
இதோ இந்தியா உலகக்கோப்பையினை இரண்டாம் முறையாய் வென்றே விட்டது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத இத்தருணத்தை ஒரு டைரிக்குறிப்பின் அளவிற்கேனும் பதிவு செய்து வைத்து விட மனம் ஆசைப்படுவதால் கொண்டாட்டங்கள் முடித்த உடனேயே இந்த பதிவை எழுத உட்கார்ந்துவிட்டேன். ஏனெனில் இந்த நிமிடங்கள் அபூர்வமானவை. உற்சாகமூட்டுபவை. பெருமைப்பட வைப்பவை. இதை அப்படியே விட்டு விட மனதில்லை.

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோனி சொல்லியிருந்தார். இந்த உலகக்கோப்பையை சச்சினுக்காக பெற்றுத்தருவோம் என்று. அதே போல் இன்று சச்சின் கையில் கோப்பையை பார்க்க மகிழ்சசியாக இருக்கிறது. அனைவரும் அவரை தலையின் மேல் தூக்கி வைத்து வலம் வருவது சிலிர்ப்பாக இருக்கிறது.
பங்களாதேஷ் உடனான முதல் போட்டி ஆரம்பித்த அன்று எனது ஃபேஸ்புக் புரஃபைல் புகைப்படத்தை இவ்வாறாக மாற்றினேன். ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது இம்முறை தோனி மீது. ஐபிஎல் வென்றதும், சாம்பியன்ஸ் லீக் வென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
முதல் சுற்றுகள் முடிந்த உடன், இருந்த நம்பிக்கைக்கு எல்லாம் அடுத்தடுத்து சோதனையாக அணிகள் வரிந்து கட்டி வரத்துவங்கின. முதலில் ஆஸ்திரேலியா. மூன்று முறை உலக சாம்பியன்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த காலிறுதி போட்டி அதிகபட்சமாக இதயத்துடிப்பை எகிறச்செய்தது. கடைசி ஓவர்களில் யுவராஜும் ரெய்னாவும் தில்லாக விளையாடி வென்றது மறக்க முடியாத அனுபவம். பார்க்கும் நமக்கே படபடப்பாய் இருக்கிறதே.. எப்படி இவர்கள் நின்று விளையாடுகிறார்கள் என நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டேன். என்றைக்கு ஆஸ்திரேலியாவை கோப்பை பெற முடியாமல் தோற்கடித்து அனுப்பினார்களோ அன்றே நாம் முழு வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.
அடுத்து பாகிஸ்தான் அரையிறுதியில். அந்த ஆட்டத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அளவிற்கு படபடப்பை எகிறச்செய்யும் டைட் மேட்சாக இல்லையென்றாலும் மோதும் அணிகளுக்கான மதிப்பு மற்றும் பகை நாடுகள் என்ற பொதுவான பதம் காரணமாக இந்தியா ஜெயிக்கும் வரை படபடப்பாகவே இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பாக் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அப்ரிடி பேச்சு உண்மையான ஸ்போர்ட்மேன் ஷிப்பை வெளிப்படுத்தியது.
அடுத்ததாக இலங்கை. இங்கிலாந்தை விக்கெட் லாஸ் இன்றி அவர்கள் அடித்த விதம் கண்டு பயந்து போயிருந்தேன். ஆனால் இன்று தோனியும் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றிவிட்டனர்.
கோப்பையை வென்று விட்டு அதே எளிமையாக தோனி பேசுகிறார். கோப்பையை பெற்றுக்கொண்டு அணியினரிடம் கொண்டாட கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதைப்போன்ற ஒரு தலைமைப் பண்பு, திறமை, தன்னடக்கம்தான் அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.
பள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த தீராத ஏக்கத்திற்கு மருந்தாக இன்றைய சச்சின், சேவாக், பஜ்ஜியின் ஆனந்த கண்ணீர்த்துளிகள் அமைந்திருக்கின்றன. நீண்ட நாட்களாக காலில் குததியிருந்த முள் ஒன்று நீங்கினாற் போல் இருக்கிறது.
சிறப்பான இரவு. மகிழ்வாக தூங்கப்போகிறேன். தோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.



















