நூல் அனுபவம் - கிளியோபாட்ரா - முகில்
மொத்தம் எழுநூறு கழுதைகள், அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி 'தொழுவம்' இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.
எகிப்துக்கும் ரோமுக்கும் ஒரு அருமையான சரித்திர பயண அனுபவத்தை தருகிறது கிளியோபாட்ரா நூல். உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம் என அறிமுகப்படுத்தப்படும் இந்த புத்தகம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஓர் அரசியை, அழகியை அவள் ஆளுமையை குறித்து அறியத்தரும் அருமையான அனுபவம்.
மொத்தம் அறுபது பேர், சீஸர் கொலை சதியில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. சீஸரின் உடம்பில் மொத்தம் இருபத்து மூன்று இடங்களில் காயங்கள். அதில் இரண்டாவதாக நெஞ்சில் விழுந்த கத்திக்குத்துதான் மிகவும் ஆழமானது. அதிலிருந்துதான் அதிக ரத்தம் வெளியேறியிருக்கிறது. அதனால்தான் அவர் இறந்தார். இது இறந்துபோன சீஸரின் உடலை ஆராய்ந்து பார்த்த அவரது மருத்துவர் அண்டிஸ்டியஸின் அறிக்கை. உலகின் முதல் போஸ்ட்-மார்ட்டம் அறிக்கை இதுதான்.
அழகையே தன் ஆயுதமாக கொண்டும், அதனுடன் கம்பீரம், நாகரிகம், நளினம், அலங்காரம், பிரம்மாண்டம் என அனைத்தையும் கலந்து தன் அறிவாற்றலால் அந்த ஆயுதத்தை பிரயோகித்து நண்பர்களை உருவாக்கவும், எதிரிகளை வீழ்த்தவும் செய்த சரித்திரம் கண்ட வியக்க வைக்கும் ஆளுமை கிளியோபாட்ரா.
சீஸர், அகில்லெஸ், போம்பே, புரூட்டஸ், ஆண்டனி, தால்மிக்கள் என கிளியோபாட்ராவை சுற்றி நடைபெற்றிருக்கும் வரலாறு சம்பவங்கள் அனைத்தும் சுவையாக சொல்லப்பட்டிருப்பதால் படிப்பதற்கு விறுவிறுவென தாள்கள் நகர்கிறது.
'இரண்டு மாபெரும் தளபதிகள், தம் ராஜ்ஜியத்தை மறந்து, தம் மனைவியை, மக்களை மறந்து, தான் யார் என்பதையே மறந்து, வீரம், விவேகம் எல்லாம் மறந்து, தம் கடமைகளைத் துறந்து காதலியே கதி என்று கிளியோபாட்ராவிடம் சரணடைந்து கிடந்தார்கள் என்றால் அவள் சாதாரணமானவளாக இருக்கவே முடியாது, எப்படிப்பட்ட பேரழகியா இருக்க வேண்டும்' என்ற விவாதம் இன்றுவரை உயிரோடு இருக்கிறது. 'ஓர் ஆணை வீழ்த்த பேரழகியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை' - இப்படிப்பட்ட எதிர் விவாதமும் மரிக்கவில்லை.
போர் முறைகள், கடல் போர்கள், படையெடுப்பு, அந்தப்புரம், ரோமின் செனட் சபை, எகிப்திய வீதிகள், நைல் நதியில் சுற்றுலா செல்லும் படகு என எந்த காட்சிகள் விவரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நாமே நேரில் நிற்பதை போன்ற உணர்வினை வார்த்தைகளால் தோற்றுவிக்க வல்ல எழுத்துக்கள். வர்ணணைகள். இத்தகைய சிறப்பான எழுத்துக்கும், கோர்வையாக தந்திருக்கும் தகவலுக்காக மேற்கொண்ட ஆராய்சிக்களுக்காகவும் ஆசிரியர் முகிலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சில பதங்களை * குறியிட்டு கீழே தனியாக விளக்கி இருக்கும் யுத்தி மிக அழகு. அதில் ஒன்றுதான் இந்த 'யூ டூ புரூட்டஸ்.'
'You too, Brutus?' இது தன்னுடைய ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதி புகழ்பெற்ற வசனம். புரூட்டஸும் தன்னைக் கத்தியால் குத்துவதைக் கண்ட சீஸர், அதிர்ச்சியுடன் 'என் மகனே. நீயுமா?' என்ற அர்த்தத்தில் சொல்வதாக எழுதியிருப்பார் ஷேக்ஸ்பியர். பண்டைய சரித்திர ஆசிரியர்களான Plutarch, Suetonius இருவரும் சீஸர் இறப்பதற்கு முன் எதுவும் சொல்லவில்லை என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
அட்டை படம் மட்டும் ஏனோ சிம்பிளாக இருக்கிறது. விலையை 70 முதல் 80 ரூபாய்க்குள்ளாக வைத்திருக்கலாம். மற்றபடி கிளியோபாட்ரா - படிக்க. ரசிக்க, அறிந்து கொள்ள சுவையான வரலாற்று புத்தகம்.
___________________________
கிளியோபாட்ரா
ஆசிரியர் : முகில்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 90
சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-582-0.html
சிகப்பு எழுத்துக்கள் புத்ககத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________
வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
6 comments:
அட! மொத ஆளா வந்திருக்கோம் போல! எப்புடி?
எகிப்திய கதைகள் சுவாரசியமாக இருக்கும்..வாசிக்க வேண்டும் ..நன்றி :)
தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்
Thank you for this.
நல்ல அறிமுகம்
@ தமிழ்வாசி - Prakash
நன்றி
@ S.Sudharshan
கண்டிப்பாக வாசியுங்கள்... சுவாரஸ்யமான புத்தகம்.
@ Chitra
You are welcome!!!
@ பூங்குழலி
நன்றி
@ சாருஸ்ரீராஜ்
You are welcome!!
என்னங்க இது அநியாயமா இருக்கு... நூலகம்ன்னு தலைப்ப பார்த்துட்டு எங்களுக்கு படிக்க புக் கொடுக்க போறீங்கன்னு ஆர்வமா வந்தேன்... இப்படி பண்ணிட்டீங்களே...
Post a Comment