Friday, February 1, 2013

உப்பில்லா கடல்




எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!

வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும். 

ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து  வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது. 

'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம்.  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.

பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது. 

டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட  பயன்படுத்தாதது ஏமாற்றம்.

அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.

துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து  பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.

கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________

பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html


4 comments:

Paleo God said...

same blood :))

ILA (a) இளா said...

இப்படி எல்லாருமே சொன்னா எப்படிங்க?

அமுதா கிருஷ்ணா said...

ஒரு வேளை சுஹாசினி டைரக்‌ஷனோ???

சுரேகா said...

Oh...!! நான் ரொம்ப எதிர்பார்த்தேனே..?