Tuesday, September 29, 2009

ஆறுமுகம் திரைப்படம் - சனி பெயர்ச்சிக்கு சிறந்த பரிகாரம்


உங்க ராசிக்கு சனி பெயர்ச்சியினால கண்டம் இருக்கு இனிமே டைம் சரியா இருக்காது. அதனால உங்க வாட்ச் கூட சரியா ஓடாதுன்னு ஏதாவது வாரா இதழ்ல படிச்சீங்களா... அதையே மண்டையில போட்டு யோசிச்சிக்கிட்டு இருந்தா எப்படி... நம்மக்கிட்ட சொல்ல வேண்டியதுதான...
இதோ பாருங்க நீங்க எந்த ராசியா வேணா இருந்துட்டு போங்க இந்த சனி பெயர்ச்சி பத்தி நீங்க ஒன்னியும் கவலை பட வேணாம்... நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு பரிகாரம்தான்... நேரா போயி சின்ன தளபதி பரத் நடிச்சிருக்கிற ஆறுமுகம் படத்தை ஒரே ஒரு வாட்டி முழுசா பாருங்க. (பாதியில எழுந்து வந்தா பரிகாரம் பலிக்காது. அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல சொல்லிபுட்டேன்.)
இந்த படத்தை பாத்தா எப்படிங்க தோசம் போகும்னுதானே கேக்குறீங்க. வரேன் வரேன்... இந்த படத்தை முழுசா பாத்துட்டீங்கன்னா உலகத்துல வேற எந்த கொடுமையும் ஒரு விஷயமாவே உங்களுக்கு தெரியாது... ஏன்னா படம் முழுக்க கொடுமையோ கொடுமை அவ்ளோ கொடுமை கொட்டி கிடக்கு...
நாம லொள்ளு சபா பாத்திருப்போம். ஒரு நல்ல படத்தை எடுத்துகிட்டு அதே காட்சிகளை காமெடியா மாத்தி அமைப்பாங்க. இங்க பாருங்க அண்ணாமலை படத்தை அப்படியே எடுத்து அதை எவ்வளவ்வு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவ்வு அசிங்க படுதியிருக்கங்க.... எனக்கு தெரிஞ்சி லொள்ளு சபால கூட ஒரு படத்தை இவ்ளோ அசிங்க படுத்தியது இல்லை. வேற யாராவது எடுத்திருந்தா கூட மன்னிச்சிடலாம். ஆனா அண்ணாமலை எடுத்த அதே டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவே இந்த வேலையை செஞ்சிருக்காருன்னா அட போங்க சார் ரொம்ப சின்ன பிள்ளைதனமா இருக்கு.
ஏன்டா கண்ணா பின்னானு எழுதுற படம் எடுக்குறவங்க பாவம் இல்லையானு தயவு செஞ்சு யாரும் கேட்டுடாதீங்க. ஆறுமுகம், டைரக்சன் சுரேஷ் கிருஷ்ணானு விளம்பரத்துல போட்டிருந்துச்சு . சரி நல்ல இயக்குனாராச்சேன்னு அவரை நம்பி போனேங்க. அண்ணாமலை, பாட்ஷா, போன்ற பல வெற்றி படங்களை எடுத்த இயக்குனரா இது.. எனக்கெனவோ ஒரு டவுட்... இந்த பிரபல பதிவர்கள் பெயரில் போலியானவர்கள் பதிவு போடுவது போல யாரோ போலி சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை எடுத்திருக்க கூடும் என நினைக்கிறன்.
அண்ணாமலை படத்தை அப்படியே 80 சதவிகிதம் எடுத்து வச்சிருக்காரூங்க. மீதி 20 % நல்லா இருக்கானு கேக்காதீங்க. அதுல படையப்பா-10%, பாட்ஷா- 5%, , சிவாஜி- 2%, தெலுங்கு படங்களின் வாசனை - 3% என்கிற பார்முலாவில் உள் பங்கீடு இருக்கு. இவ்வளவும் சூப்பர் ஹிட் படங்களாச்சே .. இதோட கலவை எப்படி சூப்பரா இருக்கும்னு யோசிக்கிறீங்களா.. நீங்க ரொம்ப பாசிடிவ் கேரக்டர் சார் !
ஆனா நீங்களே ஒரு பயங்கர நெகடிவ் கேரக்டரா இந்த கலவையை யோசிச்சி பாருங்க. சாம்பார், சட்னி, குருமா எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணா வாந்தி எடுக்குற மாதிரி ஒரு காக்டைல் வருமே.. ஆங்... கரெக்ட்டு. படம் அப்பிடி இருக்க்கி....
அதுல பால் வியாபாரம் இதுல இட்லி வியாபாரம். அதுல அப்பா கட்டுன வீடு இதுல அம்மாவோட சமாதி. அதிலும் சமாதியை இடிச்ச உடனே பரத் சொல்ற டயலாக் செம காமெடி. இவ்ளோ நாள் உயிரோட (?) சமாதியில இருந்த எங்க அம்மாவை இடிச்சி கொன்னுடீங்களேடா ....( ஸ்..ஸ்... ப்பா... முடியல... சுரேஷ் கிருஷ்ணாவுக்குள்ள ஒரு மினி பேரரசு ஒளிஞ்சிக்கிட்டிருக்கார்னு இப்பதான் தெரியுது ) அப்புறம் அண்ணாமலை வரலாற்று சிறப்பு வாய்ந்த சபதம் டயலாக்... உன்னோட முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி........ அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அதை எவ்வளவவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவ்வு அசிங்க படுத்தி இருக்காங்கம்மா.
சரத்பாபு கேரக்டர்ல ஒரு புது முகம்(எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு). ராதாரவி கேரக்டர்ல ரம்யாகிருஷ்ணன். குஷ்பூ கேரக்டர்ல ப்ரியாமணி ஆண்டி. ஜனகராஜ் கேரக்டர்ல கருணாஸ். வைஷ்ணவி கேரக்டர்ல சரண்யா மோகன். அப்புறம் சொல்லவே வருத்தமா இருக்கு ரஜினி கேரக்டர்ங்க்ற நெனப்புல பரத் ( சத்தியமா முடியல).
அநேகமாய் அந்த சிவப்பு கலர் துண்டு இப்போதெல்லாம் கோ-ஆப்டெக்சில் கூட விற்கமாட்டார்கள் ஆனால் அதை இந்த பரத் எங்கு போனாலும் இடுப்பில் கட்டி கொண்டு அண்ணாமலை லுக் வர வழைக்க முயற்சி செய்திருக்கிறார் பாருங்க.... சரி இடுப்பில் துண்டு கட்டினால்தான் ரஜினி லுக் வரவில்லை செகண்ட் ஹாபில் கோட் சூட் போட்டாலாவது பணக்கார அண்ணாமலை கெட்டப் வருமா என்றால்.. அட போங்கடா அதுக்கு அந்த துண்டே தேவலை.
சரத் பாபு கேரக்டர்ல அந்த நடிகர் ஒன்னும் சொல்றதுக்கில்லை. ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி என நினைத்து கொண்டு ரொம்பவும் இம்சிக்கிறார். அதிலும் அவர் வரும் காட்சிகளில் "இஸ் புஷ் தஸ் முஷ்" என டெரராய் பின்னணி இசை கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்... அப்படியே நாம் பயந்து விடுகிறோம் எப்படா வீட்டுக்கு போறதுன்னு. சரண்யா மோகனை இதுக்கு மேல யாரும் மொக்கை பண்ண முடியாது. (ஏன் மேடம் நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு...?)
இதுக்கு மேலவும் கை பர பரன்னு டைப் அடிக்கனும்னு தோணுது. ஆனா இப்படியே போனா இந்த படத்தை பத்தி ஒரு ப்ளாகே ஆரம்பிக்கிற அளவு மனம் குமுறுவதால் இதோட நிறுத்திக்கிறேன்.
கடைசியா ஒரு விஷயம். நீங்க ரஜினி ரசிகரா இருந்தா படம் பாக்கும்போது தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்கணும்னு தோணும். நீங்க ரஜினி ரசிகர் இல்லேன்னா உங்க சட்டையை கிழிக்கணும்னு தோணும். நீங்க பதிவரா இருந்தா வீட்டுக்கு போய் பதிவு போட்டு கிழிக்கணும்னு தோணும். ஆக மொத்ததுல ஆறுமுகத்துல அப்படி என்னத்த கிழிச்சிருக்காங்கன்னு யாரும் கேக்க முடியாது!

Friday, September 25, 2009

பதிவர் கேபிள் சங்கர்ஜி தொல்லை தாங்க முடியலப்பா....


பின்ன என்னங்க... நான் பாட்டுக்கு ரெண்டு போட்டோ போட்டு நாலு கமெண்ட் கொடுத்து ரஜினி, கஜினினு கில்மாவா தலைப்பு வச்சு பொழப்பு ஓட்டிகிட்டிருக்கேன். அது பிடிக்கலை இவருக்கு. அடிக்கடி நீ எழுதுயா.. நல்லா வரும்யா.... கமான் கமான்னு ஒரே உற்சாகப்படுத்துறாரு. அதான் அவரு படுத்துற படுத்துல (அதான்... உற்சாகம்... உற்சாகம்.. ) ஏதாவது எழுதி பாப்போமேன்னு உக்கார்ந்தேன். அப்படியாகப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முதல் மொக்கை பதிவை அவருக்கே டெடிகேட் செய்யும் விதமாக "திரை அரங்க விமர்சனம்" எழுதுறேன். நல்லா இருந்தா நம்மளை கவனிங்க. நல்லா இல்லைனா, ஏங்க... இவனெல்லாம் எழுதலைன்னு எவன் அழுதான்னு நீங்க தாராளமா அவரையே 'கவனிங்க...!'
தல கேபிள்ஜி நாலு லட்சம் ஹிட்ஸ் தாண்டியதற்கும் அலெக்சா ரேட்டிங்கில் ஒரு லட்சத்திற்குள் வந்ததற்கும் (98,186 ) வாழ்த்துக்கள் !
_____________________________________________

கடைசியாய் கமலா தியேட்டரில் சிவாஜி படம் பார்த்தது. இப்போ என்னமாய் மாறி இருக்கிறது தெரியுமா ? நம்பவே முடியவில்லை. உள்ளே நுழையும் போதே... "சார்... ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு உள்ள போக கூடாது" என சொல்கிறார்கள்." அது ஏன் சார் எங்களை பார்த்து அந்த கேள்வியை கேட்டீங்க என நானும் ஒரு எதிர் கேள்வியை கேட்டேன் . கூட வந்த என் நண்பன் கிருஷ்ணா கமலா தியேட்டர் இப்படி கெட்டுபோய் விட்டதே என புலம்பியபடியே வந்தான்..!

பொக்கிஷம் படம்! பாக்ஸில் டிக்கெட் எடுத்து கொண்டு போய் உட்கார்ந்தோம். பரவாயில்லை. கமலா தியேட்டருக்கான எந்த அடையாளமும் இப்போ தெரியாமல் நல்லா செய்திருக்கிறார்கள். விளம்பர ஸ்லைடுகள் போட ஆரம்பித்தவுடன் ஒரு காதல் ஜோடி வந்தது. அவர்களுக்கு நடுவில் சீட்... நாங்கள் கார்னரில் இருந்தோம்.. பய புள்ள கிருஷ்ணாவோடு கார்னர் சீட்டில் உட்கார்ந்து என்ன ஆகா போகுது..? 'பெக்க பெக்க' என முழித்து கொண்டிருந்த அந்த காதல் ஆண் புறாவிடம் "பாஸ்.... இங்க வந்திடுங்க..." என்றதும் ஆர்வத்தோடு சீட் மாற்றி கொண்டான். என் தலைமுறைகளையே அந்த நேரத்தில் மனமார வாழ்த்தி இருப்பான் என அவன் தேங்க்ஸ் சொன்ன விதத்திலேயே உணர முடிந்தது.

படம் ஆரம்பித்தது.. சேரன் படம்.. இதோ நல்லா போகும்... இதோ நல்லா போகும்... என மனதை தேற்றி கொண்டே பார்த்ததில் இடைவேளையே வந்துவிட்டது. பளிச்சென்று வந்த வெளிச்சத்தில் அப்போதுதான் அந்த காதல் ஜோடியை பார்த்தேன். பகீரென்றது !

என்னதான் காதலர்களாயினும் ஒரு காதலன் இப்படியா நடந்துகொள்வது... அவன் மனுஷனா இல்ல மண்ணாங்கட்டியா என்றே தெரியவில்லை.. சொல்லவே நாக்கு கூசுகிறது.. அந்த பெண் படம் பார்த்து கொண்டிருக்க .. அவன் தூங்கி கொண்டிருந்தான் சார்.. தூங்கி கொண்டிருந்தான். இந்த மாதிரி கொடுமையும் எங்காவது நடக்குமா... ? நண்பன் கிருஷ்ணா வாங்கி கொடுத்த கொக்க கோலாவை இறக்கி தொண்டையை அடைத்த துக்கத்தை போக்கினேன்.

இடைவேளைக்கு பிறகும் படம் தேறாது என கன்பார்ம் ஆனதால் கமெண்ட் திருவிழாவை ஸ்டார்ட் பண்ண ஆரம்பித்தேன். 1980 களில் சேரன் லெட்டர் எழுதுவதுதான் படமே. ஒரு காட்சியில் சேரன் பத்மப்ரியாவை பார்பதற்காக ஊருக்கு வந்துவிட்டு வேலை விஷயமாக வந்தேன் என அப்பா விஜயகுமாரிடம் சொல்லுவார். அதை கண்டு விஜயகுமார் "என்கிட்ட பொய் சொல்றியேப்பா..." என்பார். அந்த இடத்தில் நான் "1940 ல அவரு எவ்ளோ லெட்டர் எழுதியிருப்பாரு...அவருகிட்டயேவா " என டைமிங் கமெண்ட் அடித்தேன். அதை கேட்டு பாக்ஸில் என்னையும் தூங்கி கொண்டிருந்த அந்த வெண்ணையும் தவிர்த்து பாக்கி இருந்த பதினாலு பெரும் கொல்லென சிரிக்க, பதிவு போட்ட பத்தே நிமிஷத்தில் பதினஞ்சு பின்னூட்டம் வந்தது போல ஒரே ஜிவ்வுன்னு ஆகி அடுத்தடுத்து கமெண்ட் அடிக்க ஒரே காமெடி திருவிழாதான்.

நான் மொக்க ஜோக் அடித்தாலும் தொடர்ந்து அந்த பெண் புறா சிரிக்க ஆரம்பித்து விட்டது . ( நம்ம ப்ளாக் பாலோயர்ஸ் மாதிரி ரொம்ப நல்ல கேரக்டர் போலிருக்கு) அலாரம் அடிச்சா ஆப் பண்ணிட்டு தூங்கிடலாம்... ஆம்புலன்ஸ் அடிச்சா ஆப் பண்ண முடியுமா ? மத்தவன் ஜோக்குக்கு தன் பிகர் சிரிப்பதையும் தாண்டி யாராவது நிம்மதியாய் தூங்க முடியுமா என்ன? அதற்கப்புறம் அவன் தூங்கவே இல்லை ! சீரியசான சினிமாவை விட்டுட்டு சிரிச்சிக்கிட்டிருக்கிற என்னையே பாத்துக்கிட்டு மட்டுறுத்தல் செய்யப்பட்ட அனானி பின்னூட்டம் மாதிரி அம்போன்னு பாவமாய் உட்கார்ந்திருந்தான் !

____________________________

அமைந்தகரை முரளிகிருஷ்ணா தியேட்டரில் சின்ன வயசில் குடும்பத்தோடு படம் பார்க்க போவோம். கடந்த மாதம் அலுவலக விஷயமாய் வெளியே சுற்றிய ஒரு சுபயோக தினத்தில் ஒரு மணி நேரம் துண்டு விழுந்தது. பார்த்தால் பக்கத்தில் முரளி கிருஷ்ணா . அன்று தான் மதுரை சம்பவம் திரைப்படம் ரிலீஸ். இந்த தியேட்டர் போய் ரொம்ப நாளாச்சே சும்மா இடைவேளை வரை பார்க்கலாம் என போனேன். இப்போதும் இங்கே பால்கனி டிக்கெட் விலை வெறும் 20 ரூபாய்தான். சவுண்ட் சிஸ்டம் எல்லாம் நல்லா இம்ப்ரூவ் செய்திருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் இந்த தியேட்டரில் மூட்டைபூச்சி பயங்கரமாய் கடிக்கும். இந்த முறை ஹரிகுமாரின் "தெக்குல திண்டுக்கல்லு..." போன்ற அற்புத டயலாக் டெலிவரியில் நான் லயித்திருந்தேன். மனிதர் பயங்கரமாய் கடித்ததால்.... ச்சே... நடித்ததால் மூட்டை பூச்சி கடித்ததா இல்லையா என்பன போன்ற சின்ன கடிகளை என்னால் சரியாய் நினைவு கூற முடியவில்லை. இன்னும் இரண்டே படம் நடித்தால் ஹரி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோ ஆவது நிச்சயம்.

இடைவேளை வரை பார்த்த மட்டும் என் 'கேன த்ரிஷ்டியில்' நான் அறிந்து கொண்டது... விரைவில் ஹரிகுமார் சூரதளபதி ஆகும் ஆபத்து தமிழகத்திற்கு இருக்கிறது என்பதைத்தான். அகில இந்திய ஹரிகுமார் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடலாமா என தீவிரமாய் யோசித்து வருகிறேன். யார் கண்டார்.... ஒரு வேளை 2011 -ல் இவரே முதல்வர் ஆகிவிட்டால் கவியரங்கத்தில் அவரை வாழ்த்தி பாட 'வெயிட்டான' கவிஞர் போஸ்டிங் ஏதாவது எனக்கு கிடைக்குமுல்ல !!

( தங்கள் தலைவர் பற்றி அப்டேட் ஏதும் வராமல் போஸ்டர் ஒட்டி பல மாதங்களாகி காய்ந்த கையோடும் காலியான பர்சோடும் காத்திருக்கும் ஜே.கே.ரித்தீஷ் மன்ற ரசிகர்கள் எங்கள் மன்றத்துக்கு வரவேற்கப்படுகிறார்கள்! )

________________________________________________

அப்புறம் கோயம்பேடு ரோஹிணி தியேட்டர் பற்றி கண்டிப்பா சொல்லணும். அங்க மதுரை சம்பவம் படம் மாதிரி என் வாழ்கையில் பல அதிருற சம்பவம் நடந்திருக்கு....

இந்த மொக்கையை படிச்சிட்டு நாளைக்கும் வரணும்னு நெனக்கிற அளவுக்கு நீங்க நல்லவரா இருந்தா அடுத்த பதிவில் அதை பத்தி சொல்றேன்......!! சந்தேகமே இல்லை இனி வரவே மாட்டேனு சொல்றீங்களா.... அப்ப சாமி போகும்போது ஓட்டாவது போட்டுட்டு போங்களேன்... கார்னர் சீட்ல உக்காந்துக்கிட்டு காதல் ஜோடிக்கு இடம் விடாம நீங்க செஞ்ச பாவமெல்லாம் தீர்ந்து உங்களுக்கு புண்ணியமா போகும் !!!