Monday, January 31, 2011

மறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை




நான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு இன்று (31.01.2011) இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...  
















Tuesday, January 25, 2011

ஃபீலிங்ஸ் 25 01 11


டந்த பதிவில் நித்தியை கிண்டலடித்ததாலோ என்னவோ ஒரு வைரஸ் அஸ்திரம் வந்து தாக்கி.. ஒரு வார காலம் வைரஸ் பீவரால் ஹாஸ்பிட்டலில் சமாதி நிலை அடைய வேண்டியதாகி விட்டது. சீ சீ.. நீங்க நினைக்கிற மாதிரி நித்தி சமாதி நிலை அல்ல. (ஆஹா மறுபடி கலாய்ச்சிட்டேனே.. சாமி மன்னிக்கனும்...)

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ராகவன் அவர்கள் எழுதிய காஷ்மீரை முழுவதும் படித்து முடித்து விட்டேன்.

இந்த உடல்நிலை கோளாறால் பல பணிகள் முடங்கிவிட்டன.  ஆயினும் வந்த உடன் முதல்வேலையாக செய்ய வேண்டியிருந்த பேனர்களை செய்து அனைவருக்கும் அனுப்பிவிட்டேன். யாருக்கேனும் கிடைக்கவில்லையென்றால்  எனக்கு அடுத்த ஜுரம் வருவதற்குள் பின்னூட்டமோ மெயிலோ தட்டி விடவும்.


ர்டெல்லின் புதிய லோகோவை பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாத எரிச்சல் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை.  அதன் பழைய லோகோ  கம்பீரமாகவும் இது ஏதோ காமெடி பீஸ் போலவும் எனக்கு தோன்றுகிறது. (அது சரி ராசா ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மாட்டுனதுக்கு அப்புறம் லோகோவை மாத்துனாங்களே.. அதுல ஏதாவது நுண்ணரசியல் இருக்கா பாஸு?)


புத்தக கண்காட்சி குறித்த இந்த வார ஆனந்த விகடன் கலாய்த்தல் செம ரகளை. பதிவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர், அதை போட்டோ எடுத்து பெரிய விழா போல் மறுநாள் பிளாக்கில் போட்டுக்கொள்கின்றனர் என்கிற ரேஞ்சுக்கு நம்மை கலாய்த்து நமக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஹி...ஹி.. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்...


பெங்களூருவிலிருந்து என்.சொக்கன் சார் வருகிறார் என்ற உடன் அன்றே புத்தக கண்காட்சி சென்று அவரை பார்த்தேன். இனிமையாக பழகுகிறார். நிறைய பேசினோம். போட்டோ கமெண்ட்ஸ் குறித்து அவர் பாராட்டி ஊக்கப்படுத்தியது எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாதது.  அவருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக அமைந்தது.





லொயோலா கல்லூரி விஸ்காம் துறையில் அனிமேஷன் கோர்ஸ் எடுக்கிறார்கள். அங்கு எனது இளநிலை கணித படிப்பை படித்த காலத்தில் விஸ்காம் துறையை பார்க்கும பொழுதெல்லாம் பொறாமையாக இருக்கும். லொயோலா விஸ்காமில் படிக்காமல் போய்விட்டோமே என்கிற குறை ரொம்ப நாளாகவே இருந்தது. முடிந்தால் தற்போது சேர வேண்டும் என்றிருக்கிறேன்.

விபரங்களுக்கு : 9566100228



காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. "படம் பார்க்க வர்றவங்களை படம் பிடிச்சு நெட்ல விட்ராதீங்கப்பா..." என கமெண்ட் அடித்தபடியே அதைப் பார்த்து பார்த்து சிரித்தோம்.  மானேஜரைப் பார்த்து முறையிட்டாலே ஆச்சு என அடம்பிடித்தான் நண்பன். 

"அட நீ வேற.. இதுக்கெல்லாம் அவரை போய் கேட்டுக்கிட்டு.. இந்த மாதிரி வீணா போன விஷயத்துக்காகத்தான நான் பிளாக்கு வச்சிருக்கேன்,.. நாளைக்கு நியாயம் கேட்டுடலாம் விடு" என அவனை சமாதானப்படுத்தியபோது சந்தானம் போல முறைத்தான்.  (மானேஜர் சார்.. அப்படியே இன்டர்வெல்ல வாங்குன கார்ன் பப்ஸ்ல எண்ணெய் கசடு அடிச்சது.. பேலன்ஸ் கொடுத்த இருபது ரூபாய் நோட்டு கிழிஞ்சு இருந்ததுங்க... இதுக்கும் சேர்த்து ஏதாவது நியாயம் சொல்லுங்க)




Thursday, January 13, 2011

ஒளியிழந்த புத்தக கண்காட்சி



புத்தக கண்காட்சி குறித்து பல பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. பல கட்டுரைகள், பல ஆச்சரியங்கள், பல அனுபவங்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக புத்தக கண்காட்சியில் கம்பீரமாய் வீற்றிருந்த ஒரு அரங்கம் இந்த கண்காட்சியில் இல்லை. இது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. குறைந்த பட்சம், 'காலையில் இருந்து ஒரு மார்கெட்டிங் கால் கூட வரலையே' என செல்போனை எடுத்து வேதனையுடன் பார்க்கும் அளவிற்கு கூட யாரும் இந்த இழப்பை உணர்ந்ததாக தெரியவில்லை. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஒரு சக பதிப்பகத்துக்கு செய்யும் மரியாதை இதுதானா? கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் கூட இதை கவனித்ததாக தெரியவில்லை. யாருக்கும் மனசாட்சியே இல்லையா...?


இதற்கு முன்பான பல புத்தக கண்காட்சிகளில் அந்த அரங்கத்தை பார்த்திருக்கிறேன். மற்ற எந்த ஸ்டாலிலும் கிடைக்கப்பெறாத அரிய வகை ஆன்ம பேரின்ப உணர்வு அந்த ஸ்டாலில் மட்டுமே நிறைந்திருக்கும். ஆம்வே பேஸ்ட் போட்டு விளக்கியோ இல்லை ஏதோ ஒரு கிராபிக் டிசைனரின் ஆர்வத்தின் பயனாகவோ விளைந்த முத்து போன்ற பற்களுடன் பளிச்சென்று சிரித்தபடி கும்மென்று இருப்பார் புன்னகை தளபதி நித்தி. திடீரென பரண் மேல் இருந்து 'ச்சுச் ச்சுச் சூ..' என கத்தும் பல்லியை "என்னடா ராஜா... பசிக்குதா...?" என அன்போடு பார்ப்பது போல் அவரது விழிகள் இடது பக்கம் உயரத்தில் நிலைத்திருப்பது போன்ற திரு உருவம் தாங்கிய க்ளாஸி பிரிண்ட் பேனர்கள் வண்ணமயமாக அந்த அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும். பல பேனர்களில் அவரது இதழில் ஐந்து எம்.எல் அளவில் சிறிய அம்சான புன்னகை நிறைந்திருக்கும். இரண்டு லிட்டர் அளவில் ஆழி பேரலை போன்ற சிரிப்புடனான அவரது படங்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே தென்படும். அவ்வகை படத்தை காண்பதரிது. அதை காணும் பேறு பெற்றிடாதவர்கள் அடுத்த ஜென்மத்திலும் மனிதனாய் அவதரித்து தொடரும் கர்ம வினையை அனுபவிக்க நேரலாம் என்பதால் நெட்டில் தேடியாவது பார்த்துவிட்டு படிப்பதை தொடரவும்.

 'மானே தேனே பொன்மானே' எல்லாம் போட்டுக்கொள்வது போல் பேனர்களுக்கு இடையே அரங்கத்தில் ஆங்காங்கே புத்தகங்களும் வைக்கப்பட்டிருக்கும். விருப்பப்படுகிறவர்கள் வாங்கிச் செல்லலாம். விருப்பப்படாதவர்கள்? பொறுமை வேண்டும் அன்பர்களே வாழ்க்கையில்.. வருகிறேன் இருங்கள். வெளியே ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் சிறிய மசாலா வேர்க்கடலையை வாங்கி கொறித்துக்கொண்டே எந்த புத்தகமும் வாங்கும் நோக்கமில்லாமல் மாலுமி இல்லாத கப்பல் போல் அங்கும் இங்கும் அலைந்து இளம் பெண்களை சைட் அடித்துக்கொண்டு கண்காட்சியில் திரியும் அப்பாவி இளைஞர்கள் சிலர் காற்று வேகத்தில் நமது கடைப்பக்கமும் ஒதுங்குவர். அவர்களுக்கு மோட்சம் கொடுக்கும் விதத்தில் காவி உடை அணிந்த கம்பேனியின் கொள்கை விளக்க செயலாளர்கள் சிக்கிய ஆட்டை கப்பென பிடித்து அய்யனின் அருட் பராக்கிரமங்களை விளக்கி பீடத்திலிருந்து வெளிவரும் மாதாந்திரியோ வாராந்திரியோ ஏதோ ஒரு திரிக்கு சந்தா கட்ட சொல்லி மனதில் ஏதாவது தெய்வீக மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள்.

 அப்படி ஒரு வேர்க்கடலை பாக்கெட்டுடன் அடியேன் அய்யனின் அடியார்களிடம் சிக்கிய ஒரு புத்தக கண்காட்சியில்தான் அந்த அனைத்துமான பேரொளியின் பராக்கிரமங்களை முதன்முதலாக நான் அறியும் பாக்கியம் பெற்றேன். பல நாட்களாக ஞானத்தை நோக்கிய உள்மன தேடுதலும் கூட சேர்ந்து கும்மியடித்து தூண்டி விடவே அன்று நூறு ரூபாய்க்கு 'தியானம்' என்கிற எழுத்தாளர் நித்தியின் சித்தி பெற்ற அந்த புத்தகத்தை வாங்கினேன்.

 பாதியளவே படித்திருந்த நிலையில் என்னை விட அதிக தெய்வாம்சம் கொண்ட நண்பன் ஒருவன் அந்த புத்தகத்தை என்னிடமிருந்து ஆட்டையை போட்டு அருளினான். புத்தகத்தில் ஒரே ஒரு விஷயம் இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. உடலில் தியானத்தின் தன்மையை அதிகரிக்கவும், ஆத்ம சுத்தத்தை எப்போதும் வைத்திருக்கவும் உதவும் ஒரு சாலட். தயிரில் புடலங்காய், பாகற்காய் போன்றவைகளை ஊறவைத்து உண்ண சொன்ன டெரர்ரான ரெசிப்பி அது. படித்த போதே குமட்டிக்கொண்டு வந்த வகையில் அந்த புத்தகமானது சிறு வயதில் உடன் படித்த தனலட்சுமி என்னுடன் 'கா' விட்ட நிகழ்வு பதிவாகியிருக்கும் மூளையின் ஏதோ ஒரு மெமரி செல்லின் அருகிலேயோ அல்லது தூரத்திலேயோ காலியாக இருந்த மற்றொரு செல்லில் தீர்க்கமாக பதிவாகி இருக்கிறது.

நிற்க.

சன் டி.வி. கடந்த வருடம் எடுத்த எந்திரன் படத்திற்கு அடுத்தபடியாக பிரபஞ்சமெங்கும் பிரசித்தி பெற்ற 'நித்தியின் சித்து விளையாட்டு' வீடியோ உலகெங்கிலும் ஹிட் ஆகி கொண்டிருந்த தருணத்தில் நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் ரயிலடி புத்தக கடை நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் அங்கு இருக்கும் நித்தியின் தியான புத்தகங்கள் அன்று இல்லை.

"என்ன பாஸ்.. வீடியோ வெளியானதுக்கு அப்புறம் புக்கை எல்லாம் எடுத்து ஒளிச்சு வச்சிட்டீங்க போல.." என்றேன்.

 "அட நீங்க வேற.. வீடியோ வந்த உடனே எல்லா புக்கும் ஒரே வாரத்துல வித்து தீர்ந்து போச்சுங்க... அவரோட புக்கு இருக்கானு வந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று ஆச்சரிய தகவல் அளித்தார்.

சாமி வீடியோவில் வந்தது போல் 'சமாதி நிலை' குறித்து புத்தகங்களில் விளக்கி இருக்கக்கூடும் அது குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்கிற அறியாமையில் வாங்கி சென்றிருப்பார்களோ என்னவோ. இதனால்தான் எனக்கு இம்முறை கண்காட்சியில் அந்த அரங்கம் அமைக்கப்பெற்றிருந்தால் எந்த வருடத்தை விடவும் 'கூட்டம் சும்மா கும்மியிருக்குமோ' என தோன்றுகிறது.

Monday, January 10, 2011

100வது நாள் எந்திரனும் பிராயச்சித்தமாய் புத்தக கண்காட்சியும்




தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனை ஏமாற்றிவிட்டு ஃபுட்பால் ஸ்டேடியத்தில் ரஜினி செம தெனாவெட்டாய் ஒரு டான்ஸ் ஆடுவாரே.. அதே போன்ற தெனாவட்டான ஆட்டத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஆல்பர்ட் தியேட்டரில் போட்டோம். இதன்மூலம் எனது சிறுவயது பெருங்கனவு நிறைவேறியிருக்கிறது.

கலெக்டரா டாக்டரா என்ற கன்ஃபியூஷனிலேயே பல சக மாணவர்கள் காலத்தை கழித்துகொண்டிருந்ததை பார்த்து அது போன்ற அல்ப சபலங்களுக்கு மனதில் இடம் தராமல் கட்டுப்பாடுடன் இது போன்ற உயர்ந்த கனவுகளை மட்டுமே விதைத்திருந்ததை எண்ணி சிறு வயதிலேயே நமக்கு எவ்வளவு ஞானம் இருந்திருக்கிறது என தற்போது பெருமைப்பட முடிகிறது.

அதிகபட்சம் தியேட்டரில் பேப்பர் கிழித்து போட்டிருக்கிறேன். ரெண்டே ரெண்டு வரிசைக்கு மட்டும் கேட்கும் வால்யூமில் கமெண்ட் அடித்திருக்கிறேன். ஆனால் தியேட்டரில் தில்லுமுல்லு ரஜினி போன்றதொரு தெனாவட்டான கலாட்டா மட்டும் நெடுநாளைய கனவாகவே இருந்தது. எங்கே அது கனவாகவே போய்விடுவோமோ என்கிற அச்சத்தில் காலம் சென்றுகொண்டிருந்தபோதுதான் 
என்னுடைய இந்த தீராத தாகத்தினை அறிந்திருந்த ஜுனியர் பேட்ச் நண்பன் ஒருவன் எந்திரன் 100வது நாளுக்கு அழைத்தான்.

நானும் என்னுடைய சில நண்பர்களை தேத்திக்கொண்டு கடந்த சனிக்கிழமை ஆல்பர்ட் தியேட்டர் சென்றோம். படம் ஆரம்பிக்கும் முன்னரே தியேட்டர் வளாகத்தில் ரகளை துவங்கியது. நண்பனின் நண்பர்கள் ரஜினி பாடல்களை ஒலிக்கச்செய்து கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

படம் ஆரம்பிக்க, ஒரு மூட்டை நிறைய பூக்களை கொண்டு வந்திருந்த அவர்கள்.. அள்ளி அள்ளி வீசத்துவங்கினர்.   100வது நாள் என தெரியாமல் 'எந்திரன் தியேட்டர் ஈயோடும்' என்ற நம்பிக்கையில் வந்திருந்த ஒரு அப்பாவி கார்னர் சீட் ஜோடிகள், டூயட்டில் தேவதைகள் பூ தூவாமால் என்னடா இது சாத்தான்கள் சத்தம் கேட்கிறதே என அரண்டு போய் 'போச்சுடா இன்னைக்கு' என்கிற ரீதியில் நிமிர்ந்து உட்கார்ந்ததை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

படம் முடியும் வரை திரை முன் இருந்த சிறிய மேடையில் ஏறி நண்பர்கள் ஆடிக்கொண்டே இருந்தனர். இரண்டு பாடல்கள் ரிப்பீட் செய்யப்பட்டது. கிளிமஞ்சாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா போல ஆடியும், ரஜினி ரொம்பவும் பயிற்சி செய்து ஆடிய கஷ்டமான தொடை தட்டும் டான்ஸை ஆடிய படியே டிரெய்ன் விட்டும் என தியேட்டர் அல்லோகல்லப்பட்டது.

எனக்கு அன்று மெட்ராஸ்-ஐ வேறு. இருந்தாலும் கனவு நிறைவேறும் நேரம் கண் வலி போன்ற தடைகள் வந்தாலும் 'தோழா வானம் தூரம் இல்லை' என்கிற 'கலைஞரின் இளைஞன்' பாடல் மண்டைக்குள் மைக் பிடிக்க கையில் கொண்டு சென்றிருந்த ஐ டிராப்பினை ரெண்டு சொட்டு விட்டுகொண்டு மேடையேறினேன்.  வாவ் .. வாழ்க்கையில் இனி எத்தனை மேடை ஏறினாலும் என்னதான் சாதனை செய்தாலும் இதற்கு ஈடாகாது பாஸ்.. பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்.






என்னதான் நெடுநாளைய கனவாக இருந்தாலும் அதுக்காக தியேட்டரில் ஏறி டான்ஸ் ஆடுவது எல்லாம் தப்பான விஷயமோ என மனசு உறுத்த,  எந்திரனுக்கு வந்த இரண்டு நண்பர்களை ஆடு கழுத்தில் கயிறு போடுகிறார் போல் அவர்கள்  ஃபீல் பண்ணியும் விடாது, போட்ட ஆட்டத்துக்கு பிராயச்சித்தமாக புத்தக கண்காட்சிக்கு கூட்டி சென்றேன்.

நேரமாகி விட்டபடியால் நேராக கிழக்கு சென்று பா.ராகவன் அவர்களின் காஷ்மீர்,  என்.சொக்கன் அவர்களின் மகாத்மா காந்தி கொலை வழக்கு என இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். பக்கத்தில் பிரபலமான கிழக்கு சந்தில் பா.ரா. அவர்கள் நண்பர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டேன். அருகில் சென்று பேச ஆசை வந்தாலும் கண் வலியை வைத்துக்கொண்டு பேசினால் சரியாக இருக்காது என கிளம்பினேன்.

அந்த இரவிலும் கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அலைந்ததனால் 'என்னடா இவன் மிஷ்கின் போல ஒரு டைப்பா சுத்துறானே.. வாங்குற புத்தகத்தை  படிப்பானா' என்கிற சந்தேகத்துடன் எல்லோரும் பார்ப்பது போலவே எனக்கு இருந்தது.

புத்தக கண்காட்சிக்கு கூட வர வர இணையத்தால் எதிர்பார்ப்பு எகிறுகிறது. கிழக்கின் விளம்பரத்தால் எப்படி நேராக சென்று காஷ்மீரையும், மகாத்மாவையும் வாங்கினேனோ அதேபோல கார்க்கியின் டிவிட்டுகளால் லிச்சி ஜுஸை நோக்கிய தேடல் துவங்கியது.




வேகமாக நடந்துகொண்டிருந்த போது "யோவ் கண்ணாடியை கழட்டுய்யா" என அதிகார குரல் ஒலிக்க சட்டென்று நின்று பார்த்தால் அண்ணன் ஜாக்கி சேகர். அவருடன் பதிவர் மயில்ராவணன். முதுகில் ஒரு பெரிய பை. அது நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறாராம்.

"நான் கண்ணாடியை கழட்டிடுவேன்.. மெட்ராஸ் ஐ பராவாயில்லையா" என்ற உடன், "சரி சரி" என சிரித்தார்.  புத்தக கண்காட்சிக்கு வந்துவிட்டு புத்தகத்தை பார்க்கவில்லையென்றாலும் பதிவர்களை பார்க்காமல் போவதா என ஒலித்துக் கொண்டிருந்த மனசாட்சியின் குரல் பின்னர்தான் ஓய்ந்தது. அதேபோல் பதிவர்கள் கம் எழுத்தாளர்கள் கேபிள் சங்கர் மற்றும் சுரேகா அவர்களையும் பார்க்க முடிந்தது.



அலுவலகம் வெகு அருகாமையில் என்பதால் இன்னும் இந்த வாரம் முழுக்க வந்து விடுவேன். வாங்க வேண்டியவை நிறைய இருக்கிறது.

கண்காட்சியில் பார்த்தவரையில் நூறு ரூபாய்க்கு 200 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் கிடைக்கிறது. இந்த கணக்கின்படி பத்து ருபாய்ககு 20 பக்கங்கள். ஆனால் பைக் டோக்கனுக்கே பத்து ரூபாய் வாங்குகிறார்கள். ஒரேயொரு பக்கம். அதையும் போகும்போது வாங்கி கிழிக்கிறார்கள்.  ஏம்பா இதுல மட்டும் பத்து பர்சன்ட் டிஸ்கவுண்ட் இல்லையா என கேட்டால், டோக்கன் கொடுத்த பேரிளம் பையன் சிரிக்கிறான்!

என்னவோ போங்கப்பா.. நாங்களும் கேட்டுக்கிட்டே இருக்கோம். நீங்களும் சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க!