அந்த கம்பெனிக்காரர்களோ, 'இது மிக நவீன தொழில்நுட்பம். இந்தியர்களால் கற்றுக்கொள்ள முடியாது' என்றார்கள். 'இதன் செலவும் மிக அதிகம். முதலில்,இந்தியாவில் தடுப்பு மருந்து எல்லாம் எதற்கு? உங்கள் நாட்டில்தான் ஜனத்தொகை இப்போதே அளவுக்கு மீறி இருக்கிறதே? அதில் சில ஆயிரம் பேர் செத்தால்தான் என்ன நஷ்டம்?'
நாற்காலியை உதைத்துக்கொண்டு எழுந்தார்: 'எண்ணி இரண்டே வருஷம். நானே இந்த வாக்ஸினைத் தயாரித்துக் காட்டுகிறேன் பார். இந்தியாவில், இந்தியர்களால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகமே பார்க்கத்தான் போகிறது!'
தன்னந்தனி மனிதர் அவர்; அவருக்கோ, தடுப்பு ஊசிகள், மருந்துகள் பற்றி எதுவுமே தெரியாது. பேட்டரி, எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் புழங்கிக்கொண்டிருந்தவர் அவர். அந்த மனிதரால், ஹெபடைடிஸ் - பி தடுப்பு மருந்தின் விலை 750 லிருந்து வெறும் 50 ரூபாயாகக் குறைந்தது!
வரப்ரசாத் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் ஒரு சக்தி வாய்ந்த பன்னாட்டு கம்பெனியைப் புறமுதுகு காட்ட வைத்தார். உலக மார்க்கெட்டில் காமாலைத் தடுப்பு மருந்தின் விலையைச் சரிய வைத்தார்.
திருப்புமுனை - நூல் அனுபவம்
'இது சாதித்துக்காட்டிய 11 இந்திய நிறுவனங்களின் சாகசக் கதை.' என்கிற அறிமுகத்துடன் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் திருப்புமுனை புத்தகம் நான் சமீபத்தில் படித்த, முன்னேற, வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் ஹை-ரேட்டிங்கில் பரிந்துரை செய்யும் அருமையான புத்தகம்.
ஜெய்ப்பூரில் தைனிக் பாஸ்கர் தொடங்கிய அன்று 1,72,347 பிரதிகள் விற்றது. முதலில் திட்டமிட்டதோ நம்பர் 2 இடம்தான்; ஆனால் பாஸ்கர் அதிரடியாக நம்பர் 1 இடத்தையே பிடித்துவிட்டது!
பல வடக்கிந்திய மாநிலங்களில் ஆரம்பித்த ஒரே நாளில் மற்ற பாரம்பரிய பத்திரிக்கை ஜாம்பவான்களை நிலைகுலைய வைத்த தைனிக் பாஸ்கர் செய்தித்தாளின் துள்ளல் கதையுடன் துவங்கும் புத்தகம், மொத்தம் இதே போன்ற வெவ்வேறான 11 பிரமிக்க வைக்கும் கதைகளை கூறி நம்மை நமது சிந்தனைகளை முழுவதுமாக மாற்றி மனதிற்கு உரம் ஏற்றுகிறது.
பல நிறுவனங்களிடம் ஒரு பயம் உண்டு. புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினால், ஏற்கனவே மார்க்கெட்டில் நன்றாக விற்றுக்கொண்டிருக்கும் நம் பழைய தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம்... திடீரென்று ஒரு நாள் வெளியிலிருந்து ஒருவர் நுழைவார். புத்தம் புதிதாக எதையோ கொண்டு வந்து, மொத்த மார்க்கெட்டையும் அள்ளிக்கொண்டு போய்விடுவார்.
எப்படி ஒரு ஐடியா, ஒரு கனவு, ஒரு குறிக்கோள் 'முடியாது' என உலகம் நினைத்து வந்த விஷயங்களை சுக்குநூறாக உடைக்கிறது என்பதை பல புத்தங்களில் படித்திருப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் தனித்தன்மை என்னவெனில் இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் எங்கோ அமெரிக்க ஆய்வு கூடத்திலோ, ஆஸ்திரேலிய நிறுவனத்திலோ நடந்தவை அல்ல. திருச்சியில், சென்னையில், சூரத்தில் என நமது மண்ணில் நமக்கு வெகு அருகாமையில் நடந்தவைகளாகும்.
மாபெரும் ராட்சசர்களைப் பண பலம், படை பலத்தால் வெல்ல முடியாது. ஆனால் ஐடியாக்களால் அடித்து வீழ்த்தவிட முடியும்!
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒளி தருவதில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அரவிந்த் கண் மருத்துவமனை, மாபெரும் சந்தையில் 'சிக்'கென புகுந்து பெரும் நிறுவனங்களை தடுமாற வைத்த கவின் கேர், விவசாயகளிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஐடிசி ஐபிடி, இந்தியர்கள் உள்ளதை செய்வார்கள் புதியதாக உருவாக்க மாட்டார்கள் என்கிற கருத்தை உடைத்த பாஷ் இந்தியா, கடமை தவறாத காவல் அதிகாரிகளை திரையிலேயே பார்த்திருந்த நமக்கு நிஜத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார் என சொல்லும் திருச்சி காவல் துறை திரிபாதி, ஃபைனான்ஸ் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய சோழா வாகன பைனான்ஸ், பற்பல சவால்களை எதிர்கொண்டு மெல்லிய கேஸ் உள்ளே வாட்சை உருவாக்கிய டைட்டன் எட்ஜ், தடுப்பு மருந்துகளில் உலகத்தையே தும்மல் போட வைத்த சாந்தா பயோடெக், பிளாக் நோய் தாக்கி நிலைகுலைந்த சூரத் நகராட்சியை முன்மாதிரியாக மாற்றிய ராவ், இன்வெர்ட்டர் துறையில் கலக்கிய சு-காம் என அனைத்தும் ஒவ்வொரு விதமான புரட்சிக்கதைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறிக்கோள், பாதை, பயணம், சவால், வெற்றி என புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது அறிவு கிடங்கில் உயரும் தகவல்களுடன் மனதில் எழும் தெம்பும் அதிகமாக இருக்கும்.
நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது; அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.
புத்தகத்தின் ஆசிரியர் - போரஸ் முன்ஷி. எடுத்துக்கொண்டுள்ள சிறப்பான பணிக்காகவும் படைத்துள்ள அருமையான புத்தகத்திற்காகவும் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
நம்மில் பல பேருக்கு, ஏதோ கெட்டது நேர்ந்துவிட்டது என்பதால் அதிகம் பாதிப்பு கிடையாது. 'இனிமேல் நமக்கு இதுதான் நிரந்தரம்' என்று நினைத்துக்கொண்டு, கெட்டதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமே, அதுதான் நம்மை முடக்கிப்போடுகிறது.
'தமிழில் : ராமன் ராஜா' என அட்டையில் குறிப்பிட்டிருக்காவிட்டால் இது ஒரு மொழி மாற்று புத்தகம் என அறிய வாய்ப்பே இல்லாத அளவிற்கு மொழி ஆளுமை கம்பீரமாக இருக்கிறது. கருத்துக்கள் துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளதற்கு ராமன் ராஜா சிறப்பு பாராட்டுதல்களுக்குரியவர்.
புத்தகத்தன் வடிவமைப்பு அழகாக உள்ளது. கிரே நிறத்தில் ஆங்காங்கே கதையை நிறுத்தி ஆய்வு செய்யும் யுத்தி அழகு.
உங்களால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். உங்கள வேலை, உங்கள் நிறுவனம், தொழில்துறை அல்லது நாடு நகரத்தைக்கூட மாற்ற முடியும். இன்றைக்கு, இப்போது நீங்கள் செய்யும் உத்தியோகத்திலேயே மொத்த உலகத்தையும் மாற்ற முடியும்!
தொழில்முனைவோர், நிறுவன அதிகாரிகள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாது முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஒரு கட்டத்தில் இருக்கிற வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கி விடாலாமா என்கிற அளவிற்கு உற்சாகம் கொடுத்து சிந்திக்க வைத்துவிடும் வல்லமை கொண்டது இது.
சின்ன வேலை, சின்னப்பொறுப்பு என்று எதுவும் கிடையாது. எந்த ஒரு வேலையையும் சரியான கோணத்தில அணுகினாலே போதும்; நம்மால் மனித நாகரிகத்தையே மாற்ற முடியும்.
இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் அது இந்த புத்தகத்திற்கு குறைவாகவே அமையும் என்பதால், வாங்கி படியுங்கள். ஜொலியுங்கள்!
----------------------------------------
திருப்புமுனை
ஆசிரியர் போரஸ் முன்ஷி
தமிழில் ராமன் ராஜா
விலை ரூ.150
வெளியீடு கிழக்கு பதிப்பகம்
குறிப்பு : நீல வண்ண எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்.
7 comments:
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்...
சின்ன வேலை, சின்னப்பொறுப்பு என்று எதுவும் கிடையாது. எந்த ஒரு வேலையையும் சரியான கோணத்தில அணுகினாலே போதும்; நம்மால் மனித நாகரிகத்தையே மாற்ற முடியும்.
....அருமையான கருத்துங்க... இதை வலியுறுத்தும் புத்தகம், நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். பகிர்வுக்கு நன்றிங்க...
நல்ல விமர்சனம், புத்தகத்தை வாங்குகிறேன்!
நன்றி சங்கவி...
நன்றி Chitra...
நன்றி middleclassmadhavi..
கண்டிப்பாக வாங்குங்கள்....
புத்தக விமர்சனம் நன்று...
// Philosophy Prabhakaran //
நன்றி பிரபா..
The good news or the bad news and an old news is that Shanta Biotech is no longer an 'Indian' company. A multinational has acquired a good portion of the shares and it is now a company under the control of an MNC.
Post a Comment