Monday, December 12, 2011

ஊர் பயணம் - கும்பகோணம் - நாச்சியார்கோவில்

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார்கோவில்தான் சொந்த ஊர். நான் பிறந்ததும் அங்குதான். பணி நிமித்தமாக அப்பா சென்னையில் செட்டிலாகிவிட்டதால் ஊருடன் எனக்குண்டான தொடர்பு இலையின் ஓரத்தில் இருக்கும் ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக்கொள்வதாக மட்டுமே இருக்கும். 


சிறு வயதில் எல்லாம் கோடை விடுமுறைகள் அங்கேதான் ஆனந்தமாய் கழியும். கொஞ்சம் வளர்ந்த பிறகு நகர திமிர் பற்றிக்கொண்டு ஊருக்கு செல்லும் விருப்பம் வெகுவாக  குறைந்துவிட்டது.


பின்னர் வேலைக்கு சென்ற பின் லீவுக்கு தலையை சொறிய வேண்டி வருவதால் ஊர் பயணம் குறித்த ஆசைகளே அடியோடு மரத்துப்போய்விட்டது.



கும்பகோணம் ரயில் நிலையம்...

ஆனால் சீசன் டிக்கெட் வைத்திருப்பது போல இன்றும் அப்பாவும் அம்மாவும் மாதாமாதம் ஊருக்கு செல்லும் விதத்தில் ஏதாவது தேவை அமைந்து விடும்.

"நல்ல கால் வலிடா, உடம்பு முடியலைடா" என முன்தினம் தான் அம்மா சொல்லியிருப்பார். மதியம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது போன் வரும். எனக்கு விளங்கவே விளங்காத  சொந்தங்களை சொல்லி, "அவங்க பையனுக்கு குழந்தை பிறந்திருக்குடா.. ராத்திரி கோயம்பேடுல பஸ் ஏத்தி விடுறியா?"  என்பார். கால் வலி உடல் நோவு எங்கு போனதென்றே தெரியாது சிட்டாக கிளம்பி விடுவார்.

கும்பகோணம் வீதி..


கும்பகோணம் வீதி..

மிக முக்கியமாக நான் தலையை காட்டியே ஆக வேண்டும் என்கிற தேவைகளுக்குதான் நான் இப்பொழுதெல்லாம் ஊரை எட்டிப்பார்ப்பது. கடந்த வாரம் அப்படி தங்கையின் திருமணத்திற்காக செல்ல நேரிட்டது.

முன்கூட்டியே தேதி தெரிந்திருந்ததால் ரயிலில் ரிசர்வ் செய்திருந்தோம். பிராட் கேஜ் பாதை அமைப்பிற்காய் கும்பகோணத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து வெகு வருடங்களாய் நிறுத்தப்பட்டிருந்ததால் சிறு வயதிற்கு பிறகு இப்போதுதான் ரயிலில் சென்றேன்.

நிறைய மாறுதல்கள். கும்பகோணம் ரயில் நிலையம் முன்பை விட நன்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்து எங்கள் ஊருக்கு அரை மணி நேர பயணம். 

ஊரில் காலை உணவு என் ஃபேவரைட், பரோட்டா சால்னாதான்.  பரோட்டா என்றால் சென்னையில் கிடைப்பது போன்ற எருமை மாடு பரோட்டா அல்ல. அங்கு ரொட்டி என்று அழைப்பார்கள்.  கன்றுக்குட்டி கணக்காய் அழகாக இருக்கும். சால்னாவை ஊத்தி காலை உணவாய் சாப்பிட ஆரம்பித்தால் டின்னர் வரை சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.


ரொட்டி சால்னா என சென்னையில் ரயிலேறும்பொழுதே ஃபிக்ஸ் ஆகி சென்றால் காலையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ரொட்டி பரோட்டாகவும், சால்னா குருமாவாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று என் கனவுகளை கொடூரமாக அழித்தது. ஆயினும் மனம் தளராமல் இரவு ஒரு ஹோட்டலில் சால்னா ரொட்டி ஜோடியை தேடிப்பிடித்து குதூகலித்தேன். 


திருமண கூடத்தில் பால்ய நண்பர்களுடன்...
மறுநாள் திருமணம். சிறுவயது முதல் குளத்தில் ஒன்றாய் மூழ்கி,  வயல்களில் கிரிக்கெட் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய நண்பர்களுடான சந்திப்பு, உறவினர்களுடன் உரையாடல் என இனிதாய் சென்றது நாள்.

சென்னையில் இருந்து ஊருக்கு கிளம்ப திட்டமிடும் சமயங்களில் அவசியம் போக வேண்டுமா என பலமுறை தவிர்த்து விடுவதுண்டு.  ஆனால் அங்கு போய்விட்டு சென்னைக்கு திரும்பும் தருணங்களில் எதையோ இழந்தது போலவே இருக்கும். 


நாச்சியார்கோவில் தெரு...

நாச்சியார் கோவில் கடைத்தெரு...


இம்முறை கிளம்பும் போது அதை அப்பட்டமாக உணர முடிந்தது.  காலை போய் இறங்கிய உடனே ஆபிஸ்... ஆபிஸ் செல்வதற்கு அரை மணி நேர டிராபிக் ஜாமில் காத்திருப்பு. முதுகில் சோத்து  மூட்டை.. இன் செய்த பேன்ட்.. டைட்டான சாக்ஸ்.. இது எல்லாமே திடீரென அலர்ஜியாக தோன்றியது. பேசாமால் ஒரு வாரம் லீவ் போட்டு இங்கேயே சித்தப்பா வயலில் கரும்புகள் சரசரக்கும் ஓசையில், சரளமான காற்றில், துண்டை விரித்து போர்செட் அருகே படுத்துவிடலாமா என ஆசையாய் இருந்தது.



ஆனால் மறுநாள் சென்னையில் காலடி எடுத்து வைத்ததுமே இருக்கும் வேலைகளும் கடமைகளும் எரிமலையாய் நிமிர்ந்து வரவேற்று எரிச்சலூட்டின.  பெரும் எரிமலையில் ஊற்றப்பட்ட ஒரு குடம் தண்ணீர் போல அந்த ஊர் ஆசையை வழக்கம் போல் சென்னை சுவாஹா செய்துகொண்டு புஸ் என ஏப்பம் விட்டது.

Sukumar Swaminathan Valaimanai Kumbakonam Natchiar Koil Travel Experience


8 comments:

துளசி கோபால் said...

ஊர் வாசனை போறது கஷ்டம். அது தலைக்குள்ளேயே உக்காந்துருக்கே!

உங்க ஊர் கோவில்...ஹைய்யோ!!!! சொல்ல வார்த்தைகள் இல்லை!!!! அந்த கல்கருடன்.....ஆஹாஆஹா....

கோவிலின் விஸ்தீரணம் இன்னும்கூட எனக்கு பிரமிப்புதான்!!!!!

Prabu Krishna said...

என்ன இது பதிவு ஏகப்பட்ட சென்சாருக்கு பிறகு வந்து இருக்கு?

ஆமா அண்ணே நாலாவது போட்டோல நடுவால நிக்கிற ஆள் யாரு?

Anonymous said...

Nice article , i do belongs to the Town where you hailed from .. good to see in blog..

Regards
Bhaskaran

CS. Mohan Kumar said...

நீங்களும் நம்ம ஊரா? சொல்லவே இல்ல?? நான் குடந்தையிலிருந்து 25 கி.மீ தள்ளி இருக்கும் நீடாமங்கலம் காரன்.

உங்க சட்டை டாலடிக்குது. சும்மா MGR மாதிரி தக தக தகன்னு மின்னுறீங்க :))

போர் செட்டை பார்த்ததும் ஆசையாக உள்ளது

BADRINATH said...

தம்பி நானும் நாச்சியார் கோவில் காரன் தான்.... என் நா கோவில் வாசம் 1961 முதல் 1978 வரைதான்... அப்போ என்னை உங்களுக்குத் தெரியாது... அதுக்கப்பறம் சென்னை வந்துட்டேன்..அப்பப்ப மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வருவேன்...
பத்ரிநாத்

Anonymous said...

வலையுலகில் கும்பகோணம் பகுதியினர் நிறைய இருக்காங்க போல. நானும் கும்பகோணத்திலதான் இருக்கேன்.மிக்க மகிழ்ச்சி.---செழியன்.

sowri said...

I am glad to know you are from Kumbakonam..Me too:)

ராம்ஜி_யாஹூ said...

good writeup with good photos