Sunday, October 24, 2010

எவ்ரிடே இஸ் சண்டே - 1



குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவின் வழி வாழ்வை ரசிக்கலாம் என்றிருக்கிறேன்.
____


மீப காலத்தில் ரொம்பவும் உற்சாகத்தை வரவழைக்கும் பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் ஹோசானாதான். பாடல்களை காட்சிப்படுத்துவதில் கௌதம் மேனனின் ரசனையே தனி. அதிலும் இந்த பாடலில் பாடலின் தன்மைக்கேற்ப லொக்கேஷ்ன், உடை எல்லாம் இதமாக செட் ஆகியிருக்கும். சில பாடல்களில் சில வரிகள், சில இடங்கள் நம்மை வெகுவாக கவர்ந்துவிடும். இந்த பாடலில் "என் மீது அன்பு கொள்ள என்னோடு சேர்ந்தது செல்ல.." என வரும் இடங்களில் வரும் பாடல் குரலும், எழும் மெல்லிய இசையும் சில வினாடிகள் என்னை எங்கோ ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்கிறது.




இதே படத்தில் வரும் கண்ணுக்குள் பாடலில் "உன் நண்பனில்லை.. " என்ற இடத்திலும், மன்னிப்பாயா பாடலில் வரும் திருக்குறள் இசையிலும் மனது அங்கேயே நின்று கொண்டு சுலபத்தில் மீண்டு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறது. 


யங்குகிறாள் ஒரு மாது பாடல். பின்னிரவுகளில் பயங்கர வேலைப் பளுவுடன் கணிணியில் உட்கார்ந்திருக்கும் வேளைகளில் இந்த பாடலை ஒரு முறை ஓடவிட்டு கண்ணை மூடி கேட்டால் மனதுக்கு அவ்வளவு இதமாய் இருக்கும். நல்ல ஓய்வெடுத்த உணர்வுடன் மீண்டும் வேலையை தொடர்வேன். அதிலும் பாடலின் நடுவே வரும் "அன்பே அன்பே... அன்பே அன்பே... அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா" என்ற வரிகளில் சுசீலா அம்மா உருகி ஓடியிருப்பார். எங்கோ பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் ஆளில்லாத ஒரு கிரகத்தின் மேல் வானத்தில் நம்மை மிதக்க வைக்கும் வல்லமை படைத்தவை இந்த வரிகளுக்கான குரலும் ராகமும். 


மொழி புரியாத சில பாடல்களும் இனம் புரியாத சந்தோஷத்தை கொடுக்கும்.  லஹே ரகோ முன்னாபாய் பாடல்கள் அவ்விதம். சென்னை திரு.வி.க பூங்காவில் நான் வாக்கிங் செல்லும்பொழுது காதில் ஹெட்போனில் இப்பட பாடல்கள் கசியும் பொழுது என் நடை வேகம் திடீரென அதிகரிப்பதை ரொம்ப நாள் கழித்துதான் உணர்ந்தேன்.


அதிலும் 'ஆனே சார் ஆனே' என வரும் பாடல் பயங்கரமான உற்சாக குறுகுறுப்பை உள்ளுக்குள் விதைத்துவிடும். வசூல்ராஜா படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை ஒருமுறை பார்த்திருந்தீர்களென்றால் பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். படமும் பிடிக்கும்.


ஞாயிறு கிழமைகளில் அம்மா சுடும் மட்டன் வடைக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. வறுத்துக்கொண்டிருக்கும்போதே சூடாக எடுத்து ஊதி ஊதி சாப்பிடும் சுகம் இருக்கிறதே. அட அட அட... கண்ணை மூடி சாப்பிடும் வேளையிலேயே பிறவிப்பயனை அடைந்துவிட்டார்போல் இருக்கும். 









ந்தானம். தமிழ் நகைச்சுவை திரை உலகில் தவிர்க்க முடியாத சொல் ஆகி வருகிறார். இவரது கண்டேன் காதலை பட நகைச்சுவை அட்டகாசம். இந்த படம் முழுவதிலும் இவரது எக்ஸ்பிரஷன்ஸ் ரொம்பவும் ரசிக்க வைக்கும். தமன்னா பரத்தை கட்டிப்பிடித்து சென்றவுடன் செடியை பிய்த்துக் கொண்டிருப்பாரே... வாவ்..  









ண்பர்கள். வாழ்க்கையின் வரம். சிலர் நமது வாழ்க்கை மாறுதல்களில் பெரும் பங்கு வகிப்பார்கள். சில நண்பர்கள் தற்செயலாக உதிர்க்கும் சொற்கள் அவர்களுக்கே தெரியாமல் நம்மில் வெகு ஆழத்தில் நிலைத்து பல வருடங்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


2007ல் ஒரு முறை பழைய நிறுவனத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நானும் செந்தில் கே.பி என்கிற அந்த நண்பனும் கலந்துகொண்டோம். நிறுவனத்தைப் பற்றி பிரஷ் ஏதுமின்றி வெறும் விரல்களை வைத்தே வரைய வேண்டும். சக போட்டியாளர்களில் ஒருவர் தேசிய ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர் என கிசு கிசு பரவியது. அவரை கை காட்டி நான் செந்திலிடம் சொன்னேன்,


"செந்தில்.. அவர் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்டாம்.. நாமெல்லாம் தாக்குபிடிப்போமா...?"


   "ஹேய்.. ஏன்டா சுக்கு பயப்படுற.. நாம இன்டர்நேஷனல் ஆர்டிஸ்ட்டுடா.." 


என நண்பன் சர்வசாதாரணமாய் சொன்ன அந்த வார்த்தைகள் அடிக்கடி என் நினைவிற்கு வரும். 


அந்த போட்டியில் வரிசைப்படுத்தாமல் சிறந்த 5 ஓவியங்களை தேர்ந்தெடுத்தார்கள். அதில் முதலில் அறிவித்தது. எங்கள் பெயரைத்தான்.




அடுத்த ஞாயிறு சந்திப்போம். 

9 comments:

சாருஸ்ரீராஜ் said...

arumaiyana thokuppu

எஸ்.கே said...

தொகுப்பு அருமை! அந்த கடைசி அனுபவம் நெஞ்சில் நீங்காதது!

Unknown said...

ரசனைமிகு தொகுப்பு. நன்று.

அன்பரசன் said...

தொகுப்பு அருமை

Philosophy Prabhakaran said...

வலைச்சரம் மூலமாக இன்றுதான் உங்கள் பதிவினை பற்றி தெரிந்துக்கொண்டு ஓடி வந்தேன்... வலைச்சரத்தில் கலக்கிஎடுக்க வாழ்த்துக்கள்...

Sukumar said...

சாருஸ்ரீராஜ் said...
arumaiyana thokuppu

நன்றிங்க வாழ்த்துக்கு...

___________________

எஸ்.கே said...
தொகுப்பு அருமை! அந்த கடைசி அனுபவம் நெஞ்சில் நீங்காதது!

ஆமாம் பாஸ்... சரியாய் சொன்னீர்கள்.. வருகைக்கு நன்றி...
___________________

கலாநேசன் said...
ரசனைமிகு தொகுப்பு. நன்று.

ரொம்பவும் நன்றிங்க..

___________________


அன்பரசன் said...
தொகுப்பு அருமை

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

Unknown said...

nalla pakirvu.

மதுரை சரவணன் said...

ஓவியப்போட்டி டச் பினிஸ் ... வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார் - வாழ்வினை ரசிக்க வாரம் ஒரு நாள் பத்தாது - இருப்பினும் வாரம் என்பதனை தினம் இரு / இரண்டு மனி நேரம் என வாழ்வினை ரசிக்கலாம். பயனுள்ளதாக இருக்கும். காது - வாய் - கண் - கை விரல்கள் என எல்லாவ்ற்றிற்கும் ரச்னை எழுதியது நன்று - கடைசி விரல்கள் ஓவியம் - அகில உலக ஓவியர்கள் வெற்றி பெற்றது நன்று - நல்வாழ்த்துகள் சுகுமார் - நட்புடன் சீனா