்டியிடுகிறோம் என முன்னர் ஒரு விழாவில் உற்சாகமாய் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் என்ன இருந்தாலும் உலக நாயகனோடு சவால் விட்டு யாரும் ஜெயிக்க முடியாது என்பது நிருபணமாகி இருக்கிறது. 


ஆம்! ஏழாம் அறிவு. மன்மதன் அம்பு அளவிற்கெல்லாம் மொக்கை இல்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
7aam arivu 7am arivu 7aam arivvu blog review by tamil blogger sukumar swaminathan
7th sense 7aam aarivu vimarsanam review
A.R.Murugadoss, Harris Jayaraj, Surya. Shruthi hassan
7ஆம் அறிவு 7ம் அறிவு ஏழாம் அறிவு பதிவு பதிவர்கள் விமர்சனம் வலைப்பூ வலைமனை சுகுமார் சுவாமிநாதன் 




Friday, October 21, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 21 10 11





ள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் எல்லா கட்சிக் கொடிகளையும் பார்த்து கண் பூத்து போய்விட்ட நிலையில் கடந்த வாரம் பளிச்சென ஒரு மினி வெள்ளைக்கொடி பேரணியை நெல்சன் மாணிக்கம் சிக்னலில் பார்த்தேன். 

(என் படங்களின் சோதனையை தாங்க) 'உன்னால் முடியும்'  என தமிழக மக்களுக்கு தலைவன் சொல்லும் வாசகம் பொறிக்கப்பட்டு, என் படங்கள் இங்கிருந்துதான் எடுக்கப்படுகின்றன என ஆந்திரா நோக்கி அவர் கைகாட்டும் சிறப்புமிக்க கொடி அது.

மற்ற கட்சிக்காரர்கள் பளீர் வேட்டி சட்டை போட்டுக் கொண்டு உலா வருவதையே பார்த்து பழகிவிட்ட நிலையில் இவர்கள் அழுக்கு ஜீன்ஸ், கட்டம் போட்ட காட்டன் சட்டையுடன் பைக்கில் உலா வந்ததை காண புதியதாக இருந்தது.

அது சரி.. பொட்டு பொடிசு கட்சியெல்லாம் உள்ளாட்சித் தேர்தல்ல தனித்தனியா பாலம் கட்டும்போது அணில் மட்டும் ஏன் வெறும் கல் எடுத்து தந்துக்கிட்டு இருக்காரு?








நீல நிறத்தில் சதுர வடிவிலான ஒரு தள்ளுவண்டி. மேல் உள்ள கதவை திறந்து அதில் எலுமிச்சை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அண்ணா யூனிவர்சிட்டியை சுற்றிய இடங்கள், ஏர்போர்ட் அருகில் என சென்னையின் பல சாலைகளின் அங்கம் இந்த இன்ஸ்டன்ட் லெமன் ஜுஸ் கடைகள்.

5 ரூபாய்க்கு சுர்ரென்ற நாக்கில் உரைக்கும் ஜுஸ் தருவார்கள். முன்பெல்லாம் குடித்திருந்தாலும் இப்போதெல்லாம் கலக்கப்படும் தண்ணீரின் சுகாதாரம் குறித்த பயம் காரணமாக தவிர்த்து வந்தேன்.

தற்போது அந்த தள்ளுவண்டிகளில் ஆச்சர்யம் கலந்த அப்டேட் ஆக சோடா வைத்து,  கண்முன்னே சீல் பிரித்து லெமன் சோடா தருகிறார்கள். சமீபத்தில் எம்.எம்.டி.ஏ காலனியில் கண்ணில் பட்ட ஒரு தள்ளு கடையில் குடித்துக்கொண்டே "இது நல்ல ஐடியாவா இருக்கே" என விசாரித்தபோது, "ஒருநாளைக்கு 50, 60 பாட்டில் போகுது சார்.. அந்த பாட்டில்ல இருக்கிற டேட் எடுத்து பாருங்க" என்றார். பார்த்தால் முந்தைய தின தேதி இருந்தது.

"ஸ்டாக் வண்டி வர்ற வழியிலயே மடக்கி எடுத்துட்டு வர்றேன் சார்" என மேலும் ஆச்சர்யமளித்தார்.



மெட்ரோ ரயிலோ மோனோ ரயிலோ ஏதோ ஒரு சிக்கு புக்கு சென்னையில் பறக்கப்போகும் நாள் வரை மனுஷன் டிராபிக்ல நொந்து நூடுல்ஸ் ஆயிடுவான் போல.
ஆனா நான் கேக்குறேன்.. இந்த டிராபிக்ல கொஞ்சம் கூட நிக்காம சர்ர்ருன்னு போயிடுற கலைஞர், ஜெயலலிதா இவங்க பெயரை கல்வெட்டுல போடும்போது, சிட்டி முன்னேற்றத்துக்காக டிராபிக் ஜாம் அவஸ்தையை பொறுத்துக்குற மக்கள் பெயரை எல்லாம் ஏன் போடக்கூடாது?


ரூம்ல நெறையா கொசு இருந்தா ஆக்டிவ் மோட் என்கிற விளம்பரத்தை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த மெஷினை வட்டமடித்தபடியே கொசு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறது.  எனக்கு தெரிந்து மனிதனுக்கு நிகராக டெக்னாலஜியில் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் கொசு தான். சாக்ஸ்க்குள்ள எல்லாம் புகுந்து கடிக்குதுப்பா...!!

Wednesday, October 19, 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை





திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.



ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்

பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

நமது பெண்களை வெளிநாட்டு பணிப்பெண் வேலைக்கு யாரும் அனுப்பவேண்டாம் என்பதற்கே இதை எழுதவேண்டி இருக்கிறது. அங்கு பணிப்பெண்கள் பற்றிய கதைகளை நான் மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்கள் அங்கிருந்தால் அவர்களிடம் கேளுங்கள் நிறைய கோபங்களும், சோகங்களும் கிடைக்கும்.

பதினெட்டு வருடங்கள் கண்டு, கேட்டு, உணர்ந்தறிந்த அனுபவங்களை நூல் ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'நான்' என தாமே சொல்வதாய் அமைத்திருக்கும் உத்தியால் நூல் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாய் இருக்கிறது. நூலுக்கும் வாசகருக்குமான அன்னியோன்யம் இதனால்  அதிகரிக்கிறது.

இந்திய முதலாளிகள் சம்பளம் கொடுக்கும்போது இந்திய ரூபாயில் கணக்குச் சொல்லி "இந்த மாதிரி சம்பளம் எல்லாம் உனக்கு இந்தியாவில் கிடைக்குமா?" என நக்கலடித்தே கொடுப்பார்கள். நம்ம ஊர் அடிமைகளும் "ஆமாண்ணே" பின்பாட்டு பாடும். ஆனால் பெரும்பாலோருக்கு பிடிக்காமல் பிரச்சினையும் செய்துவிடுவார்கள். முதலாளிகள் மண்டையை உடைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு சென்று வாழ்க்கையை தொலைத்தவர்களது கதைகளும், அரிதாய் ஜெயித்தவர்களது கதைகளும் புத்தகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள், பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், எல்லை தாண்டுதல், சிறைவாசம், மனித விற்பனை, வேலைகளில் துன்புறுதல் என பல உணர்ச்சிபூர்வமான கதைகள். சில நெகிழ வைக்கின்றன. சில அதிர வைக்கின்றன.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சென்று வேலைபார்ப்பது என்பதை நீங்கள் பொதுவாக ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பணக்கார நாடுகளுக்கு செல்வதே எனப்புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் பங்களாதேஷ், நேபாள், பூடான், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் நாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்க்கின்றனர்.


புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராத கன்டன்ட். அதையும்  சீரியஸாகவும், சுவையாகவும் சொல்லிய விதம். புத்தகம் முடிந்த உடன், சட்டென்று முடிந்தது போல உணரவைத்து, இதே அளவிலான இன்னொரு பாகத்தை இணைத்திருக்கலாமோ என வாசகனை எண்ண வைப்பது ஆகியன ஆசிரியர் கே.ஆர்.பி செந்திலின் வெற்றி.

இந்த புத்தகம் என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமானது. காரணம் இதன் முகப்பு அட்டைக்கான டிசைனை நான் வடிவமைத்திருந்தேன். சிறப்பான தரத்தில் படைத்திருக்கும 'ழ' பதிப்பகத்தாருக்கும் இது போன்ற வீரியமிக்க எழுத்தை தந்திருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

______________________________


புத்தக சுட்டி :  http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

பணம்
ஆசிரியர் : கே.ஆர்.பி.செந்தில்
வெளியீடு : ழ பதிப்பகம்
விலை ரூ.90

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________


வலைமனை நூலகம் : பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
http://valaimanai.blogspot.com/p/blog-page_10.html

Panam K.R.P.Senthil Za padhipagam review by valaimanai sukumar swaminathan

Sunday, October 16, 2011

இன்டி பிளாக்கர் மீட் | வலைமனை





கடந்த ஞாயிறு அன்று சென்னையில் இன்டி பிளாகர் மீட்.  அழைப்பு வந்த உடனேயே ரெஜிஸ்டர் செய்திருந்தாலும் கடைசி நேரம் வரை 'ஏதாவது இங்கிலீஷ்ல கேள்வி கேட்டுடுவாங்களோ ' என்கிற பதட்டத்தால் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருந்தது.

கடைசியில் போகலாம் என முடிவெடுத்து ஹயாட் ரெஜென்சிக்குள் நுழையும்பொழுது மணி 1.45 இருக்கும். வாசலிலேயே நமது பிலாசபி பிராபகரன் எதிர்ப்பட்டார். உள்ளே கீழே பேஸ்மென்டிற்கு சென்று பைக்கை பார்க் செய்கையில் கவுதம் இன்போடெக் ஆர்.வடிவேலனை கண்டேன். பார்க் செய்துவிட்டு மேலே என்ட்ரன்ஸ் வந்தால் அண்ணன் ஜாக்கி சேகர் உள்ளே ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். 



இருநூறுக்கும் அதிகமான பதிவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் நமது தமிழ்ப்பதிவர்கள் சுமார் 30 பேர் சென்றிருந்தோம். பெரும்பாலானோர் கடைசி வரிசையில் அமர்ந்தோம். தல ஜாக்கி சேகரை நிகழ்சசி ஒருங்கிணைக்கும் ஒரு பெண் கூப்பிட்டு கொண்டு போய் முன்னால் உட்கார வைத்தார்.  


நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம், தமிழ்நாடு மின்சார வாரியம் பாரம்பரிய முறைப்படி 10 விநாடி கரண்ட் செய்து அனைவரையும் வரவேற்றது சிறப்பு.


49 செகன்ட்ஸ் ஆஃப் ஃபேம் எனும் பகுதி முதலில் துவங்கியது. வந்திருந்தவர்களில் ரேண்டமாக 75 பதிவர்களுக்கு தங்களை பற்றிய அறிமுகம் செய்து கொள்ள 49 வினாடிகள் வழங்கப்பட்டது. ஜாக்கி சேகர், மணிகண்டன் நான் உள்ளிட்ட சில தமிழ் பதிவர்களுக்கே பேச வாய்ப்பு கிடைத்தது. ஜாக்கி பேசும்பொழுது 'ஜெய் ஜாக்கி' உள்ளிட்ட சங்கத்தின் கோஷங்களை எழுப்பி சரியான மாஸ் காட்டினோம்.



கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கே.ஆர்.பி.செந்தில், கேபிள், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த கார்க்கி மற்றும் வேறு சில பதிவர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்தபடி இருந்தோம்.

எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பார்த்து,  "பிளாக்ல எல்லாம் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டும்..." என கமெண்டிற்கு கமெண்ட் அடித்தார்.

பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களாக டாட்டா கிராண்டே கார் குறித்த அறிமுக உரை தரப்பட்டது.  தொடர்பான விளம்பரங்களையும் ஒளிபரப்பினார்கள்.


'ஹை டீ' இடைவேளை விட்டார்கள். சுமார் 1 மணி நேரம் இருக்கும். வந்திருந்த நம் தமிழ் பதிவர்கள் அனைவரையும் பார்த்து மகிழ்வாக உரையாட முடிந்தது. லக்கி, அதிஷா உடன் சேர்ந்து வேலாயுதம் வெற்றி வாய்ப்பு குறித்தும் சுறா ஏன் சரியாக போகவில்லை என்றும் கார்க்கியுடன் நீயா நானா நடத்திக்கொண்டிருந்தோம். 


நல்ல ஸ்நாக்ஸ் வகைகளை பரிமாறி இருந்தார்கள்.  பாஸ்ட்ரி, சிக்கன் ரோல் தவிர மற்ற எதன் பெயரும் தெரியவில்லை. ஆனால் எல்லாமே சுவையாக இருந்தது. கேபிள் சங்கர்ஜி பாஷையில்.. ம்ம்ம்.. டிவைன்..






இடைவேளை முடிந்து பதிவுகளை குறும்படங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இயக்கமான பிளாக்கலாக்ஸ் குறித்த விரிவுரை நடந்தது. நமது அதிஷாவின் 'மெட்ராஸ் பாஷையில் ஜென் கதைகள்' மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது என தொகுப்பாளர் சொன்னபோது ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது.


அடுத்ததுதான் சுவாரஸ்யமான விளையாட்டு, ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சார்ட்டில் அரை மணியில் யார் அதிகம் பதிவர்களை சந்தித்து அதில் அதிகமாக கமெண்ட் பெறுகிறார்கள் என்கிற ஜாலியான போட்டி.

'ஐயாம் மொக்கை ஆர் யூ?' என சார்ட்டில் எழுதி முதுகில் கட்டிக்கொண்டார் லக்கி. தமிழ் பதிவர்கள் யாரும் இதை அவ்வளவு ஆர்வமாய் எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுக்குள்ளேயே எழுதிக்கொண்டிருந்தோம்.

கார்க்கியின் சார்ட்டில் வேலாயுதம் சூப்பர் பிளாப் என யாரோ தமிழ்நாட்டிற்கே தெரிந்த ரகசியத்தை எழுதியிருந்தார்கள்.  எங்காத்தா மேல சத்தியமா நான் 'மங்காத்தா ராக்ஸ்' மட்டும்தான் அவர் சாட்டில் எழுதினேன்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜாக்கி முதுகிலிருந்து சார்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டார். ஏன் தல என்று கேட்டால், அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருவாங்கடா என ஜாலியாக சிரித்தார்.


இந்த விளையாட்டின் முடிவில் அதிகமாக கமெண்ட் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் கேட்டு பரிசுகள் கொடுத்தார்கள்.

ஒரு இளம்பெண் பதிவர் எழுந்து, "யார் எழுதியது தெரியலை. என்னோட சார்ட்டில் ரவுடி ஆஃப் பிளாகர் மீட்னு எழுதியிருக்காங்க. யார் எழுதியிருந்தாலும் கையை தூக்குங்க ப்ளீஸ்" என்றார்.  உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்கள் அனைவரும் கையை தூக்கி நான்தான் நான்தான் என்றோம்.  தொகுப்பாளர், அவருக்கு பரிசு வழங்கியதும் அதை வாங்கிக்கொண்டு எங்களைப் பார்த்து தாங்க்ஸ் என சொல்லி அவர் அமர்ந்தது செம க்யூட்.



இனிமையான சந்திப்பு, கடைசியில் அந்த டிஸ்கஷன் நிகழ்ச்சியில் ஹவ் கேன் வி ஹெல்ப் தமிழ் பிளாக்கர்ஸ் போர்ட் சர்ச்சைக்குரிய விஷயமானது.  அந்த போர்டை திரும்ப பெற வேண்டும் என ஒருங்கிணைப்பாளரிடம் முறையிட, அதற்கு அவர்கள் அந்த அர்த்தத்தில் தாங்கள் சொல்லவில்லை என வருத்தம் தெரிவித்து போர்டை திரும்ப பெற்றனர்.



இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோ பிளாக்கர் Pheno Menon அவர்களுடையது. த்ரூ தி லுக்கிங் கிளாஸ் என்கிற போட்டோ பிளாக் வைத்திருக்கிறார். அத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது.  இந்த புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த அவருக்கு எனது நன்றிகள்.

Thanks - Photo Courtesy : 



indiblogger tatagrande chennai meet hyatt regency valaimanai sukumar swaminathan

Thursday, October 13, 2011

மன்மோகன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? | கூடங்குளம்




மை டியர் மன்மோகன் சிங் சார்,

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். அப்பாவி தமிழ் பிளாக்கர். கடந்த வருடம் வரை அணுமின் உற்பத்தி குறித்து நேர்மறையான மனப்பான்மையையே நானும் கொண்டிருந்தேன். ஆனால் ஜப்பானில் நேர்ந்த விபத்திற்கு பிறகு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற டக்கர் நாடுகளே இருக்கும் அணு உலைகளை படிப்படியாக மூடிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில், கூடங்குளம் மிகவும் பாதுகாப்பானது என சொல்ல நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?

இல்ல அவ்ளோ பெரிய அப்பா டக்கரானு கேக்குறேன்.

ஒரு சுனாமி விபத்து, ஒரு பூகம்ப விபத்து விளைவிக்கும் சேதாரங்களை போன்றதல்ல ஒரு அணு உலை விபத்து.  மற்ற விபத்துகளால் நேரும் பாதிப்புகளை காலப்போக்கில் சீரமைத்து மறுபடி வாழ்க்கையை துவங்கலாம். 

ஆனால் அணு கதிர்களோ, செடிகள், விலங்குகள், மனித டி.என்.ஏ, நீர்நிலைகள் என எல்லாவற்றிலும் ஊடுருவி வரும் ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பாதிப்படைந்த பகுதி மற்றும் அதை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டரில் வரும் பகுதிகளையும் பயன்படுத்த தகுதியற்றவையாக மாறிவிடும்.

டிநகர் ரங்கநாதன் தெருவில் 'பலா சொளை பத்து ரூவா' என கூவுவது போல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது ஜப்பான் புகுயுஷிமாவை விட அதி நவீனமான அணு உலை என்றும் மிகுந்த பாதுகாப்பானது என்றும் நீங்களும் உங்கள் விஞ்ஞான பெருமக்களும் தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கிறீர்கள். 



அப்படியே வைத்துக்கொண்டாலும், ஒரு விபத்து ஒரு பேரழிவு நிலை என்று வந்துவிட்டால் நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் மனநிலையுள்ள அதிகாரிகள் அணு விபத்தை எதிர்கொண்டு எத்தகைய மீட்பு / சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மீண்டும் மீண்டும் இது பாதுகாப்பானது, பயப்பட வேண்டாம், இந்த திட்டதிற்கு ஆதரவு தாருங்கள் என்றே நீங்கள் லெட்டர் எழுதப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கே ஒரே ஒரு கேள்வி...


ஒழுங்காக ஒரு ரோடு போட முடிகிறதா மிஸ்டர் சிங் உங்களால்?  மழை , வெயிலில் இந்திய நாட்டின் எந்த ரோடாவது அதற்கு செலவு செய்யப்பட்டதற்கு ஈடான தரத்துடன் விளங்குகிறதா...?



இருக்கிற எதையுமே ஒழுங்காக செய்யயாத அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட நீங்கள்...இந்த அணு உலையை அசால்ட்டாக பாதுகாப்பேன் என்று சொல்வதை பொதுஜனமான நாங்கள் எப்படி நம்ப முடியும் மிஸ்டர் சிங்...?


ரொம்பவும் வேண்டாம்.. ஒரு மூன்று மாதம் நாட்டில் எங்குமே குண்டு வெடிப்பு நிகழாமல் உங்களால் பாதுகாக்க முடியுமா..? சேர்ந்தாற்போல் ஒரு இரண்டு வருடம் ஆவதில்லை.. சீரான இடைவெளியில் ஏதாவது ரயில் கவிழ்கிறது.  விமானம் நொறுங்குகிறது.


இவையெல்லாம் விபத்துகள்.. விபத்துகள் இயற்கையானவை அவற்றை தடுக்க முடியாது என்று நீங்கள் கூறுவீர்களேயானால், அணு உலை விபத்தும் தவிர்க்க முடியாதது தானே...?


இல்லை.. அது நடக்கவே நடக்காது ... பயங்கரமான பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளோம் என்று மீண்டும் மீண்டும் சொல்வீர்களேயானால், 


மன்னிக்கவும் மிஸ்டர் சிங்.. இயற்கை உங்களை விட மிகப்பெரியது!   இயற்கையின் சீற்றம் இன்னமும் உங்கள் விஞ்ஞானத்தின் எந்த ஒரு தொழில்நுட்பத்திற்குள்ளும் அடங்காதது!





Tuesday, October 11, 2011

வர்ணம் - பார்க்க வேண்டிய படம்




ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பதிவர்களும் அழைக்கப்பட்ட மற்றுமொரு சிறப்புக் காட்சி.  பெரிய ஹீரோக்கள் இல்லாத.. ஏன், சிறிய ஹீரோக்களே கூட இல்லாத,  ஓப்பனிங் இல்லாத ஒரு லோ பட்ஜெட் படம். புதுமுக இயக்குனர்.

ஏதோ சுமாராய் இருந்தால் போதும் என மனதை தயார்படுத்திக்கொண்டு படம் பார்க்கத் துவங்கினால் அட்டகாசமான சப்ஜெக்ட்டை கையில் எடுத்துக்கொண்டு சில பல திருப்பங்களோடு போரடிக்காமல் முதல் பாதியையும் படு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதியையும் கொடுத்து அசர வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எம்.ராஜு.

அழகான காட்சிகளை சொல்லும் ஓவியங்களின் மேல் தெளிக்கும் வண்ணங்களை காண்பித்து ரம்மியமான டைட்டிலுடன் துவங்குகிறது படம்.  எடுத்துக்கொள்ளப்பட்ட கதைக்களனும் அதுதான். இயற்கையில் சமமாக படைக்கப்பட்ட மனித குலத்தின் மேல் தெளிக்கப்படும் 'வர்ணம்'  குறித்தது தான் கதைக்கருவும். இரட்டைக்குவளை முறை, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான அடக்குமுறை, அவர்களை அவமானப்படுத்துதல் முதலிய தீண்டாமை கொடுமைகளை காதல், மோதல், மர்மம் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

இயல்பான திருவிழா காட்சிகளை கொண்ட பாடல், முனியின் கதை சொல்லும் பாடல் ஆகியன சிறப்பாக வந்திருக்கின்றன.   பின்னணி இசையும் குறிப்பிடும்படியாய் அமைந்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.  தங்கமாக நடித்திருக்கும் அந்த இளம்பெண், மோனிகா, நந்தா, கதை சொல்லும் இளைஞன், சம்பத் என பாத்திரங்கள் அனைவரது நடிப்பும் அருமையாக இருக்கிறது.

மோனிகாவை முனி பிடித்து விட அனைவரும் பயத்தில் உறையும்பொழுது, மணி மட்டும் அதன் பின்னணி அறிந்தவனாய் முறைத்துப்பார்ப்பது, தங்கத்துடன் பேசிவிட்டு வரும் செல்லத்தை துரத்தி துரத்தி விசாரிப்பது, அருவியில் படுத்தபடி கதை சொல்வது என பல காட்சிகள் கவிதையாய் ரசிக்க வைக்கிறது.

நன்றாக படித்த பணக்கார வீட்டு கதநாயகி லூசு பெண் போல விறைப்பாய் சுற்றும் கதாநாயகன் மேல் விழுந்து விழுந்து லவ் பண்ணும் உருப்படாத சினிமாக்களை எடுத்து வைத்துக்கொண்டு 'திருட்டு சி.டில பார்க்காதீங்க... தியேட்டர்ல வந்து படம் பாருங்க...'  என மைக்கை கடிக்கும் மனசாட்சியே இல்லாத இயக்கு'நார்'கள் மலிந்து வரும் காலத்தில், அரிதாய் அவ்வப்போது பூக்கும் குறிஞ்சிப் பூக்களில் ஒருவராய் பூத்திருக்கிறார் எஸ்.எம்.ராஜு.

வர்ணம் - சிறப்பான படைப்பு -  பார்க்க வேண்டிய படம்!

Varnam varnamm varnam movie review valaimanai vimarsanam
monica monika nandha s.m.raju 
review by sukumar swaminathan valaimanai


Monday, October 10, 2011

சதுரங்கம் - பிளாக்கர்ஸ் ஷோ





பதிவர் அண்ணன் உண்மைத்தமிழன் மீண்டும் ஒரு பதிவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு அழைத்திருந்தார்.  கடந்த முறை கரு.பழனியப்பன் அவரது மந்திரப்புன்னகை. இம்முறை சதுரங்கம்.

முதல் பாதியில் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் தாமதமாக நான் சென்றதால் முழுமையான திரை விமர்சனம் எழுத முடியவில்லை.  படம் பல வருடங்கள் தாமதமாக வெளிவந்திருக்கிறது. ஆனாலும் பார்ப்பதற்கு புத்தம் புதிய காப்பியாக இருந்தது. எல்லாம் டிஜிட்டல் மாயம்.

நேர்மையான பத்திரிக்கை ரிப்போர்ட்டரால் பாதிக்கப்படும் ஒருவர் அவரது காதலியை கடத்தி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறார். கடைசியில் எப்படி அந்த ரிப்போர்ட்டர் தனது காதலியை மீட்டார் என்பதே சதுரங்கம்.

அழுத முகத்துடன் இருக்கும் சோனியாவையும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.  கரு.பழனியப்பனின் வழக்கமான படங்கள் போலவே வசனங்கள் ஷார்ப். ஸ்ரீகாந்த்திற்கு பதில் மந்திரப்புன்னகை போல் அவரே நடித்திருக்கலாமோ என்று யோசித்தேன்.
மிதமான வேகத்தில் போரடிக்காமல் செல்லும் படத்திற்கு கிளைமேக்ஸ் பெரிய டிரா பேக்.

பாதி படமே பார்த்ததால் இதற்கு மேல் விமர்சித்தால் அது தர்மமாகாது.

படம் முடிந்து இயக்குனர் கரு.பழனியப்பனுடன் எங்களது அரட்டை  சுவாரஸ்யமாக இருந்தது. ஜாக்கி அவரது படங்கள் குறித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் புன்னகையுடன் பழனியப்பன் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு இயக்குனராக தான் யோசித்த கிளைமேக்ஸை எடுக்க முடியாமல் போனதன் சிரமத்தை அவர் விவரித்த போது படத்தின் சொதப்பல் கிளைமேக்ஸுக்கான காரணம் புரிந்தது.


பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த சிறப்பு காட்சிக்கு பல பதிவர்கள், பேஸ்புக் நண்பர்கள் யாவரும் வந்திருந்தனர். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், கே.ஆர்.பி.செந்தில், காவேரி கணேஷ், மயில்ராவணன், மணிஜி, பட்டர்பிளை சூர்யா, அதிஷா, யுவகிருஷ்ணா, தேனம்மை லஷ்மணன் மேடம் அதில் சிலர்.
_____


இதே போல் இன்று மாலை அண்ணன் உண்மைத்தமிழன் மாலை 6 மணிக்கு வர்ணம் சிறப்பு காட்சிக்கு அழைத்திருக்கிறார்.   ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு உள்ளே இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்படுகிறது. ஆகவே வர இயலும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

விவரங்களுக்கு : http://truetamilans.blogspot.com/2011/10/blog-post_08.html


Sathurangam sadhurangam sadurangam sonia agarwal srikanth karu palaniappan valaiamanai movie review