Thursday, September 29, 2011

யானி | வலைமனை நூல் பரிந்துரை




அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது.  வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.

அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது.  அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.

இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.

ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும்.  கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம்.  ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.

யானி ஓர் இசை மேதை என்று பலருக்கு தெரிந்திருக்கும். நமது ஊரில் தாஜ்மஹால் முன்னே இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற வகையில் சிலருக்கு ஞாபகமிருக்கும். ஆனால் "யானியா யாரது?" என கேட்கக் கூடிய பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரது இசை முன்னமே வெகு பரிச்சயமான ஒன்று என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள்  இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.

யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது.  இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது.  ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன்.  என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.

சித்தார்த் ராமானுஜன் சிறப்பான படைப்பினை அளித்திருக்கிறர்.  உன்னதமான இசைக்கோவைகளை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டிருக்கும் யானியின் வாழ்க்கை கதை வெகுவாக சிலிர்ப்படைய வைக்கிறது. எதிலும் அடங்காத ஆற்றல், திருப்தியின்மை, பெரும் இலக்குகளை நிர்ணயித்தல், அதை நோக்கி பேய்த்தனமாக உழைத்தல் என பின்னியெடுக்கிறார் மனிதர்.

கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது.  யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.

"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"


கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!

__________________________________

யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்

புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html

_______________________________

சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
____________________________

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 


Valaimanai Tamil Book review - tamil buthaga vimarsanam
isai medhai yaani  oru kanavin kadhai sidharth ramanujan
kizaku padipagam kilakku publications 

Monday, September 19, 2011

பிரியாணி வித் அண்ணே அப்துல்லா






பஸ் உலகில் ஒரு கால் வைத்திருப்பது எவ்வளவு நல்லது என்பதை சமீபத்தில் அறிந்தேன். இல்லையென்றால் பெரும் இழப்புகள் நேரிடும் போல் இருக்கிறது. அன்று அப்படித்தான், பிரியாணியை இழந்திருப்பேன்.

மாலை மெரினாவில் ரம்ஜான் பிரியாணி விருந்து அளிப்பதாக அண்ணன் அப்துல்லா பஸ் இட்டிருந்தார். அதைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு, மாலை 5 மணிக்கெல்லாம் மெரினாவில் கூடி இருந்த பதிவர்கள் மத்தியில் ஐக்கியம் ஆனேன்.

வார நாளில் விருந்தினை ஏற்பாடு செய்திருந்தாலும் பிரியாணி அழைத்ததனால்... மன்னிக்கவும் அண்ணன் அப்துல்லா அழைத்ததனால் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து அனைவரும் வந்திருந்தனர்.

பல தெரிந்த முகங்கள், சில தெரியாத முகங்கள் என வழக்கம் போல மெரினாவில் வட்ட மணல் மாநாடு துவங்கியது. வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்து, எங்கே விருந்து கேன்சல் ஆகிவிடுமோ என்கிற இயற்கையான பயம் என்னுள் அப்பிக்கொண்டது. வட்ட மாநாடு கலைந்து அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது,

பான்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி காதலின் தீபம் ஒன்று ரஜினி போல   மணலை வெறித்தபடி அடி மேல் அடி வைத்துக்கொண்டிருந்தார் அண்ணன் ஆதி.

"என்னண்ணே.. சீரியஸாய் ஏதோ யோசிச்சிக்கிட்டிருக்கீங்க.. அடுத்த குறும்படம் பத்தியா..?" என்றேன்.

"இல்ல. இது அதை விட பெரிசு.." என்றார் சிரிக்காமல்.

ஆதி & கோ குறும்படம்னாலே நாலு அணுகுண்டுக்கு சமம்.. அதை விடப்பெரிசுன்னா எத்தனை உசுரு போகப்போகுதே தெரியலையே என பதறியபடி "நல்லா வருவீங்கண்ணே.. நல்லா வருவீங்க..." என்றபடி எதிர் திசையில் எஸ்கேப் ஆனேன்.

மழை வரும் போல் இருந்ததால், அனைவரையும் அவரது அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்தார் அப்துல்லா.  இடத்தை விசாரித்துக்கொண்டு அனைவரும் ஆளாளுக்கொரு பைக் பிடித்து கலைகையில், அண்ணன் பால பாரதி எதிர்பட்டார்.

பால பாரதி!

2009 ஆம் ஆண்டு மெரினாவில் எனது முதல் பதிவர் சந்திப்பில் அவரை பார்த்து கொஞ்சம் பயந்து போய் இருக்கிறேன். எப்போதோ பார்த்த ஹிந்தி பட வில்லன் உருவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.  பின்னர் நடேசன் பூங்காவில் ஒரு பதிவர் சந்திப்பில் அவர் அருகில் அமர்ந்து கொஞ்சம் பயம் போய் இருக்கிறது. மற்றபடி அதிகமாய் பேசியது இல்லை.

"சார், உங்களுக்கு அப்துல்லா அண்ணன் ஆபிஸ் எப்படி போறது தெரியுமா?" என்றேன்.

"இடம் சொன்னாங்க. எப்படி போறது தெரியலை.. வா முதல்ல ஒரு டீயை போடுவோம்." என்று அங்கிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்ற பின் ஒரு டீ கடையில் நிறுத்தினார்.

"எங்க வேலை செய்றீங்க சுகுமார்?" என்றார் வண்டியை நிறுத்திக்கொண்டே.

நான் அதிர்ச்சியுடன், "என்ன சார் சுகுமார்னு சொல்றீங்க" என்றேன்.

"யோவ்.. அதானே உன் பேரு. இல்லயா?" என்றார்.

"இல்லை சார்.. எனக்கு உங்களை தெரியும்.. உங்களுக்கு என்னை தெரியும்னு நான் நெனைக்கவே இல்லை" என்றேன்.

"அடப்பாவி.. ஏதோ உன் பேரு வேற போல இருக்கு...நான் தான் தப்பா சொல்லிட்டேனோனு நெனச்சேன்." என்றார் சிரித்துக்கொண்டே.

அவருக்கு என்னை தெரிந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. போட்டோ கமெண்ட்ஸ் குறித்து ஊக்குவித்து பேசினார். மகிழ்வாய் இருந்தது.

பின்னர் தேடி பிடித்து அப்துல்லா அண்ணன் அலுவலகம் சேர்ந்தோம்.  அங்கு கான்பெரென்ஸ் ஹாலில் அரட்டை கச்சேரி துவங்கியது.  

சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ணன் அப்துல்லாவும் கேபிள்ஜியும் வந்து சேர்ந்தார்கள்.

"அண்ணே.. மழையா.. ஒன்னும் பிரச்சனை இல்லையே.." என்றேன்.

"இல்ல... இல்ல.. லேசா நனைஞ்சிட்டோம். அவ்ளோதான்" என்றார்.

"அட உங்களை எவன் கேட்டான், பிரியாணிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?"  என்ற என்னை முறைத்துவிட்டு, அதையே வழக்கம் போல் மூச்சு விட சிரமப்படும் அளவிற்கு சிரித்து சிரித்து பக்கத்தில் யாரிடமோ சொன்னார்.

அப்துல்லா அண்ணனிடம் அதுதான் சிறப்பு. அவர் மொக்கை ஜோக் அடித்துவிட்டு சிரித்தாலும், அந்த மொக்கைக்காக இல்லாவிட்டாலும் அவர் சிரிக்கும் அழகிற்காகவாவது பதிலுக்கு சிரிக்க தோன்றும்.

விருந்து துவங்கியது. அது போல ஒரு மட்டன் பிரியாணியை வாழ்வில் சாப்பிட்டது இல்லை. அரிசி மிருதுவாக இருந்ததா இல்லை ஆட்டுக்கறி மிருதுவாக இருந்ததா என இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு சுவையாக இருந்தது.

சிறப்பான இந்த விருந்து நிகழ்வினை குறித்து பதிவிட முடியாமல் வால்டேஜ் பிரச்சினை துரத்தியடித்துக்கொண்டே இருந்தது.  இவ்வளவு சிரமம் எடுத்து விருந்தளித்த அப்துல்லா அண்ணனின் அன்பிற்காக இல்லாவிட்டாலும்,  அடுத்த முறை பிரியாணி விருந்திற்கான ஏற்பாடுகளை அவர் இப்போதே துவங்குவதற்கு ஊக்கமளிக்கவாவது இதை பதிவிட விரும்பினேன்.

இந்த முறை இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்த முறையும் ஏமாற்றத்தை தவிர்க்க இப்போதே தங்கள் பிரியாணிக்கான முன் பதிவை துவங்கலாம்.

BIRIYANI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்சனை ( A.மட்டன் B.சிக்கன் C.வான் கோழி ) தேர்ந்தேடுத்து, உங்கள் குடும்பத்திற்கும் பக்கத்துக்கு வீட்டு காரர்களுக்கும் தேவைப்படும் பார்சல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அண்ணன் அப்துல்லா மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Wednesday, August 31, 2011

மங்காத்தா - விதிகளை உடைத்த அஜித்




தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம்.  கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.

தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

 எவ்வளவு கெட்டவனாக ஹீரோவை காண்பித்தாலும் கடைசியில் ஒரு பிளாஷ்பேக் வைத்து அவன் நல்லவன்தான் என ஒரே சீனில் மாறும் சாதாரண சினிமாவாக அமையாத கிளைமேக்ஸ் தமிழுக்கு புதுசு.


த்ரிஷா, ஆன்ட்ரியாயை விட அஞ்சலி அழகாக தெரிகிறார். லட்சுமி ராய்க்கு பதில் வேறு யாரையாவது போட்டிருக்கலாம்.  அழகான ஒளிப்பதிவு, அடுத்தடுத்து நகரும் விறுவிறுப்பான காட்சிகள், ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை என போரடிக்காமல் செல்கிறது மங்காத்தா.


பல இடங்களில் அஜித்தின் புதிய தோற்றம் அட்டகாசமாக இருக்கிறது. ஆனாலும் ஏன் இப்படி எல்லாம் நடிக்க/பேச சம்மதித்தார் என தோன்றும் அளவிற்கு இருக்கும் சில இடங்களை தவிர்த்திருக்கலாம்.  இரண்டாம் பாதியில் சேஸிங் காட்சிகள் நீளமாக இருக்கிறது.

பின்னணி இசை அட்டகாசம். அதற்கு உழைத்தது போல் பாடல்களுக்கு உழைக்கவில்லையோ யுவன் என தோன்றுகிறது.  அனுபவ இயக்குனர்கள், அஜித்திற்கு ஹிட் படங்களை தருவதில்லை எனும் கூற்றை தைரியமான படைப்பை சிறப்பாக கொடுத்து உடைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

ஏகன், அசல் மூலம் சோர்ந்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த மங்காத்தா. மற்றவர்களுக்கு போரடித்து போன வழக்கமான மாஸ் ஹீரோ சப்ஜெட்டுகளிலிருந்து ஒரு மாற்று அனுபவமாக அமையும்.

Mangatha Mankatha Movie reivew vimarsanam valaimanai sukumar swaminathan blog review
Thala 50 Ajith Ajithkumar venkat prabhu Mankathaa



Monday, July 4, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 04 07 11



புத்தகங்கள் வெகுவாக வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை.

பத்திரிக்கை வேலை பார்ப்பதாலும், பதிவுலகம் வந்ததாலும் முன்பிருந்த சிந்தனை முறைகள் தற்போது வெகுவாக மாறிவிட்டிருப்பதை சமீப காலமாக உணர்ந்து வருகிறேன்.

எதிலும் விமர்சனப் பார்வை, எதையாவது பதிவு செய்ய வேண்டி வலுக்கட்டாயமாக மூளையை வெவ்வேறு கோணங்களில் யோசிக்க வைப்பது, முக்கியமாக குறை கூறும் மனப்பான்மை அதிகரித்துவிட்டது. முன்பிருந்த கேரக்டரை மீட்டெடுக்க எட்டு வருடங்கள் முன்னர் என் வாழ்க்கையாய் இருந்த "How to win friends and influence people" புத்தகத்தை எடுத்து ரிவிஷன் செய்தேன்.

இந்த ஒரு புத்தகம் எனது வாழ்க்கையை, எனது கேரக்டரை சில விஷயங்களில் மேன்மையாய் மாற்றி விட்டிருக்கிறது என்பதை உணரும் பொழுது எவ்வளவு பெரிய பொக்கிஷம் வாழ்வில் கிடைத்திருக்கிறது என நினைத்து மகிழ்வடைந்தேன். எந்த புத்தகத்தை தவற விட்டாலும் இந்த புத்தகத்தை தவற விடாதீர்கள்.

புத்தகம் குறித்த எனது பார்வை : http://valaimanai.blogspot.com/2011/06/blog-post_30.html


மீபத்தில் படித்ததில் அசத்திய புத்தகம் 'கே.ஆர்.பி செந்தில்' எழுதிய 'பணம்'. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க செல்பவர்களின் கதைகள் அடங்கிய கலெக்ஷன்.  படிப்பதற்கு வெகு வெகு சுவாரஸ்யமாக இருந்தது. கொடுக்கும் காசுக்கு வொர்த் ரீடிங்!!

சுட்டி : http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D


ணைய பெருமக்களுக்கான சமீபத்திய புதுவரவு கூகுள் பிளஸ். பேஸ்புக்கை போலவே கூகுள் முயற்சி செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.  பதிவுகளில் இயங்கிய பலர் தற்போது கூகுள் பஸ், டிவிட்டர், பேஸ்புக்குகளில் தீவிரமாக இயங்குகிறார்கள். எனக்கு பஸ்ஸும், பேஸ்புக்கும் வசதியாக இருக்கிறது. ஆயினும் என்ன ஆனாலும் பதிவு எழுதிக்கொண்டே இருப்பதில் உறுதியாக இருக்கிறேன். இது தனி உணர்வு.

கிழக்கின் அதிரடி விற்பனையில் ஹாட் கேக் என்றால் அது பா.ராகவன் எழுதிய மாயவலை புத்தகம்தான். உலகின் அனைத்து தீவிரவாத இயக்கங்கள் பற்றிய இந்த புத்தகம் 1000+ பக்கங்கள் கொண்டது. ரூ.750 விலையான இது தற்போது சிறப்பு விலையாக ரூ.338க்கே கிடைக்கிறது.  போனா வராது பொழுது போனா கிடைக்காது என்பதால் உடனடியாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

இணைய விற்பனை சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-050-4.html

னது சில சமீபத்திய டிவிட்ஸ் & பஸ் :

தற்போது நிம்மதியாய் உறங்கும் ஒரே தி.மு.க. பிரமுகர் ஆற்காடு வீராசாமியாகத்தான் இருக்கும.

மனைவி திடீரென பேசாமல் இருந்தால் தனது எந்த தவறை கண்டுபிடித்துவிட்டாள் என அறியும் ஆர்வத்திலேயே சமாதான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியதாக இருக்கிறது.

விலைவாசியால் பசித்திரு மின்வெட்டால் விழித்திரு டாஸ்மாக்கில் தண்ணித்திரு # தமிழகம் டுடே


Tuesday, June 28, 2011

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் | வலைமனை






சுதந்தர இந்தியா சந்தித்த முதல் பெரிய அதிர்ச்சி, காந்தி கொலை!

வானொலியில் காந்தியின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டபோது பல இந்தியர்களால் அதை நம்ப முடியவில்லை.  ஏற்கமுடியவில்லை. 'வெள்ளைக்காரன் கூட காந்தியைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. சுதந்தரம் வாங்கியபிறகு நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் அவரைச் சுட்டுக் கொன்னிருக்கானே' என்று பேசிப்பேசி மாய்ந்தார்கள்.

'என்னது காந்தி செத்துட்டாரா?' என்கிற வாக்கியம் இன்று நையாண்டி வழக்காக புகழ் பெற்றது. 'இது பழைய செய்தி' என்பதை குறிக்கும் விதத்தில் அது கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் காந்தி இறந்துவிட்டார் என்பது  புதிய செய்தியாக இருந்த அத்தருணத்தில் எவ்வளவு பெரிய அதிர்ச்சியில் தேசம் உறைந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அதை துல்லியமாக எடுத்துக்கூறி, நடந்த சம்பங்கள், சுட்டவன், உடன் இருந்தவன், பிண்ணனியில் உதவியர்கள், அவர்கள் காந்திக்கு எதிராக இந்நிலைப்பாடு எடுத்ததற்கான காரணம், திட்டமிடுதல், செயல்படுத்துதல், வழக்கு விசாரணை, தீர்பபு என காந்தி கொலை சம்பவத்தினை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு பெரும் வட்டம் அடித்து காந்தி கொலை சம்பவம் குறித்த அனைத்தையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.



எளிமையான உடை. சிக்கனம். இவைதான் நாதுராமின் அடையாளங்கள். சிகரெட் புகைக்க மாட்டார். மது அருந்தமாட்டார். ஒரே பலவீனம், காஃபி! நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும் தயாராக இருப்பார்.


இப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநேகிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்!


காந்தியை கொன்னது கோட்ஸே என்பது மட்டும் தெரியும். கொஞ்சம் நெற்றியை சுருக்கினால் ஆப்தே என்றொரு இன்னொரு பெயரும் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த புத்தகத்தை உலுக்கினால் கார்க்கரே, மதன்லால், கோபால் கோட்ஸே, பாட்ஜே, ஷங்கர் என காந்தி கொலையில் தொடர்புடைய ஏராளமான பெயர்கள் கொட்டுகிறது. வெறும் பெயர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரின் பின்னணிகளும் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் வெகு விலாவாரியாக விலக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.


...அவனுக்குள் சாவர்க்கர் கொளுத்திப் போட்ட நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருந்தது.    இதனால் தன்னுடைய ஹிந்துத்வா கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய இளைஞர்களைத் தேடிப் பிடிக்க ஆரம்பித்தான் நாதுராம். அவர்களுடன் பல விஷயங்களைப் படிப்பது, விவாதம் செய்வது, தங்களுடைய கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.


ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம் என விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போற்றும் அளவிற்கு வாழ்ந்த ஒரு மனிதரை, தேசம் போற்றிய மகாத்மாவினை, உலகம் வியந்த தலைவரை ஒருவன் நேருக்கு நேர் நின்று கொன்றான் என்றால் அவனது நிலை என்ன என்பதை அறிய மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த நூல் திகழ்கிறது.


கோட்ஸே, ஆப்தே இருவருடைய உடலும் சிறைச்சாலையிலேயே எரிக்கப்பட்டன. அந்த இடம் நன்றாகத் தோண்டி உழப்பட்டது. அவர்களுடைய சாம்பல், நதியில் ரகசியமாகக் கரைக்கப்பட்டது.


நூலாசிரியருக்கும் புத்தகத்தை வடிவமைத்தவருக்கும் வாழ்த்துக்கள். அட்டைப்படம், குறிப்பாக அந்த நிறம் புத்தகத்திற்கு ஏற்றவாறு வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது.




மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர் என்.சொக்கன்
விலை ரூ.130
https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html

________________________________

*** நீல நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 
Kizaku padhipagam valaimanai blogspot sukumar swaminathan mahatma gandhi assasination case book review N.CHokkan 

Monday, June 27, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 27 06 11




விகடனில் பெயர் வராதா என்பது கல்லூரி நாட்களின் கனவு. கடந்த வார விகடனில் எனது பெயருடன் பேஸ்புக் ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. விகடனுக்கும், இணைய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

வெற்றி எப்.எம்மில் பதிவர் நண்பர் லோஷன் தினமும் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார். காலை பொழுதுகளில் அவர் நடத்தும் விடியல் சிறப்பாக இருக்கிறது. சீரான குரல், சுவையான ஏற்ற இறக்கங்களுடன் அவரது தொகுப்பில் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 'நாள் ஒரு தளம்' பகுதியில் வலைமனை குறித்த அறிமுகம் தந்த அவருக்கும் வெற்றி எப்.எம் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெற்றி எப்.எம் கேட்க : http://www.vettri.lk/

கிழக்கு பதிப்பகம் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு போய் இருந்தேன். தவறவே விடக்ககூடாத விற்பனை. சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நான் வெறும் 500 ரூபாய்க்கே வாங்கினேன். இந்த வருடத்திற்கான புத்தகங்கள் ஸ்டாக் வைத்து விட்டேன் வீட்டில்.

இடம் : எல்.ஆர்.சுவாமி ஹால், சிவா விஷ்ணு ஆலயம் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில் , டி.நகர் | காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்.

ஆன்லைன் சிறப்பு விற்பனையும் உண்டு.
விவரங்களுக்கு : http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_11.html

முழுமையான திருப்தி தராமல் அவன் இவன் எவனோ மாதிரி இருந்தது. இதற்கு இன்னொருமுறை மாவீரனே பார்த்திருக்கலாம் போல. தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் அரிதாகவே ஜெயிக்கும். மாவீரன் சிறப்பான முயற்சி.

மீபத்தில் பல புத்தகங்கள் படித்தும் அது குறித்து பகிர முடியவில்லை. காரணம் கடந்த பல வாரங்களாக வீட்டில் லோ வால்டேஜ். இதுவே கூட பல புத்தகங்கள் படிக்கும் நிலையை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம். ஏரியாவில் யாராவது ரெண்டு பேர் ஏசி ஆன் செய்துவிட்டால் இங்கே கணிணி இயக்க முடியாது. சீக்கிரமாய் உஷ்ணம் நீங்கி, நான் பதிவெழுத சூரிய பகவான் கருணை காட்ட வேண்டும்.

னது சமீபத்திய சில டிவிட்ஸ்/பஸ் :


வேற்று கிரக வாசிகளை கண்டுபிடிக்க அமெரிக்கா காட்டும் ஆர்வம், வளர்ந்து வரும் தங்களது பிரம்மாண்ட படைகளுக்கு உலக மக்கள் தொகை தூசு என்பதாலா?


லேப்டாப் கொடுப்பதற்கு முதற்கட்டமாக பாடபுத்தகங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிய அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறோம்.


எதிரி ஜெயித்துவிட்டால் துன்புறட்டும் என எண்ணுபவன் நிலத்தில் கண்ணி வெடி புதைத்து வைப்பான் - கலைஞரோ சிம்பிளாய் பாட புத்தகத்தில் கவிதை எழுதி வைத்துவிட்டார் # ராஜதந்திரம்



Monday, May 23, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 23 05 11




லைவர் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்நிலையில் ஊரெங்கும் இஷ்டத்திற்கும் வதந்திகள் உலா வருகின்றன.  சனிக்கிழமையன்று தனுஷ் டிவிட்டரில் இந்த படத்தை வெளியிட்டார். இதிலும் பின்னால் காலண்டரில் இருக்கும் மேரி மாதாவை சுட்டிக்காட்டி இப்படம் இசெபெல்லாவில் எடுத்த பழைய படம் என பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியோ, ரஜினி மீண்டும் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பி வருவார்.

 ரஜினி வாழ்க்கையில் எதிர்கொண்ட சோதனைகளில் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன். அவர் பூரண குணமடைய பெற எனது பிரார்த்தனைகள். ரஜினி மருத்துவமனையை விட்டு ஆரோக்யமாக வந்தால் போதும் என யாவரும் விரும்பும் இந்நிலையில் ராணா படம் அடுத்த வருடம் வந்தே தீரும் என கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி கொடுத்திருப்பது எல்லாம் தேவையில்லாதது.


ப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் நடந்தது. பெங்களூரை வீழ்த்தி முதல் இடத்தில் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சூப்பர் கிங்ஸ் தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்த மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா மேட்ச் ஆவலை அதிகரித்தது. மும்பை ஜெயித்தால் சென்னை முதல் இரண்டு இடத்திற்குள் வரும் என்ற நிலையில் நானும் அந்த மேட்சை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டும்.

அந்த ஓவரை பாலாஜி வீசினார். முதல் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக ஃபோர், கடைசி பந்தில் சிக்ஸர் என விளாசி மும்பை வெற்றி பெற்று சென்னை ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. சென்னை அணியின் இந்நாள் வீரர்கள் செய்யாவிட்டாலும் முன்னாள் அணி வீரர் பாலாஜி அதை செய்திருக்கிறார் என  என நினைக்கும்பொழுது பெருமையாக இருக்கிறது.

பாவம் அங்க என்னா கும்மு கும்முறாங்களோ தெரியல....



பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் நான்காம் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சனிக்கிழமை இரவு வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்த்தேன். 3டி எஃபெக்ட்ஸ் அட்டகாசம். காட்டு பிரதேசங்கள், கடல் என பைரேட்ஸ் சீரிஸில் ஒரு அருமையான 3டி அனுபவம். ஆனால் கதைதான் ஒரு கண்றாவியும் புரியவில்லை. 3டிக்கு ஆசைப்பட்டு ஆங்கிலத்தில் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  படத்தில் நகைச்சுவை வரும் இடங்களில் அவ்வளவு பேர் புரிந்து கொண்டு சிரிப்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. இந்த அவமானத்தை துடைக்க சீக்கிரமே தமிழில் பார்த்து சிரிக்க வேண்டும்.



கோ மூன்று முறை பார்த்துவிட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் ஒரு பத்திரிக்கையாளனாக இருப்பது கூட இருக்கலாம். ஒரு பத்திரிக்கைகாரன் என்னவெல்லாம் துணிச்சலாக செய்ய முடியாதோ அதையெல்லாம் திரையில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் வடிகால் உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம்.

மூன்றாம் முறை அம்மாவை அழைத்து சென்றேன். படத்தை பார்த்துவிட்டு, இதுக்குதான் நீ பத்திரிக்கை ஆபிஸ்ல வேலை செய்யறதே பயமா இருக்குங்கிறேன் என்றார்.

அது சரி நமக்கு பைக்கை நேராவே ஓட்ட தெரியாது, இதுல எங்க ஜீவா மாதிரி தலைகீழா எல்லாம் ஓட்டுறது. இதெல்லாம் சும்மாம்மா என்றேன். அப்படியும் அவர் அமைதியானதாய் தெரியவில்லை.

ஒருவேளை ஜீவா மேலே மேலே வந்து விழும் பியா போன்ற ஃபிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும் என நினைத்து சொல்கிறாரோ??
Sukumar Swaminathan | Blog post | Feelings May 2011 | Valaimanai |
Notes on Rajni's Health, Pirates of the Carribean - on Stranger Tides, Ko movie experience | IPL Season 4 Match 70 KKR Vs MI, Chennai Super KIngs gains second spot 


Wednesday, May 11, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 11 05 11



டையாரில் எங்கேயோ 'பக்கட் பிரியாணி' விற்கிறார்கள், சூப்பராக இருக்கும் என கேள்விப்பட்டு கடந்த ஞாயிறு கோயம்பேட்டிலிருந்து 'பிரியாணித்தோம். '  அடையாறில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பின்புறம் உள்ள தெருவில் ஒரு வீட்டில் முன் இருக்கும் இடத்தில் ஷெட் அமைத்து, அங்கேயே சமைத்து செமையான பிரியாணி விற்பனை நடைபெறுகிறது. சனிக்கிழமையே போனில் ஆர்டர் எடுத்து விடுகிறார்களாம். அதற்கேற்றார் போல் சமைக்கிறார்கள். நாங்கள் போனபோது மணி 12. அப்பொழுதே எல்லாம் தீர்ந்திருந்தது. வந்திருந்தவர்களிடம் மீண்டும் ஆர்டர் எடுத்து மறுபடி சமைத்து கொடுத்தார்கள். ஒரு ஷேர் மட்டன் பிரியாணி ரூ.800. ஏழு பேர் சாப்பிடலாம். மக்கள் வந்து நின்று வாங்கி செல்கிறார்கள். சமைத்த பிரியாணியை அப்படியே பக்கெட்டில் அள்ளி அள்ளி மக்களுக்கு பார்சல் செய்து தருவது கண்கொள்ளாக் காட்சி. 


வெயிலில் அலைந்து சென்று வாங்கியதற்கு பலனாக நல்ல சுவையான பிரியாணி. மட்டன் பீஸ்களை தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். நல்ல டேஸ்டாக இருக்கிறது.


முயன்று பாருங்கள். செல்லும்பொழுது தேவைக்கேற்ப பாத்திரம் எடுத்துச்சென்றுவிட்டால் வசதியாக இருக்கும். ஏமாற்றங்களை தவிர்க்க சனிக்கிழமையோ அல்லது ஞாயிறு காலையோ ஆர்டர் கொடுத்துவிட்டால் நலம்.


தொடர்புக்கு : உஸ்மான் பிரியாணி - 044 24918581






சென்னையில் கோடை காலம் வரப்போகிறது என அறிவிக்கும் முதல் ஆள் அண்ணன் தர்பூசணிதான். ஆளை அடித்துப்போடும் பளீர் சிவப்பில் தடாரென சென்னை சாலைகளில் பிப்ரவரி மாதமே வரிசை கட்ட ஆரம்பித்துவிடும்.  இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை ஒரு ஸ்லைஸ் விலை ரூ.5 ஆக இருந்தது. தற்போது சற்றே நீளமான ஸ்லைஸ் போட்டு வைத்து ரூ.10 என விற்பனை செய்கிறார்கள். சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் துண்டுகளாக வெட்டிப்போட்டு அதில் ஒரு பல் குத்தும் குச்சியை சொருகி வைத்து விற்பனை செய்வது தர்பூஸ் விற்கும் தமிழனின் அப்டேட்டட் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ்!


ஞ்சா கலர், ரோஸ் கலர் மருந்து சீட்டு போல் இருந்த டிக்கெட்டை மாற்றி தற்போது கோயம்பேடு ரோஹிணி தியேட்டரிலும் கம்ப்யூட்டர் பிரிண்ட் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எதை மாற்றினாலும் விலையை டிக்கெட்டில் குறிப்பிடாததை மட்டும் மாற்ற மாட்டோம் என்பதில் மட்டும் உறுதியாய் இருக்கிறார்கள் போலும்.  இந்த டிக்கெட்டில் விலை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஹன்சிகா மோத்வானியின் கையெழுத்திடப்படாத பரிசு பொருள் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.




ஃபிளாட்டில் இருக்கும் வாண்டுகள் கிரவுண்டுக்கு அழைத்துப்போக தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தனர். ஒருநாள் எல்லாத்துக்கும் லீவு விட்டு டிரஸ்ட்புரம் கிரவுண்டில் வெயிலை வீணாக்காமல் கிரிக்கெட் விளையாடியதில் எனக்குள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்ட ஒரு மினி தோனியே ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்தேன். ஹி..ஹி..



வெளியூர் பயணங்கள் புறப்படும் பொழுதோ, ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதோ தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் அம்மா ஒரு ரூபாய் போடுவது வழக்கம். ஓட்டு போட கிளம்பும் அன்று தெருமுனை பிள்ளையார் கோவில்ல நிக்கிறேன் வா.. என்று கூறி நடந்தார். எதுக்கும்மா என கேட்டால், நல்ல ஆட்சி வரனும்னு ஒரு ரூபாய் போட போறேன் அதான் என்றார்.


Monday, April 25, 2011

காஷ்மீர் - பா.ராகவன்






கார்கில் யுத்தம் வந்தபோது கன்யாகுமரி வரை வசித்த மக்கள் பணமும் துணிமணிகளும் மற்றவையும் அனுப்பி சாரே ஜஹன் சே அச்சா என்று பாடியதுதான் நமக்குத் தெரியும்.

உண்மையில் காஷ்மீரிகள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் நம்மைப்போல் நினைப்பதில்லையா? உணர்வதில்லையா? ஏன்?



நினைவு தெரிந்து எனக்கு ரோஜா படத்தில் அறிமுகமானதுதான் காஷ்மீர் குறித்த சங்கதிகள். அதன் பின்னர் அவ்வப்போது கண்ணில படும் செய்திகள், ஒளிபடங்கள், சினிமாக்கள், டாக்குமன்டரிகள், கட்டுரைகளில் காஷ்மீர் குறித்து துண்டு துண்டாக அறியப்பெற்றாலும் முழுமையான காஷ்மீர் குறித்த வரலாறினை அறிய கூடிய சந்தர்ப்பமோ உண்மையை சொன்னால் அவசியமோ ஆர்வமோ எழுந்ததில்லை.

ஒருநாள் பா.ராகவன் அவரது இணைய பக்கமான ரைட்டர் பாரா டாட் காமில் 'காஷ்மீர்' புத்தகத்தை எழுதிய விதம் குறித்து அவர் எழுதியிருந்த பதிவு முதன்முதலாக காஷ்மீர் குறித்து அறியும் ஆர்வத்தை எழுப்பியது. நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் அந்த புத்தகத்தை வாங்கி அவரது கையெழுத்தையும் பெற்றேன்.


ஹரி சிங் 1947 வரை காஷ்மீரை ஆண்டார். நான்கு மனைவிகளையும் ஒரு மகனையும் அவர் பெற்றார். 

இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரமடைந்தபோது, காஷ்மீர் எந்தப் பக்கம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வினாவுக்கு விடையளிக்கத் தடுமாறித் திண்டாடி, இறுதியில் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். பாகிஸ்தான் கோபம் கொண்டது.

காஷ்மீர் பிரச்னை என்பது அக்கணத்தில் தொடங்கியது.


கி.பி. 13ம் நூற்றாண்டில் காஷ்மீரை கைப்பற்ற வரும் மன்னன் துலூச்சா படைகளில் இருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது.  காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் தனது தாத்தா சொத்தான காஷ்மீரை தர மறுப்பதும், அவருக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுப்பதும் என புத்தகம், இந்திய சுதந்தர பிரிவினை காலகட்டத்தில் டேக் ஆஃப் ஆகி கடைசி வரை பரபரவென பறந்து கடைசியில் தற்போதைய கால கட்டங்களை சொல்லும் இடங்களில் மட்டும் சற்றே வேகம் குறைந்து முடிகிறது.

காஷ்மீரின் அரசியல் என்பது, காஷ்மீரை முன்வைத்துப் பெரும்பாலும் அதற்கு வெளியே இருப்போர் நடத்துவது. இது, கடந்த அறுபதாண்டு காலத்துக்கு மேலாக காஷ்மீரிகளுக்குப் பழகிவிட்ட ஒன்று. பழகிவிட்டதாலேயே ஏற்றுக்கொண்டுவிடக் கூடியவர்களாகக் காஷ்மீரிகள் இல்லை.

காஷ்மீர் குறித்த அரசியல், ஆயுத வரலாறு அறிந்து கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களது தனித்துவமான உணர்வுகளையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்
.
• நிஜாமின் அரண்மனையில் நூற்றுக்கணக்கான கலைப்பொருள்கள் உண்டு. இன்றுவரை வியப்பூட்டும் நினைவுச் சின்னங்கள். அவற்றுடன் ஒன்றாக நிஜாமும் ஆகிப்போனார்.

• விளைவு, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் இடதுகால் வைக்க இந்தியாவே வசதி செய்து கொடுத்தாற்போல் ஆனது.

• ஊரெல்லாம் மரம் நட்ட அசோகர் அங்கேயும் சில ஆப்பிள் மரங்களை நட்டு ஆட்சி புரிந்திருக்கிறார்.

பா.ராவின் வழக்கமான வார்த்தை ஜாலங்கள் வாக்கிய மாயங்கள் இந்த புத்தகத்தில் அதிகமாக இல்லாமல் அளவோடு அதே சமயம் கூர்மையாக விளையாட விடப்பட்டிருக்கிறது.

காஷ்மீரிகளின் விடுதலை வேட்கை இயல்பானது. இந்திய அரசின் மீதான அவர்களுடைய கோபம் உண்மையானது. ஏதாவது செய்யவேண்டும் என்ற உள்மன எழுச்சி கூர்மையானது. பாகிஸ்தான் அதை எடுத்து வடிவமைத்து, செதுக்கிச் சீராக்கி, ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பத் தொடங்கியது.

ஆதி படையெடுப்புகள்,  மன்னர் வரலாறு, இந்திய பிரிவினை, மன்னர் ஹரி சிங்கின் காஷ்மீர் தனது சொந்த சொத்து என்கிற மனப்பான்மை, அக்காலகட்டத்தில் காஷ்மீரின் மக்கள் ஆதரவை வென்ற அப்துல்லா, முதலில் அவருக்கு நேருவின் ஆதரவு பின்னர் அவர்களது உறவில் விரிசல், அப்துல்லாவின் தொய்வடைந்த கடைசி கால நடவடிக்கைகள், இந்திரா காந்தியின் செயல்பாடுகள், பங்களாதேஷ் உதயம், காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தகிடுதித்தங்கள், நம்பிக்கை இழந்த மக்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய ராணுவ செயல்கள், அரசியல் இயக்கங்கள் என காலவாரியாக காஷ்மீர் குறித்து
"இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?" என அசர வைக்கும் அளவிற்கு முழுமையான அரசியல் வரலாற்று புத்தகமாக அமைந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.


இந்த புத்தகத்திற்கு எத்தனையோ விதமான கவர்ச்சியான முகப்பு அட்டைகள்
வடிவமைத்திருக்க முடியும். ஆயினும் இந்த அட்டை வடிவமைப்பு,  இதன் நிறம் எனக்கு ஏனோ பெர்சனலாக ரொம்புவும் பிடித்திருக்கிறது. அரசியல் ஆயுத வரலாறு என்கிற சப் டைட்டிலுக்கு ஏற்றவாறு அட்டை வடிவமைப்பு அருமையான நிறத்துடன் சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.

புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் முடியும் வாக்கியத்தையே இந்த புத்தகத்தின் பரிந்துரைக்கான வாக்கியமாக தர விரும்புகிறேன். அது -

காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள இது ஒரு தருணம்.
முயற்சி செய்யலாம்.


________________________________________________________________


காஷ்மீர் 
அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா.ராகவன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 140
சுட்டி : 
https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html
_____________________________________________




பழுப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

_________________________________________________________________


_____________________________________________

Puthaga vimarsanam - nool anubavam - valaimanai noolagam 
Kashmir - pa.ragavan - book review - valaimanai - sukumar swaminathan 
Kizaku padipagam - Kizaku publications 

Thursday, April 7, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 07 04 11


லகக்கோப்பை வாங்கிய கையில் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஐ.பி.எல் சீசன் 4. புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என இரண்டு புதிய அணிகள், எல்லா அணிகளிலும் வீரர்கள் மாற்றம் என கடந்த முறைகளை விட சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.



மொத்தம் பத்து அணிகள் இருப்பதால் இம்முறை செமி பைனல்ஸ் கிடையாது. மாறாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய குவாலிஃபயர், எலிமினேட்டர் முறைகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

பத்து அணிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். குவாலிஃபயர் 1ல் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி, வெற்றி பெறும் அணி பைனல்ஸ்க்கு தேர்வாகும்.

அடுத்து எலிமினேட்டர் போட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி தோற்கும் அணி வெளியேற்றப்படும். அடுத்து குவாலிஃபயர் 1ல் தோற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் குவாலிஃபயர் 2ல் மோதி, அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் ஃ1ல் வென்ற அணியுடன் பைனல்ஸில் மோதும்.

இதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு பைனஸ்ஸ் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதலில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் ஜெயித்தாலும் மறுபடி குவாலிஃபயரில் வென்றால்தான் உண்டு.

வழக்கமான அரையிறுதி சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களுக்குள் சென்றால் போதும் என்றிருந்த நிலை மாறி தற்பொழுது முதல் 2 இடங்களுக்குள் செல்ல கடும போட்டி இருக்கும். எது எப்படியோ இவர்கள் நம் பொன்னான நேரத்தை திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் தோற்காமல் இருக்க முடியும்.

Blog note on IPL Season 4 - Qulaifier 1, Qualifier 2, Eliminator, Finals | Valaiamani Blogspot 


ரும் ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அய்யப்ப மாதவனின் 'தானாய் நிரம்பும் கிணற்றடி நூல் விமர்சனக் கூட்டம் இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்:



Ayyappa Madhavan's 'Thaanai nirambum kinatradi' Sirukathai nool vimarsana koottam | Aganazigai

ண்பன் முதலாளியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவன், சனி, ஞாயிறுகளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று சேவை செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பவன். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல தொடர்ச்சியாக கடந்த 2.5 வருடஙகளாக ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் 60 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறான். நாங்கள் மற்ற நண்பர்கள் சினிமா, பீச் என கிளம்பி செல்லும் வேளையில் இவன் பிறர்க்கு தொண்டாற்றும் திசையில் பயணிப்பது.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.



இதற்காக சமீபத்தில் முதலாளிக்கு விருதும் கிடைத்திருக்கிறது.  வாழ்த்துக்கள் முதலாளி!  முதலாளியை தொடர்பு கொள்ள : mudalali@gmail.com


Mudalai | Dreams Alive | Working for a Noble Cause

மீபத்தில் நான் டிவிட்டியவை சில :

செய்தி : அழகிரிக்கு அளித்த பாதுகாப்பு வாபஸ் - அண்ணன் அழகிரிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும்? 



கையில் தாமரை பூவுடன் பாஜக வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரித்ததை பார்த்தேன். அதுக்கு டப்பர்வேர் டப்பா எடுத்துட்டு போனாலாவது ரெண்டு விக்கும்

செய்தி : சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் # இது ஏப்ரல் ஃபூல் நியூஸாதான் இருக்கும். எப்பவும் அங்க அடிதடிதான நடக்கும்?

தான் அடித்தால் வேட்பாளர் மஹாராஜா ஆகிவிடுவார் என மக்களாட்சிக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிக்கும் கேப்டன் மேல் இந்திய இறையாண்மை சட்டம் பாயாதா?


தங்கள் கட்சி மீட்டிங்கிற்கு 4 கேமராக்களை அனுப்பினால் கேப்டன் மீட்டிங்கிற்கு 40 கேமராக்களை அனுப்புகின்றனர் ஆளுங்கட்சியினர். 


ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடிக்கிறார் விஜயகாந்த் -திருமா # இருந்த 50 பேரை 1000ம்னு சொல்றீங்களே திட்டுறீங்களா பாராட்டுறீங்களா?

இறுதி போட்டியினை பிரதிபா பாட்டீல், ராஜபக்ஷே பார்க்கின்றனர் # ஒண்ணு 'சைலண்ட்' பொம்மை இன்னொன்னு 'சைனா' பொம்மை

என் கணவருக்கு மக்களிடத்தில் நடிக்கத் தெரியாது என போன வாரம்தான் சொன்னார் அண்ணியார் # அடிக்கத் தான் தெரியும் என சொல்லவே இல்லையேம்மா..

கூகுளில் பூனம் பாண்டேவின் எந்த ஸ்டில்லை தேடிப் பார்த்தாலும் ஏற்கனவே இந்தியா கோப்பையை 90% ஜெயித்துவிட்டதாக தெரிகிறது.



Valaimanai Blogspot | Feelings | Mixted Blog Notes By Sukumar Swaminathan