Wednesday, October 15, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 15 10 14



கடந்த ஞாயிறு அன்று மாலை யுவன் ஷங்கர் ராஜா இசையில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், வரலஷ்மி சரத்குமார், ஹாட் ஷு டான்ஸ் கம்பெனி வழங்கிய 'சிகாகோ' இசை நாடக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். கலைஞர்களின் அட்டகாசமான நடன அமைப்புகளுக்கு ஏற்றவாறு கண்ணைக்கவரும் ஒளியமைப்பு, அலங்கார உடைகள், அழகான பின்னணி அமைப்புகள் என அசத்தி இருந்தார்கள். பாடிக்கொண்டே நடனமாடி நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே விஷ்ணு, பவதாரிணி, யுவன்ஷங்கர் ராஜா, பார்த்திபன், நாசர், குஷ்பு, விக்ராந்த் ஆகியோர் வந்திருந்தனர். நடுவில் விஜய் சேதுபதியையும் பார்க்க முடிந்தது. மனதைக் கவரும் ஜாஸ் இசை இரவாக அமைந்தது.

•••

சூப்பர் டிடெர்ஜெண்ட் பவுடர் இருக்கான்னு கேட்டா, அப்படி ஒண்ணு வந்திருக்கான்னு எதிர் கேள்வி கேட்குறாங்க கடையில. என் தலைவி ஹன்சிகா ரெண்டு மூணு மாசமா 'சூப்பர் .. சூப்பர்'னு என்ன அழகா பாட்டு பாடி விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க... அந்த சிரிப்புக்காவது நீங்க தெரிஞ்சி வச்சிருக்க வேணாம்? என்னய்யா கடை நடத்துறீங்க?

•••

சில பாடல்கள் வழக்கமான Genreகளில் அடங்காது. 'முன்பே வா' எல்லாம் பாடலே அல்ல. அது ஒரு மாயாஜாலம். 'ஜனனி ஜனனி' தெய்வீகம். 'தென்றல் வந்து தீண்டும்போது' ஒரு மெஸ்மரிசம். 'காற்றின் மொழி' பாடலோ சிறந்த தியானம். இது போன்ற பாடல்கள், 'நான்' என்பதை மறந்து அந்தந்த இசை துகள்களில் ஒளிந்திருக்கும் வேறொரு உலகத்திற்குள் கரையச் செய்யும் வல்லமை பெற்றவை.

இது போல் எல்லோருக்கும் ஒரு பட்டியல் இருக்கும். எனது பட்டியலில் சமீபத்திய சேர்க்கை 'அம்மா அம்மா' பாடல். மேலே உள்ள பாடல்களுடன் இந்த பாட்டை ஒப்பிட்டு சொல்லவில்லை. அப்படி செய்யவும் முடியாது. ஆனால் ஒவ்வொரு பாட்டிற்கும் இருக்கும் தனித்தன்மை போல இந்த பாடலில் சொல்ல முடியாத துயரத்தை கொண்ட இசை துகள்கள் ஒளிந்திருப்பதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் அனிருத்!

•••


விஜய் டி.வியில் நிகழ்ச்சியை வழங்குபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். நிதானமான பாவனை, பக்குவமான பேச்சு என எளிதில் யாரையும் கவரும்படி இருப்பார். சமீபத்தில் அவர் செய்து காண்பித்த கேரளா கோழி ரோஸ்ட் சமையல் குறிப்பை கடந்த ஞாயிறு அன்று வீட்டில் செய்து பார்த்தேன். செய்வதற்கு மிக எளிமையாகவும் அட்டகாசமான சுவையுடனும் இருந்தது. முயன்று பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=cPSdKDUlODc

Tags : Vijay Tv Samayal Samayal, Venkatesh Bhat, Hot Shoe Dance Company's Chicago Musical, Hansika Super Detergent powder, Amma Amma Song VIP Anirudh

No comments: