ரா.ஒன்னில் ரஜினி. சென்னை எக்ஸ்பிரஸ் படம். வருடா வருடம் விஜய் அவர்ட்ஸ் என சமீப காலமாக வடக்குத்தளபதி ஷாருக்கின் தமிழ்மண் மீதான பாசம் என்னைப் போன்ற இளகிய மனம் கொண்ட ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது. "இங்க வர்ற உணர்வே நல்லா இருக்கு. நீங்க நான் வர்றதுக்காக விருது கூட தர வேணாம். பெரிய கலைஞர்கள் எல்லாம் இருக்கிற இந்த காற்றை சுவாசிச்சாலே போதும்" என்று அவர் சொன்னபொழுது 'அரசியலுக்கு வா தலைவா' என என்னையும் அறியாமல் உரக்க கத்திவிட்டேன். ஆனால் டிவிக்குள் இருந்ததினால் அது அவருக்கு கேட்கவில்லை. யாராவது ஹிந்தி தெரிந்தவர்கள் மக்கள் உணர்வை சொல்லி அவரை அழைத்து வந்தீர்களானால் 2016ல் கேப்டன், அடுத்த சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் செம டஃப் கொடுக்கலாம்.
•••
நேற்று முன்தினம் வில்லிவாக்கம் ரயில்வே கிராஸிங் தாண்டி ஒரு சின்னப் பையன் லிப்ட்டிற்கு கை காட்டினான். 'என் படங்கள் இங்கே இருந்து எடுக்கப்படுகின்றன' என ஆந்திராவை நோக்கி மக்கள் இயக்க கொடியில் விஜய் கை காட்டுவாரே.. அதே படம் பொறிக்கப்பட்ட கர்சீப் கையில்.
திங்கட்கிழமை காலை அதுவுமா நல்ல தீனிதான் என நினைத்து ஏற்றிக் கொண்டே பேச்சு கொடுத்தேன்.
"என்னய்யா.. விஜய் ஃபேனா...?"
"ஆமாண்ணா.." என பிரகாசமாகி விஜய்யின் வீர தீர பராக்கிரமங்களை மூச்சு விடாமல் எஸ்.பி.பி போல பாட்டாவே பாடிக்கொண்டு வந்தான். ஐ.சி.எப் சிக்னலுக்கு முன்னர் நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டு "தேங்கஸ்ண்ணா" என்றவனிடம் நான்,
"ஆமா.. உங்களுக்குதான் இளைய தளபதின்னு பட்டம் இருக்குல்ல. ரஜினியோட சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏன்யா எடுத்துக்கிட்டீங்க" என்றேன்.
"அவர்தானண்ணா பர்ஸ்ட்டு இளைய தளபதியா நடிச்சாரு!" என்று ஒரு குண்டை போட்டான்.
"என்னய்யா சொல்ற.. இது எப்போ நடந்துச்சு" என்றேன் அதிர்ச்சியாய்.
"ஆமாண்ணா.. கோச்சடையான் பாத்தீங்களா.. அதுல இளமையா தளபதியா நடிச்சாருல்ல... அதுக்கு நாங்க ஏதாச்சும் கேட்டோமா??" என்றான் சீரியஸாய்.
இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் விஜய் அண்ணாவை யாரும் அடிச்சிக்க முடியாது என நினைத்துக் கொண்டே "நீயெல்லாம் நல்லா வருவய்யா.. நல்லா வருவ.." என சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினேன்.
No comments:
Post a Comment