Wednesday, July 2, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 02 07 14



வருடா வருடம் ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என தெரியாமலே செய்யும் காரியத்தை இவ்வருடமும் செய்துவிட்டேன். ஆம் வலைமனை டாட் இன் டொமைன் ரென்யூவல்தான். இப்பொழுதெல்லாம் பேனா வாங்கி முழுக்க எழுதுகிறோமோ இல்லையோ வேலை செய்கிறதா என முதலில் பெயரை எழுதி பார்ப்போம் அல்லவா.. அதைப் போல இந்த போஸ்ட்டை எடுத்துக்கொள்ளவும். 

***
குவாலிட்டியான மியூசிக், கிரியேட்டிவ்வான லிரிக்ஸ் என முதல் பாடலிலேயே அசத்தி விட்டார் கேபிள் சங்கர். இந்த பாடல் குறித்து ஜில்மோர் டாட் காமில் வெளிவந்த எனது கருத்து:

"நம்மை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் இருக்கும் நியாயமான கருத்துக்களை எடுத்துக்கொள்ளும் முன் முதலில் நாம் தாக்கப்படுகிறோம் என்கிற கோப உணர்ச்சி மேலெழுந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் நம் தரப்பு நியாயங்களை ஆராய்வதே பொதுவான மனித இயல்பு. ஆனால் சம்பந்தப்பட்டவர் மனம் நோகாமல் அவரே புரிந்து கொள்ளும்படி விமர்சனங்களை முன்வைக்கும் வழிமுறைகள் பல உண்டு என விளக்குகிறது பிரசித்தி பெற்ற மனவளக்கலை பயிற்சியாளர் Dale Carnegie எழுதிய ‘How to win friends and influence people’ என்கிற புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் வாழும் பிரதியாகவே விளங்குகிறவர் நமது கேபிள் சங்கர். தேர்ந்த விமர்சகராகவும், நேற்று அறிமுகமானவரும் நெருங்கிய நண்பராகிவிடும் வகையிலும் இந்த கலை கைவரப் பெற்றவர். தனது முதல் படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் முதல் பாடலிலேயே பிராக்டிக்கலாக நம் மீதே இதை செய்தும் காட்டிவிட்டார். நமது மனநிலையை, நம் மீதான விமர்சனங்களை தரமான இசையில், பொருத்தமான வரிகளில் நாமே ‘லைக்’ போடும் வகையில் நமக்கு உணர்த்தி வெற்றி பெறுகிறது இந்தப் பாடல். பொதுமக்கள் மீதான விமர்சனங்களை தாங்கி வந்த தமிழ்த் திரைப்பாடல்கள் கசந்ததே வரலாறு. ஆனால் மீண்டும் மீண்டும் சுவைக்க விரும்பும் ‘இனிப்பு மருந்து’ ஜானரில் புதுவரவாக அசத்துகிறது  ‘பாஸு பாஸு’!"

தொடர்புடைய சுட்டி :
தொட்டால் தொடரும் ‘பாஸு பாஸு’ பாடல் – மாஸ் ரியாக்சன்
http://tamil.jillmore.com/thottal-thodarum-bossu-bossu-song/

***
"சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டுறான்யா..." என்பது புகழ்பெற்ற புதுமொழி. சவலான விஷயத்தை செய்வதில் கெட்டிக்காரன் என அர்த்தம் தரும் இந்த வாக்கியத்தின்படி சமீபத்தில் ஒரு இணையதளம் துவங்கியிருக்கிறார்கள். cyclegap.in என்கிற இந்த இணையதளத்தில் பி.டி.எப், E-Pub, Kindle என அனைத்து மின் வகை தமிழ் புத்தகங்களும் தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.  மின் புத்தக உலகின் சவால்களை சந்தித்து சாதிப்பதே நோக்கம் என இவர்களது FAQ பக்கத்தில் பெயருக்கு பொருத்தமான கொள்கை விளக்கமும் தரப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!

http://cyclegap.in/

***
தியானம், யோகாவை காட்டிலும் ஒரு அரை மணி நேரம் பொதிகை சேனல் பார்த்தால் போதும் போல. பரபரப்பு, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என அனைத்தையும் சட்டென்று குறைத்து பட்டென்று படுத்து தூங்க வைத்துவிடுகிறது. 
வாழ்க தூர்தர்ஷன்! வளர்க அப்டேட்டே இல்லாத நின் வெர்ஷன்!

***

சக கலைஞரை ஒருவர் தாக்கி பேசும்பொழுது அதனை கண்டிக்காமல் அதே துறையில் இயங்குபவர்கள் மௌனம் காப்பது மிகுந்த வலி தருகிறது. "வெறும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்கும் நாராயணசாமி ஆக விரும்பவில்லை" என பொன்னார் கூறி பல நாட்களாகியும் இதுவரை சந்தானம், பரோட்டா சூரி, ரோபோ சங்கர் என யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. '15 நாட்களில்..' கலக்கல் காமெடி சீரிஸில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாசாவிற்கே இந்த நிலைமை என நினைக்கும்பொழுது.... சத்திய சோதனை!

***
டவர் பார்க்கில் காற்றுடன் கலந்து பறக்கும் ஸ்கேட்டிங் செல்லும் சின்ன குழந்தைகளை அமர்ந்து பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படி சமீபத்தில் அமர்ந்திருந்தபோது அருகே அனைவரும் வாக்கிங் செல்லும் நட்ட நடு நடைபாதையில் மூன்று பெண்கள் கால் மணி நேரமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி கஷ்டப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். இவர்களைப் பற்றிய கவனமே இல்லாமல் இங்கிதம் அற்ற பொது ஜனம் குறுக்கே புகுந்து வாக்கிங் சென்றவாறே இருந்ததால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். பேஸ்புக்கிற்காய் புகைப்படம் எடுப்பவர்களது உணர்வை மதிக்காத சமுதாயம் வாக்கிங் போனால் மட்டும் ஆரோக்கியமானதாகி விடுமா என்ன? அட போங்கப்பா!

Saturday, May 24, 2014

கோச்சடையான் | வலைமனை

கோச்சடையான் வந்தே விட்டது. முதல் நாளான நேற்றே இரண்டு முறை பார்த்துவிட்டேன். காலையில் பி.வி.ஆரில் முதல்காட்சியும், இரவு எஸ் 2 விலும். பி.வி.ஆரில் இருந்த அளவு ஏனோ எஸ்2 வில் காட்சி பளிச்சென்று இல்லை. எதற்கும் இன்னொருமுறை சத்யமில் பார்த்து விட வேண்டும்.



தீபிகா பொம்மை எப்பொழுதும் தூங்கி எழுந்த மாதிரியே இருக்கிறது. சின்ன கவுண்டர் மனோரமா போல சின்ன ரஜினி பொம்மை சிரித்த மாதிரியே இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் முகஜாடையில் பெரிய ரஜினி பொம்மை இருக்கிறது. கேரக்டர்ஸ் ஓடுவது, நிற்பது, நடப்பது எதுவும் சரியில்லை.  டான்ஸ் ஆடுவது ரொம்பவும் சரியில்லை. இப்படியும் கோச்சடையானை பற்றி சொல்லலாம்.

நல்ல கதை. விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகும் காட்சிகள். அரண்மனை, கோட்டை, காடு, மலை, தோட்டம், போர்க்களம் என எல்லா பின்னணிகளிலும் சரி.. உடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் சரி.. துல்லியமான, அழகிய வேலைப்பாடுகள். ஒவ்வொரு பிக்சலிலும் பார்த்து பார்த்து டிஜிட்டலில் செதுக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் காட்சியமைப்புகள், வசனம், இசை என பல பெரிய பிளஸ்களால் மேலே உள்ள மைனஸ்கள் மிகச் சிறியதாகி போகின்றன. தமிழில் புதிய அனுபவம். இப்படியும் சொல்லலாம். நான் இப்படி சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். 
...
இயக்குனர் சௌந்தர்யா தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல விஷயம் டிரைலரிலும் டீசர்களிலும் 'பொம்மை படம்' என பெயர் பெற வைக்கும் மோசமான காட்சிகளை சேர்த்தது. (அந்த டால்பினில் ரஜினி எகிறும் காட்சி எல்லாம் படு சுட்டி டி.வித்தனம்). ஆகவே மோசமான தாக்குதலுக்குள்ளாக தயார் நிலையில் சென்றால் ஆச்சரியமாக அடி ஒன்றும் அவ்வளவு பலமாக விழவில்லை. உண்மையில் மிகத் தரமான பல கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றை மட்டும் டிரைலரில் காட்டி திரையரங்கத்திற்கு வரவழைத்திருந்தார்கள் எனில் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

கேரக்டர்களின் முக அமைப்புகள், நிற்பது, நடப்பது அதிக டான்ஸ் மூவ்மென்ட்கள் அனைத்திலும் 'ஏதோ வந்த வரை' செய்திருக்கிறார்கள். ஆனால் ராணா படையை மீட்டு வரும் இடத்திலிருந்து கதைக்குள் இழுக்கப்பட்டு விடுவதால் பொம்மை பிரச்சனையை மனது விட்டுவிடுகிறது.

கேரக்டர்களின் தனிப்பட்ட அசைவுகளும், பாவனைகளும்தான் சரியில்லையே தவிர, மொத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் பிரமாதமாகவே இருக்கிறது. 
டைட்டில் காட்சிகளிலும், சூப்பர் ஸ்டார் எழுத்துக்களிலும் 3டி யை அள்ளித் தெளித்து 'இந்தா சாப்டுக்கோ' என வந்ததும் குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி போல அதற்குப் பிறகு மெயின் படத்தில் கண்களுக்கு முன்னால் வரும் 3டி எலிமென்ட்ஸ் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.  ஒவ்வொரு லேயர்களுக்கும் இடையே தெரியும் 3டி ஆழமும் பெரிதாக இல்லை. சிவாஜி 3டி யில் கூட படம் முழுவதும் 3டி எலிமென்ட்ஸ், மிக அருமையாக இருந்தது.

இடைவேளை விட்டதும் பாப்கார்ன் வாங்க செல்லாமல், இடைவேளை முடிந்ததும் தீபிகா சரக்கடித்துவிட்டு ஆடுவது போல் ஒரு பாடல் வரும் பாருங்கள்.. அப்பொழுது சென்றீர்களானால் கூட்டத்தில் சிக்காமல் பாப்பகார்னும் வாங்கலாம். உங்களுக்கும் சேதாரம் இருக்காது.  இரண்டு முறை பார்த்த போதும் இந்த பாடலை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

உடல்நிலை சரியில்லாத மோஷன் கேப்சர் டெக்னாலஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினியின் குரல், இன்னொன்று ரஹ்மானின் இசை. வீரமிக்க, விவேகமிக்க தளபதியாக ராஜா காலத்து ரஜினி என்னும்போழுதெ அள்ளிக் கொள்கிறது. "நெம்மதியா ஸந்த்தோஷமா இருங்க" என்பது போன்ற அவரது வழக்கமான தனித்துவ உச்சரிப்புகளால் பொம்மையை மறக்க வைக்கிறார். 

அடுத்தது ரஹ்மான். இவரெல்லையென்றால் படமே இல்லை. "ராணா.. ராணா.." என ஒலிக்கும் அந்த ஒரு தீம் மியூசிக் போதும். எங்கு தொட்டால் எங்கு வெடிக்கும் என்பதில் வல்லவர் ஏ.ஆர். இது மாதிரியான வித்யாசமான வடிவத்திற்காக ரஹ்மானும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சரியான ஒலி விருந்து.

நாகேஷ்! நல்ல ஐடியா. அவருக்கு குரல் கொடுத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு. நாகேஷை கொண்டு வந்ததும் சரி, அடுத்தடுத்து தேவைப்பட்டால் சீக்வெல்களை ரிலீஸ் செய்துகொள்ள வசதியாக படத்தை முடித்ததும் சரி.. மிக பிரமாதமான ஐடியா. 

நாகேஷை கொண்டு வந்தது போல், அடுத்தடுத்த பாகங்களில் (வந்தால்) எம்.ஜி.ஆரை கொண்டு வரலாம்! சிவாஜியை.. சுருளிராஜனை.. யோசித்து பாருங்கள்...  இந்த வசதியே படத்திற்கான  பலத்தையும் அதன் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடும். அடுத்தடுத்து வெர்ஷன்களில் படத்தின் தரமும் உயர்ந்திருக்கும். முக்கியமாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி (என்று நம்புவோமாக). 

டிரைலரில் பயமுறுத்தி தியேட்டரில் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் சௌந்தர்யா .. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உடன் உழைத்த உங்கள் குழுவினருக்கும்!

சிலையை கண்டால் அங்கே கடவுள் இல்லை. கடவுளைக் கண்டால் அது சிலை இல்லை என்பது போல், உங்களுக்கு பொம்மைப் படமாக தெரிந்தால் அங்கு கோச்சடையான் இல்லை. கோச்சடையானாக பார்க்க முடிந்தால் அங்கு பொம்மைகள் இல்லை!

Monday, February 17, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 17 02 14



நேற்று மதியம் டைடல் அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுது வண்ணத்தாள் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்கள் சகிதம் அருகே பைக்கில் ஒரு காதல் ஜோடி. தாமதமாக வேலன்டைன்ஸ் டே கொண்டாடுகிறவர்களாக இருக்கும் என நானாய் நினைத்துக் கொண்டேன். அவர் ஏதோ சொல்ல சொல்ல இந்தப் பெண் வெட்கப்பட்டுக்கொண்டே கேட்டது அவ்வளவு அழகு.

சிக்னல் விட்டு முன்னே அவர்கள் சென்றதும்தான் கவனித்தேன், பெண் டிஷர்ட்டில் "Love - Not War" என்ற வாசகம். அதைப் பார்த்ததும் சட்டென, திருமணம் முடிந்ததும் இதே பெண் அவரை தூக்கிப் போட்டு மிதிக்கும் காட்சி கண்முன்னே விரிய எனக்கு தாங்க மாட்டாத சிரிப்பு. 

'ராஜீவா பாரத் சுலோஷனா' என வாயில் நுழையாத என்னத்தையோ அழகாய் பாடி ஓட்டு கேட்கும் ராகுல் காந்தியை தோற்கடிக்கின்றனர் காதலிகள்.




பிரதமரையே சந்தித்துவிட்டு கெத்தாய் வந்தாலும் வாசலில் ஒரேயொரு ஜெயா டி.வி ரிப்போர்ட்டரை நிற்க வைத்து கேப்டனை வெத்து பண்ணிவிடுகிறார்கள்.

கேப்டன் கஷ்டப்பட்டு திங்க் பண்ணி திங்க் பண்ணி பேட்டி கொடுக்க, 'உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?' என்பது போல முகத்துக்கு நேராக ஜெயா டி.வி லோகோவை நீட்டி எதையாவது கேட்டு வெறியேத்திவிடுகிறார்கள். பிறகென்ன, சும்மா இருக்கும் பூனையை எலி சீண்டுவதும் பூனை கடுப்பாகி கலாட்டா செய்வதும் என நமக்கு ஜகஜ்ஜாலியாக 'டாம் அண்ட் ஜெர்ரி' பார்ப்பது போலவே இருக்கிறது. 


கேப்டனுக்கு வாக்களிப்போம். நகைச்சுவையை வாழவைப்போம்.




யுடியூப்பில் பிடித்த திரைப்படத்தை ஓடவிட்டு கேட்டவாறே மணிக்கணக்காக எடுக்கும் பெரும் பணிகளை செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். விடிய விடிய தனியாய் அமர்ந்தாலும் துணை இருப்பது போலவும் பழக்கப்பட்ட வசனங்கள் என்பதால் கவன மாற்றம் ஏற்படுத்தாமலும் இருக்கும். இரண்டரை மணி நேரத்தில் எவ்வளவு முடித்துள்ளோம், அடுத்த படம் முடிவதற்குள் எவ்வளவு முடிக்கலாம் என்கிற கணக்கிடுதல் வசதியும் உண்டு. 



ஒரேயொரு குறை என்னவென்றால், "மாணிக் நஹி.... மாணிக் பா.." என்பது போன்ற முக்கிய இடங்களை கூட அறியாத ரசனையற்ற யூ-டியூப், பட்டென பாஸ் ஆகி 'அப்பாக்கு டாட்டா சொல்லு' என டிக்கெட் கூஸ் விளம்பரத்தை போட்டு தாளிப்பது செம கடுப்பு.



எட்டு மணி நேர டெட்லைனில் கிரியேட்டிவ்வாக ஒரு டிசைன் செய்யவேண்டுமெனில் ஏழே முக்காலாவது மணித்துளியில்தான் மண்டைய பிய்த்துககொண்டு ஐடியாஸ் கொட்டுகிறது..! 
அதுவரை பேஸ்புக்கை மேலிருந்து கீழும் பின்னர் கீழிருந்து மேலும் ஸ்க்ரோல் செய்து, அதை குளோஸ் செய்து, அடுத்த நிமிஷம் மறுபடியும் ரீஓப்பன் செய்து  சேம் ஸ்டெப்ஸ் ரிப்பீட் செய்து... நடுவில் கூகுள் பிளஸ் உள்ள சென்று வெளியே வந்து... சின்னதாய் ஒரு விண்டோவில் கேண்டி கிரஷ் தரும் ஐந்து லைஃப்பையும் காலி செய்து என ஏழரை மணி நேரமும் சுறுசுறுப்பாய் இயங்க வைக்கின்றன இந்த சோஷியல் நெட்வொர்க்ஸ்.

நல்லவேளை.. இவைகள் மட்டும் இல்லையென்றால் சோம்பேறி ஆகியிருப்பேன் என நினைக்கிறேன் 




Tuesday, January 7, 2014

ஏ.ஆர்.ரஹ்மான் - என் சொக்கன் | இலவச மின்னூல்

நாம் விரும்பும் எழுத்தாளர் ஒருவர் நாம் உயிராய் நேசிக்கும் ஆளுமையின் வாழ்க்கை வரலாறை அவரது பிறந்தநாள் அதுவுமாய் வெளியிட வடிவமைக்க சொன்னால் எவ்வளவு மகிழ்வான தினமாய் அது மாறிப்போகும். அப்படி ஒரு தினமாக முடிந்தது நேற்றைய பொழுது எனக்கு.



என்.சொக்கன் அவர்கள் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறினை நேற்றைய அவரது பிறந்தநாளில் வெளியிட அதன் மின்னூல் வடிவமைப்பு பணியை தந்தபொழுது தாங்க முடியாத உற்சாகத்துடன் பணியை துவங்கிவிட்டேன்.

"ஏன் வந்தாய் நீயாக..
பஞ்சோடு தீயாக..."
என்ற அம்பிகாபதி பாடல் வரிகளை கேட்டிருக்கிறீர்களா...?

கவலைகளை, பின்னடைவுகளை, சோர்வுகளை அந்த நொடியில் காணாமற்போகச் செய்து மனதை லேசாக்கி காற்றில் இறகாய் மிதக்க வைத்துவிடும் மாயாஜாலம் நிறைந்த இசை.

இப்படியாகப்பட்ட ஆயிரக்கணக்கான உன்னதமான தருணங்களை தந்து கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளில், வெறும்
'பயாகிராபி' வடிவமாக இல்லாமல் 'இன்ஸ்பிரேஷனல்', 'மோட்டிவேஷனல்', 'செல்ப் இம்ப்ரூவ்மென்ட்' வகைகளிலும் லேபிலிடப் பட வேண்டிய புத்தத்தை மின்னூலாக மாற்றி இலவசமாக தரவிறக்கிக் கொள்ள வசதி செய்திருக்கும் என்.சொக்கன் அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.

இப்போதைக்கு மொபைல் போன்களில் படிக்க வசதியாக இருக்கும் வகையில் A6 சைஸில் வடிவமைத்துள்ளேன்.  இந்த வாய்ப்பை தந்தமைக்கு திரு.என்.சொக்கன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தரவிறக்கி பயன்பெறுங்கள் :

http://freetamilebooks.com/ebooks/arrahman/


Tags : Free Tamil ebook download pdf AR Rahman - By Nchokkan
E-layout by Sukumar Swaminathan

Thursday, October 31, 2013

ஆரம்பம் | வலைமனை



ஆரம்பம்!

காதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்!

மங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்!

மங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார்.

ஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது.

ஸ்பாய்லர் :
கதையென்று பார்த்தால் அதேதான். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, உயிரை விடும் நண்பன், வெகுண்டெழுந்து பழி வாங்கும் ஹீரோ. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம், மேக்கிங் எல்லாமே ரொம்பவும் புதுசு. 

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் எனும் வகைப்படம். எங்கும் போர் அடிக்கவில்லை, எங்கும் தொய்வில்லை. விருந்து சாப்பிட்ட திருப்தி.
ஆர்யா, நயன், கிஷோர், டாப்ஸி என அஜித்தின் நேரத்தை மற்ற பல பேர் எடுத்துக் கொள்வதால் விருந்து சாப்பிட்டாலும் 'தல'வாழை  மட்டும் இல்லாதது போன்ற சிறிய குறை.

பாடல்கள் கேட்பதற்கு சுமார்தான் என்றாலும் அதனை ஈடுகட்டுகிறது படமாக்கப்பட்ட விதம். ஓப்பனிங் சாங்கில் அஜித் முடிந்தவரை டான்ஸ் ஆடுகிறார். சில ஸ்டெப்களில் உடல் வலியை அவரது முகமொழி பிரதிபலித்தாலும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார்.

என் புயூஸ் போச்சு, மெல்ல வெடிக்குது ஆகிய இரண்டும் கவனத்தை கவர்கின்ற பாடல்கள். காதல் வயப்பட்டதும் ஆர்யாவுக்கு முளைக்கும் பறவைச் சிறகு, டாப்ஸிக்கு முடிவில் முளைக்கும் பட்டாம்பூச்சி சிறகு என லவ்லி கிரியேட்டிவ் ஐடியா. மொத்தப் பாடலின்  பின்னணிக் காட்சிகளும் அவ்வகையே. அடுத்ததாக மெல்ல வெடிக்குது பாடல் கண்களுக்கு நல்ல விருந்து. ஹோலி வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.

அஜித், விஷ்ணுவர்த்தன் என்னும் இரண்டு ஆளுமைகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. பாடல்களில் கோட்டை விட்ட யுவன், பின்னணி இசைக்கு முகம் கழுவி காபி சாப்பிட்டுவிட்டு மியூசிக் போட்டிருக்கிறார். சுபாவின் டச், அந்த ஷார்ப்னெஸ் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் இரண்டரை மணி நேர பக்கா ஆக்ஷன் ட்ரீட் இந்த ஆரம்பம் !

Friday, October 11, 2013

கிராவிட்டி (2013) - தொழில்நுட்பத்தின் சாறு




ஹீரோவின் விசேஷ உபகரணத்தின் லேசர் கதிர் பட்டு உடல்கிழிந்து பச்சை ரத்தம் பீறிட உயிர் விடும் ஏலியன்கள், பூமிக்கு மேலே சரியாக அமெரிக்க மாநகரின் மேல் நிறுத்தப்படும் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள்,  கூட்டம் கூட்டமாக செத்து மடியும் பூமிவாசிகள், ஏலியன்களை கொல்ல ஹீரோவினால் கடைசியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய யுக்தி...  இப்படி மலிந்துவிட்ட சயின்ஸ் பிக்ஷன் மசாலாக்களில் இருந்து தனித்து நின்று தெளிவான, சுவாரஸ்யமான தனி முத்தாக ஒளிவிடுகிறது 'கிராவிட்டி'.

ஸ்பாய்லர் :  ......................................................
முதன்முறையாக  தனது விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயோ மெடிக்கல் பொறியாளர் ரயான் ஸ்டானும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் மேட் கவால்ஸ்கியும் ஹப்பிள் டெலஸ்கோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் வேளையில் எதிர்பாராமல் விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் விபத்தில் சக வீரர் உயிர் விட விண் ஓடமும் பாதிக்கப்படுகிறது. பூமியுடனான தொடர்பும் துண்டித்துப்போகிறது. 

இதன் பின்னர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஷ்டேஷனுக்கு சென்று தப்பிக்க அவர்கள் முயல்வதும், பின்னர் கவால்ஸ்கியுன் இறப்பினால் தனித்து விடப்படும் ரயான் பல்வேறு மன மற்றும் உடல் போராட்டங்களை சமாளித்து பூமிக்கு திரும்பி கிராவிட்டியை சுவைப்பதே படம்.
......................................................

நேற்று மாலை S2 பெரம்பூரில் 3D - டால்பி அட்மாஸ் வசதி செய்யப்பட்ட ஸ்கிரீனில் பார்த்தேன்.  90 நிமிடங்கள். நாம் விண்வெளியில் மிதக்கிறோம். சுழல்கிறோம். விண்வெளிக்குப்பைகளால் தாக்கப்படுகிறோம். பூமி நமக்கெதிரே சுழல்கிறது. அண்டம் நமக்கெதிரே விரிந்து கிடக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பும், கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டதன் அடையாளமே தெரியாமல் துல்லியமான நிஜ காட்சிகளாய் படைக்கும் திறன் பெற்றுவிட்ட மனிதனின் ஆற்றலும் ஒன்றுசேர்ந்து பரவசப்படுத்துகிறது.

3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரிய பலம்.  பூமியின் விளம்பில் பட்டு தெரிக்கும் ரம்மியான ஒளிக்கதிர்கள், பேனா,  புத்தகங்கள், நெருப்புக்குமிழி, கண்ணீர்த்துளி, பிரபஞ்ச வெளியில் மிதக்கும் வீரர்கள் என வெறும் திரைப்படம் என சொல்லிவிட முடியாதபடி ஒரு பிரமிப்பான அனுபவமாக உணர வைக்கிறது. இதனுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும் கைகோர்த்துக்கொள்ள மொத்தத்தில் அருமையான விருந்து.

தாகம் எடுத்த வேளை நல்ல பழச்சாறின் சுவையில் மெய்மறப்பதை போன்று, தொழில்நுட்பத்தின் சுவைமிகுந்த சாறினை ருசிக்க நல்ல ஒளி ஒலி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள். மகிழுங்கள்.

Thursday, September 5, 2013

வலைப்பதிவர்கள் திருவிழா | வலைமனை


கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து வகையிலும் விழா சிறப்பாக நடந்தேறியது. விழா குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கொஞ்சம் தாமதாகத்தான் செல்ல முடிந்தது. முன்னரே விழாவிற்கு அழைத்து எனது வருகையை உறுதிசெய்து கொண்டு அதை பட்டியலில் வெளியிட்ட பதிவர் ஆரூர் மூனா செந்தில் இன்முகத்துடன் வாயிலில் வரவேற்றார்.

எனது பதிவுலக குரு கேபிள் சங்கர், தல ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், வீடு திரும்பல் அண்ணன் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவக்குமார் ஆகியோரை உள்ளே நுழைந்ததும் சந்திக்கும் பேறு பெற்றேன்.

 அரங்கில் நுழையும் முன், பெயர், வலைதள முகவரியை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை தந்தார்கள். அந்த பதிவு உள்ளே மேடைக்கு சென்று சில நிமிடங்களில் பதிவர் அறிமுகத்திற்காக மேடைக்கு அழைத்தார்கள்.

மேடையில் பேசும்பொழுது, முகத்தில் பதட்டத்தையும், வயித்தில் தொப்பையையும் மறைக்க வேண்டி முழு கவனமும் சென்றதால் வேறு ஏதும் பேசத்தோன்றாமல் விழா குழுவினருக்கு வாழ்த்து சொல்லி இறங்கினேன்.

  
பிரபு கிருஷ்ணா உடன்...



இறங்கி அமர்ந்ததும் இதுவரை சந்தித்திராத பதிவுலக நண்பர் பிரபு கிருஷ்ணாவை சந்திக்க முடிந்தது. அவருடனே உணவு இடைவேளை வரை அமர்ந்திருந்தேன். சிறப்பு விருந்தினர் பாமரன் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது.  பின்னர் சுவையான அசைவ மற்றும் அசையாத உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

 எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் சிறப்பான பேச்சு, புத்தக வெளியீட்டு விழா என மதிய நிகழ்வுகளும் குதூகலமாக அரங்கேறின.  காலையில் வர இயலாத பலரை  மதியம் காண முடிந்தது.

சதீஷ் சங்கவி எழுதிய 'இதழில் எழுதிய கவிதைகள்'  மோகன் குமார் எழுதிய 'வெற்றிக்கோடு' சுரேகா எழுதிய 'எஸ்கேப்'  உள்ளிட்ட 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா மாலை நடைபெற்றது. இதில் வெற்றிக்கோடு புத்தகத்தின் முகப்பு அட்டையை நான் வடிவமைத்திருந்தேன். அதற்காக அந்நிகழ்வின் போது மோகன்குமார், மேடையேற்றி பொன்னாடை போர்த்தி அன்பு செலுத்தினார். இது எனக்கு முதன்முறை என்பதால் வெரி ஷை ஆக இருந்தது.

THAT MOMENT : VERY SHY


நான் அறிந்த வரையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பிலாசபி பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில், கே.ஆர்.பி.செந்தில், பட்டிக்காட்டான் ஜெய், மெட்ராஸ் பவன் சிவக்குமார், சதீஷ் சங்கவி, மோகன் குமார்ஆகியோரை கடைசியில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து  தெரிவித்தேன். பெயர் விடுபட்ட மற்றவர்களுக்கு இப்பதிவின் மூலம் என மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன்ஸ் அகநாழிகை வாசுதேவன் மற்றும் கேபிள் சங்கர் உடன் ...


முதன் முறையாக பதிவர்கள், பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஷித், மயிலன், பாலகணேஷ் உள்ளிட்டோரை சந்தித்ததும்,  பலாபட்டறை ஷங்கர், கே.ஆர்.பி.செந்தில், அகநாழிகை பொன்வாசுதேவன், கார்க்கி, சதீஷ் சங்கவி, தல பாலபாரதி, உண்மைத்தமிழன் , நிகழ்ச்சியை சுவையாக தொகுத்து வழங்கிய அண்ணன் சுரேகா ஆகிய பழகிய நண்பர்களை சந்தித்ததும் என மிக இனிமையான நாளாக அமைந்தது.

ஆச்சரியமான விஷயமாக, நான் இதன் முன் சந்தித்திராத பதிவர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , வலைமனை மற்றும் போட்டோ கமெண்ட்ஸ் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பாராட்டினார்கள். இப்பொழுது ஏன் அதெல்லாம் எழுதுவதில்லை என கேட்டவர்களுக்கு, "திருந்திட்டேன் பாஸ்" என ஜாலியாக சொல்லிக்கொண்டிருந்தேன்.

பதிவர் திருவிழாவிற்கு சென்று பதிவர்களை பார்த்த பிறகாவது ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில் 6 மாத காலம் கழித்து பாழடைந்த மண்டபமாக இருந்த வலைமனைக்கு சுண்ணாம்பு அடித்து, ஹெட்டர் பேனர் எல்லாம் மாற்றி ஒரு பதிவு போடும் இத்தருணம், வெகுநாட்களாய் காணாமல் போன  பிடித்த பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் பொழுது எழும் திருப்தியை தருகிறது.


Sunday, March 17, 2013

பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை


எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான  திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.

இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.

அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த  அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால்  அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.

இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.

பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங்  சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.

ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக  கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.

அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.

கடந்த நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும்  சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.


பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.

Friday, February 1, 2013

உப்பில்லா கடல்




எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!

வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும். 

ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து  வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது. 

'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம்.  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.

பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது. 

டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட  பயன்படுத்தாதது ஏமாற்றம்.

அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.

துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து  பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.

கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________

பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html