அதிசயம், அற்புதம், அபாயம் என்கிற கேப்ஷனோடு வெளியிடப்பட்டிருக்கும் 'அணு' புத்தகத்தை படித்தேன். இந்த சப்ஜெக்டை பற்றி நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என யோசித்திருந்ததால் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் விட்டு இறங்கி வரும் நடைபாதை புத்தக கடையில் கண்ணில் பட்டதும் வாங்கி விட்டேன்.
தொட்டால் வெடிக்காது என்கிற ஆரம்ப அத்தியாயமே ஆச்சரியப்படுத்துகிறது. அணுகுண்டு குறித்து தரப்பட்டிருக்கும் அறிமுகம் அசத்தல்,
அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் அணுகுண்டு வெடிக்காது.
போன்ற பல பளிச்சிடும் தகவல்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.
முந்தைய காலங்களில் நடைபெற்ற ரசவாத ஆராய்ச்சிகள், தங்கத்தை பிற பொருட்களில் இருந்து உருவாக்க முற்பட்டது, எக்ஸ்ரே கதிர்களின் கண்டுபிடிப்பு, ஆரம்ப கட்டத்தில் எக்ஸ்ரே கண்டுபிடிக்கப்பட்ட உடன் அது பட்ட பாடு, யுரேனிக் கதிர்களின் கண்டுபிடிப்பு எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
அணுக்கள் சேர்க்கை, மாற்றம், புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்கிற வேதியியல் சங்கதிகள் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் அளவில் கொடுக்கப்பட்டுள்ளது நூலாசிரியரின் சிறப்பு.
உலகப் போர் காலக்கட்டங்களில் நிகழ்ந்த அணு சார்ந்த கண்டுபிடிப்புகள், ஹிட்லர் மற்றும் முசோலினியால் விஞ்ஞானிகள் பட்ட பாடுகள் யாவும் கண்முன்னே நடப்பது போன்ற விரிவான தகவல்களாகும்.
1942 தொடக்கத்திலிருந்துதான் அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பில் முழு முனைப்புக் காட்ட ஆரம்பித்தது. அதாவது, பெர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பிறகுதான்.
ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது என சொல்லும் அத்தியாயம் காட்சிகளாய் கண்முன்னே விரிவது போல சொல்லப்பட்டிருப்பது அருமை. அமெரிக்கா ஏன் அணுகுண்டு தயாரித்தது, செயல்பட்ட விஞ்ஞானிகள், செய்முறை, பரிசோதனை அனைத்தையும் படிக்கும் போது தமிழில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படம் பார்த்த எபெக்ட் கிடைக்கிறது என்றால் அது மிகையாகாது.
பாதி புத்தகம் வரை அணுவின் அழிக்கும் செயல்களை விளக்கி ஃபர்ஸ்ட் ஹாஃப்பில் நம்மை பதற செய்யும் ஆசிரியர் இரண்டாம் பாதியில் அதன் ஆக்க சக்திகளையும் பயன்களையும் கூறி அதன் மேல் உள்ள பயத்தை போக்குகிறார்.
ஓர் அணு மின் நிலையம் செயல்பட சில டன் யுரேனியம் இருந்தால் போதும். இந்த அளவு யுரேனியத்தை உள்ளே வைத்துவிட்ட பிறகு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குக் கவலையில்லை. ஆனால் இத்துடன் ஒப்பிட்டால் அனல் மின் நிலையத்துக்கு மணிக்குச் சுமார் 100 டன் வீதம் நிலக்கரி தேவை.
பெருகி வரும் மின்சார தேவைகளை சமாளிக்க அணு மின் நிலையங்களின் அவசியம், அணு உலைகளின் செயல்பாடு ஆகியவையும் இதில் உள்ள ரிஸ்க் ஃபேக்டர்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. செர்னோபில், த்ரீ மைல் ஐலண்டு விபத்துக்களை படிக்கும் போது சிறிது பயம் ஏற்படுகிறது. அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள், விண்கலங்கள் என அணு சக்தி குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
அணுசக்தி துறையில் தற்போது இந்தியாவின் ஆற்றல், கல்பாக்கத்தில் நடப்பது என்ன போன்ற விஷயங்களும் புத்தகத்தில் உண்டு.
நமது உடலில் உள்ள அணுக்கள் உள்பட பூமியில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு காலத்தில் அண்டவெளியில் நட்சத்திரங்களில் தோன்றியவையே. அந்த வகையில் நாம் அனைவரும் நட்சத்திரங்களின் குழந்தைகளே
சூரியன் உட்பட நட்சத்திரங்களில் உருவாகும் அணுக்கள் குறித்து விளக்கும் கடைசி அத்தியாத்தை படித்து முடித்த உடன், தமிழில் நல்ல ஒரு அறிவியல் நூல் படித்ததற்கான திருப்தி கிடைப்பது நிஜம்.
________________________________________
தரமான தாளில், உறுத்தாத சாஃப்டான லே அவுட் டிசைனிங்கில் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே சம்பந்தப்பட்ட படங்களை கொடுத்திருப்பது சுவையை கூட்டுகிறது. எனக்கு ஒரே ஒரு குறை என்றால் புத்தகத்தை எழுதிய ஆசிரியரது படத்தையும் பின் அட்டையில் கொடுத்திருக்கலாம் என்பதுதான்.
________________________
அணு - அதிசயம்.அற்புதம்.அபாயம்
ஆசிரியர் என்.ராமதுரை
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.100
6 comments:
சிறப்பான அறிமுகம். புத்தகத்தை இப்போதே படிக்கத் தூண்டுகிறது.
பகிர்வுக்கு நன்றி.
m..காம்ப்ளேன் பாய் ஆகிட்டு வர்றே.. வாழ்த்துக்கள்..
நன்றி சுகுமார். வாசிக்க வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி சுகுமார்
Please Publish This book in PDF form.
Post a Comment