Sunday, February 1, 2015

இசை


எஸ்.ஜே.சூர்யா  மூளையின் ரசிகன் நான். வாலி, குஷியில் அவரது பிரில்லியன்ஸ் வெகு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நியூவில் ஒரு வித்யாசமான பேன்டஸி சப்ஜெக்டையும், அன்பே ஆருயிரேவில் நினைவலைகளை கதை சொன்ன தைரியமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு இப்போது இசையின் டிரைலரும் சேர்ந்துக்கொண்டு ஈர்ப்பை அதிகரிக்க, முதல் காட்சிக்கு சென்றிருந்தேன்.

வாலி, குஷியில் கடைபிடித்த இலைமறை தரத்தை ஏனோ நியூவிலும், அ.ஆவிலும் இழந்துவிட்டிருந்தார். பேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிக்கும் வண்ணம் காட்சிகளையும் வசனங்களையும் அதிகரித்திருந்தார். இசையில் அதேபோல் காட்சிகளும் வசனங்களும் இருக்கிறது. ஆனால் முகம் சுளிக்கும் வண்ணம் இல்லை.

வழக்கமான தனது பாணியில் கதையின் ஒன் லைனை சொல்லிவிட்டே இசையையும் ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.! இம்முறை வாலி அளவிற்கு இல்லாவிட்டாலும்  அதைப் போன்ற ஒரு நல்ல ரொமான்டிக் திரில்லரை தந்திருக்கிறார்.

முதல் பாதியில் கதையை கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டு, நிறைய காதல், கொஞ்சம் காமெடி என அலுக்காமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் தொடர்ந்து சீரியஸான சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகரிக்கிறது. 'அட.. தெரிஞ்சதுதான' என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராத டிவிஸ்ட்டை வைத்து நிமிர்ந்து உட்கார செய்கிறார். 'முடிவு என்னாக போகிறோதோ' என நாம் நினைக்கும் போதே பெரிய ரிஸ்க் எடுத்து கதையின் அஸ்திவாரத்தையே மாற்றி ஒரு கிளைமேக்ஸை தந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இரண்டாம் பாதியின் முக்கிய டிவிஸ்ட் வந்த பின்னர்தான் முதல் பாதியில் இடிக்கும் விஷயங்களை ஞாபகப்படுத்தி 'அட ஆமால்ல.. சரியாத்தான் இருக்கு' என பொருத்திப் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடிக்கும் லாஜிக்குகளை கிளைமேக்ஸில் ஒரு வசனத்தில் சரி செய்து கொள்கிறார்.
ஆனால் இவ்வளவு தரமான திரில்லரை கொடுத்துவிட்டு அதற்கு ஒரு தீர்வு தந்து முடித்திருந்தால் முழுதிருப்தியோடு இருந்திருக்கும். இருப்பினும் வித்யாசமான வகையாக எடுத்துக் கொண்டால் இந்த முடிவையும் என்னால் ரசிக்கவே முடிகிறது.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார். ஒரே மாதிரியான மாடுலேஷேனில் ஒரே மாதிரியான வசனங்களை நியூவிலும் அ.ஆவிலும் அதிகம் வெளிப்படுத்தியிருந்தவர், இசையில் வெவ்வெறு உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த துவங்கியிருக்கிறார்.

சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியான ரோல். இவர் இல்லையென்றால் படமே இல்லை. மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவருடன் மிகச்சரியான இணையாக கஞ்சா கருப்பு. இருவரது காட்சிகளும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக வெகுவாக உதவியிருக்கிறது.

குளிர்ச்சியான முகவாட்டுடன் சாவித்திரி. முதல் பாதியில் வெறும் கவர்ச்சி கதாநாயகியாக வந்தாலும் இரண்டாம் பாதியில் சொதப்பாத நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஒரு வடக்கத்திய நடிகை உதட்டசைவில் அக்கறை எடுத்து நடித்திருப்பதற்காகவே பாராட்டலாம்.

மருந்து கொடுக்கும் காட்சி, பாவ மன்னிப்பு காட்சி, பேக் தொலையும் காட்சி போன்ற சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக வெற்றி பெற்றவர்கள் பல பேர் உண்டு. அந்த வெற்றியுடன் நில்லாமல் அடுத்து இசையையும் கற்று அதையும் குறிப்பிடும்படியாக முதல் படத்திலேயே வெளிப்படுத்தி சாதித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு 'தன்னம்பிக்கை தளபதி' என்ற பட்டத்தை தாராளமாக தரலாம்.

No comments: