Tuesday, December 27, 2011

கிரிக்கெட் போட்டோ கமெண்ட்ஸ் | 2011 வலைமனை ஹிட்ஸ்


2011ம் வருடம் நான் பதிவிட்ட கிரிக்கெட் போட்டோ கமெண்ட்ஸ்களில் சிறப்பானவற்றை தொகுத்தளித்திருக்கிறேன்.  தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்.


உலககோப்பை...



















































































ஐ.பி.எல்....








































இங்கிலாந்து...




















Monday, December 12, 2011

ஊர் பயணம் - கும்பகோணம் - நாச்சியார்கோவில்

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார்கோவில்தான் சொந்த ஊர். நான் பிறந்ததும் அங்குதான். பணி நிமித்தமாக அப்பா சென்னையில் செட்டிலாகிவிட்டதால் ஊருடன் எனக்குண்டான தொடர்பு இலையின் ஓரத்தில் இருக்கும் ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக்கொள்வதாக மட்டுமே இருக்கும். 


சிறு வயதில் எல்லாம் கோடை விடுமுறைகள் அங்கேதான் ஆனந்தமாய் கழியும். கொஞ்சம் வளர்ந்த பிறகு நகர திமிர் பற்றிக்கொண்டு ஊருக்கு செல்லும் விருப்பம் வெகுவாக  குறைந்துவிட்டது.


பின்னர் வேலைக்கு சென்ற பின் லீவுக்கு தலையை சொறிய வேண்டி வருவதால் ஊர் பயணம் குறித்த ஆசைகளே அடியோடு மரத்துப்போய்விட்டது.



கும்பகோணம் ரயில் நிலையம்...

ஆனால் சீசன் டிக்கெட் வைத்திருப்பது போல இன்றும் அப்பாவும் அம்மாவும் மாதாமாதம் ஊருக்கு செல்லும் விதத்தில் ஏதாவது தேவை அமைந்து விடும்.

"நல்ல கால் வலிடா, உடம்பு முடியலைடா" என முன்தினம் தான் அம்மா சொல்லியிருப்பார். மதியம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது போன் வரும். எனக்கு விளங்கவே விளங்காத  சொந்தங்களை சொல்லி, "அவங்க பையனுக்கு குழந்தை பிறந்திருக்குடா.. ராத்திரி கோயம்பேடுல பஸ் ஏத்தி விடுறியா?"  என்பார். கால் வலி உடல் நோவு எங்கு போனதென்றே தெரியாது சிட்டாக கிளம்பி விடுவார்.

கும்பகோணம் வீதி..


கும்பகோணம் வீதி..

மிக முக்கியமாக நான் தலையை காட்டியே ஆக வேண்டும் என்கிற தேவைகளுக்குதான் நான் இப்பொழுதெல்லாம் ஊரை எட்டிப்பார்ப்பது. கடந்த வாரம் அப்படி தங்கையின் திருமணத்திற்காக செல்ல நேரிட்டது.

முன்கூட்டியே தேதி தெரிந்திருந்ததால் ரயிலில் ரிசர்வ் செய்திருந்தோம். பிராட் கேஜ் பாதை அமைப்பிற்காய் கும்பகோணத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து வெகு வருடங்களாய் நிறுத்தப்பட்டிருந்ததால் சிறு வயதிற்கு பிறகு இப்போதுதான் ரயிலில் சென்றேன்.

நிறைய மாறுதல்கள். கும்பகோணம் ரயில் நிலையம் முன்பை விட நன்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்து எங்கள் ஊருக்கு அரை மணி நேர பயணம். 

ஊரில் காலை உணவு என் ஃபேவரைட், பரோட்டா சால்னாதான்.  பரோட்டா என்றால் சென்னையில் கிடைப்பது போன்ற எருமை மாடு பரோட்டா அல்ல. அங்கு ரொட்டி என்று அழைப்பார்கள்.  கன்றுக்குட்டி கணக்காய் அழகாக இருக்கும். சால்னாவை ஊத்தி காலை உணவாய் சாப்பிட ஆரம்பித்தால் டின்னர் வரை சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.


ரொட்டி சால்னா என சென்னையில் ரயிலேறும்பொழுதே ஃபிக்ஸ் ஆகி சென்றால் காலையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ரொட்டி பரோட்டாகவும், சால்னா குருமாவாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று என் கனவுகளை கொடூரமாக அழித்தது. ஆயினும் மனம் தளராமல் இரவு ஒரு ஹோட்டலில் சால்னா ரொட்டி ஜோடியை தேடிப்பிடித்து குதூகலித்தேன். 


திருமண கூடத்தில் பால்ய நண்பர்களுடன்...
மறுநாள் திருமணம். சிறுவயது முதல் குளத்தில் ஒன்றாய் மூழ்கி,  வயல்களில் கிரிக்கெட் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய நண்பர்களுடான சந்திப்பு, உறவினர்களுடன் உரையாடல் என இனிதாய் சென்றது நாள்.

சென்னையில் இருந்து ஊருக்கு கிளம்ப திட்டமிடும் சமயங்களில் அவசியம் போக வேண்டுமா என பலமுறை தவிர்த்து விடுவதுண்டு.  ஆனால் அங்கு போய்விட்டு சென்னைக்கு திரும்பும் தருணங்களில் எதையோ இழந்தது போலவே இருக்கும். 


நாச்சியார்கோவில் தெரு...

நாச்சியார் கோவில் கடைத்தெரு...


இம்முறை கிளம்பும் போது அதை அப்பட்டமாக உணர முடிந்தது.  காலை போய் இறங்கிய உடனே ஆபிஸ்... ஆபிஸ் செல்வதற்கு அரை மணி நேர டிராபிக் ஜாமில் காத்திருப்பு. முதுகில் சோத்து  மூட்டை.. இன் செய்த பேன்ட்.. டைட்டான சாக்ஸ்.. இது எல்லாமே திடீரென அலர்ஜியாக தோன்றியது. பேசாமால் ஒரு வாரம் லீவ் போட்டு இங்கேயே சித்தப்பா வயலில் கரும்புகள் சரசரக்கும் ஓசையில், சரளமான காற்றில், துண்டை விரித்து போர்செட் அருகே படுத்துவிடலாமா என ஆசையாய் இருந்தது.



ஆனால் மறுநாள் சென்னையில் காலடி எடுத்து வைத்ததுமே இருக்கும் வேலைகளும் கடமைகளும் எரிமலையாய் நிமிர்ந்து வரவேற்று எரிச்சலூட்டின.  பெரும் எரிமலையில் ஊற்றப்பட்ட ஒரு குடம் தண்ணீர் போல அந்த ஊர் ஆசையை வழக்கம் போல் சென்னை சுவாஹா செய்துகொண்டு புஸ் என ஏப்பம் விட்டது.

Sukumar Swaminathan Valaimanai Kumbakonam Natchiar Koil Travel Experience


Thursday, October 27, 2011

வேலாயுதம் - ஏழாம் அறிவு - டிரா மேட்ச்




அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றுதான் இல்லை. மற்றபடி  உணர்வுப்பூர்வமாக இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் மோதிய இரண்டு பெரிய படங்கள் ஏழாம் அறிவும் வேலாயுதமும்.


சூர்யாவை விட விஜய்க்கு அதிகம் இருக்கும் மாஸ் ஃபேக்டர், ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேனர், எம்.ராஜா இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோர் செய்த நிலையில் விஜய் ஆண்டனி சிக்சர்கள் அடித்திருந்தது என வேலாயுதத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவியிருந்தது.


அதே நிலையில், நல்ல விளம்பரங்கள், கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்ட ஹைப்,  போதி தர்மன் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஹாலிவுட் பட கதைகள் போன்ற தோற்றத்தை விளைவித்த டிரைலர்,  நிறைய தியேட்டர்களை பிடித்தது, முன்கூட்டியே புக்கிங் ஆரம்பித்தது, ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தது என வேலாயுதத்தை விட ஒருபடி ஏழாம் அறிவுக்கே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

25ம் தேதி இரவு கமலாவில் ஏழாம் அறிவு பார்த்தேன். சொல்லப்பட்டிருக்கும் செய்திக்காக சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் இது என்பது என் கருத்து. 

பாடல்களை திரையில் பார்க்க விரும்பிய ஒரே காரணத்திற்காக 26ம் தேதி தீபாவளியன்று காலை பி.வி.ஆரில் வேலாயுதம் பார்த்தேன்.  இதுவரை எந்த விஜய் படத்துக்கும் முதல்நாள் போனதில்லை.

விஜய் படம் பார்க்கிறோம் என மனதை தயார் செய்து கொண்டு உட்கார்ந்தால், ஆச்சரியப்படும் விதமாக முதல் பாதி முழுவதும் கலக்கலான காமெடியுடன் செம ஜாலியாக சென்றது வேலாயுதம்.  இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் அதிகமான ஆக்ஷன் மசாலாவினால் நெடி ஏறுகிறது.

கொடுக்கும் காசுக்கு மேலாகவே விஜய் ஆண்டனியும், சந்தானமும் திருப்திப்படுத்தி விடுகிறார்கள்.  முதல் பாதியின் கிராமத்து எபிசோடினை சொல்லிய விதம் செம அட்டகாசம்.  சென்னைக்கு வந்ததும் சந்தானமும் சேர்ந்துவிடுவதால் படம் இன்னும் வேகத்தில் பறக்கிறது. சுபாவின் வசனம் கண்டிப்பாக படத்திற்கு பெரிய பலம்.

மற்றுமொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் கண்ணில் பூச்சி பறக்க விடாமல் எதேச்சையாக விஜய் சூப்பர் ஹீரோவாக உருமாறும் விதம் நிம்மதியான விஷயம். கிராமத்தில் அடிக்கும் லூட்டிகள், சந்தானத்துடன் அன்டர் பிளே, ஹன்சிகாவுடன் திணறுவது என கில்லிக்கு பிறகு விஜய்யின் காமெடி பசிக்கு வேலாயுதம் நல்ல தீனி போட்டிருக்கிறது.

படத்தில் விஜய், சந்தானத்திற்கு அடுத்து இயக்குனர் நம்பிய விஷயம் ஹன்சிகாவின் இடுப்பு.  அம்மணியை மாப்பிள்ளை, எங்கேயும் காதலை விட அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மாமா மாமா என அவர் சுற்றி வருவது செம க்யூட். அவர் முன் ஜெனிலியா ஏதோ சுமாரான பிகர் போல் இருக்கிறார்.

எனக்கு வெகுவாக பிடித்திருந்த 'ரத்தத்தின் ரத்தமே..', 'சில்லாக்ஸ்', 'மொளச்சு மூணு..' பாடல்கள் சிறப்பாக திரையில் வந்திருக்கிறது.

இன்றைய அ.தி.மு.க. கட்சிக்கூட்டங்களில் "நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...." பாட்டு கட்டாயம் ஒலிப்பது போல் எதிர்காலத்தில் விஜய் கட்சிக்கூட்டங்களில் இந்த 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் அவசியம் அலறும். அதிலும் அந்த ஓ..ஓஹோ என வரும் ராகம் செம சூப்பர். எனக்கு பெர்சனலாக இந்த பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

ஆகவே மக்களே.. இரண்டாம் பாதியில் உள்ள ஒரு சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு ஒருமுறை பார்க்க கூடிய படமாக அமைந்திருப்பதனால் என்னைப்பொறுத்த வரை வேலாயுதமும் ஏழாம் அறிவுடன் டிரா ரிசல்ட் ஆகிறது.


பின்குறிப்பு : சத்தியமா நான் விஜய் ஃபேன் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்ற :
http://valaimanai.blogspot.com/2011/10/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/08/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/02/blog-post_23.html
http://valaimanai.blogspot.com/2010/12/blog-post_20.html




Velayudham Velayutham velayudam velayutam vijay ilaya thalabadhi vijay jaym m raja oscar ravichandran velayaudam vimarsanam blogger blog review valaipadhivu vimarsanam
velayaudam reivew by tamil blogger sukumar swaminathan