Monday, June 28, 2010

இந்தியப் பிரிவினை - நூல் அனுபவம்







ரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை... உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா, பின் பக்கம் வந்தால், பாகிஸ்தான்.


1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தது. நேரு மாமா கொடியேற்றினார். சுதந்திரம் கிடைத்ததால் மக்கள் ஆனந்த கூத்தாடினார்கள் என எனக்கு எளிமையாய் வரலாற்று பாடங்களில் அறிமுகம் ஆகி இருந்த இந்திய சுதந்திரம், பிரிவினை காலகட்டங்களின் ஆழங்களை மருதன் எழுதியிருக்கும் இந்தியப் பிரிவினை புத்தகம் தோண்டித் துருவி வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

ஆகஸ்ட் 15. இந்தியா விழித்திருப்பதாக நேரு அறிவித்த அந்த நள்ளிரவில் காந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.


இந்தியப் பிரிவினையில் நேரு, காந்தி, ஜின்னா மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகியோரை சுற்றி, அவர்களது நிலைப்பாடுகளை கூறி இந்தியப்பிரிவினை படிப்படியாக எப்படி அரங்கேறியது என்பதை முதல் பாதியில் புத்தகம் அறியத் தருகிறது. ஒருவர்க்கொருவர் கொண்டிருந்த கருத்து வேற்றுமைகள், ஜின்னாவின் பிடிவாதம், மவுண்ட்பேட்டனின் பங்கு என தேசம் துண்டாடப்பட்ட தருணங்களை கண்முன்னே நிறுத்துகிறார் ஆசிரியர் மருதன்.




அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் வந்து நின்ற ரயில் வண்டியில் முழுக்க முழுக்கப் பிணங்கள். ரயில் பெட்டிகள் மீது சுண்ணாம்பால் யாரோ கிறுக்கியிருந்தார்கள். நேருவுக்கும் படேலுக்கும் எங்கள் சுதந்திரப் பரிசு.


இந்தியா பாகிஸ்தான் பிரிவு என்பது ஏதோ பொலிட்டிக்கல் மேப்பில் கலர் பென்சில் வைத்து கோடு போடுவது போல சாதாரண விஷயம் என நினைத்திருந்த எனக்கு கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அதிர்ச்சியளித்தது.


மத சண்டை காரணமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் படிக்கும்போது திடுக்கிட வைக்கிறது. பாலியல் துன்புறுத்தல்கள், கொலை என கொத்து கொத்தாக பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். பிற மதத்தினர் கும்பலாக பக்கத்து தெருவில் வருகிறார்கள் எனத் தெரிந்தவுடன் தங்களது வீடுகளிலுள்ள பெண்களை வரிசையாக நிற்க வைத்து குடும்பத்தின் மானத்தைக் காக்க இவ்வாறு கொல்கிறேன் என கூறி ஏராளமான பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என புத்தகம் கூறும்போது எவ்வளவு விலை கொடுத்து சுதந்திரத்தை வாங்கினோமோ அதைப்போலவே பெரும் சேதாரத்தை இந்த பிரிவினை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியும் போது பெரும் ஷாக்.


ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகே அந்தக் கோரிக்கையை மவுண்ட்பேட்டனிடம் கொண்டு சென்றார்கள் நேருவும் படேலும். வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு.... வேண்டாம் மவுண்ட்பேட்டன், எங்களால் சமாளிக்க முடியவில்லை. இது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது.... யோசித்துப் பார்த்துவிட்டோம். வேறு வழியில்லை. நீங்கள் ஏற்று நடத்துங்கள். நாங்கள் விலகிக்கொள்கிறோம்.
சொல்லிவிட்டு எழுந்துவந்துவிட்டார்கள் இருவரும். சுதந்தரம் அடைந்து மூன்று வாரங்கள்கூட பூர்த்தியாகவில்லை அப்போது.


உடலின் ஏதாவது ஒரு பாகத்தை வெட்டி எடுக்கும்போது வெளிப்படும் ரத்தத்தைப்போல இந்தியப்பிரிவினை பெரும் உயிரிழப்புகளுடன் நடந்தேறி இருக்கிறது.  பிரிவினையின் போது மனிதர்கள், நிலங்கள் மட்டும் அல்லாது 


அரசாங்கத்தின் 

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 

பட்டியலிப்பட்டு பிரிக்கப்பட்ட நிகழ்வு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களிலிருந்த மேஜைகள், சோபாக்கள் முதற்கொண்டு பிரிக்கப்பட்ட தகவல்கள் எங்கும் இதன் முன்னர் அறிந்திராத ஒன்று.



ஒன்றிணைப்பது என்பது வெறுமனே பிரதேசங்களை இணைத்துக்கொள்வது மாத்திரமல்ல.  நிஜமான சவால்... நான் ஹைதரபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தவன், ஜுனாகத் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்னும் அடையாளத்தைத் தகர்த்து இந்திய குடியரசின் பிரஜை நான் என்று சொல்லவைக்க வேண்டும்... 1947 தொடங்கி 1950 வரை இந்த இரண்டாம் கட்ட இணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது இந்தியா.


இந்தியப்பிரிவினை என்கிற அளவோடு நின்றுவிடாமல் சமஸ்தானங்களிடம் இருந்து மாநிலங்களை பெற்று ஒருமித்த இந்தியாவாக உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இந்துத்வா சக்திகளின் வளர்ச்சி என பிந்தைய காலகட்ட நிகழ்வுகளும் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. 
முதல் அதிகாரம் முதலே ஆங்காங்கே நாவல் நடையில் நூல் செல்வது படிப்பதற்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. புத்தகத்தை எடுத்தால் ஓரே மூச்சில் படித்துவிட்டுதான் கீழே வைக்க முடியும் அளவிற்கு படைத்திருக்கும் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.


___________________


கிழக்கின் மற்ற நூல்களை போலவே சிறப்பான தரமான தாள்கள்.  முன் அட்டைப்படத்தை சொல்லப்பட்டிருக்கும் சப்ஜெக்டிற்கேற்ப ஸ்டராங்காக வடிவமைத்திருக்கலாமோ என எனக்கு தோன்றுகிறது.


_____________________________________________________


இந்தியப்பிரிவினை
ஆசிரியர் - மருதன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.90


குறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்


Key : Book review, Marudan, Maruthan, Marudhan, Kizakku publication, India pirivinai, Valaimanai Blogspot, Sukumar Swaminathan

Friday, June 25, 2010

மறையவில்லை மைக்கேல் ஜாக்சன்



மைக்கேல் ஜாக்சன் ( ஆகஸ்ட் 29, 1958 -  ஜுன் 25, 2009)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி







மைகேல் ஜாக்சன் ஒரு சகாப்தம் - வலைமனை அஞ்சலி

Michael Jackson Obituary by Valaiamanai blogspot Tamil poems in memory of Michael Jackson by Sukumar Swaminathan

Monday, June 21, 2010

சினிமா வியாபாரம் - சங்கர் நாராயண் - நூல் அனுபவம்

ல்லா துறையும் கலகலத்து போன ரெசஷன் டைமிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த ஒரே துறை சினிமா துறை தான்.


கோடிகளில் படங்கள் எடுக்கப்படுகிறது, விற்கப்படுகிறது, வாங்கப்படுகிறது என நாம் கேள்விப்பட்டிருந்தாலும் ஒரு சினிமா சந்தைப்படுத்தப்படுத்தப்படும் முறைகளை தெள்ளத்தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது கேபிள் சங்கர் என தமிழ் வலைபதிவுலகில் பிரபலமாக அறியப்படும் சங்கர் நாராயண் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் சினிமா வியாபாரம் புத்தகம்.


ஏரியா வாரியாக ஊர்களை பிரிப்பது, வினியோகித்தல்,வெளியிடுவது, ஓப்பந்த முறைகள், விளம்பர முறைகள், மார்கெட்டிங், டி.வி ஒளிபரப்பு, ரேடியோ, சாட்டிலைட் ஒளிபரப்பு, வெளிநாட்டு உரிமை என ஒரு படம் வெளியாகும், விற்பனையாகும் நிலைகளின் அனைத்து பரிமாணங்களையும் விளக்குகிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.




"தியேட்டருக்கான டிக்கெட்டுகள் பிரிண்ட் ஆகி வந்த உடன், சீரியல் வரிசைப்படி ஒவ்வொரு வாரமும் வணிக வரி அலுவலகத்துக்கு சென்று டிக்கெட்டின் பின்புறம் சீல் போட்டு வருவார்கள்.... ரிசர்வேஷன் கூப்பனைக் கொடுத்தவுடன் எல்லா தியேட்டர்களிலும் ஒரு சீட்டைக் கிழித்து தருவார்கள். அதுதான் டாக்ஸ் கட்டிய டிக்கெட்"


இதுபோல நாம் பார்வையாளராய் அறிந்த சினிமா உலகத்தின் ஒரு பாதியின் அறியாத பின்பாதிகளை நிறையவே இந்த புத்தகம் நமக்கு அறியத் தருகிறது. சில சமயங்களில் லேப்பில் படப்பெட்டியை ஹோல்ட் செய்வார்கள், ரிலீஸ் தேதியன்று படப்பெட்டிகள் திரையரங்கிற்கு வரவில்லை என செய்திகள் கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணங்களை தன் சொந்த அனுபவத்துடன் சேர்த்து சுவாரஸ்யமாக விளக்குகிறார் நூலாசிரியர்.  


இந்த வகையில் வெறும் விளக்கங்கள், தியரிகள் மட்டும் இல்லாமல் தனது சொந்த வாழ்வின் நிகழ்வுகளை ஆங்காங்கே கோர்த்திருப்பதால் நூல் சொல்ல வரும் விஷயங்கள் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் படிக்கும் வாசகர் மனதில் ஏறுவது இந்த புத்தகத்தின் பிளஸ் பாயிண்ட்.




"காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடிக்க வருவதற்கு முன் ஜெமினியின் விளம்பரப் பிரிவில்தான் வேலை செய்து கொண்டிருந்தார்"


என்பது போன்ற பழைய கால கட்ட தமிழ் சினிமாவை காட்சிகள் தொடங்கி, 










"சமீப காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மொத்தமாக டிஜிட்டல் டவுன்லோடில் மட்டும் சம்பாதித்த பாட்டு ஜேம்ஸ் வசந்தனின் கண்கள் இரண்டால்..."


போன்ற லேட்டஸ்ட் அப்டேட்டட் தகவல்கள் வரை சினிமா வியாபாரத்தின் பல்வேறு காலகட்ட நிலைகளையும், இனியும் வரக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் நூல் விளக்குகிறது.


அது நம்மளை நோக்கி வந்திகிட்டு இருக்கு ஓடுங்க ஓடுங்க... என்கிற ரீதியில் மட்டுமே என்னைப் போன்ற பலர் அறிந்திருக்கக்கூடிய ஹாலிவுட் திரை உலகை புல்லட்ஸ் போட்டு பட்டியலிட்டு  புட்டு புட்டு வைக்கிறது இந்தப் புத்தகம்.










"உள்ளத்தை அள்ளித்தா மிகப் பெரிய ஹிட் படம். அந்தப் படத்தை வைத்து தயாரிப்பாளர் சம்பாதித்ததை விட, விநியோகிஸ்தர்கள் சம்பாதித்தது இரண்டு மடங்கு இருக்கும்"




இந்த நூலின் தனித்தன்மை என குறிப்பிட வேண்டிய விஷயம், சினிமா சந்தையின் விவரங்களை சொல்வதோடு மட்டுமல்லாமல் இந்த இந்த இடங்களில் தில்லு முல்லு நடக்கும், நடக்கிறது, நடக்கலாம், எந்த வழிகளில் யோசித்தால் லாபம் பெறலாம் என்பன போன்ற துறை சார்ந்த நுணுக்கங்களை கற்றுத் தருவதுதான். ஆகவே புதியதாக திரைப்பட சந்தையில் ஏதோ ஒரு வகையில் கடை விரிக்க விரும்பும் யாவருக்கும் சினிமா வியாபாரம் புத்தகம் ஒரு கையேடாக விளங்கும் என்றால் அது மிகையாகாது. 


குறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்


__________________


நூலில் எனக்கு முதலில் எடுத்த உடனேயே பிடித்த விஷயம் அதன் முகப்பு அட்டை. அருமையான டிசைனிங் செய்திருக்கிறார்கள். உள்ளே நல்ல தரமான தாள்கள் புத்தகத்தின் மதிப்பை கூட்டுகிறது. 


ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உபயோகப்படுத்தியிருக்கும் மார்ஜின் ஸ்பேஸ் அழகு.  
_______


சினிமா வியாபாரம்
ஆசிரியர் சங்கர் நாராயண்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.70 


______


'இந்த புத்தகத்தை ஆன்லைனில் பெற' விட்ஜட்டை உங்கள் பதிவில் போட கீழேயுள்ள கோடினை பயன்படுத்தவும்








<a href="http://nhm.in/shop/978-81-8493-417-5.html" target="_blank"><object width='200' height='200'><embed src='http://www.hostanypic.com/out.php/i10920_cinema-flash2.swf' width='200' height='200' wmode='transparent'/></embed></object>
<br /></a>









Saturday, June 19, 2010

ராவணன் - ஒரு ரசிகனின் திரை அனுபவம்

டைட்டில்


விக்ரமின் பல்வேறு எக்ஸ்பிரஷன்களின் ஸ்டில்களை நெருப்பு ஜ்வாலைகள் அலைகளாய் அலைகழிப்பது போன்ற டைட்டில் கிராபிக்ஸ் வழக்கமான மணிரத்னம் படங்களை விட ரொம்பவே வித்யாசமாக இருக்கிறது.  இனி பல படங்களின் டைட்டில்களில் இந்த டிரென்ட் பின்பற்றப்படலாம்.   டைட்டில் டிசைனருக்கு என் பாராட்டுக்கள்.
     அதேபோல் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து ஸ்லோமோஷனில் இடைவேளை விரிவதும் இந்தப்படத்தில் கிடையாது. சட்டென்று ஒரு விக்ரமின் ஸ்டில் வந்து விழுந்து "கெடா கெடா கறி" என்கிற இசையுடன் இடைவேளை விடும் புதிய ஐடியா லவ்லி. 




கேமரா


 டிக்கெட் காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சனை செய்யாமல் செயல்பட்டிருக்கிறது. ஆர்பரித்து ஸ்லோ மோஷனில் எழும் நதி அலைகள் பேக் கிரவுண்டில் ஐஸ்வர்யா முகம் சுழிப்பதை எவ்வளவு ரசிக்கலாம் தெரியுமா...?  இரண்டரை மணி நேரம் விக்ரம், ஐஸ்வர்யா, பிரபு, பிருத்வியுடன் மலையில் நாம் டிரெக்கிங் போன எஃபெக்ட் கிடைக்கிறது. கேமரா நம்மை அதனுடனே அழைத்துச் செல்கிறது. 
■  மலை பிரதேசங்கள், மழை, சாரல், ஐஸ்வர்யா, தட்டான், அருவி, பாலம் என கேமராவை கண்டுபிடித்த விஞ்ஞானி பார்த்தால் கண் கலங்கி இருப்பார்.
  ஐஸ்வர்யாவை கடத்தி வைத்திருக்கும் புகைப்படத்தில் அவரை விட்டு மற்றஅனைவரையும் சிகரெட்டால் பிருத்தி, சுடும் காட்சி.. வாவ்.. இதுபோன்ற பல காட்சிகளில் கேமரா கிரியேட்டிவ்வாக ரசிக்க வைக்கிறது.




இசை


 தியேட்டரை விட்டு வெளியே வரும் போது உடலில் கொஞ்சம் ஏர்.ஆர்.ரஹ்மானும் ஒட்டிக்கொண்டே வருகிறார்.  வழக்கம் போலவே படத்தை பார்த்த பின் ரஹ்மானின் இசை மேலும் பிடிக்கிறது. பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார் மனுசன். 
விக்ரம் வரும்போது சில இடங்களில் கோஷமிட்டு அடங்கும் டெரர் மியூசிக் சிலிர்க்க வைக்கிறது. பரிசலில் சுத்திக்கொண்டே விக்ரம் ஐஸ்வர்யாவிடம் "குருவம்மா.. இங்கேயே இருந்துடுங்களேன்" எனும் காட்சியில் காட்டுச் சிறுக்கி பாடலை பின்னணியில் கதற விட்டிருக்கிறார் பாருங்கள்... ரசிகன்யா மனுசன். 
■  வீரா... வீரா என அதிர விட்டு டைட்டில் முதல் சீட்டில் கட்டிப்போட்டு கடைசியில் ஐஸ்வர்யாவின் கைகோர்க்க முடியாமல் அகல பாதாளத்தில் விக்ரம் ஸ்லோமோஷனில் சரியும் போது வரும் டிராக் வரை... தல.. என்னா தல ரெண்டு ஆஸ்கார்.. நான் தரேன் நாற்பது ஆஸ்கார்... இந்தா வாங்கிக்கோ....




எழுத்து

 "மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்.."


"அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி..."


"ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல்... நீ கிழிச்ச கோட்டு நீளுதடி என் பொழப்பு" 


இருநூத்தி நாப்பத்தி ஏழு எழுத்தை வச்சிகிட்டு வைரமுத்து வழக்கம் போலவே விளையாடியிருக்கார்.


■ வசனம் சுஹாசினி.. நாட் பேட்.. சில இடங்களில் பளிச்சிடுகிறார்




நடிப்பு


 விக்ரமிற்கு இது தோள் மேல் எளிதாக சுமக்கக் கூடிய பாரம் என்றாலும் அதை அனுபவித்து சுமந்திருக்கிறார். எனக்கு ரொம்ப பிடித்தது கிளைமேக்சில் பிருத்வி ஒளிந்திருக்கிறார் என கண்டுபிடித்ததும் விக்ரம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன். 

( சீயான் சார்... கந்தசாமி, ராவணன் முடிஞ்சிடுச்சுல்ல.. இனி கொஞ்சம் டக்கு டக்குனு நாலஞ்சு படம் பண்ணி மெயின் மார்கெட்டுக்கு வாங்க... )

■ ஐஸ் பெயருக்கேற்றாற் போல் சில்லென்றே இருக்கிறார். ஆனால் எந்திரனுக்கு பிறகு தமிழில் ஏற்றுக்கொள்வார்களா தெரியவில்லை. கொஞ்சம் அங்கங்கே வயது தெரிகிறது. ஆனால் படத்தில் இவரது பங்கு அபாரம். அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்.



■ பிரபுவுக்கு நல்ல வெயிட்டான ரோல். வெயிட்டாகவே செய்திருக்கிறார். கண்ணில் மைவிட்டுக்கொண்டு போட்டோவுக்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பது அழகு. 




■ கார்த்திக் கொஞ்சம் பாவம். கட்சி வேலைகளை விட்டு கொஞ்சம் படத்தில் நடியுங்கள் என மணிரத்னம் கூப்பிட்டதாய் எதிலோ படித்த ஞாபகம். இதுக்கு அவர் கட்சியையே கவனித்திருக்கலாம். 




■ ராவணன் பார்தத உடன் கண்டிப்பாக ஹிந்தியில் ராவண் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. காரணம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்வியை போட்டது எனக்கு அவ்வளவு வெயிட்டாக உணர முடியவில்லை. அந்த ரோலில் மேடி மாதவனை போட்டிருந்தால் கூட சிறப்பாக செய்திருப்பாரோ என எண்ணிக் கொண்டே படம் பார்த்தேன்.  ஏற்கனவே குருவில் அபிஷேக் மனதில் பதிந்து விட்டதால் ராவண் பார்த்தால் விக்ரம் அபிஷேக் மோதல் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.


■ பிரியாமணி அழகாக வந்து உருக்குலைந்து இறந்து போகிறார். 


■ வையாபுரிக்கு நல்ல வாய்ப்பு. சிறப்பாக செய்திருக்கிறார்.


 ■ துபாய், இலங்கை, ஐரோப்பா பதிவர்கள் சொன்னதுபோல சென்னை திரையரங்கிலும் 'அவர்' வரும்போது தியேட்டரே அதிருகிறது.
( பெயர் சொல்ல பயமாய் இருக்கிறது. கூகுள், யூடியூப்புக்கே நோட்டிஸ் விட்டவர். நாமெல்லாம் எம்மாத்திரம்)




இயக்கம்


மேலே சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் காரண கர்த்தா மணிரத்னம் என்பதால் தனியே அவர் பங்கை சொல்ல வேண்டியதில்லை. குருவிற்கு பிறகு முழுவதும் வேறுவிதமான ஸ்கிரிப்ட்டை எடுத்து ரசனையுடன் படைத்திருக்கிறார். இது மணி படைத்த காவியமா, இல்லை படம் மொக்கையா என்றெல்லாம் யோசிக்க நான் விரும்பவில்லை. நான் கொடுத்த காசுக்கு மேலாகவே என்னை இரண்டரை மணி நேரம் மேற்சொன்ன பல விதங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். அதற்கு நன்றி!




  

Monday, June 14, 2010

அணு - அதிசயம், அற்புதம், அபாயம் - நூல் அனுபவம்

அதிசயம், அற்புதம், அபாயம் என்கிற கேப்ஷனோடு வெளியிடப்பட்டிருக்கும் 'அணு' புத்தகத்தை படித்தேன். இந்த சப்ஜெக்டை பற்றி நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என யோசித்திருந்ததால் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் விட்டு இறங்கி வரும் நடைபாதை புத்தக கடையில் கண்ணில் பட்டதும் வாங்கி விட்டேன். 
   தொட்டால் வெடிக்காது என்கிற ஆரம்ப அத்தியாயமே ஆச்சரியப்படுத்துகிறது.  அணுகுண்டு குறித்து தரப்பட்டிருக்கும் அறிமுகம் அசத்தல்,  


அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் அணுகுண்டு வெடிக்காது.


போன்ற பல பளிச்சிடும் தகவல்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.


 முந்தைய காலங்களில் நடைபெற்ற ரசவாத ஆராய்ச்சிகள், தங்கத்தை பிற பொருட்களில் இருந்து உருவாக்க முற்பட்டது, எக்ஸ்ரே கதிர்களின் கண்டுபிடிப்பு, ஆரம்ப கட்டத்தில் எக்ஸ்ரே கண்டுபிடிக்கப்பட்ட உடன் அது பட்ட பாடு, யுரேனிக் கதிர்களின் கண்டுபிடிப்பு எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்


  அணுக்கள் சேர்க்கை, மாற்றம், புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்கிற வேதியியல் சங்கதிகள் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் அளவில் கொடுக்கப்பட்டுள்ளது நூலாசிரியரின் சிறப்பு. 


 உலகப் போர் காலக்கட்டங்களில் நிகழ்ந்த அணு சார்ந்த கண்டுபிடிப்புகள், ஹிட்லர் மற்றும் முசோலினியால் விஞ்ஞானிகள் பட்ட பாடுகள் யாவும் கண்முன்னே நடப்பது போன்ற விரிவான தகவல்களாகும்.


1942 தொடக்கத்திலிருந்துதான் அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பில் முழு முனைப்புக் காட்ட ஆரம்பித்தது. அதாவது, பெர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பிறகுதான்.


ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது என சொல்லும் அத்தியாயம் காட்சிகளாய் கண்முன்னே விரிவது போல சொல்லப்பட்டிருப்பது அருமை. அமெரிக்கா ஏன் அணுகுண்டு தயாரித்தது, செயல்பட்ட விஞ்ஞானிகள், செய்முறை, பரிசோதனை அனைத்தையும் படிக்கும் போது தமிழில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படம் பார்த்த எபெக்ட் கிடைக்கிறது என்றால் அது மிகையாகாது.


  பாதி புத்தகம் வரை அணுவின் அழிக்கும் செயல்களை விளக்கி ஃபர்ஸ்ட் ஹாஃப்பில் நம்மை பதற செய்யும் ஆசிரியர் இரண்டாம் பாதியில் அதன் ஆக்க சக்திகளையும் பயன்களையும் கூறி அதன் மேல் உள்ள பயத்தை போக்குகிறார்.


 ஓர் அணு மின் நிலையம் செயல்பட சில டன் யுரேனியம் இருந்தால் போதும். இந்த அளவு யுரேனியத்தை உள்ளே வைத்துவிட்ட பிறகு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குக் கவலையில்லை. ஆனால் இத்துடன் ஒப்பிட்டால் அனல் மின் நிலையத்துக்கு மணிக்குச் சுமார் 100 டன் வீதம் நிலக்கரி தேவை.
 


  பெருகி வரும் மின்சார தேவைகளை சமாளிக்க அணு மின் நிலையங்களின் அவசியம், அணு உலைகளின் செயல்பாடு ஆகியவையும் இதில் உள்ள ரிஸ்க் ஃபேக்டர்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. செர்னோபில், த்ரீ மைல் ஐலண்டு விபத்துக்களை படிக்கும் போது சிறிது பயம் ஏற்படுகிறது.   அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள், விண்கலங்கள் என அணு சக்தி குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
   அணுசக்தி துறையில் தற்போது இந்தியாவின் ஆற்றல், கல்பாக்கத்தில் நடப்பது என்ன போன்ற விஷயங்களும் புத்தகத்தில் உண்டு.


நமது உடலில் உள்ள அணுக்கள் உள்பட பூமியில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு காலத்தில் அண்டவெளியில் நட்சத்திரங்களில் தோன்றியவையே. அந்த வகையில் நாம் அனைவரும் நட்சத்திரங்களின் குழந்தைகளே 


சூரியன் உட்பட நட்சத்திரங்களில் உருவாகும் அணுக்கள் குறித்து விளக்கும் கடைசி அத்தியாத்தை படித்து முடித்த உடன், தமிழில் நல்ல ஒரு அறிவியல் நூல் படித்ததற்கான திருப்தி கிடைப்பது நிஜம்.




________________________________________




தரமான தாளில்,  உறுத்தாத சாஃப்டான லே அவுட் டிசைனிங்கில் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே சம்பந்தப்பட்ட படங்களை கொடுத்திருப்பது சுவையை கூட்டுகிறது. எனக்கு ஒரே ஒரு குறை என்றால் புத்தகத்தை எழுதிய ஆசிரியரது படத்தையும் பின் அட்டையில் கொடுத்திருக்கலாம் என்பதுதான்.


________________________




அணு - அதிசயம்.அற்புதம்.அபாயம்
ஆசிரியர் என்.ராமதுரை
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.100