Wednesday, October 29, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 29 10 14

நல்லவேளை பால் விலையைத்தான் ஏத்தி இருக்காங்களாம். நாங்கூட டீ, காபி விலையைத்தான் ஏத்திட்டாங்களோன்னு பயந்துட்டேன். இதுக்கும் மக்களின் முதல்வர்க்கு நன்றி சொன்னோம்னு வழக்கம்போல ஜெயா டிவியில் போட்டுக்கோங்க தல.

•••
படிக்கிறோமோ இல்லையோ எது கிடைத்தாலும் ஃபார்வார்ட் செய்யும் முரட்டு வியாதிக்கு பெயர் என்னவென்று தெரியவில்லை. 'Advance Diwali Wishes' என இன்று காலை வாட்ஸப்பில் ஒரு மெசேஜ். அதுக்குங் கீழே 'First wishes best wishes'னு கேப்ஷன் வேற.

•••
'இந்த முகத்தை யார் காசு கொடுத்து பார்ப்பது?' என முதல் படத்தில் விமர்சனம் செய்த பத்திரிக்கையை, ஐம்பது படங்களுக்கு பின்னர் 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என பட்டம் வழங்கச் செய்ய வைத்தது துணிவு, தன்னம்பிக்கை, அயராத உழைப்பே தவிர அப்பா இருக்கிறார் என்கிற பின்னணி அல்ல.
அப்படியாகப்பட்ட திறமை படைத்த ஒரு ஆளுமை, அவரோ அவரைச் சார்ந்தவர்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த / செய்து கொண்டிருக்கும் அரசியல் ஆர்வக்கோளாறுகளினால் இன்றைக்கு சம்பாதித்த பெயரை, மதிப்பை சரித்துக் கொள்ள வேண்டிய சூழல்.
Time to lead என்கிற கேப்ஷனை நீக்கி முன்பு ஒரு படத்தை வெளியிட்டார்கள். அதற்கு ஒரு நன்றி நவிலல். இப்போது தயாரிப்பாளர்கள் பெயரை எடுத்து படத்தை வெளியிடும் நிலை. அதற்கும் நன்றி தெரிவிக்கிறார். நாளை விஜய் என்கிற பெயரையே எடுத்து படத்தை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட அதற்கும் அசராமல் நன்றி சொல்வாரோ என்னவோ. ஆளுங்கட்சி ஆதரவு ச.ம.உ அண்ணன் சரத்குமார் கூட தனது படங்கள் வெளியீட்டின் போது இத்தனை நன்றிகள் சொன்னதில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்த குடும்பத்தையே திரையரங்கத்திற்கு இழுக்கக் கூடிய சக்தியை ரஜினிக்கு அடுத்து சந்தேகமேயில்லாமல் விஜய் சம்பாதித்து வைத்திருக்கிறார். சுறா, ஆதி போன்ற டெம்ப்ளேட்களினால் அவரின் மீது ஆர்வம் விட்டுப் போன என்னைப் போன்ற பொதுவான ரசிகர்களை, நண்பன், துப்பாக்கி என பயணித்து தற்போது திரும்பி பார்க்க வைக்கிறார்.
இனி வரும் காலங்களில் அரசியல் என்ற கேள்விக்கு 'ஆம்', 'இல்லை', 'இருக்கலாம்' என சொல்லப் போகும் அவரது பதில் முக்கியமானது. மக்கள் விரும்பும் வகையில் காமெடி, ஆக்ஷ்ன், ரொமான்ஸ் யாவும் ஒன்றாக கைவரப் பெற்றவரான விஜய், அரசியலுக்கு 'இல்லை' என பதிலளித்துவிட்டு நிம்மதியாக அடுத்தடுத்த உயரங்களை தொடலாம்.
அதே சமயம்... 'ஆம்', 'இருக்கலாம்' என்று கூட பதில் சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அந்நிலையில் இந்த நன்றி அறிக்கை, சோக வீடியோக்களை விட்டுவிட்டு எதிர்வினைகளை சந்திப்பதே 'யார் பார்ப்பது?' இல் இருந்து 'அடுத்த சூப்பர் ஸ்டாரு'க்கு உயர கூடிய அளவு ஆற்றல் பெற்றவருக்கு மேலும் அழகு!

•••
தீபாவளிக்கு இப்பொழுதெல்லாம் புதுவகை குண்டுகள் வீட்டிற்குள் வந்து விழுகின்றன. தங்க நகையினை தீபாவளி பரிசாக கொடுத்து மனைவிக்கு வாழ்த்து சொல்கிறார்கள் மாடல் கணவன்கள். ஹே.. என்னங்கடா.. வர வர கலவரத்தை தூண்டுற விளம்பரங்களா வருது..?

•••
ஜெயா டிவியில் கடந்த ஞாயிறு மதியம் 'சிவகாசி'. மாலை 'பரமசிவன்' போட்டாங்க. நாங்க தல, தளபதி ரசிகர்கள் வேணும்ன்னா சண்டையை விட்டுட்டு ஆயுதங்கள்லாம் ஒப்படைச்சிட்டு சரண் அடைஞ்சு இருப்போம். இந்த மாதிரி அணு ஆயுதங்களை பிரயோகிச்சு இரு தரப்புக்கும் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி இருக்க வேணாம். 

•••

"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...?" என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்துள்ள பொக்கிஷ வாக்கியம். இன்னமும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களானால் இந்த வீடியோவை பார்த்துவிடவும். விஜய் அவர்ட்ஸை ஜீ தமிழ் கலாய்த்ததற்கு சரியான பதிலடி. 

•••
அம்மா உள்ளே சென்றது முதலே அதகளப்பட்டது பேஸ்புக். அவர் வெளியே வந்த அன்று என் டைம்லைனில் ஒரு போஸ்ட் கண்ணில் பட்டது.  

"வெற்றி.. வெற்றி.. அம்மாவுக்கு ஜமீன் கிடைத்தது". 

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு. இதுல புதுசா ஜமீனோட சொத்தையும் சேர்த்து கணக்கெடுத்தா என்னாகுறது? இதுக்குதான் 'அமைதியா இருங்க அப்ரசண்டீஸ்களா'ன்னு அம்மா வெளிய வந்ததும் அறிக்கை விட்டாங்க. 

No comments: