கார்கில் யுத்தம் வந்தபோது கன்யாகுமரி வரை வசித்த மக்கள் பணமும் துணிமணிகளும் மற்றவையும் அனுப்பி சாரே ஜஹன் சே அச்சா என்று பாடியதுதான் நமக்குத் தெரியும்.
உண்மையில் காஷ்மீரிகள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் நம்மைப்போல் நினைப்பதில்லையா? உணர்வதில்லையா? ஏன்?
நினைவு தெரிந்து எனக்கு ரோஜா படத்தில் அறிமுகமானதுதான் காஷ்மீர் குறித்த சங்கதிகள். அதன் பின்னர் அவ்வப்போது கண்ணில படும் செய்திகள், ஒளிபடங்கள், சினிமாக்கள், டாக்குமன்டரிகள், கட்டுரைகளில் காஷ்மீர் குறித்து துண்டு துண்டாக அறியப்பெற்றாலும் முழுமையான காஷ்மீர் குறித்த வரலாறினை அறிய கூடிய சந்தர்ப்பமோ உண்மையை சொன்னால் அவசியமோ ஆர்வமோ எழுந்ததில்லை.
ஒருநாள் பா.ராகவன் அவரது இணைய பக்கமான ரைட்டர் பாரா டாட் காமில் 'காஷ்மீர்' புத்தகத்தை எழுதிய விதம் குறித்து அவர் எழுதியிருந்த பதிவு முதன்முதலாக காஷ்மீர் குறித்து அறியும் ஆர்வத்தை எழுப்பியது. நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் அந்த புத்தகத்தை வாங்கி அவரது கையெழுத்தையும் பெற்றேன்.
ஹரி சிங் 1947 வரை காஷ்மீரை ஆண்டார். நான்கு மனைவிகளையும் ஒரு மகனையும் அவர் பெற்றார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரமடைந்தபோது, காஷ்மீர் எந்தப் பக்கம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வினாவுக்கு விடையளிக்கத் தடுமாறித் திண்டாடி, இறுதியில் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். பாகிஸ்தான் கோபம் கொண்டது.
காஷ்மீர் பிரச்னை என்பது அக்கணத்தில் தொடங்கியது.
கி.பி. 13ம் நூற்றாண்டில் காஷ்மீரை கைப்பற்ற வரும் மன்னன் துலூச்சா படைகளில் இருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது. காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் தனது தாத்தா சொத்தான காஷ்மீரை தர மறுப்பதும், அவருக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுப்பதும் என புத்தகம், இந்திய சுதந்தர பிரிவினை காலகட்டத்தில் டேக் ஆஃப் ஆகி கடைசி வரை பரபரவென பறந்து கடைசியில் தற்போதைய கால கட்டங்களை சொல்லும் இடங்களில் மட்டும் சற்றே வேகம் குறைந்து முடிகிறது.
காஷ்மீரின் அரசியல் என்பது, காஷ்மீரை முன்வைத்துப் பெரும்பாலும் அதற்கு வெளியே இருப்போர் நடத்துவது. இது, கடந்த அறுபதாண்டு காலத்துக்கு மேலாக காஷ்மீரிகளுக்குப் பழகிவிட்ட ஒன்று. பழகிவிட்டதாலேயே ஏற்றுக்கொண்டுவிடக் கூடியவர்களாகக் காஷ்மீரிகள் இல்லை.
காஷ்மீர் குறித்த அரசியல், ஆயுத வரலாறு அறிந்து கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களது தனித்துவமான உணர்வுகளையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்
.
• நிஜாமின் அரண்மனையில் நூற்றுக்கணக்கான கலைப்பொருள்கள் உண்டு. இன்றுவரை வியப்பூட்டும் நினைவுச் சின்னங்கள். அவற்றுடன் ஒன்றாக நிஜாமும் ஆகிப்போனார்.
• விளைவு, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் இடதுகால் வைக்க இந்தியாவே வசதி செய்து கொடுத்தாற்போல் ஆனது.
• ஊரெல்லாம் மரம் நட்ட அசோகர் அங்கேயும் சில ஆப்பிள் மரங்களை நட்டு ஆட்சி புரிந்திருக்கிறார்.
காஷ்மீரிகளின் விடுதலை வேட்கை இயல்பானது. இந்திய அரசின் மீதான அவர்களுடைய கோபம் உண்மையானது. ஏதாவது செய்யவேண்டும் என்ற உள்மன எழுச்சி கூர்மையானது. பாகிஸ்தான் அதை எடுத்து வடிவமைத்து, செதுக்கிச் சீராக்கி, ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பத் தொடங்கியது.
ஆதி படையெடுப்புகள், மன்னர் வரலாறு, இந்திய பிரிவினை, மன்னர் ஹரி சிங்கின் காஷ்மீர் தனது சொந்த சொத்து என்கிற மனப்பான்மை, அக்காலகட்டத்தில் காஷ்மீரின் மக்கள் ஆதரவை வென்ற அப்துல்லா, முதலில் அவருக்கு நேருவின் ஆதரவு பின்னர் அவர்களது உறவில் விரிசல், அப்துல்லாவின் தொய்வடைந்த கடைசி கால நடவடிக்கைகள், இந்திரா காந்தியின் செயல்பாடுகள், பங்களாதேஷ் உதயம், காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தகிடுதித்தங்கள், நம்பிக்கை இழந்த மக்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய ராணுவ செயல்கள், அரசியல் இயக்கங்கள் என காலவாரியாக காஷ்மீர் குறித்து
"இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?" என அசர வைக்கும் அளவிற்கு முழுமையான அரசியல் வரலாற்று புத்தகமாக அமைந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.
இந்த புத்தகத்திற்கு எத்தனையோ விதமான கவர்ச்சியான முகப்பு அட்டைகள்
வடிவமைத்திருக்க முடியும். ஆயினும் இந்த அட்டை வடிவமைப்பு, இதன் நிறம் எனக்கு ஏனோ பெர்சனலாக ரொம்புவும் பிடித்திருக்கிறது. அரசியல் ஆயுத வரலாறு என்கிற சப் டைட்டிலுக்கு ஏற்றவாறு அட்டை வடிவமைப்பு அருமையான நிறத்துடன் சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.
முயற்சி செய்யலாம்.
________________________________________________________________
காஷ்மீர்
அரசியல் - ஆயுத வரலாறு
ஆசிரியர் : பா.ராகவன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 140
சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html
விலை : ரூ. 140
சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html
_____________________________________________
பழுப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_________________________________________________________________
_____________________________________________
Puthaga vimarsanam - nool anubavam - valaimanai noolagam
Kashmir - pa.ragavan - book review - valaimanai - sukumar swaminathan
Kizaku padipagam - Kizaku publications
6 comments:
பகிர்வுக்கு நன்றி
மறுபடியும் ஒரு அருமையான புத்தக விமர்சனம்.
வாழ்த்துக்கள்....
நீங்கள் சந்திரன் எழுதிய காஷ்மீர் புத்தகத்தையும் தேடிப் படியுங்கள்...
நேருவின் காஷ்மீரிய பிண்ணனியும், அவரது ஷேக் அப்புத்துல்லாவின் மீதான அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், படேலையும், பாரளுமன்றத்தையும் மீறிய பல செயல்கள் என அவர் இன்றைய பல சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என்க் கூறலாம்.
நல்ல பகிர்வு...!
அற்புதமான நூல் அறிமுகம். காஷ்மீரிகள் பலரும் முரண்பட்டிருக்க நம் மத்திய அரசின் அணுகுமுறையும் ஒரு காரணம். இன்னமும் பிபிசி முதற்கொண்டு வெளியுலகில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு ஆசாத் காஷ்மீர் என்றும் இந்திய ஆக்ரமிப்பு ஜம்மு காஷ்மீர் என்றும் தான் குறிப்பிடுகின்றனர். ஆனால் அங்குள்ள மக்களோ தங்கள் தனித்துவத்தை காக்க தனிநாடு கொண்டால் நலம் என எண்ணுகின்றனர். அதன் விளைவே JKLF (Jammu Kashmir Liberation Force) போன்ற இயக்கங்கள் மக்களிடையே எழக் காரணமாயிருந்தது.
Post a Comment