Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, February 19, 2015

ஜப்பான் - நூல் அனுபவம்


‘இது முரம்… இது தூண்…’ என கண்ணை கட்டிக் கொண்டு யானையை தொட்டுப் பார்த்து உணர்ந்தவர்கள் போல, ஜப்பான் என்றால் சுறுசுறுப்பான மக்கள், தொழிலிலும் தொழில்நுட்பத்திலும் கில்லாடிகள், அணுகுண்டு வீசப்பட்ட நிலையிலும் தங்களது அசாதாரண உழைப்பால் மீண்டெழுந்தவர்கள் என அப்படியும் இப்படியுமாய் ஒரு புரிதல் வைத்திருந்தேன்.
கட்டை அவிழ்த்ததும்தான் இது யானை என்கிற பிரம்மாண்ட நிஜம் புரிவது போல், எஸ்.எல்.வி.மூர்த்தி அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஜப்பான் என்கிற புத்தகம் அறிவுக் கண்ணைத் திறந்து இதுதான் உண்மையான ஜப்பான் என உள்ளதை உள்ளபடி காண்பித்து பிரமிக்க வைக்கிறது.
ஜப்பானை தேவதைகள் உருவாக்கிய விதம் என நம்பப்படும் புராதான கதையில் துவங்கி இன்றைய தொழில்நுட்ப சாதனைகள் வரை வெகு விரிவாக ஜப்பான் குறித்து அறியத் தருகிறது இந்நூல். முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் ஜப்பானின் பங்கு, தன்னை வலிமையான சக்தியாக நிருபிக்க அந்நாடு எடுத்த முயற்சிகள், அதன் விளைவாய் கொடுத்த மிகப்பெரிய விலைகள் என பாட புத்தகங்களில் நாம் மேலோட்டமாக அறிந்திருந்த நிகழ்வுகளின் முழு பின்னணியும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
“ஒட்டுமொத்த ஜப்பானிய மக்கள் வாழவும், விவசாயம் தொழில் நடத்தவும் இருக்கும் மொத்த நிலப்பரப்பு தமிழ்நாட்டின் 80% மட்டுமே.” என துவக்கத்திலேயே ஜப்பானின் உருவத்தை நம் மனதில் பதிய வைத்துவிட்டு அத்தகைய சிறிய இடத்தினுள் நடந்த பிரம்மாண்டங்களை ஆசிரியர் விவரிக்கையில் நமக்கு ஏற்படும் சுவாரஸ்யம் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வைக்கிறது. ஜப்பானின் கற்காலம், மன்னராட்சிகள், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடனான வியாபார உறவுகள், சமுராய்கள், மதம், மக்கள், சாதனைகள், அவமானங்கள், வல்லரசு கனவு, அதற்கான விலை, வீழ்ச்சியில் இருந்து மீள்வது, அமெரிக்க உதவி, தொழில் புரட்சி, இன்றைய சவால்கள் என ஜப்பான் குறித்து ‘அ’ துவங்கி ‘ஃ’ வரை மிக விரிவாக எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
ஒரு அரசியல், வரலாற்று புத்தகமாக, நமது இந்திய தேசம் எங்கே நிற்கிறது, இன்னும் எங்கே செல்ல வேண்டும் என யோசனைகளை இந்த புத்தகம் தோற்றுவிக்கும் அதே சமயம், ஜப்பான் மற்றும் ஜப்பானியர்களின் ‘கற்கும் பசி’ முதலிய குணாதிசயங்களில் இருந்து தனி மனித அம்சங்களாய் நாம் பின்பற்ற வேண்டியவைகளையும் கோடிட்டு காட்டி ஒரு சுய முன்னேற்ற புத்தகமாகவும் மிளிர்கிறது.
அத்தியாயங்கள் மிகப் பெரியதாக இருப்பதாலும் ஒரே அத்தியாயத்தில் பல கால நிலைகள் கடந்து பல விஷயங்கள் சொல்லப்படுவதாலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தரப்பட்டுள்ள ’என்ன படித்தோம்’ என்பதை நினைவூட்டும் ஹைலைட்ஸ் பகுதி புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. 192 பக்கங்கள் உள்ள ஒரு நான்-பிக்ஷன் புத்தகம். ஒரே அமர்வில் படிக்க நேரம் வாய்க்காமல் அவ்வப்போது விட்டுவிட்டு படிக்க நேரும் நிலையில், அந்த புத்தகம் நம்மை தொடர்ந்து ஈர்ப்பது அவசியம். அந்த வகையில் யாரோ அழைத்தால் ஒலியெழுப்பும் செல்போன் போல இந்த புத்தகம் தன்னை நோக்கி அழைக்கும் விதத்தில் சிறப்பம்சங்களை தன்னுள்ளே பெற்றுள்ளது.
மேம்போக்காக வளர்ச்சி, வீழ்ச்சி என் சொல்லிவிட்டு செல்லாமல் தேவைப்படும் இடங்களில் முக்கிய தரவுகளை தந்து படிப்பவர்களுக்கு சிறந்த புரிதல் அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆசிரியரின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. ஒரு தேசத்தின் பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என்கிற விஷயங்களைப் பற்றிய அறிவு சுத்தமாய் எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த புத்தகம் ஜப்பானின் பொருளாதாரம் பற்றி சொல்லும் அதே வேளை ஒரு தேசத்தின் பொருளாதாரம் என்றால் என்ன ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, வளர்ச்சி, வீழ்ச்சி என்றால் என்ன என்பதையும் நமக்கு அறிய தருகிறது. உதாரணமாக பண வீக்கம், பண வாட்டம் பற்றியெல்லாம் போகிற போக்கில் மிக எளிமையாக புரிய வைக்கிறார் ஆசிரியர்.
எந்த இடத்திலும் வலிந்து வார்த்தை தோரணங்களை சேர்க்காமல் மிக இயல்பாக, அதே நேரம் வேகமாக செல்லும் நூல், சொல்லப்பட்டிருக்கும் கனமான உள்ளடக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இவ்வகையில் இந்த புத்தகம், மாணவர்கள், அதிகார மையத்தினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தரத்தில் அமைந்திருக்கிறது.
இதற்கு மேல் எவ்வளவு சொன்னாலும் கூட இந்த புத்தகத்தின் மதிப்பிற்கு இணையாக சொல்ல வேண்டிய விஷயங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகும் என்பதால் இந்த புத்தகம் குறித்தான மதிப்புரைக்கு முடிவுரையே இல்லை!
ஆன் லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-782-4.html
________________________________________________________________
வலைமனை பிற புத்தக பரிந்துரைகளை படிக்க : புத்தக அனுபவம்
வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Wednesday, December 5, 2012

கேபிளின் கதை | நூல் அனுபவம்



கேபிள் சங்கர் என பிரபலமாக அறியப்படும் சங்கர் நாராயண், தனது புனைப்பெயரில் உள்ள 'கேபிள்' கொண்டிருக்கும் அனுபவத்தையும், கேபிள் டி.வி.யின் அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றையும் ஒருசேர படைத்திருக்கும் 'கேபிளின் கதை' வெகு சுவாரஸ்யமான அறிவூட்டும் அனுபவம்!

படு வேகமான வளர்ச்சிப் பாதையில் போகும் ஒரு தொழிலைச் செய்வது அப்படி ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, பணம், தினமொரு சேனல், அதற்கான முஸ்தீபுகள் என்று தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் ஆப்பரேட்டர்கள். இதுப் போல பல பிரச்சனைகளை சந்திக்கத் தயாராக இருக்கக்கூடிய ஆள்தான் ஆட்டத்தில் இருக்க முடியும் என்ற நிலைமையானது.

கேபிள் டி.வியின் வரலாறு சொல்லப்படும் அதே நேரத்தில் அன்று தனக்கு நேர்ப்பட்ட சொந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சேர்த்து சொல்வது போன்ற யுத்தி அருமையானது. ஆனால் பாதியில் தனது சொந்த அனுபவ கதை நிறுத்தப்படுவது சிறு ஏமாற்றம்.


அந்த புயலில் ஸ்டார் போன்ற சேனல்களை ரிசீவ் செய்ய வைக்கப்பட்டிருந்த டிஷ் ஆண்டானா, அப்படிய என் கண் முன், அலேக்காய் பறந்து பக்கத்து காலி கிரவுண்டில் சுக்கல் சுக்கலாய் விழுந்தது. ஆங்காங்கு எங்கள் காலனியில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் போட்டிருந்த கேபிள் ஒயர்களையும், ஆம்ப்ளிபையர்களையும் இழுத்து அறுத்து போட்டிருந்தது.


கேபிள் டி.வி உருவான காலம் முதல் அது தமிழகத்தில் தரவிறங்கி இன்று அரசியலுடன் இரண்டற கலந்துவிட்ட நிலை வரை ஒவ்வொரு இடத்திலும் விலாவாரியாகவும் தொழில்நுட்ப சமாச்சாரங்களை எளிதாக புரிந்துகொள்ளும்படியும் சொல்லப்பட்டிருப்பது நூலின் தனித்தன்மை.


இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளான ஆண்டெனாவில் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக்கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டி.வியை ட்யூன் செய்து படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை.

டிவி வாங்கி, மாடியில் ஒரு ஆண்டனாவை பொருத்திவிட்டால் அன்றைய தேதிக்கு இரண்டு சேனல்கள் கச்சிதமாய், நல்ல துல்லியமான ஒளிபரப்பு கிடைத்துக்கொண்டிருந்த நாட்களில், கொஞ்சம் கொஞ்சமாய் கேபிள் டி.வி ஒளிபரப்பு பிரபலமாக, அதுவும் இது நாள் வரையில் தமிழ் இல்லாத மற்ற மொழி சேனல்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த நேரத்தில், சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதும், பெரும் ஆதரவு அவர்களுக்கு கிடைத்து.


நல்ல தாளில், கண்ணை உறுத்தாத அழகான லேஅவுட் வடிவமைப்பில் நாகரத்னா பதிப்பகம் இந்நூலை உள்ளடக்த்திற்கு ஏற்றவாறான தரத்தில் கொடுத்திருப்பது ப்ளஸ்.

இப்புத்தகத்திற்கான முகப்பு அட்டை வடிவமைத்தவன் என்கிற முறையில் எனக்கு இது கூடுதல் சிறப்பான வாசிப்பனுவம்.

ஈ.எஸ்.பி.என் என்கிற விளையாட்டுச் சேனல் தான் இந்தியாவின் முதல் பே சேனல் எனப்படும் கட்டணச் சேனல் ஆகும். அதாவது அவர்களது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து பார்க்க வேண்டும்.

கேபிள் டி.வி. பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்கிற சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், கேபிள் டி.வி குறித்த தகவல் சொல்வதில் வரலாற்றில் தனி இடம் பெறப்போகிறது!

கேபிளின் கதை | ஆசிரியர்: கேபிள் சங்கர் | விலை ரூ.100 | நாகரத்னா பதிப்ப வெளியீடு

புத்தகம் வாங்க : இங்கே சுட்டவும் 

நீல நிற சொற்கள், புத்தக மேற்கோள்களாகும்.

Monday, March 5, 2012

இந்த புத்தகத்திற்கு விமர்சனம் தேவையில்லை

1975 தொடங்கி 2007 வரையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஹைலைட்ஸை விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே பார்த்தால் எப்படி இருக்கும். சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள 'உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு'  புத்தகம் அவ்வாறான இனிமையான அனுபவமாக இருக்கிறது.

இந்த புத்தகத்திற்கு விமர்சனம் தேவையில்லை. புத்தகத்திலிருந்து சில மேற்கோள்களை மட்டும் காட்டியுள்ளேன். நீங்களே படித்து பாருங்கள். கிரிக்கெட் ஆர்வலராய் இருந்தால் உடனே வாங்கிவிடுவீர்கள்.





174 பந்துகள் ஆடிய கவாஸ்கர் அடித்த ரன்கள் 36 மட்டுமே. ரன் எடுக்க வேண்டும் என்ற பிரக்ஞையே இல்லாமல் நின்ற இடத்திலேயே சிலை போல் நின்று ஆடி, போட்டி முடிவதற்குள் கவாஸ்கர் கால்களை கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது போங்கள்.
....


அந்தக் காலத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்று எந்தத் தென்னை மரத்தை ஆட்டினாலும் ஒரு நான்கைந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலிருந்து விழுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
....


இங்கிலாந்தில் இந்திய அணி சென்று இறங்கிய போது ஒருவரும் அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.  ஏர்போர்ட்டுக்கு வண்டியை அனுப்பியதே பெரிய விஷயம்தான்.

....


அரவிந்த டிசில்வா சந்தித்த முதல் பந்திலிருந்து அடித்த அடியில் இந்திய அணியினர் திக்குத் தெரியாமல் ஓடினர்.  'நாலு பவுண்டரி ஒரு ரூபா' என்று கூவிக்கூவி அடித்தார். 

....


அபூர்வ சகோதரர்கள் மார்க் வாவ் - ஸ்டீவ் வா இருவரும் தமிழ் படங்களில் க்ளைமாக்ஸில் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்து வில்லனில் ஆட்களை அடித்து நொறுக்குவது போல நியூசிலாந்து பவுலர்களை போட்டுச் சாத்தினர்.
....


ஒன்றல்ல, இரண்டல்ல, 979 வைட் பால்கள் போடப்பட்டன. இத்தனை வைடையும் பறவை போல் கையை விரித்து, காட்டிக் காட்டிக் கோப்பை முடிவதற்குள் அம்பயர்களுக்கு பறக்கும் சக்தியே வந்துவிட்டது போங்கள்.
....


ரமேஷ் அவுட் ஆக, உள்ளே நுழைந்தார் 'இலக்கணப் புகழ் ராகுல் டிராவிட். 'யாமிருக்க பயமேன்' என்பது போன்ற ஆட்டம் அன்று அவருடையது. 'என்னை அவுட் ஆக்க வேண்டுமென்றால் ஒரு நான்கைந்து பவுலர்கள் சேர்ந்து போட்டால்தான் உண்டு' என்பதைப் போன்ற இலக்கணப் பிழையில்லாத அப்பழுக்கற்ற ஆட்டம்.
....


அடுத்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன். ஒருநாள் போட்டியாக தொடங்கிய ஆட்டம் இந்திய பேட்ஸ்மேன்களின் கேடுகெட்ட ஆட்டத்தால் அரை தினப் போட்டியாக ஆனது.
....


சேவாக் ஏதோ தன் பங்குக்கு நின்று 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, மற்ற அனைவரும் 'எங்களுக்கு எதுவுமே தெரியாது, எங்களை தயவு செய்து விட்டு விடுங்கள்' என்று சரண்டர் ஆக 40வது ஓவரிலேயே 234 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய ஆல் அவுட்.


எட்டாவது உலகக் கோப்பை நமக்கு எட்டாத உலகக் கோப்பையானது!

....


மைதானத்துக்குள் ட்ரம், ட்ரம்பெட் எல்லாம் எடுத்துக்கொண்டு போக தடை விதிக்கப்பட்டது.  அத்தோடு மைதானங்களில் இருந்த கடைகளில் சேல்ஸ் நன்றாக இருப்பதற்காக ரசிகர்கள் தாங்களே வெளியேயிருந்து சரக்கை உள்ளே எடுத்துப் போகக் கூடாது என்று ஒரு நிபந்தனை வேறு. மேற்கிந்திய ரசிகர்கள் மூச்சு விடாமல் வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் இருப்பார்கள். சரக்கில்லாமல் அவர்களுக்கு இருப்புக் கொள்ளாது.


'யோவ், ட்ரம் எடுத்துண்டு போகக் கூடாதுங்கற சரி, ரம் எடுத்துண்டு போகக் கூடாதுன்னா அந்த மேட்சை நீயே உட்கார்ந்து பாரு' என்று பலரும் டி.வி.யும் சைட் டிஷ்ஷுமாக வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.

....


இந்தியாவின் அடுத்த போட்டி பெர்முடாவுடன். மொத்தமே 66,000 மட்டுமே ஜனத்தொகை கொண்ட அநியாயத்துக்கு சிறிய நாடு அது. என்ன, அந்நாடு நம் சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் சைஸ்தான் இருக்கும் போலிருக்கிறது.
....



உலகக்கோப்பை நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், 2011 போட்டிகள் குறித்து இப்புத்தகத்தில் இல்லை. அதையும் சேர்த்து ஒரு அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

நல்ல தகவல்களை நகைச்சுவை நடையில் படைத்து அசத்தி இருக்கும் ஆசிரியர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு
விலை : ரூ.50
ஆசிரியர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்

___________________________________

எனது பிற புத்தக விமர்சனங்கள்/அறிமுகங்கள் :
http://www.valaimanai.blogspot.in/p/blog-page_10.html 

Wednesday, October 19, 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை





திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.



ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்

பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

நமது பெண்களை வெளிநாட்டு பணிப்பெண் வேலைக்கு யாரும் அனுப்பவேண்டாம் என்பதற்கே இதை எழுதவேண்டி இருக்கிறது. அங்கு பணிப்பெண்கள் பற்றிய கதைகளை நான் மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்கள் அங்கிருந்தால் அவர்களிடம் கேளுங்கள் நிறைய கோபங்களும், சோகங்களும் கிடைக்கும்.

பதினெட்டு வருடங்கள் கண்டு, கேட்டு, உணர்ந்தறிந்த அனுபவங்களை நூல் ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'நான்' என தாமே சொல்வதாய் அமைத்திருக்கும் உத்தியால் நூல் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாய் இருக்கிறது. நூலுக்கும் வாசகருக்குமான அன்னியோன்யம் இதனால்  அதிகரிக்கிறது.

இந்திய முதலாளிகள் சம்பளம் கொடுக்கும்போது இந்திய ரூபாயில் கணக்குச் சொல்லி "இந்த மாதிரி சம்பளம் எல்லாம் உனக்கு இந்தியாவில் கிடைக்குமா?" என நக்கலடித்தே கொடுப்பார்கள். நம்ம ஊர் அடிமைகளும் "ஆமாண்ணே" பின்பாட்டு பாடும். ஆனால் பெரும்பாலோருக்கு பிடிக்காமல் பிரச்சினையும் செய்துவிடுவார்கள். முதலாளிகள் மண்டையை உடைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு சென்று வாழ்க்கையை தொலைத்தவர்களது கதைகளும், அரிதாய் ஜெயித்தவர்களது கதைகளும் புத்தகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள், பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், எல்லை தாண்டுதல், சிறைவாசம், மனித விற்பனை, வேலைகளில் துன்புறுதல் என பல உணர்ச்சிபூர்வமான கதைகள். சில நெகிழ வைக்கின்றன. சில அதிர வைக்கின்றன.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சென்று வேலைபார்ப்பது என்பதை நீங்கள் பொதுவாக ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பணக்கார நாடுகளுக்கு செல்வதே எனப்புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் பங்களாதேஷ், நேபாள், பூடான், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் நாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்க்கின்றனர்.


புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராத கன்டன்ட். அதையும்  சீரியஸாகவும், சுவையாகவும் சொல்லிய விதம். புத்தகம் முடிந்த உடன், சட்டென்று முடிந்தது போல உணரவைத்து, இதே அளவிலான இன்னொரு பாகத்தை இணைத்திருக்கலாமோ என வாசகனை எண்ண வைப்பது ஆகியன ஆசிரியர் கே.ஆர்.பி செந்திலின் வெற்றி.

இந்த புத்தகம் என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமானது. காரணம் இதன் முகப்பு அட்டைக்கான டிசைனை நான் வடிவமைத்திருந்தேன். சிறப்பான தரத்தில் படைத்திருக்கும 'ழ' பதிப்பகத்தாருக்கும் இது போன்ற வீரியமிக்க எழுத்தை தந்திருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

______________________________


புத்தக சுட்டி :  http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

பணம்
ஆசிரியர் : கே.ஆர்.பி.செந்தில்
வெளியீடு : ழ பதிப்பகம்
விலை ரூ.90

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________


வலைமனை நூலகம் : பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
http://valaimanai.blogspot.com/p/blog-page_10.html

Panam K.R.P.Senthil Za padhipagam review by valaimanai sukumar swaminathan

Thursday, September 29, 2011

யானி | வலைமனை நூல் பரிந்துரை




அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது.  வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.

அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது.  அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.

இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.

ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும்.  கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம்.  ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.

யானி ஓர் இசை மேதை என்று பலருக்கு தெரிந்திருக்கும். நமது ஊரில் தாஜ்மஹால் முன்னே இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற வகையில் சிலருக்கு ஞாபகமிருக்கும். ஆனால் "யானியா யாரது?" என கேட்கக் கூடிய பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரது இசை முன்னமே வெகு பரிச்சயமான ஒன்று என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள்  இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.

யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது.  இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது.  ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன்.  என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.

சித்தார்த் ராமானுஜன் சிறப்பான படைப்பினை அளித்திருக்கிறர்.  உன்னதமான இசைக்கோவைகளை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டிருக்கும் யானியின் வாழ்க்கை கதை வெகுவாக சிலிர்ப்படைய வைக்கிறது. எதிலும் அடங்காத ஆற்றல், திருப்தியின்மை, பெரும் இலக்குகளை நிர்ணயித்தல், அதை நோக்கி பேய்த்தனமாக உழைத்தல் என பின்னியெடுக்கிறார் மனிதர்.

கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது.  யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.

"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"


கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!

__________________________________

யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்

புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html

_______________________________

சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
____________________________

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 


Valaimanai Tamil Book review - tamil buthaga vimarsanam
isai medhai yaani  oru kanavin kadhai sidharth ramanujan
kizaku padipagam kilakku publications 

Monday, April 25, 2011

காஷ்மீர் - பா.ராகவன்






கார்கில் யுத்தம் வந்தபோது கன்யாகுமரி வரை வசித்த மக்கள் பணமும் துணிமணிகளும் மற்றவையும் அனுப்பி சாரே ஜஹன் சே அச்சா என்று பாடியதுதான் நமக்குத் தெரியும்.

உண்மையில் காஷ்மீரிகள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் நம்மைப்போல் நினைப்பதில்லையா? உணர்வதில்லையா? ஏன்?



நினைவு தெரிந்து எனக்கு ரோஜா படத்தில் அறிமுகமானதுதான் காஷ்மீர் குறித்த சங்கதிகள். அதன் பின்னர் அவ்வப்போது கண்ணில படும் செய்திகள், ஒளிபடங்கள், சினிமாக்கள், டாக்குமன்டரிகள், கட்டுரைகளில் காஷ்மீர் குறித்து துண்டு துண்டாக அறியப்பெற்றாலும் முழுமையான காஷ்மீர் குறித்த வரலாறினை அறிய கூடிய சந்தர்ப்பமோ உண்மையை சொன்னால் அவசியமோ ஆர்வமோ எழுந்ததில்லை.

ஒருநாள் பா.ராகவன் அவரது இணைய பக்கமான ரைட்டர் பாரா டாட் காமில் 'காஷ்மீர்' புத்தகத்தை எழுதிய விதம் குறித்து அவர் எழுதியிருந்த பதிவு முதன்முதலாக காஷ்மீர் குறித்து அறியும் ஆர்வத்தை எழுப்பியது. நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் அந்த புத்தகத்தை வாங்கி அவரது கையெழுத்தையும் பெற்றேன்.


ஹரி சிங் 1947 வரை காஷ்மீரை ஆண்டார். நான்கு மனைவிகளையும் ஒரு மகனையும் அவர் பெற்றார். 

இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரமடைந்தபோது, காஷ்மீர் எந்தப் பக்கம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வினாவுக்கு விடையளிக்கத் தடுமாறித் திண்டாடி, இறுதியில் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். பாகிஸ்தான் கோபம் கொண்டது.

காஷ்மீர் பிரச்னை என்பது அக்கணத்தில் தொடங்கியது.


கி.பி. 13ம் நூற்றாண்டில் காஷ்மீரை கைப்பற்ற வரும் மன்னன் துலூச்சா படைகளில் இருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது.  காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் தனது தாத்தா சொத்தான காஷ்மீரை தர மறுப்பதும், அவருக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுப்பதும் என புத்தகம், இந்திய சுதந்தர பிரிவினை காலகட்டத்தில் டேக் ஆஃப் ஆகி கடைசி வரை பரபரவென பறந்து கடைசியில் தற்போதைய கால கட்டங்களை சொல்லும் இடங்களில் மட்டும் சற்றே வேகம் குறைந்து முடிகிறது.

காஷ்மீரின் அரசியல் என்பது, காஷ்மீரை முன்வைத்துப் பெரும்பாலும் அதற்கு வெளியே இருப்போர் நடத்துவது. இது, கடந்த அறுபதாண்டு காலத்துக்கு மேலாக காஷ்மீரிகளுக்குப் பழகிவிட்ட ஒன்று. பழகிவிட்டதாலேயே ஏற்றுக்கொண்டுவிடக் கூடியவர்களாகக் காஷ்மீரிகள் இல்லை.

காஷ்மீர் குறித்த அரசியல், ஆயுத வரலாறு அறிந்து கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களது தனித்துவமான உணர்வுகளையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்
.
• நிஜாமின் அரண்மனையில் நூற்றுக்கணக்கான கலைப்பொருள்கள் உண்டு. இன்றுவரை வியப்பூட்டும் நினைவுச் சின்னங்கள். அவற்றுடன் ஒன்றாக நிஜாமும் ஆகிப்போனார்.

• விளைவு, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் இடதுகால் வைக்க இந்தியாவே வசதி செய்து கொடுத்தாற்போல் ஆனது.

• ஊரெல்லாம் மரம் நட்ட அசோகர் அங்கேயும் சில ஆப்பிள் மரங்களை நட்டு ஆட்சி புரிந்திருக்கிறார்.

பா.ராவின் வழக்கமான வார்த்தை ஜாலங்கள் வாக்கிய மாயங்கள் இந்த புத்தகத்தில் அதிகமாக இல்லாமல் அளவோடு அதே சமயம் கூர்மையாக விளையாட விடப்பட்டிருக்கிறது.

காஷ்மீரிகளின் விடுதலை வேட்கை இயல்பானது. இந்திய அரசின் மீதான அவர்களுடைய கோபம் உண்மையானது. ஏதாவது செய்யவேண்டும் என்ற உள்மன எழுச்சி கூர்மையானது. பாகிஸ்தான் அதை எடுத்து வடிவமைத்து, செதுக்கிச் சீராக்கி, ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பத் தொடங்கியது.

ஆதி படையெடுப்புகள்,  மன்னர் வரலாறு, இந்திய பிரிவினை, மன்னர் ஹரி சிங்கின் காஷ்மீர் தனது சொந்த சொத்து என்கிற மனப்பான்மை, அக்காலகட்டத்தில் காஷ்மீரின் மக்கள் ஆதரவை வென்ற அப்துல்லா, முதலில் அவருக்கு நேருவின் ஆதரவு பின்னர் அவர்களது உறவில் விரிசல், அப்துல்லாவின் தொய்வடைந்த கடைசி கால நடவடிக்கைகள், இந்திரா காந்தியின் செயல்பாடுகள், பங்களாதேஷ் உதயம், காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தகிடுதித்தங்கள், நம்பிக்கை இழந்த மக்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய ராணுவ செயல்கள், அரசியல் இயக்கங்கள் என காலவாரியாக காஷ்மீர் குறித்து
"இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?" என அசர வைக்கும் அளவிற்கு முழுமையான அரசியல் வரலாற்று புத்தகமாக அமைந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.


இந்த புத்தகத்திற்கு எத்தனையோ விதமான கவர்ச்சியான முகப்பு அட்டைகள்
வடிவமைத்திருக்க முடியும். ஆயினும் இந்த அட்டை வடிவமைப்பு,  இதன் நிறம் எனக்கு ஏனோ பெர்சனலாக ரொம்புவும் பிடித்திருக்கிறது. அரசியல் ஆயுத வரலாறு என்கிற சப் டைட்டிலுக்கு ஏற்றவாறு அட்டை வடிவமைப்பு அருமையான நிறத்துடன் சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.

புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் முடியும் வாக்கியத்தையே இந்த புத்தகத்தின் பரிந்துரைக்கான வாக்கியமாக தர விரும்புகிறேன். அது -

காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள இது ஒரு தருணம்.
முயற்சி செய்யலாம்.


________________________________________________________________


காஷ்மீர் 
அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா.ராகவன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 140
சுட்டி : 
https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html
_____________________________________________




பழுப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

_________________________________________________________________


_____________________________________________

Puthaga vimarsanam - nool anubavam - valaimanai noolagam 
Kashmir - pa.ragavan - book review - valaimanai - sukumar swaminathan 
Kizaku padipagam - Kizaku publications 

Monday, March 28, 2011

ழ பதிப்பக புத்தக வெளியீட்டு விழா போட்டோஸ் + கமெண்ட்ஸ்





நேற்று ழ பதிப்பகத்தின் புதிய 4 புத்தகங்கள் வெளியிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.  நான்கு புத்தகங்களுக்குமான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு இது மிக மகிழ்வான விழாவாக இருந்தது.
மாலை 5.30 மணிக்கே பதிவர்கள் வரத்துவங்கி இருந்தனர். 6.30 மணிக்கெல்லாம் ஹால் ஃபுல்லாகி விழா துவங்கியது.

வழக்கம் போல சுரேகா நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார். வழக்கத்திற்கு மாறாக மணிஜி கமெண்ட் ஏதும் அடிக்காமல் அமைதியாக இருந்தார்.

கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி.ராஜா,  தண்டோரா மணிஜி, பலாபட்டறை ஷங்கர், சுரேகா, கார்க்கி, லக்கி லுக் யுவ கிருஷ்ணா, அதிஷா,  உண்மைத்தமிழன், விந்தை மனிதன் ராஜாராம், குகன், அகநாழிகை பொன் வாசுதேவன், பிலாசபி பிரபாகரன், வேர்கள் பாண்டியன், ஆயிரத்தில் ஒருவன் மணி, சர்க்கஸ் சிங்கம், பார்வையாளன், அஞ்சா சிங்கம், மெட்ராஸ் பவன் சிவக்குமார் உள்ளிட்ட பல பதிவர்கள் வந்திருந்தார்கள். ( பலரது பெயர்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)  நான்கு புத்தகங்களும் மேம்பட்ட தரத்தில் இருக்கின்றன. பெருமுயற்சி செய்திருக்கும் ழ பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளர்களுக்கும சிறப்பான வாழ்த்துக்கள்.


 மேலும் என்னென்ன நடந்தது என உங்களுக்கு பிளாஷ்பேக்கில் சொல்கிறேன் வாருங்கள்....


விழா துவங்கும் முன்னர் :- ழ பதிப்பக தூண்கள் பதிப்பாளர்கள் கே.ஆர்.பி.செந்தில் மற்றும் ஓ.ஆர்.பி.ராஜா
(தூண் போலவே ரெண்டு சைட்ல நிக்கிறாங்க பாருங்க)


வளைஞ்சு வளைஞ்சு ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்.. யார்ரா அது நமக்கு போட்டியா என விசாரித்தால் அவர் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி(இடமிருந்து மூன்றாவதாக இருப்பவர்). அடிக்கடி சேட்டிலும், மெயிலிலும், போனிலும் தொடர்பு கொள்ளும் அவரை முதல் முறையாக நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.



கைகட்டிக்கொண்டு இருப்பவர் பதிவர் காவேரி கணேஷ்
(நிஜமாகவே சிறியோர் பெரியோர் என யாருடனும் மிக மரியாதையாக பழகுபவர்)

ஒரே ஆங்கிளில் போஸ் கொடுக்கும் இருவர் :- பதிவர்கள் லக்கி லுக் என்கிற யுவகிருஷ்ணா (பவுடர் கொஞ்சம் சாஸ்தியாயிடுச்சோ பாஸ்?) மற்றும் அதிஷா


வீட்டில் வைத்து அனுப்பிய விபூதியுடன் பயபக்தியுடன் உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் கேபிள் சங்கர். 'ஹலோ துபாயா பிரதர் மார்க் இருக்காரா?' என்பது போல் போன் பேசுவது பதிவர் தண்டோரா மணிஜி




வரவேற்புரை ஓ.ஆர்.பி.ராஜா



தொப்பி போட்டுக்கொண்டு கன்னத்தில் மருவுடன் பதிவர் உண்மைத்தமிழன்.
(மாறுவேஷத்துல வந்தா எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா..?)


ஆனாலும் அநியாயத்துக்கு யூத்தாக இருக்காருல்ல?
(இல்லைன்னு சொன்னா போன் போட்டு திட்டுவாரு..)



என் உலகநாதன் எழுதிய 'சாமானியனின் கதை' நூலை வெளியிடுகிறார் கட்டிடவியல் வல்லுநர் ராஜமாணிக்கம்.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் தண்டோரா மணிஜி


என்.உலகநாதன் எழுதிய 'வீணையடி நீ எனக்கு' நூலை வெளியிடுகிறார் வழக்கறிஞர் சாமிதுரை.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் யுவகிருஷ்ணா


கே.ஆர்.பி.செந்தில் எழுதிய 'பணம்' நூலை வெளியிடுகிறார் முத்து... பெற்றுக்கொள்கிறார் பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன்.. 

'கொத்து பரோட்டா' நூலை வெளியிடுகிறார் பேராண்மை, மாப்பிள்ளை திரைப்பட ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்.. பெற்றுக்கொள்கிறார் கவிஞர் நேசமித்ரன் ஃபிரம் நைஜீரியா..


உரையாற்றுகிறார் ராஜமாணிக்கம்




உரையாற்றுகிறார் சாமிதுரை



எப்பவும் கெட்டப் சேஞ்சில் வரும் பதிவர் பலாபட்டறை ஷங்கர் இம்முறை பழைய கெட்டப்பிலேயே வந்திருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மறுநாள் எக்ஸாமிற்கு படிப்பதை போல சீரியஸாக படிப்பவர் பதிவர் விந்தை மனிதன் ராஜாராம்... 







சத்தியமா இனி ஏதாவது ஃபங்ஷன் என வந்தால் கார்க்கி பக்கத்தில் மட்டும் நிற்கக்கூடாது என முடிவெடுத்து விட்டேன். மனிதர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஜோக்குளை அள்ளித்தெளிக்கிறார். சிரித்து மாளவில்லை.











ஓ.ஆர்.பி.ராஜாவுடன் பதிப்பாளர் குகன்


பதிவர்கள் மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிராபாகரன் ( நேயர் விருப்பத்தின்படி விரைவில் பதிவுலகிற்கு திரும்ப கோரிக்கை வைக்கப்படுகிறது)  மற்றும் தொழிலதிபர் எல்டெக் ஜெயவேல்.



நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா.. அவருடன் கல்யாணம் ஆனதிலிருந்து பதிவுலகில் காணாமல் போன பதிவர் ஏதோ டாட் காம் பிரதாபன் (பாஸ்.. உங்களுக்காகதான் கிரைண்டர் மிக்ஸி எல்லாம் தராங்க.. இனிமே வேலை அவ்வளவா இருக்காது.. கொஞ்சம் பதிவும் எழுதுங்க)




தலை சீவிட்டு வந்தா போட்டோ எடுக்கிறேன்னு பதிவு போட்டு இருந்தீங்களே என அருகே வந்து பேசினார் பதிவர்கள் வேர்கள் பாண்டியன்.  பரவாயில்லை நம்ம பதிவையும் படிக்கிற ஒரு நல்லவர் இருக்கிறார் என போட்டோ எடுத்துக் கொண்டேன். நம்ம பிளாக்கையும் படிக்கிறாங்கன்னு சொன்னா தங்கமணி நம்பவே மாட்டேங்குது அதுக்குதான். ஹி...ஹி.
நன்றி.. மீண்டும் வருக...!!!