Monday, June 28, 2010

இந்தியப் பிரிவினை - நூல் அனுபவம்







ரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை... உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா, பின் பக்கம் வந்தால், பாகிஸ்தான்.


1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தது. நேரு மாமா கொடியேற்றினார். சுதந்திரம் கிடைத்ததால் மக்கள் ஆனந்த கூத்தாடினார்கள் என எனக்கு எளிமையாய் வரலாற்று பாடங்களில் அறிமுகம் ஆகி இருந்த இந்திய சுதந்திரம், பிரிவினை காலகட்டங்களின் ஆழங்களை மருதன் எழுதியிருக்கும் இந்தியப் பிரிவினை புத்தகம் தோண்டித் துருவி வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

ஆகஸ்ட் 15. இந்தியா விழித்திருப்பதாக நேரு அறிவித்த அந்த நள்ளிரவில் காந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.


இந்தியப் பிரிவினையில் நேரு, காந்தி, ஜின்னா மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகியோரை சுற்றி, அவர்களது நிலைப்பாடுகளை கூறி இந்தியப்பிரிவினை படிப்படியாக எப்படி அரங்கேறியது என்பதை முதல் பாதியில் புத்தகம் அறியத் தருகிறது. ஒருவர்க்கொருவர் கொண்டிருந்த கருத்து வேற்றுமைகள், ஜின்னாவின் பிடிவாதம், மவுண்ட்பேட்டனின் பங்கு என தேசம் துண்டாடப்பட்ட தருணங்களை கண்முன்னே நிறுத்துகிறார் ஆசிரியர் மருதன்.




அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் வந்து நின்ற ரயில் வண்டியில் முழுக்க முழுக்கப் பிணங்கள். ரயில் பெட்டிகள் மீது சுண்ணாம்பால் யாரோ கிறுக்கியிருந்தார்கள். நேருவுக்கும் படேலுக்கும் எங்கள் சுதந்திரப் பரிசு.


இந்தியா பாகிஸ்தான் பிரிவு என்பது ஏதோ பொலிட்டிக்கல் மேப்பில் கலர் பென்சில் வைத்து கோடு போடுவது போல சாதாரண விஷயம் என நினைத்திருந்த எனக்கு கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அதிர்ச்சியளித்தது.


மத சண்டை காரணமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் படிக்கும்போது திடுக்கிட வைக்கிறது. பாலியல் துன்புறுத்தல்கள், கொலை என கொத்து கொத்தாக பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். பிற மதத்தினர் கும்பலாக பக்கத்து தெருவில் வருகிறார்கள் எனத் தெரிந்தவுடன் தங்களது வீடுகளிலுள்ள பெண்களை வரிசையாக நிற்க வைத்து குடும்பத்தின் மானத்தைக் காக்க இவ்வாறு கொல்கிறேன் என கூறி ஏராளமான பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என புத்தகம் கூறும்போது எவ்வளவு விலை கொடுத்து சுதந்திரத்தை வாங்கினோமோ அதைப்போலவே பெரும் சேதாரத்தை இந்த பிரிவினை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியும் போது பெரும் ஷாக்.


ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகே அந்தக் கோரிக்கையை மவுண்ட்பேட்டனிடம் கொண்டு சென்றார்கள் நேருவும் படேலும். வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு.... வேண்டாம் மவுண்ட்பேட்டன், எங்களால் சமாளிக்க முடியவில்லை. இது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது.... யோசித்துப் பார்த்துவிட்டோம். வேறு வழியில்லை. நீங்கள் ஏற்று நடத்துங்கள். நாங்கள் விலகிக்கொள்கிறோம்.
சொல்லிவிட்டு எழுந்துவந்துவிட்டார்கள் இருவரும். சுதந்தரம் அடைந்து மூன்று வாரங்கள்கூட பூர்த்தியாகவில்லை அப்போது.


உடலின் ஏதாவது ஒரு பாகத்தை வெட்டி எடுக்கும்போது வெளிப்படும் ரத்தத்தைப்போல இந்தியப்பிரிவினை பெரும் உயிரிழப்புகளுடன் நடந்தேறி இருக்கிறது.  பிரிவினையின் போது மனிதர்கள், நிலங்கள் மட்டும் அல்லாது 


அரசாங்கத்தின் 

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 

பட்டியலிப்பட்டு பிரிக்கப்பட்ட நிகழ்வு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களிலிருந்த மேஜைகள், சோபாக்கள் முதற்கொண்டு பிரிக்கப்பட்ட தகவல்கள் எங்கும் இதன் முன்னர் அறிந்திராத ஒன்று.



ஒன்றிணைப்பது என்பது வெறுமனே பிரதேசங்களை இணைத்துக்கொள்வது மாத்திரமல்ல.  நிஜமான சவால்... நான் ஹைதரபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தவன், ஜுனாகத் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்னும் அடையாளத்தைத் தகர்த்து இந்திய குடியரசின் பிரஜை நான் என்று சொல்லவைக்க வேண்டும்... 1947 தொடங்கி 1950 வரை இந்த இரண்டாம் கட்ட இணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது இந்தியா.


இந்தியப்பிரிவினை என்கிற அளவோடு நின்றுவிடாமல் சமஸ்தானங்களிடம் இருந்து மாநிலங்களை பெற்று ஒருமித்த இந்தியாவாக உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இந்துத்வா சக்திகளின் வளர்ச்சி என பிந்தைய காலகட்ட நிகழ்வுகளும் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. 
முதல் அதிகாரம் முதலே ஆங்காங்கே நாவல் நடையில் நூல் செல்வது படிப்பதற்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. புத்தகத்தை எடுத்தால் ஓரே மூச்சில் படித்துவிட்டுதான் கீழே வைக்க முடியும் அளவிற்கு படைத்திருக்கும் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.


___________________


கிழக்கின் மற்ற நூல்களை போலவே சிறப்பான தரமான தாள்கள்.  முன் அட்டைப்படத்தை சொல்லப்பட்டிருக்கும் சப்ஜெக்டிற்கேற்ப ஸ்டராங்காக வடிவமைத்திருக்கலாமோ என எனக்கு தோன்றுகிறது.


_____________________________________________________


இந்தியப்பிரிவினை
ஆசிரியர் - மருதன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.90


குறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்


Key : Book review, Marudan, Maruthan, Marudhan, Kizakku publication, India pirivinai, Valaimanai Blogspot, Sukumar Swaminathan

6 comments:

முரளிகண்ணன் said...

நல்ல பகிர்வு சுகுமார் சுவாமினாதன்

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா,

என்னைப் பொருத்த அளவில் பிரிவினையைப் பற்றி தமிழில் வந்த புத்தகங்கள் பிரிவினைத் துயரை மிகவும் நேர்மையாக விவரித்ததில்லை. எழுதியவர்கள் இந்துக்களாக இருந்தால் இஸ்லாமியர்கள் ஆடிய வெறியாட்டம் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும். எழுதியவர் இஸ்லாமியராக இருந்தால் இந்துக்களின் அந்த நேர வெறியாட்டம் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும்.

இது தொடர்பாக மிகச் சரியான வராலாற்று ஆதாரங்களை நீங்கள் படிக்க விரும்பினால் “மண்டோ படைப்புகளை” வாங்கிப் படியுங்கள். இரண்டு தரப்பு நாய்களின் கொடூரத்தை நேர்மையாகப் பதிந்த பதிவு எனக்குத் தெரிந்து தமிழில் இது ஒன்று மட்டுமே.

Romeoboy said...

இந்த புத்தகத்தை பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஏக பட்ட குழப்பம் உள்ளது படிக்கும் போது. பிரிவினை பற்றி தெரிந்து கொள்ளலாமே தவிர அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை படிப்பதற்கு.

தனபால் said...

லாரி காலின்ஸ், மற்றும் டொமினிக் லேப்பியர் ஆகிய அமெரிக்க,பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் சேர்ந்து எழுதிய "freedom at midnight " தமிழ் மொழி பெயர்ப்பான "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற புத்தகம் நடுநிலையோடு எழுதப்பட்டுள்ளது.விலை ரூ.250 /=

பின்னோக்கி said...

தென்னிந்தியர்களில் பலருக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது. நல்ல புத்தகம். படிக்க வேண்டும்.

Chitra said...

nice review. Thank you.