சில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார். இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.
அமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.
இதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.
ஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழிலதிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.
இந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.
இடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.
படத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.
வீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.
இந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே.! வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை "நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)
முதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் - அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.
இந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
16 comments:
இன்னும் படம் பார்க்கவில்லை . பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன் . உங்களின் பார்வையில் சிறப்பு
நீங்கள் சொன்ன அந்த ஒரு காட்சி குழு கற்பழிப்பு காட்சி தானே...
ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடலை பற்றி எதுவும் கூறவில்லையே...
@ நன்றி பனித்துளி சங்கர்..
@ philosophy prabhakaran
நன்றி வருகைக்கு..
வந்தனம் என்று அந்தப்பாடல் துவங்குகிறது நண்பரே.. அது குறித்து எழுதியுள்ளேன்....
நான் சொன்னது அந்த காட்சி அல்ல... சசிகுமார் பெயர் வரும் காட்சியை.. சசிகுமார் படம் என மனதில் வைத்து பார்த்தால் படத்தை ரசிக்க முடியவில்லை... ஆதலால்தான் அப்படி சொன்னேன்...
(பதிவின் கடைசி பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேனே பாஸ்)
good review sir
ரைட்டு தல..
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏமாற்றம் தான்.!!!
Good review for a "not so good" movie... ha,ha,ha,ha....
தம்பி சுகுமார். கலக்குற..
அட இதையும் சாய்ஸ்ல விடலாமா..?
மன்மத அம்பு தான் பாக்கி.
// எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம் //
நான் இதை வேறு அர்த்தத்தில் புரிந்துக்கொண்டேன்... அதாவது அவரது பெயர் திரையில் வரும்போது வேறு ஏதோ ஒரு காட்சி பேக்ரவுண்டில் வரும் என்று கருதினேன்...
Good review
Escape!!!
தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
சசி இப்பிடி ஏமாத்திட்டாரே
நல்ல விமர்சனம் நன்றி
பரவாயில்ல சாரே... வந்தனமாம் வந்தனம் பாட்டுக்காக மட்டுமே மன்னிக்கலாம்.அந்த ராத்திரி பட்டியோட படத்த விட எவ்வளவோ தேவலை....
Post a Comment