மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்ப்பதில்தான் என்ன ஒரு புதிர்?
தூரம் தெரியும் நிலவும் அதனை தாண்டி மிதந்து கொண்டிருக்கும் விண்மீன்களும் எப்பொழுதுமே ஆச்சர்யம்தான். அந்த விண்மீன்களும் சூரியன்தான் என்கிறார்களே அவற்றை சுற்றிலும் இருக்கும் கிரகங்கள் வெறுமனே சுற்றுகின்றனவா..? அல்லது நமது அறிவியல் இன்னும் துழவியிராத வெகு தூரத்தில் இருக்கும் ஏதோ ஒரு கிரகத்தில் இதே நேரம் ஏதோ ஒரு ஏலியனும் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நம் பூமி இருக்கும் திசையை நோக்கி வெறித்துக் கொண்டு என்னைப் போலவே வெறித்தனாமாய் யோசித்துக் கொண்டிருக்குமா?
இதைப் போன்ற விண்வெளி சார்ந்த அனேக கேள்விகளை, அதன் புதிர்களின் ஆழங்களை, அதன் பிரமிப்பை என்னுள் விதைத்த நாவல் எண்டமூரி வீரேந்திரநாத்தின் கண்சிமிட்டும் விண்மீன்கள்.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட இந்நாவல் நான் படித்த நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த நாவலாகும். கதையின் சுருக்கம் இதுதான்.
பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஆல்பா கிரகத்தினர், நமது சூரியனை சுருக்கி கோலி குண்டு சைஸிலான வஸ்துவில் அடக்கி அவர்களின் மின் சக்தி போன்ற ஆக்க சக்திகளுக்கு பல நூற்றாண்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் அளவு விஞ்ஞானத்தில் முன்னேறியவர்கள்.
கதைநாயகியான பயோ விஞ்ஞானியின் (பெயர் மறந்துவிட்டது அனுஹா என்று நினைக்கிறேன்) முன்னாள் கணவனும் விண்வெளி நிபுணனுமான யஷ்வந்தும் அவளை விரும்பும் கணிப்பொறி நிபுணன் வாயுபுத்ரனும் "சூரியனை எடுத்துக் கொள்ள இருக்கிறோம். இதனால் யாருக்கேனும் பாதிப்பு இருக்குமாயின் பிரபஞ்ச நீதிமன்றத்தில் முறையிடலாம்" என ஆல்பாவாசிகள் அனுப்பும் அலை வழி செய்தியை டீகோட் செய்கின்றனர்.
இந்த செய்தியினாலும் அடுத்து நிகழக்கூடிய பாதிப்புகளினாலும் உலகமே அதிர்ச்சியுறுகிறது. எங்கே இருக்கிறது என்றே தெரியாத பிரபஞ்ச நீதிமன்றத்தை நோக்கி யஷ்வந்த், வாயுபுத்ரன், அனுஹா உள்ளிட்ட ஐவர் குழு விண்கலத்தில் பயணிக்கிறது. எப்படி போவது எங்கே போவது திரும்பி வருவோமா எனத் தெரியாத பயணம். தாங்கள் வரும் செய்தியை வெளிப்படுத்திக் கொண்டே செல்கிறது விண்வெளி ஓடம்.
இதற்கிடையே மனதை உருக்கும் முக்கோண காதல் கதை. திடீரென துரதிருஷ்டவசமாக இவர்களது ஓடம் திரும்பியே வரமுடியாத பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழியில் மாட்டிக்கொள்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர்களது விண்வெளி ஓடம் வெளியிட்ட செய்தியை பெற்றுக்கொள்ளும் பிரபஞ்ச நீதிமன்றத்தையும் ஆல்பா கிரகவாசிகளையும் குறித்து அறிந்த வேறொரு கிரகவாசிகள் பிளாக் ஹோலில் தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை காப்பாற்றி அழைத்து செல்கிறார்கள்.
பிரபஞ்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆல்பாவாசிகள் தாங்கள் சூரியனை எடுத்துக் கொள்ளப்போவதாக தெரிவிக்க, இதனால் பல உயிர்கள் பாதிப்படைவதை நமது குழு எடுத்துரைக்கிறது. அப்பொழுது ஆல்பாவாசிகள், நமது பூமியில் நடப்பனவற்றை வீடியோ போட்டு காட்டி, மனிதன் எவ்வாறு தங்கள் சக்திக்கு கீழுள்ள பிற மனிதர்களை, மிருகங்களை நடத்துகிறான் என எதிர்வாதம் புரிந்து வாயடைக்க வைக்கின்றனர்.
தீர்ப்பு ஆல்பாவாசிகளுக்கு சாதகமாக கூறப்படும் தருணத்தில் நமது குழு எவ்வாறு தங்களது சமயோசித புத்தியினால் அதிரடியாக எல்லோரையும் மடக்கி ஜெயிக்கிறார்கள் என்பது செம திரில்.
சூரியனை காப்பாற்றி தங்களது வெற்றியை பூமிக்கு திரும்பி உற்றார் உறவினரோடு கொண்டாடலாம் என நினைக்கும்போதுதான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சிகர உண்மை தெரிய வருகிறது. பிளாக் ஹோலில் 70 வருடங்கள் அவர்கள் தூங்கி விட்டிருக்கிறார்கள்.
திரும்ப எப்படி அவர்கள் எப்படி தங்களது பழைய காலத்திற்கு பயணித்தார்கள் என்பெதெல்லாம் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் கொட்டிக் கிடப்பது போன்ற விஞ்ஞான திரில்லிங் சமாச்சாரம்.
கதையை நான் சுருக்கமாக சொல்லி விட்டாலும் உண்மையில் நாவல் வெகு விலாவரியாக செல்லும். பல சுவையான விண்வெளி குறித்த தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது நாவலின் சிறப்பு. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் செல்லும் காட்சிகள்.
நாவலுடனே பிரபஞ்சத்தின் மறுமுனைக்கு சென்று வரும் நாம், எவ்வளவு அற்பமான விஷயங்களில் நம்மை குறுக்கி இருக்கிறோம் என்கிற உணர்வு நாவலை படித்து வைத்த உடன் ஏற்படுகிறது.
ராஜ் டி.வி.யின் விளம்பரம் போல அடிக்கடி எனக்கு நினைவிற்கு வரும் நாவல் இது.
நாவலின் கதைக்கருவும், அதற்காக ஆசிரியர் செய்திருக்கும் ஆய்வும் பிரமிக்கத்தக்கதாகும்.
ஹேட்ஸ் ஆஃப் டூ எண்டமூரி வீரேந்திரநாத்!
குறிப்பு : இந்த நாவலை நான் நூலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்து படித்தேன். எங்கு தேடிப்பார்த்தாலும் தற்போது எனக்கு கிடைக்கவில்லை. எங்காவது இந்நூல் கிடைக்கும் விவரம் யாருக்கேனும் தெரிந்திருந்தால் தெரியப்படுத்தவும்.
Key words : yandamoori veerendranath, yendamoori veerendranath, yentamuri virendranath, kansimmitum vinmeengal, kansimitum vinmeengal, entamuri virendranath, entamoori veerendranath.
11 comments:
good keep it up
http://bookimpact.blogspot.com/2007/09/blog-post_05.html
Hi ,
Romba nalla Pathivu. Hope U have read "NILA PEN" by the same author. if not , Please read. This too is a very good love story.
PLease do keep post some thing like this often.
Harris
ஒரு 10 வருடங்களுக்கு முன் இந்த கதையை வாசித்து விட்டு அந்த கணணி (பெயர் ஞாபகம் வரவில்லை)யை கடைசியில் கீழே போடும் போது அழுது விட்டேன்.
அந்த நாவல் வாசித்து இப்போது 10 வருடங்களாகி விட்டது, ஆனாலும் அதன் பாதிப்பு இன்னும் என்னில் இருக்கிறது.
நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்
எனக்கும் ரொம்ப பிடிச்ச நாவல் இது... சுமார் 12 வருஷம் முன்னாடி இதை படித்து விட்டு ISROல தான் வேலைக்கு சேருவேன்னு Electronics and Communication படிச்சேன்.. (அப்புறம் வாழ்க்கை U Turn எடுத்துருச்சுன்றது வேற விஷயம்..)
கதாநாயகி பேரு Anuhya.. வாயுபுத்திரன் கரெக்ட்டர் ரொம்ப பிடிச்சது.. (பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனை நினைவு படுத்தினார்)
விமர்சனத்தில் பிரம்மவித்யா-வை குறிப்பிடாதது வருத்தமே :(
ம்ம். நானும் அந்த புத்தகத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.. கிடைக்க வில்லை.. out of printனு சொல்றாங்க.. கிடைச்சா எனக்கும் தெரிவியுங்கள்.. நன்றி..
நான் இவரின் பல நாவல்களை( தமிழில் மொழி பெயர்த்தது) படித்திருக்கிறேன், நீங்கள் சொல்லும் நாவல் படித்ததில்லை, என்ஙாவது கிடைத்தால் படிக்க வேண்டும் என்ற ஆசையை உங்கள் பதிவு தூண்டியிருக்கிறது.
எண்டமூரி ஒரு பலாவதான எழுத்தாளர். பேய் கதை என்றால் துளசிதளம். காதல் கதை என்றால் நிலாப்பெண். ப்க் ஷன் என்றால் விண்மீன்கள் என்று எடுத்துக்கொண்ட கதைக்கருவை பிரித்து பேன் பார்பபவர். இவருடைய எழுத்தை தமிழில் மொழி பெயர்த்த சுசிலா கனகதுர்காவையும் கொஞசம் பாராட்டுங்க தலைவா.
எண்டமூரியின் துளசிதளம், மீண்டும் துளசி மற்றும் மின்னல் உலகம் - இந்த நாவல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுக்காதவை. நீங்கள் குறிப்பிட்ட நாவலை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு சொல்கிறேன்.
என்னங்க இப்படி பண்ணிடீங்க... தலைப்ப பார்த்துட்டு உங்க கிட்ட புத்தகம் இருக்கும் ஒரு காப்பி எடுத்துக்கலாம்னு நெனச்சேன்... அவரோட கதைகள் எல்லாம் ஒவ்வொன்னும் முத்துக்கள்.. ரொம்ப பிடிச்சது 'புஷ்பாஞ்சலி, அக்னி சாகரத்தின் அலைகள், முள் பாதை, நிலா பெண், நாட்டியதாரா' இன்னும் அடுக்கிகிட்டே போகலாம்.. நானும் எண்டமூரியோட தீவிர ரசிகன். எப்பயாவது உங்களுக்கு மேற்கூறிய புத்தகங்கள் கண்ணுல பட்டுச்சுன்ன ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்க.
அப்புறம் பழைய நினைவுகளை கிளறி விட்டதுக்கு நன்றி!!!
நானும் எண்டமூரியின் எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன். கண்சிமிட்டும் விண்மீன்கள், பர்ணசாலை, நதியின் இரு கரைகள், நிலாப்பெண், லேடீஸ் ஹொஸ்டல், காசனோவா 99, தளபதி, தூக்குத்தண்டனை, காதலெனும் தீவினிலே, காகிதபொம்மை, இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பாதிப்புகளை என்னில் ஏற்படுத்தினாலும், கண்சிமிட்டும் விண்மீன்கள், ஏற்படுத்திய பாதிப்பும் பிரமிப்பும், சற்று அதிகம்தான். உண்மையில் ஒவ்வொருகதைகளுமே அற்புதமானவை, துறைசார்ந்த அறிவை அள்ளித்தருபவை, கதையாசிரியர் மதிப்பிற்குரிய எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நீங்க எல்லாரும் சொல்வதனை வைத்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகம் வைத்திருக்கும் யாராவது கணினியில் ஏத்தி மின் புத்தக வடிவாக்கினாத்தான் உண்டு போல...
ப்ளீஸ் கொஞ்சம் தேடி யாராவது செய்யுங்களேன். புண்ணியமாகப் போகும் :)
Post a Comment