Friday, January 11, 2019

பேட்ட & விஸ்வாசம்



விஸ்வாசம்

எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி நடிப்பில் இறங்கி அடிக்கும் அஜித்தைப் பார்த்து. ரசிகர்களுக்கு முதல் பாதியே நல்ல விருந்து. பில்ட் அப்கள், ஊரே தரும் மரியாதை என வழக்கமான டெம்ப்ளேட்டில் படம் துவங்குகிறதே என நினைத்தாலும், பதினைந்து நிமிடங்களில் பிளாஷ் பேக் அஜித் முகம் காட்டிய பின் ஆசுவாசப்படுத்துகிறார்.


அலப்பறையான அஜித். வாய்ஸ் மாடுலேஷேன், மேனரிஸம்ஸ் என  சான்ட்விச், பிஸ்ஸா போல வறட்சியாக நடித்துக் கொண்டிருந்தவர், பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒரு தமிழ்நாடு மீல்ஸ் பார்சல் சொல்கிறார்.


முதல் பாதியில் நயன்தாரா, லொகேஷன்ஸ், காஸ்ட்யூம்ஸ், கலர் டோன்ஸ் என கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஓவர் டூ பாம்பே ஆகி தந்தை மகள் பாசம், குழந்தை வளர்ப்பு என நல்ல பேமிலி டிராமாவாக முடிகிறது.


தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு மாஸ் மசாலாவாக இல்லாமல் நல்ல கருத்தை வலியுறுத்தும் விதத்தில் இதுபோன்ற கதைக்களனில் நடித்த அஜித்தும், இதை வடிவமைத்த சிவாவும் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.


தம்பி ராமையா, ரோபோ சங்கர் போன்றவர்களின் அபத்தமான மேக்கப், விவேக் உள்ளிட்டு அனைவரின் மொக்கை காமெடி, அடிக்கடி வரும் துரத்தல், அடிதடி என  படத்தில் சிலபல குறைகள் உண்டு. ஆனாலும் அவை இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எனும் வகையே தவிர, அய்யோ சாமி ஆளை விடுங்கடா எனும் வகையல்ல.


பேமிலி ஆடியன்ஸ் தவிர்த்து பொது ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றமுடியாமால் போகலாம். ஆனால் அஜித்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி துள்ளலாக பார்க்கும் வகையில் தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து இந்த விஸ்வாசம்.



பேட்ட! 

 ஃபேன் மேட் டிரைலர், ஃபேன் மேட் போஸ்டர் பார்த்திருப்போம். இது ஃபேன் மேட் ஃபீச்சர் பிலிம். மொத்த படத்தையும் தலைவர் ரசிகராய் இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.


டைட்டிலில் துவங்கி எந்தெந்த கோணங்களில், விதங்களில், ஒலியில் ரஜினியை இதற்கு முன்னர் ரசித்தோமோ அதையெல்லாம் எடுத்துக் கொண்டு முதல் பாதி முழுவதும் காளியாட்டம் ஆடியிருக்கிறார் கார்த்திக்.


வசனம், காட்சியமைப்புகள், லொக்கேஷன்ஸ், நடிகர்கள் என முதல் பாதி ஹைஸ்பீடில் பறக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என அனிருத்தும் தன் பங்கிற்கு ஆட்டம் ஆடுகிறார். சிம்ரன் எபிஸோட் எல்லாம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் எனும் ரகம்.


முதல் பாதி தந்த பரவசத்தை இரண்டாம் பாதி பதம் பார்க்கிறது. ரொம்ப இழுவையான காட்சியமைப்புகள், அதிகப்படியான ஆக்ஷன் காரம் என கொஞ்சம் பொறுமையை சோதித்து பிறகு முடியும் தருவாயில் சின்ன டிவிஸ்ட் அப்புறம் ஒரு குட்டிக் கதை டிவிஸ்ட் என சின்ன ஆறுதலோடு முடிகிறது படம்.


நவாசுதீன், சிம்ரன், விஜய் சேதுபதி அருமை. பாபி சிம்ஹா, சசிக்குமார் பரவாயில்லை. திரிஷாவெல்லாம் அநியாயம்.


இரண்டாம் பாதியில் பிளாஷ் பேக் தவிர்த்து வெறும் துரத்தல் பழிவாங்கல் என வெகு நேரம் ஆடாமல் அசையாமல் செல்லும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


முதல் பாதி மாஸ். இரண்டாம் பாதி மரணம்!



Viswasam, Petta, Review, Valaimanai