Friday, January 16, 2015

ஷங்கரின்? ஐ!




முதலில் பாஸிடிவ் விஷயங்களை பார்த்துவிடுவோம். விக்ரம் உடலையும் உயிரையும் உருக்கி நடித்திருக்கிறார். பிரம்மாண்டமான செட்கள், அழகான லொக்கேஷன்கள், கண்ணில் ஒத்திக் கொள்ளும் ஒளிப்பதிவு, டிரென்டி பாடல்கள், வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் எமியின் பொருத்தமான வாயசைப்பு என  வழக்கமாக ஷங்கர் படத்தில் கைகூடி வரும் தரமான தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது. ஆனால் ஷங்கர்தான் இல்லை.

சின்ன சின்ன ரோலில் வருபவர்கள் கூட சங்கர் சிமென்ட் போல காலத்திற்கும் உறுதியாய் மனதில் நிற்கும் வகையில் இருக்கும் ஷங்கரின் கதாபாத்திர தேர்வு திறன் சொதப்புவது இதுவே முதல்முறை. சுரேஷ் கோபி, கதாநாயகின் அம்மா, ஆட் ஏஜென்சி முதலாளி போன்றவர்களால் ஷங்கர் படங்களின் உயர் தரம் இதில் மிஸ்ஸிங்.

 டிவிஸ்ட்களை(!) கொண்ட முக்கிய கதாபாத்திரத்தின்  'அந்த கொழந்தையே நீங்கதான் சார்' போன்ற நடிப்பில் இரண்டு சீன்களிலேயே அவர்தான் வில்லன் என குழந்தை கூட கண்டுபிடிக்கும். குறும்பட இயக்குனர்கள் கூட இந்தா சாப்டு என டிவிஸ்ட்களுக்கே டிவிஸ்ட் வைக்கும் காலத்தில் இவ்வளவு அரதப் பழசான ஒரு டிவிஸ்ட் ஷங்கர் படத்திலா?

அவ்வளவு அழகான டாப் ரேட்டட் மாடல், ஒரு பிரேக் அப்பிற்கு பிறகு யாருமே அவளை திருமணம் செய்ய முன்வரவில்லையாம்.. உடனே அவரது அம்மா இந்த அங்கிளை திருமணம் செய்ய சொல்கிறாராம்.. ஷங்கர் சார், இரண்டாயிரத்து பதினைந்திலா இருக்கிறீர்கள்..?

ஒரு திருநங்கை கதாபாத்திரம் வந்த உடனேயே 'புளியமரம்' பாடலை கைகொட்டி ஷங்கர் படத்திலா பாடுகிறார்கள்? வழக்கமான முக்கோண காதல், ஏமாற்றம், பழிவாங்கல் வேண்டாம் என நீங்கள் மாறுதலாய் நினைத்து ஒரு பெண்ணிற்கு பதில் திருநங்கை பாத்திரத்தை வைத்திருக்கலாம். ஆனால் அவரது காதல், சீரியசாக காண்பிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா..? விக்ரம் அவரை உதறி விட்டு வந்ததும் அவர் படுத்துக்கொண்டே அழுகையில் தியேட்டரில் எல்லோரும் சிரிக்கிறார்கள். கடைசி வரை அவர் காதலிக்கும் போர்ஷன்கள் காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கிறதா.. இல்லை சீரியசாக சொல்கிறீர்களா என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருந்ததால், அவர் பழிவாங்க கிளம்புவது சத்தியமாக மனதில் ஒட்டவில்லை.

அடுத்த பழிவாங்கி ராம்குமார். கம்பீரமான அவரது தோற்றம், உடைகள் எல்லாமே ஓகே. ஆனால் குரல், டோன் சரியாக இருக்கிறதா..? முக்கிய இடங்களில் அவர் இழுத்து இழுத்து பேசுவது பெரும் பின்னடைவு.

இன்னுமொரு முக்கிய வில்லன், அந்த விளம்பர மாடல் ஹீரோ. அவர் இன்னும் சுத்தம். அவரும் கதாநாயகியின் அம்மாவாக வருபவரும் பெண் பார்க்க வருபவரும் இஷ்டம் போல இந்தியில் பேச, கொஞ்சம் கூட சின்க் ஆக்க கஷ்டப்படாமல் தமிழில் டப்பிங் பேசி இருக்கிறீர்கள். ஒருவேளை பாலிவுட்டுக்கு பயன்படட்டும் என விட்டீர்களோ என்னவோ.. ஷங்கர் படம் பார்க்கிறோமா அல்லது பாலிமர் சேனலில் டப்பிங் சீரியல் பார்க்கிறோமா என்பது போல் இருந்தது.

ஷங்கருடன் ஏ.ஆர் என்றால் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும்..? ஜெ.மே துவங்கி எந்திரன் வரை ஒவ்வொரு படத்தின் இசையும் சீன் பை சீன் மனப்பாடமாய் மனதில் இருக்கிறது. ஆனால் 'ஐ'யில்.. ?

வேறு மாடல் வேண்டும் என்கிற நிலையில் லோக்கல் விளம்பரங்களில் நடிக்கும் நடிப்பே வராத விக்ரமை பிடித்துக் கொண்டு அவருக்காக காதலிப்பது போல நடிக்கும் அளவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம்தான் எமிக்கு என்ன..  அவரது லைனில் நடிக்க தெரிந்த வேறு ஆணழகர்களே இருக்க மாட்டார்களா?

உருவ அவலட்சணங்களை குரூரமாக கிண்டல் செய்து ஒரு காமெடி டிராக் ஷங்கர் படத்திலா? பிரம்மாண்டங்களின் ரசிகர் நீங்கள். அதற்காக இவற்றையும் பிரம்மாண்டமாக்கி அதையும் காமெடி செய்கிறேன் என புண்படுத்தி.. சாரி சார்.. இவ்வகையில் எந்திரன் உங்கள் கனவு என்றால், 'ஐ' கெட்ட கனவு!

விக்ரம் - படத்தின் பிளஸ் பாயின்ட். மைனஸ் பாயின்ட் என்னவெனில் அவர் மட்டுமே பிளஸ் பாயின்ட் என்பதுதான். முன்பு சச்சின் காலத்தில், 'நீங்க விளையாடி ஜெயிச்சா ஓ.கே. எங்களையெல்லாம் கூப்பிடாதீங்க' என்பது போல் அவருக்கு பிறகு வரும் அனைவரும் வரிசையாக அவுட் ஆகி செல்வார்கள்.  அது போல, விக்ரம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கதற கதற நடித்திருக்கிறார். என்ன பயன்.. சச்சின் செஞ்சரி... ஆனால் இந்தியா தோற்றது  கதைதான்!

ஒரு பாடலில் வெறும் நுரையுடன் வரும் ஏமி, திருநங்கை பாத்திர சித்தரிப்பு, யூடியூப் போன்ற வசனங்கள், உருக்குலைந்தவர்களை கிண்டல் செய்வது என இந்த படம் ஒரு புதிய ஜானரில் வந்திருக்கிறது.

ஆக இதை முன்னோடியாக வைத்து, இனி இது போல படம் எதுவும் வந்தால்  U சான்றிதழுக்கு மேலே U/A  அதுக்கும் மேலே A என இருந்தது போக, இனி அதுக்கும் மேலே 'I' சான்றிதழ் வழங்கலாம்.


இணைப்பு : ஷங்கரை வியக்கவும் ரசிக்கவும் தவறியதில்லை!
http://www.valaimanai.in/2012/01/blog-post_13.html
http://www.valaimanai.in/2010/10/blog-post_08.html