Thursday, January 13, 2011

ஒளியிழந்த புத்தக கண்காட்சி



புத்தக கண்காட்சி குறித்து பல பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. பல கட்டுரைகள், பல ஆச்சரியங்கள், பல அனுபவங்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக புத்தக கண்காட்சியில் கம்பீரமாய் வீற்றிருந்த ஒரு அரங்கம் இந்த கண்காட்சியில் இல்லை. இது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. குறைந்த பட்சம், 'காலையில் இருந்து ஒரு மார்கெட்டிங் கால் கூட வரலையே' என செல்போனை எடுத்து வேதனையுடன் பார்க்கும் அளவிற்கு கூட யாரும் இந்த இழப்பை உணர்ந்ததாக தெரியவில்லை. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஒரு சக பதிப்பகத்துக்கு செய்யும் மரியாதை இதுதானா? கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் கூட இதை கவனித்ததாக தெரியவில்லை. யாருக்கும் மனசாட்சியே இல்லையா...?


இதற்கு முன்பான பல புத்தக கண்காட்சிகளில் அந்த அரங்கத்தை பார்த்திருக்கிறேன். மற்ற எந்த ஸ்டாலிலும் கிடைக்கப்பெறாத அரிய வகை ஆன்ம பேரின்ப உணர்வு அந்த ஸ்டாலில் மட்டுமே நிறைந்திருக்கும். ஆம்வே பேஸ்ட் போட்டு விளக்கியோ இல்லை ஏதோ ஒரு கிராபிக் டிசைனரின் ஆர்வத்தின் பயனாகவோ விளைந்த முத்து போன்ற பற்களுடன் பளிச்சென்று சிரித்தபடி கும்மென்று இருப்பார் புன்னகை தளபதி நித்தி. திடீரென பரண் மேல் இருந்து 'ச்சுச் ச்சுச் சூ..' என கத்தும் பல்லியை "என்னடா ராஜா... பசிக்குதா...?" என அன்போடு பார்ப்பது போல் அவரது விழிகள் இடது பக்கம் உயரத்தில் நிலைத்திருப்பது போன்ற திரு உருவம் தாங்கிய க்ளாஸி பிரிண்ட் பேனர்கள் வண்ணமயமாக அந்த அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும். பல பேனர்களில் அவரது இதழில் ஐந்து எம்.எல் அளவில் சிறிய அம்சான புன்னகை நிறைந்திருக்கும். இரண்டு லிட்டர் அளவில் ஆழி பேரலை போன்ற சிரிப்புடனான அவரது படங்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே தென்படும். அவ்வகை படத்தை காண்பதரிது. அதை காணும் பேறு பெற்றிடாதவர்கள் அடுத்த ஜென்மத்திலும் மனிதனாய் அவதரித்து தொடரும் கர்ம வினையை அனுபவிக்க நேரலாம் என்பதால் நெட்டில் தேடியாவது பார்த்துவிட்டு படிப்பதை தொடரவும்.

 'மானே தேனே பொன்மானே' எல்லாம் போட்டுக்கொள்வது போல் பேனர்களுக்கு இடையே அரங்கத்தில் ஆங்காங்கே புத்தகங்களும் வைக்கப்பட்டிருக்கும். விருப்பப்படுகிறவர்கள் வாங்கிச் செல்லலாம். விருப்பப்படாதவர்கள்? பொறுமை வேண்டும் அன்பர்களே வாழ்க்கையில்.. வருகிறேன் இருங்கள். வெளியே ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் சிறிய மசாலா வேர்க்கடலையை வாங்கி கொறித்துக்கொண்டே எந்த புத்தகமும் வாங்கும் நோக்கமில்லாமல் மாலுமி இல்லாத கப்பல் போல் அங்கும் இங்கும் அலைந்து இளம் பெண்களை சைட் அடித்துக்கொண்டு கண்காட்சியில் திரியும் அப்பாவி இளைஞர்கள் சிலர் காற்று வேகத்தில் நமது கடைப்பக்கமும் ஒதுங்குவர். அவர்களுக்கு மோட்சம் கொடுக்கும் விதத்தில் காவி உடை அணிந்த கம்பேனியின் கொள்கை விளக்க செயலாளர்கள் சிக்கிய ஆட்டை கப்பென பிடித்து அய்யனின் அருட் பராக்கிரமங்களை விளக்கி பீடத்திலிருந்து வெளிவரும் மாதாந்திரியோ வாராந்திரியோ ஏதோ ஒரு திரிக்கு சந்தா கட்ட சொல்லி மனதில் ஏதாவது தெய்வீக மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள்.

 அப்படி ஒரு வேர்க்கடலை பாக்கெட்டுடன் அடியேன் அய்யனின் அடியார்களிடம் சிக்கிய ஒரு புத்தக கண்காட்சியில்தான் அந்த அனைத்துமான பேரொளியின் பராக்கிரமங்களை முதன்முதலாக நான் அறியும் பாக்கியம் பெற்றேன். பல நாட்களாக ஞானத்தை நோக்கிய உள்மன தேடுதலும் கூட சேர்ந்து கும்மியடித்து தூண்டி விடவே அன்று நூறு ரூபாய்க்கு 'தியானம்' என்கிற எழுத்தாளர் நித்தியின் சித்தி பெற்ற அந்த புத்தகத்தை வாங்கினேன்.

 பாதியளவே படித்திருந்த நிலையில் என்னை விட அதிக தெய்வாம்சம் கொண்ட நண்பன் ஒருவன் அந்த புத்தகத்தை என்னிடமிருந்து ஆட்டையை போட்டு அருளினான். புத்தகத்தில் ஒரே ஒரு விஷயம் இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. உடலில் தியானத்தின் தன்மையை அதிகரிக்கவும், ஆத்ம சுத்தத்தை எப்போதும் வைத்திருக்கவும் உதவும் ஒரு சாலட். தயிரில் புடலங்காய், பாகற்காய் போன்றவைகளை ஊறவைத்து உண்ண சொன்ன டெரர்ரான ரெசிப்பி அது. படித்த போதே குமட்டிக்கொண்டு வந்த வகையில் அந்த புத்தகமானது சிறு வயதில் உடன் படித்த தனலட்சுமி என்னுடன் 'கா' விட்ட நிகழ்வு பதிவாகியிருக்கும் மூளையின் ஏதோ ஒரு மெமரி செல்லின் அருகிலேயோ அல்லது தூரத்திலேயோ காலியாக இருந்த மற்றொரு செல்லில் தீர்க்கமாக பதிவாகி இருக்கிறது.

நிற்க.

சன் டி.வி. கடந்த வருடம் எடுத்த எந்திரன் படத்திற்கு அடுத்தபடியாக பிரபஞ்சமெங்கும் பிரசித்தி பெற்ற 'நித்தியின் சித்து விளையாட்டு' வீடியோ உலகெங்கிலும் ஹிட் ஆகி கொண்டிருந்த தருணத்தில் நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் ரயிலடி புத்தக கடை நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் அங்கு இருக்கும் நித்தியின் தியான புத்தகங்கள் அன்று இல்லை.

"என்ன பாஸ்.. வீடியோ வெளியானதுக்கு அப்புறம் புக்கை எல்லாம் எடுத்து ஒளிச்சு வச்சிட்டீங்க போல.." என்றேன்.

 "அட நீங்க வேற.. வீடியோ வந்த உடனே எல்லா புக்கும் ஒரே வாரத்துல வித்து தீர்ந்து போச்சுங்க... அவரோட புக்கு இருக்கானு வந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று ஆச்சரிய தகவல் அளித்தார்.

சாமி வீடியோவில் வந்தது போல் 'சமாதி நிலை' குறித்து புத்தகங்களில் விளக்கி இருக்கக்கூடும் அது குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்கிற அறியாமையில் வாங்கி சென்றிருப்பார்களோ என்னவோ. இதனால்தான் எனக்கு இம்முறை கண்காட்சியில் அந்த அரங்கம் அமைக்கப்பெற்றிருந்தால் எந்த வருடத்தை விடவும் 'கூட்டம் சும்மா கும்மியிருக்குமோ' என தோன்றுகிறது.

15 comments:

Admin said...

இதோ வந்திட்டன்..........

Anand said...

அலுவலகத்தில் இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அருமை !!.

Admin said...

//திடீரென பரண் மேல் இருந்து 'ச்சுச் ச்சுச் சூ..' என கத்தும் பல்லியை "என்னடா ராஜா... பசிக்குதா...?" என அன்போடு பார்ப்பது போல் அவரது விழிகள் இடது பக்கம் உயரத்தில் நிலைத்திருப்பது போன்ற திரு உருவம் தாங்கிய க்ளாஸி பிரிண்ட் பேனர்கள்//

சிரிப்புத் தாங்கல.. ரொம்ப குசும்பு ராஜா உமக்கு... பதிவு சூப்பர்

கோவி.கண்ணன் said...

//ஆம்வே பேஸ்ட் போட்டு விளக்கியோ இல்லை ஏதோ ஒரு கிராபிக் டிசைனரின் ஆர்வத்தின் பயனாகவோ விளைந்த முத்து போன்ற பற்களுடன் பளிச்சென்று சிரித்தபடி கும்மென்று இருப்பார் புன்னகை தளபதி நித்தி. //

சதா அருள்பாலிக்கும் அவருடைய சூரியனை ஒத்த கண்களைக் குறிப்பிடலையா ?
:)

Sukumar said...

ஆஹா.. துள்ளி குதிச்சு ஓடி வரீங்களேய்யா.. நன்றி துயரி...

Sukumar said...

Thanks Anand...!!
அப்பாடா.. சிரிப்பு வந்துச்சா.. நாங்கூட அதை நெனச்சுதான் பாஸு எழுதுனேன்....

Sukumar said...

// கோவி கண்ணன் //
நன்றி வருகைக்கு,,
ஆஹா.. ஆமாம் சார்.. தெய்வ குத்தம் ஆகிப்போச்சே இப்போ என்ன பண்றது...

Krubhakaran said...

அடி தூள், கலகிட்டீங்க பாஸ். அப்படியே கவிஞர் வாலி பேசரதையும் கேளுங்க.
http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

Thirumalai Kandasami said...

கூட்டம் சும்மா கும்மியிருக்குமோ



Aamam..

http://enathupayanangal.blogspot.com

Ram said...

பல இளைஞர்களின் விடிவெள்ளியை இப்படியா செய்வது.. உங்க பேச்சு நான் 'கா'.!!!

Jegan said...

தலைப்புக்கும் உள்ளே இருக்கும் விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கே.. :-)

Chitra said...

"அட நீங்க வேற.. வீடியோ வந்த உடனே எல்லா புக்கும் ஒரே வாரத்துல வித்து தீர்ந்து போச்சுங்க... அவரோட புக்கு இருக்கானு வந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று ஆச்சரிய தகவல் அளித்தார்.


....வெளங்கிரும்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

பழமைபேசி said...

தலை, ரெண்டு புத்தகம் இங்க அனுப்பி வையுங்க!!

Prabu Krishna said...

இப்போ அந்தாளும் ரிப்பீட்டு புத்தக கண்காட்சியும் ரிப்பீட்டு

Prabu Krishna said...

இப்போ அந்தாளும் ரிப்பீட்டு புத்தக கண்காட்சியும் ரிப்பீட்டு