Tuesday, July 20, 2010

பீலிங்ஸ் - 20 ஜுலை 10




ரிமோட்

      செம்மொழி மாநாட்டு அறிவிப்பின் படி பல கோடிகள் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்குவதாக கேள்வி. வேறு எதற்கு ஒதுக்குகிறார்களோ இல்லையே, டிஸ்கவரி சேனலுக்கு ஒதுக்கலாம். அவ்வளவு அருமையான அறிவியல் நிகழ்ச்சிகளை எளிமையாக புரியுமாறு தமிழை படுத்தாமல் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். சூப்பர் சிங்கர், சன் சீரியல்களுக்கு கும்பல் கும்பலாய் பலர் சென்று விட சில நூற்றுக்கணக்கான பேர் மட்டுமே பார்க்கக்கூடிய இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி அறிவியல் தமிழை வளர வைக்கலாம்.

     திருமதி செல்வமும் நாதஸ்வரமும் ஓடும் போது என் அம்மாவிடம் ஏதாவது கேள்வி கேட்டால் விளம்பர இடைவேளையில் தான் பதில் வரும். இவை இரண்டும் அம்மா விரும்பி பார்க்கும் மெயின் சீரியல்கள். செல்லமே சைட் சீரியலாம் சில தினங்கள் சாய்ஸில் விட்டுவிடுவார். தங்கம் சீரியலை ஆரம்பத்தில் விரும்பி பார்த்தவர், இப்போது அப்போதுதான் சமைக்கவே எழுந்து செல்கிறார். ஐயா ஐயான்னு மொக்கை அடிக்கிறாங்களாம்.



     வெகு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாதஸ்வரம் சீரியல் சன் டி.வி.யில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரையிலேயிருந்து வெள்ளித்திரைக்கு பல பேர் போகலாம். ஆனால் ஒரு படத்தில் சறுக்கினாலும் திரும்பவும் முயன்றால் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கக் கூடிய திருமுருகன் மறுபடி சின்னத்திரைக்கே திரும்பி வந்ததற்கு அசாதாரண தைரியம் வேண்டும்.



     வசந்த் டி.வி.யில் ஒரு பாட்டு. 'நாளைய வசந்தமே, தலைவனே வா வா' என பாடல் கம்பீரமாய் ஒலிக்க வசந்த் அன் கோ இயக்குனர் நிற்கிறார், நடக்கிறார், சிரிக்கிறார், கை அசைக்கிறார், நல உதவிகள் செய்கிறார் இன்னும் ஏராளமான றார் களுடன் விஜய் அறிமுக பாட்டு ரேஞ்சுக்கு போட்டு தாக்குகிறார்கள். இளைய தளபதி விஜய்யை கலாய்பதற்கு வாழ்க்கையில முதல் முறையாய் அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். 


     கேப்டன் டி.வி.யில் ஒரு கேன்டிட் கேமரா நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு பார்த்தது. போலீஸ் வேடமிட்டு கொண்டு நிகழ்ச்சி நடத்தும் குழுவினர் போவோர் வருவோரை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆயிடுச்சு. நம்ம கேப்டன் சார் அந்த காக்கி சட்டையை போட்டுகிட்டு எவ்வளவு பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிச்சிருக்காரு... இப்ப என்னடானா அவரு டி.வி.யிலேயே பொதுமக்களை பிடிச்சு டென்ஷன் பண்றாங்க... என்ன கேப்டன் சார் உங்க டி.வி.யிலேயே இப்படி சட்டத்தை கையில எடுத்துக்கலாமா?

பிறந்தநாள் வாழ்த்து




     குரல்வலை எனும் வலைப்பூ அதிபர் திரு.MSV Muthu அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
நான் பார்த்த முதல் வலைப்பூ குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து கொண்டிருப்பேன்... தூரத்தில் இருந்து பார்பதற்கு வேலை செய்வது போலவே இருக்கும். நேரில் பார்பதற்கு உன்னாலே உன்னாலே வினய் மாதிரி இருப்பார். இவரது சிறுகதைகள் அட்டகாசமாக இருக்கும். 


ஆவி பேய் கதைகளில் அண்ணன் நிபுணரோ நிபுணர். சமுதாய அக்கறை கொண்ட இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறார்போல் இருக்கும். சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வரும் இவருக்கு என்னுடைய சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





பதிவுலகம்

     கால்பந்து குறித்து அதிகம் எனக்கு தெரியாது. ஆனாலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் என்னென்ன நடக்கிறது என அவ்வப்போது அறிந்து கொள்ள உதவியது பதிவர் லோஷன் எழுதிய பதிவுகள். தமிழில் சப்டைட்டில் போட்டு மேட்ச் பார்ப்பது போன்று இருந்தது இவரது கால்பந்து குறித்த பதிவுகள். அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

     சமீபத்தில் படித்த பதிவர் ராஜாவின் ஆர்குட் படுத்தும் பாடு நல்ல சிரிப்பை வரவழைத்தது. ஸ்கராப் மெசேஜ்களுக்கான அவரது கமெண்டுகளை படித்து கண்களில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தேன்.

     சில சமயம் சிலவற்றை படிக்கும் போது குபீர் என சிரிப்பு வரும். பதிவர் சரவணக்குமரனின் ஆனந்தபுரத்து வீடு விமர்சனம் படிக்கும்போது இந்த ஒற்றை வரி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
  "ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது,  அவர் ஒருவராகத்தான் இருக்கும்."


இந்த வார விட்ஜெட்

     என் வலைப்பூவில் கீழே ஓடிக்கொண்டிருக்கும் "உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்...." பிளாஷினை உங்கள் பதிவில் இணைக்க :

<object width='300' height='75'><embed src='


http://www.hostanypic.com/out.php/i6066_feed.swf' width='450' height='90' wmode='transparent'/></embed></object>
<br /></a>

Thursday, July 15, 2010

மதராசபட்டினம் - பேரு மாறும் ஊரு மாறுமா?



// கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. புகைப்படங்கள் பெறப்பட்ட பல்வேறு வலை தளங்களுக்கு நன்றி //























































அய்யா ராசா... ஓட்டுப் பட்டையை மேலே வச்சா படிச்சிட்டு அப்படியே போயிடுறீங்கன்னு கீழே தூக்கி வச்சேன்... அப்பவும் ஓட்டு விழ மாட்டேங்குதே... இனி நடுவுல வைக்கிறதுக்கு ஏதாவது கோடிங் இருக்குமானு முயற்சி பண்ணிதான் பார்க்கனும்...





Wednesday, July 14, 2010

மதராசப்பட்டினம் - திரை அனுபவம்





2007 ல் ஒரு நாள்...


 "நீங்க கூப்பிட்டப்பலாம் சிவாஜி படம் ஆறு வாட்டி வந்தேன்ல... இப்போ நான் கூப்பிட்டா ஏன் வரமாட்றீங்க.. வந்துதான் ஆகனும்" என்றான் முதலாளி.


ஒரு பி.பி.ஓ நிறுவனத்தில் நான் பொட்டி தட்டி கொண்டிருந்த போது இரண்டு பொட்டிகள் தள்ளி உட்கார்ந்து தட்டிக்கொண்டிருந்த வகையில் அவன் ஒரு தொழிலாளி ஆனாலும் அவனது இயற்பெயரே முதலாளி. தீவிர தல ரசிகன்.


"டேய் படம் நல்லாயிருக்காதுடா" என்றான் சதீஷ்.


"ஹே.. டிரைலர் பார்த்தீங்க இல்ல... தல பின்னியிருக்கும்..."


எனக்கும் கூட கீரிடம் டிரைலர் பிடித்திருந்ததால் படம் நல்லாயிருக்குமாங்காட்டியும் என்ற சிறிய நம்பிக்கையில் காசி தியேட்டர் சென்றோம்.


முதல் பாதியில் அடைகாத்த பொறுமையை இரண்டாம் பாதியில் இழந்து அவனையும் படத்தை பார்க்க விடாமல் கிண்டலடிக்க ஆரம்பித்ததால் முழு படமும் முடியும் வரை தியேட்டருக்குள் உட்கார முடிந்தது.


படம் முடிந்து வெளியே வந்தபோது முதலாளி சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. "நல்லவேளை இந்த படம் நல்லாயில்லை..   'விஜய்' டைரக்ஷன்ல அஜித் படம் ஹிட்டாயிருச்சுருங்கிற அவப்பெயருக்கு ஆளாகாம தப்பிச்சிட்டோம்."




2010 ல் ஒரு நாள்


பதிவுலகில் கிளம்பிய பாசிட்டிவ்வான விமர்சனங்கள் தொடர்ந்து  தள்ளிக்கொண்டே இருந்ததனால் நேற்று மதராசப்பட்டிணம் ஓடும் சங்கம் தியேட்டருக்குள் போய் விழுந்தேன்.  இந்த முறை டிரைலர் மட்டுமல்லாமல் முழுப்படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.







படம் ஆரம்பிக்கும் முன்னர் ஹனீபாவிற்கு அஞ்சலி ஸ்லைட் போடுகிறார்கள். முதல் பாதியில் மொழி பெயர்ப்பாளராக வந்து கலகலப்பூட்டும் ஹனிபாவை இரண்டாம் பாதியில் மிஸ் செய்கிறோம். இனி அவரை கலை உலகம் மொத்தமாக மிஸ் செய்யப் போவது வருத்தமே. 'கத்திக்குத்தெல்லாம் வாங்கி இருக்கேன் டேமேஜ் ரொம்ப ஜாஸ்தி' எனும் போது அவரது முகபாவத்தை சிவாஜியில் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.. ம் ம்... அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.







பழங்காலத்து மதராஸை கையில் எடுத்துக்கொண்டு அதனுடன் லகான், டைட்டானிக் இரண்டையும் கலக்கி சுவைக்கு அப்போகலிப்டோ போன்ற வஸ்துக்களை சேர்த்து மொத்தமாக மிக்ஸியில் அரைத்து மதராசப்பட்டினம் எனும் புதிய டிஷ்ஷை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


எனினும் தொடர்ந்த தமிழ் மசாலா படங்களால் திகட்டிப்போன நாக்கிற்கு இந்த டிஷ் தெம்பு தரும் புதிய சுவையாக இருக்கிறது. 


நான் கடவுளில் பட்டை தீட்டப்பட்ட ஆர்யா இந்தப் படத்தில் மேலும் ஜொலிக்கிறார். மல்யுத்த சாகசங்களில் மனுசன் பின்னி எடுக்கிறார். 


அமி ஜாக்சன் ஏற்கனவே பல பதிவர்கள் சொன்னது போல வெகுவான தமிழ் நாயகிகளை விட நன்றாகவே நடித்திருக்கிறார். (தமிழில் பேசி!)




துடிப்பான நாசர், நேதாஜி இருக்காரா என நாசரை அடக்கும் எம்.எஸ்.பாஸ்கர், உடன் சுற்றும் நண்பர் பட்டாளம், ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார், ஏ டூ இசட் டூர்ஸ் பாலாஜி, படகில் போகும் தாத்தா, மிரட்டும் வெள்ளைக்கார போலீஸ் என படத்திற்கு பலம் சேர்ப்போர் பட்டியல் அதிகம்.


படத்தின் கலை இயக்குனரின் உழைப்பு எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. டிராம் வண்டிகள், பழைய கால கட்டிடங்கள் என மதராசப்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்து வெளியெடுத்திருக்கிறார்.


படத்தின் தீம் மனதில் நன்றாக ஒட்டுவதற்கு இன்னுமொரு காரணம் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசை, வாவ்..  கலக்கியிருக்கிறார். பாடல்களும் குறிப்பிடும்படியாகவே இருக்கின்றன.




வாக்காளர் அடையாள அட்டையை கலாய்ப்பது, எ..ஏஏஏ.. பி.. பீபீபீ.. சி.. சீசீசீ என ஆங்கிலம் கற்றுக்கொள்வது, நடன பார்ட்டியில் வெள்ளைக்கார பெண்ணை கட்டிப்பிடித்துக்கொண்டு நடனமாடுவது, 70 ரூபாய் பயபக்தியோடு வாங்கும் ஓவியர் தண்ணி போட்டுவிட்டு மனைவியுடன் அடிவாங்குவது என ஏராளமான காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. 


'அவுட்கோயிங்...? இன்கமிங்...!', 'ஐ... ஒய்'  என வசனங்கள் உட்பட படத்தில் இன்னும் ஏராளமான கிரியேட்டிவ் அம்சங்கள் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால் புரியாது. போய் பார்த்து அனுபவியுங்கள்.


படத்தின் குறைகளை நிறைகளோடு ஒப்பிட்டால் பெரிசாகத் தெரியாது என்றாலும், அந்தப் பாட்டி தற்போதைய கூவத்தின் நதிக்கரையில் உட்கார்ந்து ஃபீல் பண்ணுவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கவர்னராக வரும் கதாநாயகியின் அப்பா கேரக்டர் மட்டும்,  பேன்சி டிரஸ் காம்பட்டிஷனில் டயலாக் மறந்து போன சின்ன பிள்ளையை போல தடுமாறுகிறார்.  
சென்ட்ரல் ஸ்டேஷன் செட்டையே அடிக்கடி காண்பிப்பதால் ஒரு சலிப்பு வருகிறது. ஸ்பென்சர் போன்ற வேறு பல செட்கள் சில விநாடிகளே காட்டப்படுகிறது. மொத்தமாக பழைய மதராசப்பட்டிணத்தை கவர் பண்ணியிருக்கலாம். கிளைமாக்ஸ் துரத்தல் கொஞ்சம் நீளமோ என நினைக்கத் தோன்றுகிறது. நெகடிவ்ஸ் நிற்க.


கிளைமாக்சில் எங்கே ஒட்டு மீசை, வெள்ளை தாடி, சுருங்கி போன பிளாஸ்டிக் மாஸ்க்குடன் ஆர்யவை காட்டி ஒட்டுமொத்த படத்திற்கும் திருஷ்டி வைத்துவிடுவார்களோ என பயந்த எனக்கு இயக்குனர் விஜய் நெகிழ்ச்சியான கிளைமேக்சினால் பதில் சொல்லியிருக்கிறார்.


எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும், விறுவிறுப்பாகவும், சுவையாகவும், கிரியேட்டிவ்வாகவும் படத்தை கொடுத்த விதத்தில் இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.







டிஸ்கி கேள்வி



எல்லாம் சரி.. அது ஏன் பாஸ் அஜித்துக்கு மட்டும் அந்த கிரீடம் கதையை எடுத்தீங்க... நல்ல நல்ல ஸ்கிரிப்டையெல்லாம் பையில வச்சிகிட்டு, விஜய், அஜித்துக்கு கதை சொல்லும்போது மட்டும் எல்லா டைரக்டரும் ஒரே மாதிரி ஆயிடறீங்களே அது ஏன் ?


Keywords : madras, Chennai, madrasapattinam, Madarasapattinam, madarasapatinam, madrasapatinam, vmc hanifa, naaser, amy jackson, arya, director vijay, ags entertainement, kalpathi agoram, blog tamil film review , valaimanai blogspot review, sukumar swaminathan

Wednesday, July 7, 2010

ஃபீலிங்ஸ் - 7 ஜுலை 2010

________________உட்கார்ந்து யோசிச்சது




■  செம்மொழி பாட்டில் எனக்கு ரொம்ப பிடித்தது ஒரு காட்சி.. புதிதாய் வேலைக்கு சேரும் பெண் முதன் முதலில் சீட்டில் உட்கார்ந்த உடன் வந்த வேலையை பார்க்காமல் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள். இந்த காட்சியை பார்த்த உடனே ஒரு பதிவர்ங்கிற முறையில எனக்குள்ள பட்டாம்பூச்சி நிறைய பறந்துச்சு.  அலுவலகத்திற்கு வந்த உடன் பதிவுகளை போடவும், பின்னூட்டம் பார்க்கவும் அரசாங்கமே சப்போர்ட் பண்றாங்கன்னு நெனைச்சேன். வலைப்பதிவர்களுக்கு அலுவலகங்கள் பதிவுகள் போட அனுமதி அளிக்க வேண்டும்னு மாநாட்டுல அதிகாரபூர்வமாக அறிவிப்பாங்கன்னு பார்த்தேன்... ஹும் என்ன பண்றது... விண்டோவை மினிமைஸ் பண்ணி வச்சு ஒளிச்சு ஒளிச்சுதான் பதிவுகளை பார்க்கனும்னு நம்ம தலையில எழுதியிருக்கு...  ரைட்டு விடுங்க...


________________நூல் வெளியீட்டு விழா


 பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் அவர்களின் கலைஞர் எனும் கலைஞன் நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். அண்ணன் அப்துல்லா அழகாக நிறுத்தி நிதானமாக பேசுகிறார்.  பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஏற்புரையை நன்றியுரையாக்கி நகைச்சுவையுடன் பேசினார். பதிவர் அகநாழிகை பொன் வாசுதேவன், அஜயன்பாலா, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பரமணியன் ஆகியோரும் பேசினார்கள்.
  பின்னர் வழக்கம்போல் கீழே டீக்கடையில் நடந்த பதிவர் சந்திப்பில் ராவணன் படம் பிரதான தலைப்பானது. எனக்கு படம் பிடித்திருக்கிறது என யாராவது லைட்டாய் முணுமுணுத்தால் கூட டென்ஷன் ஆகி விடும் நிலையில் பல பதிவர்கள் படத்தை பார்த்து நொந்த கதையை ஆக்ரோஷமாக கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த டீ கடை டிஸ்கஷன் ரொம்ப நன்றாகவே இருக்கிறது. 


________________சென்சஸ்


  வீட்டிற்கு சென்சஸ் எடுக்க வந்தார்கள். முக்கியமாக, கம்ப்யூட்டர் இருக்கிறதா, இணைய இணைப்பு இருக்கிறதா என கேட்டுக்கொள்கிறார்கள். ஒருவேளை நாட்டில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என இன்டைரக்டாய் கணக்கெடுக்கிறார்களா தெரியவில்லை. ஆனால், எந்த கட்சி கூகுள் ஆட் சென்ஸ் தமிழை சப்போர்ட் செய்ய வசதி செய்து தருமோ அதற்குதான் ஓட்டு போட வேண்டும் என இருக்கிறேன்.


________________சினிமா சினிமா


■  மதராசப்பட்டிணத்தைவிட நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஆனந்தபுரத்து வீடு. நாகாவின் விடாது கறுப்பு போன்ற மர்ம தேச சீரிஸ் தொடர்களுக்கு நான் தீவிர ரசிகன்.  கடைசியாய் நாகாவின் சிதம்பர ரகசியம் சீரியல் பார்த்தது. இப்போது அவர் வெள்ளித் திரையில்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன். பதிவுகளில் விமர்சனம் வரும் முன்னர் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று இருக்கிறேன்.






■  சின்ன வயசில் தீபாவளி வருகிறது எனும் செய்தியை போல குதூகலமாய் இருக்கிறது எந்திரன் வருகிறது எனும் செய்தி. முதல் ஷோவிற்கு கட்டுகட்டாய் பேப்பர்களை கிழித்துக் கொண்டு முன்சீட்டில் இருந்தவர்கள் தட்டிவிட தட்டிவிட மீண்டும் மீண்டும் அவர்கள் தலையில் விழுமாறு பேப்பர் குப்பைகளை போட்டு தியேட்டரையே சும்மா அதிர வைத்து சிவாஜி படம் பார்த்தது நினைவிற்கு வருகிறது. 




________________புத்தகம்


  தமிழக அரசு புண்ணியத்தில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க முடிகிறது. இது என்ன புது கதைன்னு ஆச்சரியப்படாதீங்க. ஒரு மாசமா மாலை நேரத்துல எங்க ஏரியா முழுக்க லோ வால்டேஜ் ஆகிடுது. கம்ப்யூட்டர் ஆன் பண்ண முடியலை. வேற வழியில்லாம ரொம்ப நாளா விட்டுப்போன படிக்கிற பழக்கத்தை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டேன். 


  ரஜினி - 3000
அஜித் / விஜய் - 2000
கலைஞர் / ஜெ / கேப்டன் - 1000
.
.
.
.
புத்தக விமர்சனம் - 150


இதெல்லாம் நான் பதிவுகளுக்கு வைத்த தலைப்பில் இருந்த சொற்களும் அதற்கு விழுந்த அன்றைய ஹிட்ஸ்களும்...
ஓரு மனுசனை இந்த உலகம் திருந்தவே விடாதா...?

Monday, July 5, 2010

கண்சிமிட்டும் விண்மீன்கள் - எண்டமூரி வீரேந்திரநாத் - நாவல் அனுபவம்







மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்ப்பதில்தான் என்ன ஒரு புதிர்?


தூரம் தெரியும் நிலவும் அதனை தாண்டி மிதந்து கொண்டிருக்கும் விண்மீன்களும் எப்பொழுதுமே ஆச்சர்யம்தான். அந்த விண்மீன்களும் சூரியன்தான் என்கிறார்களே அவற்றை சுற்றிலும் இருக்கும் கிரகங்கள் வெறுமனே சுற்றுகின்றனவா..? அல்லது நமது அறிவியல் இன்னும் துழவியிராத வெகு தூரத்தில் இருக்கும் ஏதோ ஒரு கிரகத்தில் இதே நேரம் ஏதோ ஒரு ஏலியனும் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நம் பூமி இருக்கும் திசையை நோக்கி வெறித்துக் கொண்டு என்னைப் போலவே வெறித்தனாமாய் யோசித்துக் கொண்டிருக்குமா? 


 இதைப் போன்ற விண்வெளி சார்ந்த அனேக கேள்விகளை, அதன் புதிர்களின் ஆழங்களை, அதன் பிரமிப்பை என்னுள் விதைத்த நாவல் எண்டமூரி வீரேந்திரநாத்தின் கண்சிமிட்டும் விண்மீன்கள்.






பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட இந்நாவல் நான் படித்த நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த நாவலாகும். கதையின் சுருக்கம் இதுதான். 


பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஆல்பா கிரகத்தினர், நமது சூரியனை சுருக்கி கோலி குண்டு சைஸிலான வஸ்துவில் அடக்கி அவர்களின் மின் சக்தி போன்ற ஆக்க சக்திகளுக்கு பல நூற்றாண்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் அளவு விஞ்ஞானத்தில் முன்னேறியவர்கள்.


கதைநாயகியான பயோ விஞ்ஞானியின் (பெயர் மறந்துவிட்டது அனுஹா என்று நினைக்கிறேன்) முன்னாள் கணவனும் விண்வெளி நிபுணனுமான யஷ்வந்தும் அவளை விரும்பும் கணிப்பொறி நிபுணன் வாயுபுத்ரனும் "சூரியனை எடுத்துக் கொள்ள இருக்கிறோம்.  இதனால் யாருக்கேனும் பாதிப்பு இருக்குமாயின் பிரபஞ்ச நீதிமன்றத்தில் முறையிடலாம்" என ஆல்பாவாசிகள் அனுப்பும் அலை வழி செய்தியை டீகோட் செய்கின்றனர்.


இந்த செய்தியினாலும் அடுத்து நிகழக்கூடிய பாதிப்புகளினாலும் உலகமே அதிர்ச்சியுறுகிறது. எங்கே இருக்கிறது என்றே தெரியாத பிரபஞ்ச நீதிமன்றத்தை நோக்கி யஷ்வந்த், வாயுபுத்ரன், அனுஹா உள்ளிட்ட ஐவர் குழு விண்கலத்தில் பயணிக்கிறது. எப்படி போவது எங்கே போவது திரும்பி வருவோமா எனத் தெரியாத பயணம். தாங்கள் வரும் செய்தியை வெளிப்படுத்திக் கொண்டே செல்கிறது விண்வெளி ஓடம்.


File:BH LMC.png


இதற்கிடையே மனதை உருக்கும் முக்கோண காதல் கதை. திடீரென துரதிருஷ்டவசமாக இவர்களது ஓடம் திரும்பியே வரமுடியாத பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழியில் மாட்டிக்கொள்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர்களது விண்வெளி ஓடம் வெளியிட்ட செய்தியை பெற்றுக்கொள்ளும் பிரபஞ்ச நீதிமன்றத்தையும் ஆல்பா கிரகவாசிகளையும் குறித்து அறிந்த வேறொரு கிரகவாசிகள் பிளாக் ஹோலில் தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை காப்பாற்றி அழைத்து செல்கிறார்கள்.




பிரபஞ்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆல்பாவாசிகள் தாங்கள் சூரியனை எடுத்துக் கொள்ளப்போவதாக தெரிவிக்க, இதனால் பல உயிர்கள் பாதிப்படைவதை நமது குழு எடுத்துரைக்கிறது. அப்பொழுது ஆல்பாவாசிகள், நமது பூமியில் நடப்பனவற்றை வீடியோ போட்டு காட்டி, மனிதன் எவ்வாறு தங்கள் சக்திக்கு கீழுள்ள பிற மனிதர்களை, மிருகங்களை நடத்துகிறான் என எதிர்வாதம் புரிந்து வாயடைக்க வைக்கின்றனர்.


தீர்ப்பு ஆல்பாவாசிகளுக்கு சாதகமாக கூறப்படும் தருணத்தில் நமது குழு எவ்வாறு தங்களது சமயோசித புத்தியினால் அதிரடியாக எல்லோரையும் மடக்கி ஜெயிக்கிறார்கள் என்பது செம திரில்.


சூரியனை காப்பாற்றி தங்களது வெற்றியை பூமிக்கு திரும்பி உற்றார் உறவினரோடு கொண்டாடலாம் என நினைக்கும்போதுதான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சிகர உண்மை தெரிய வருகிறது. பிளாக் ஹோலில் 70 வருடங்கள் அவர்கள் தூங்கி விட்டிருக்கிறார்கள். 


திரும்ப எப்படி அவர்கள் எப்படி தங்களது பழைய காலத்திற்கு பயணித்தார்கள் என்பெதெல்லாம் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் கொட்டிக் கிடப்பது போன்ற விஞ்ஞான திரில்லிங் சமாச்சாரம்.


கதையை நான் சுருக்கமாக சொல்லி விட்டாலும் உண்மையில் நாவல் வெகு விலாவரியாக செல்லும். பல சுவையான விண்வெளி குறித்த தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது நாவலின் சிறப்பு. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் செல்லும் காட்சிகள்.


நாவலுடனே பிரபஞ்சத்தின் மறுமுனைக்கு சென்று வரும் நாம், எவ்வளவு அற்பமான விஷயங்களில் நம்மை குறுக்கி இருக்கிறோம் என்கிற உணர்வு நாவலை படித்து வைத்த உடன் ஏற்படுகிறது.


ராஜ் டி.வி.யின் விளம்பரம் போல அடிக்கடி எனக்கு நினைவிற்கு வரும் நாவல் இது.


நாவலின் கதைக்கருவும், அதற்காக ஆசிரியர் செய்திருக்கும் ஆய்வும் பிரமிக்கத்தக்கதாகும்.
ஹேட்ஸ் ஆஃப் டூ எண்டமூரி வீரேந்திரநாத்!




குறிப்பு : இந்த நாவலை நான் நூலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்து படித்தேன். எங்கு தேடிப்பார்த்தாலும் தற்போது எனக்கு கிடைக்கவில்லை. எங்காவது இந்நூல் கிடைக்கும் விவரம் யாருக்கேனும் தெரிந்திருந்தால் தெரியப்படுத்தவும்.




Key words : yandamoori veerendranath, yendamoori veerendranath, yentamuri virendranath, kansimmitum vinmeengal, kansimitum vinmeengal, entamuri virendranath, entamoori veerendranath.