Thursday, November 15, 2012

விஜயிஸம் இல்லாத துப்பாக்கி | வலைமனை



"துப்பாக்கி சூப்பரா இருக்கு. விஜய் படம் மாதிரியே இல்ல." என முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
கேபிள்ஜி, "அதனாலதான் நல்லாயிருக்கு" என ரிப்ளையிட்டிருந்தார்.

உண்மை! விஜய், டைரக்டர்ஸ் ஹீரோவாக தனது கேரியரில் இரண்டாம் இன்னிங்ஸை நிதானமாக துவக்கி வெற்றிகரமாக ஆடி வருகிறார்.

என்னதான் காவலன், நண்பன் என துப்பாக்கிக்கு முன்னரே இரண்டு படங்களில் 'விஜயிஸம்' தென்படவில்லை என்றாலும், குருவி, சுறா, எறா, புறா என பெயர் கூட ஞாபகம் இல்லாத தொடர் விஜய் படங்களில் செமத்தியாய் நாம் அடி வாங்கி இருந்ததால் காவலன், நண்பன் முதலிய படங்களின் மூலம் ரிலீஃப் கிடைத்ததே தவிர நாம் ரிக்கவர் ஆகவில்லை.

ஆனால், துப்பாக்கி படம், விஜயிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாய் குணப்படுத்துகிறது. அமைதியாய், அழகாய், ஸ்மார்ட்டாய், க்யூட்டாய் என காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக காலத்தில் நம் வீட்டு சமத்துப் பிள்ளையாக பெயர் பெற்றிருந்த விஜயை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.

இதே படத்தில் 'விளம்பர தளபதி சூர்யா' நடித்திருந்தால், ஓவர் ஸ்மார்ட்னெஸ் சிரிப்புடன், சட்டையை கழற்றி வீசி சிக்ஸ் பேக்குடன் என சூர்யாயிஸத்தை தெணற தெணற அடித்திருப்பார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் விஜய்க்கும் நாம் முதலில் நன்றி சொல்லிக்கொள்வோம்.

எப்பொழுதும் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலும் நயாபைசாவிற்கு கூட தேறவில்லை. பாட்டு ஹிட்டடிக்குது படம் மொக்கை வாங்குதே என யோசித்து வேண்டுமென்றே ரிவர்ஸ் டெக்னாலஜியில் பாடல்களை மொக்கையாக இசையமைத்தாற் போலிருக்கிறது.

ஆங்.. அப்புறம் படத்தில் காஜல் இருக்கிறார். எனக்கென்னவோ மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி மஹதீராவிற்கு பிறகு காஜலுக்கு சரியான கேரக்டர் மட்டும் அல்ல சரியான காஸ்ட்யூம் கூட தரப்படவில்லையென்ற குறை இருக்கிறது.

எனர்ஜியான், ஒலிம்பிக், டி.என்.ஏ, விஞ்ஞானம் என பல விஷயங்களை கலக்கியெடுத்து கே.வி.ஆனந்த் மாற்றானிலும், ஜுடோ, பேட்மேன், அயன்மேன், சுத்தியல் என மிஸ்கின் முகமூடியிலும் வரிந்து கட்டிக்கொண்டு மானாவாரியாக கதையை கொத்து போட்டு வெத்து ஆக்கியது போல அல்லாமல் 'ஸ்லீப்பர் செல்ஸ்' என்கிற ஒரேயொரு டாபிக்கை தேசபக்தி கொண்ட கதாநாயகன் மூலம்  சுவாரஸ்யமாகவும் சிம்பிளாகவும் குழப்பாமல் சொல்லி ஜெயித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இனிமேல் விஜய் படங்களிலும் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்து அவரது அடுத்த படத்தை சாமான்ய ரசிகரையும் எதிர்பார்க்கச் செய்ய வைத்த வகையில் துப்பாக்கி மாபெரும் வெற்றி பெறுகிறது!

வெல்கம் பேக் விஜய்! வி ஆர் வெயிட்டிங்!