Thursday, October 31, 2013
ஆரம்பம் | வலைமனை
ஆரம்பம்!
காதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்!
மங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்!
மங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார்.
ஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது.
ஸ்பாய்லர் :
கதையென்று பார்த்தால் அதேதான். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, உயிரை விடும் நண்பன், வெகுண்டெழுந்து பழி வாங்கும் ஹீரோ. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம், மேக்கிங் எல்லாமே ரொம்பவும் புதுசு.
நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் எனும் வகைப்படம். எங்கும் போர் அடிக்கவில்லை, எங்கும் தொய்வில்லை. விருந்து சாப்பிட்ட திருப்தி.
ஆர்யா, நயன், கிஷோர், டாப்ஸி என அஜித்தின் நேரத்தை மற்ற பல பேர் எடுத்துக் கொள்வதால் விருந்து சாப்பிட்டாலும் 'தல'வாழை மட்டும் இல்லாதது போன்ற சிறிய குறை.
பாடல்கள் கேட்பதற்கு சுமார்தான் என்றாலும் அதனை ஈடுகட்டுகிறது படமாக்கப்பட்ட விதம். ஓப்பனிங் சாங்கில் அஜித் முடிந்தவரை டான்ஸ் ஆடுகிறார். சில ஸ்டெப்களில் உடல் வலியை அவரது முகமொழி பிரதிபலித்தாலும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார்.
என் புயூஸ் போச்சு, மெல்ல வெடிக்குது ஆகிய இரண்டும் கவனத்தை கவர்கின்ற பாடல்கள். காதல் வயப்பட்டதும் ஆர்யாவுக்கு முளைக்கும் பறவைச் சிறகு, டாப்ஸிக்கு முடிவில் முளைக்கும் பட்டாம்பூச்சி சிறகு என லவ்லி கிரியேட்டிவ் ஐடியா. மொத்தப் பாடலின் பின்னணிக் காட்சிகளும் அவ்வகையே. அடுத்ததாக மெல்ல வெடிக்குது பாடல் கண்களுக்கு நல்ல விருந்து. ஹோலி வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.
அஜித், விஷ்ணுவர்த்தன் என்னும் இரண்டு ஆளுமைகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. பாடல்களில் கோட்டை விட்ட யுவன், பின்னணி இசைக்கு முகம் கழுவி காபி சாப்பிட்டுவிட்டு மியூசிக் போட்டிருக்கிறார். சுபாவின் டச், அந்த ஷார்ப்னெஸ் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்.
மொத்தத்தில் இரண்டரை மணி நேர பக்கா ஆக்ஷன் ட்ரீட் இந்த ஆரம்பம் !
Friday, October 11, 2013
கிராவிட்டி (2013) - தொழில்நுட்பத்தின் சாறு
ஹீரோவின் விசேஷ உபகரணத்தின் லேசர் கதிர் பட்டு உடல்கிழிந்து பச்சை ரத்தம் பீறிட உயிர் விடும் ஏலியன்கள், பூமிக்கு மேலே சரியாக அமெரிக்க மாநகரின் மேல் நிறுத்தப்படும் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள், கூட்டம் கூட்டமாக செத்து மடியும் பூமிவாசிகள், ஏலியன்களை கொல்ல ஹீரோவினால் கடைசியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய யுக்தி... இப்படி மலிந்துவிட்ட சயின்ஸ் பிக்ஷன் மசாலாக்களில் இருந்து தனித்து நின்று தெளிவான, சுவாரஸ்யமான தனி முத்தாக ஒளிவிடுகிறது 'கிராவிட்டி'.
ஸ்பாய்லர் : ......................................................
முதன்முறையாக தனது விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயோ மெடிக்கல் பொறியாளர் ரயான் ஸ்டானும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் மேட் கவால்ஸ்கியும் ஹப்பிள் டெலஸ்கோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் வேளையில் எதிர்பாராமல் விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் விபத்தில் சக வீரர் உயிர் விட விண் ஓடமும் பாதிக்கப்படுகிறது. பூமியுடனான தொடர்பும் துண்டித்துப்போகிறது.
இதன் பின்னர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஷ்டேஷனுக்கு சென்று தப்பிக்க அவர்கள் முயல்வதும், பின்னர் கவால்ஸ்கியுன் இறப்பினால் தனித்து விடப்படும் ரயான் பல்வேறு மன மற்றும் உடல் போராட்டங்களை சமாளித்து பூமிக்கு திரும்பி கிராவிட்டியை சுவைப்பதே படம்.
......................................................
நேற்று மாலை S2 பெரம்பூரில் 3D - டால்பி அட்மாஸ் வசதி செய்யப்பட்ட ஸ்கிரீனில் பார்த்தேன். 90 நிமிடங்கள். நாம் விண்வெளியில் மிதக்கிறோம். சுழல்கிறோம். விண்வெளிக்குப்பைகளால் தாக்கப்படுகிறோம். பூமி நமக்கெதிரே சுழல்கிறது. அண்டம் நமக்கெதிரே விரிந்து கிடக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பும், கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டதன் அடையாளமே தெரியாமல் துல்லியமான நிஜ காட்சிகளாய் படைக்கும் திறன் பெற்றுவிட்ட மனிதனின் ஆற்றலும் ஒன்றுசேர்ந்து பரவசப்படுத்துகிறது.
3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரிய பலம். பூமியின் விளம்பில் பட்டு தெரிக்கும் ரம்மியான ஒளிக்கதிர்கள், பேனா, புத்தகங்கள், நெருப்புக்குமிழி, கண்ணீர்த்துளி, பிரபஞ்ச வெளியில் மிதக்கும் வீரர்கள் என வெறும் திரைப்படம் என சொல்லிவிட முடியாதபடி ஒரு பிரமிப்பான அனுபவமாக உணர வைக்கிறது. இதனுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும் கைகோர்த்துக்கொள்ள மொத்தத்தில் அருமையான விருந்து.
தாகம் எடுத்த வேளை நல்ல பழச்சாறின் சுவையில் மெய்மறப்பதை போன்று, தொழில்நுட்பத்தின் சுவைமிகுந்த சாறினை ருசிக்க நல்ல ஒளி ஒலி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள். மகிழுங்கள்.
Thursday, September 5, 2013
வலைப்பதிவர்கள் திருவிழா | வலைமனை
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து வகையிலும் விழா சிறப்பாக நடந்தேறியது. விழா குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கொஞ்சம் தாமதாகத்தான் செல்ல முடிந்தது. முன்னரே விழாவிற்கு அழைத்து எனது வருகையை உறுதிசெய்து கொண்டு அதை பட்டியலில் வெளியிட்ட பதிவர் ஆரூர் மூனா செந்தில் இன்முகத்துடன் வாயிலில் வரவேற்றார்.
எனது பதிவுலக குரு கேபிள் சங்கர், தல ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், வீடு திரும்பல் அண்ணன் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவக்குமார் ஆகியோரை உள்ளே நுழைந்ததும் சந்திக்கும் பேறு பெற்றேன்.
மேடையில் பேசும்பொழுது, முகத்தில் பதட்டத்தையும், வயித்தில் தொப்பையையும் மறைக்க வேண்டி முழு கவனமும் சென்றதால் வேறு ஏதும் பேசத்தோன்றாமல் விழா குழுவினருக்கு வாழ்த்து சொல்லி இறங்கினேன்.
![]() |
| பிரபு கிருஷ்ணா உடன்... |
இறங்கி அமர்ந்ததும் இதுவரை சந்தித்திராத பதிவுலக நண்பர் பிரபு கிருஷ்ணாவை சந்திக்க முடிந்தது. அவருடனே உணவு இடைவேளை வரை அமர்ந்திருந்தேன். சிறப்பு விருந்தினர் பாமரன் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. பின்னர் சுவையான அசைவ மற்றும் அசையாத உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் சிறப்பான பேச்சு, புத்தக வெளியீட்டு விழா என மதிய நிகழ்வுகளும் குதூகலமாக அரங்கேறின. காலையில் வர இயலாத பலரை மதியம் காண முடிந்தது.
சதீஷ் சங்கவி எழுதிய 'இதழில் எழுதிய கவிதைகள்' மோகன் குமார் எழுதிய 'வெற்றிக்கோடு' சுரேகா எழுதிய 'எஸ்கேப்' உள்ளிட்ட 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா மாலை நடைபெற்றது. இதில் வெற்றிக்கோடு புத்தகத்தின் முகப்பு அட்டையை நான் வடிவமைத்திருந்தேன். அதற்காக அந்நிகழ்வின் போது மோகன்குமார், மேடையேற்றி பொன்னாடை போர்த்தி அன்பு செலுத்தினார். இது எனக்கு முதன்முறை என்பதால் வெரி ஷை ஆக இருந்தது.
![]() |
| THAT MOMENT : VERY SHY |
நான் அறிந்த வரையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பிலாசபி பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில், கே.ஆர்.பி.செந்தில், பட்டிக்காட்டான் ஜெய், மெட்ராஸ் பவன் சிவக்குமார், சதீஷ் சங்கவி, மோகன் குமார்ஆகியோரை கடைசியில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தேன். பெயர் விடுபட்ட மற்றவர்களுக்கு இப்பதிவின் மூலம் என மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
![]() |
| அண்ணன்ஸ் அகநாழிகை வாசுதேவன் மற்றும் கேபிள் சங்கர் உடன் ... |
முதன் முறையாக பதிவர்கள், பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஷித், மயிலன், பாலகணேஷ் உள்ளிட்டோரை சந்தித்ததும், பலாபட்டறை ஷங்கர், கே.ஆர்.பி.செந்தில், அகநாழிகை பொன்வாசுதேவன், கார்க்கி, சதீஷ் சங்கவி, தல பாலபாரதி, உண்மைத்தமிழன் , நிகழ்ச்சியை சுவையாக தொகுத்து வழங்கிய அண்ணன் சுரேகா ஆகிய பழகிய நண்பர்களை சந்தித்ததும் என மிக இனிமையான நாளாக அமைந்தது.
ஆச்சரியமான விஷயமாக, நான் இதன் முன் சந்தித்திராத பதிவர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , வலைமனை மற்றும் போட்டோ கமெண்ட்ஸ் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பாராட்டினார்கள். இப்பொழுது ஏன் அதெல்லாம் எழுதுவதில்லை என கேட்டவர்களுக்கு, "திருந்திட்டேன் பாஸ்" என ஜாலியாக சொல்லிக்கொண்டிருந்தேன்.
பதிவர் திருவிழாவிற்கு சென்று பதிவர்களை பார்த்த பிறகாவது ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில் 6 மாத காலம் கழித்து பாழடைந்த மண்டபமாக இருந்த வலைமனைக்கு சுண்ணாம்பு அடித்து, ஹெட்டர் பேனர் எல்லாம் மாற்றி ஒரு பதிவு போடும் இத்தருணம், வெகுநாட்களாய் காணாமல் போன பிடித்த பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் பொழுது எழும் திருப்தியை தருகிறது.
Sunday, March 17, 2013
பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை
எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.
இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.
அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால் அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.
இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.
பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங் சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.
ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.
அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும் சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.
பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.
Friday, February 1, 2013
உப்பில்லா கடல்
எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!
வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும்.
ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது.
'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம். நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.
பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது.
டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட பயன்படுத்தாதது ஏமாற்றம்.
அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.
துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.
கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________
பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html
Friday, December 14, 2012
டால்பி அட்மாஸில் அதிரும் சிவாஜி 3டி
பாடல் காட்சிகளில் 3டி தொழில்நுட்பத்தின் ஆழத்தையும், தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டையும் உழைப்பையும் காண முடிகிறது. முன்னால் ஆடும் ரஜினி நயன்தாரா தொடங்கி, குரூப் டான்ஸர்கள், பின்னால் தெரியும் ஏரி, கடைசியில் தெரியும் மலை வரை, லேயர் லேயராக மிகத் துல்லியமான டெப்த் அசத்துகிறது!
ஆங்கில 3டி படங்களில் கூட காண முடியாத கண்களுக்கு அருகே வரக்கூடிய 3டி எலிமென்ட்ஸ் இப்படத்தில் அதிகம். ஷங்கர், தோட்டாதரணி, கே.வி.ஆனந்த் பல்லேலக்கா பாடலில் செல்போனை தூக்கி வீசுகையில் அது சுழன்று சுழனறு நம் மேலே வந்து விழுகிறது! சண்டைக்காட்சிகளில் பொருட்கள் நம் மேல் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் நமக்கும் பூ தூவுகிறார்கள். கிளைமேக்ஸில் தியேட்டர் முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறப்பது உச்சகட்ட திரில்.
(பணத்தை விடுங்க பாஸ்... வாஜி பாடலில் ஷ்ரேயா நீச்சல்குளத்தில் குளிக்க, அவர் குளித்த தண்ணீர் அப்படியே நம் மீதும் தெளிக்கிறதே.. விடுங்க பாஸ்.. அதையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்! ஹி..ஹி..)
![]() |
| http://en.wikipedia.org/wiki/Dolby_Atmos |
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏப்ரல் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டால்பி அட்மோஸ் என்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உலகெங்கும் இதுவரை வெளிவந்திருக்கும் வெகு சொற்ப திரைப்படங்களில் சிவாஜி 3டியும் ஒன்று என்பது இதன் சிறப்புகளுக்கு மணிமகுடம். அதுவும் இவ்வாறான தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படமும் கூட.
![]() |
| http://www.dolby.com/us/en/professional/technology/cinema/dolby-atmos-video.html |
படம் முழுவதிலும் டால்பி அட்மோஸ் பட்டையை கிளப்புகிறது. அதிலும் கிளைமேக்சில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும்பொழுதும், சண்டைக் காட்சிகளிலும் அப்படி ஒரு பிரமிப்பான ஒலி அனுபவத்தை தந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருக்கும் சீட்டும், கால் வைத்திருக்கும் தரையும் அதிருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இப்போதைக்கு இந்தியாவிலேயே டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் திரையரங்கங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சத்யம்-செரின், மற்றொன்று எஸ்கேப்-ஸ்ட்ரீக்! நான் முதல் நாள் இரவுக்காட்சி எஸ்கேப்பில் பார்த்தேன். நம்ப முடியாத பிரமிப்பூட்டும் திரை அனுபவம்! முடிந்தவரை டால்பி அட்மோஸில் பார்க்க முயற்சி செய்யுங்கள்!
ஏ.வி.எம் லோகோ கருப்பு வெள்ளையில் கம்பீரமாய் துவங்கும் காலம் முதல் இன்று முப்பரிமாணத்தில் ஒளியும் டால்பி அட்மோஸில் ஒலியும் சேர்ந்து கொண்டு துவங்குவதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தான் என்றுமே ஒரு ஜாம்பவான் என்பதை நிருபித்திருக்கிறார்கள் ஏ.வி.எம்.
இத்தகைய சிறப்பான முயற்சியை மேற்கொண்ட ஏ.வி.எம்மிற்கும், பிரமிக்க வைக்கும் பணியினை செய்திருக்கும் பிரசாத் லேப் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Sivaji 3d Review Movie Experience Dolby Atmos - Satyam Serene - Escape Streak - AVM Productions - Prasad Lab - Rajni 12 12 12
Wednesday, December 5, 2012
கேபிளின் கதை | நூல் அனுபவம்
கேபிள் சங்கர் என பிரபலமாக அறியப்படும் சங்கர் நாராயண், தனது புனைப்பெயரில் உள்ள 'கேபிள்' கொண்டிருக்கும் அனுபவத்தையும், கேபிள் டி.வி.யின் அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றையும் ஒருசேர படைத்திருக்கும் 'கேபிளின் கதை' வெகு சுவாரஸ்யமான அறிவூட்டும் அனுபவம்!
படு வேகமான வளர்ச்சிப் பாதையில் போகும் ஒரு தொழிலைச் செய்வது அப்படி ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, பணம், தினமொரு சேனல், அதற்கான முஸ்தீபுகள் என்று தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் ஆப்பரேட்டர்கள். இதுப் போல பல பிரச்சனைகளை சந்திக்கத் தயாராக இருக்கக்கூடிய ஆள்தான் ஆட்டத்தில் இருக்க முடியும் என்ற நிலைமையானது.
கேபிள் டி.வியின் வரலாறு சொல்லப்படும் அதே நேரத்தில் அன்று தனக்கு நேர்ப்பட்ட சொந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சேர்த்து சொல்வது போன்ற யுத்தி அருமையானது. ஆனால் பாதியில் தனது சொந்த அனுபவ கதை நிறுத்தப்படுவது சிறு ஏமாற்றம்.
அந்த புயலில் ஸ்டார் போன்ற சேனல்களை ரிசீவ் செய்ய வைக்கப்பட்டிருந்த டிஷ் ஆண்டானா, அப்படிய என் கண் முன், அலேக்காய் பறந்து பக்கத்து காலி கிரவுண்டில் சுக்கல் சுக்கலாய் விழுந்தது. ஆங்காங்கு எங்கள் காலனியில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் போட்டிருந்த கேபிள் ஒயர்களையும், ஆம்ப்ளிபையர்களையும் இழுத்து அறுத்து போட்டிருந்தது.
கேபிள் டி.வி உருவான காலம் முதல் அது தமிழகத்தில் தரவிறங்கி இன்று அரசியலுடன் இரண்டற கலந்துவிட்ட நிலை வரை ஒவ்வொரு இடத்திலும் விலாவாரியாகவும் தொழில்நுட்ப சமாச்சாரங்களை எளிதாக புரிந்துகொள்ளும்படியும் சொல்லப்பட்டிருப்பது நூலின் தனித்தன்மை.
இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளான ஆண்டெனாவில் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக்கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டி.வியை ட்யூன் செய்து படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை.
டிவி வாங்கி, மாடியில் ஒரு ஆண்டனாவை பொருத்திவிட்டால் அன்றைய தேதிக்கு இரண்டு சேனல்கள் கச்சிதமாய், நல்ல துல்லியமான ஒளிபரப்பு கிடைத்துக்கொண்டிருந்த நாட்களில், கொஞ்சம் கொஞ்சமாய் கேபிள் டி.வி ஒளிபரப்பு பிரபலமாக, அதுவும் இது நாள் வரையில் தமிழ் இல்லாத மற்ற மொழி சேனல்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த நேரத்தில், சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதும், பெரும் ஆதரவு அவர்களுக்கு கிடைத்து.
நல்ல தாளில், கண்ணை உறுத்தாத அழகான லேஅவுட் வடிவமைப்பில் நாகரத்னா பதிப்பகம் இந்நூலை உள்ளடக்த்திற்கு ஏற்றவாறான தரத்தில் கொடுத்திருப்பது ப்ளஸ்.
இப்புத்தகத்திற்கான முகப்பு அட்டை வடிவமைத்தவன் என்கிற முறையில் எனக்கு இது கூடுதல் சிறப்பான வாசிப்பனுவம்.
ஈ.எஸ்.பி.என் என்கிற விளையாட்டுச் சேனல் தான் இந்தியாவின் முதல் பே சேனல் எனப்படும் கட்டணச் சேனல் ஆகும். அதாவது அவர்களது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து பார்க்க வேண்டும்.
கேபிள் டி.வி. பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்கிற சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், கேபிள் டி.வி குறித்த தகவல் சொல்வதில் வரலாற்றில் தனி இடம் பெறப்போகிறது!
கேபிளின் கதை | ஆசிரியர்: கேபிள் சங்கர் | விலை ரூ.100 | நாகரத்னா பதிப்ப வெளியீடு
புத்தகம் வாங்க : இங்கே சுட்டவும்
நீல நிற சொற்கள், புத்தக மேற்கோள்களாகும்.
Thursday, November 15, 2012
விஜயிஸம் இல்லாத துப்பாக்கி | வலைமனை
"துப்பாக்கி சூப்பரா இருக்கு. விஜய் படம் மாதிரியே இல்ல." என முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
கேபிள்ஜி, "அதனாலதான் நல்லாயிருக்கு" என ரிப்ளையிட்டிருந்தார்.
உண்மை! விஜய், டைரக்டர்ஸ் ஹீரோவாக தனது கேரியரில் இரண்டாம் இன்னிங்ஸை நிதானமாக துவக்கி வெற்றிகரமாக ஆடி வருகிறார்.
என்னதான் காவலன், நண்பன் என துப்பாக்கிக்கு முன்னரே இரண்டு படங்களில் 'விஜயிஸம்' தென்படவில்லை என்றாலும், குருவி, சுறா, எறா, புறா என பெயர் கூட ஞாபகம் இல்லாத தொடர் விஜய் படங்களில் செமத்தியாய் நாம் அடி வாங்கி இருந்ததால் காவலன், நண்பன் முதலிய படங்களின் மூலம் ரிலீஃப் கிடைத்ததே தவிர நாம் ரிக்கவர் ஆகவில்லை.
ஆனால், துப்பாக்கி படம், விஜயிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாய் குணப்படுத்துகிறது. அமைதியாய், அழகாய், ஸ்மார்ட்டாய், க்யூட்டாய் என காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக காலத்தில் நம் வீட்டு சமத்துப் பிள்ளையாக பெயர் பெற்றிருந்த விஜயை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.
இதே படத்தில் 'விளம்பர தளபதி சூர்யா' நடித்திருந்தால், ஓவர் ஸ்மார்ட்னெஸ் சிரிப்புடன், சட்டையை கழற்றி வீசி சிக்ஸ் பேக்குடன் என சூர்யாயிஸத்தை தெணற தெணற அடித்திருப்பார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் விஜய்க்கும் நாம் முதலில் நன்றி சொல்லிக்கொள்வோம்.
எப்பொழுதும் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலும் நயாபைசாவிற்கு கூட தேறவில்லை. பாட்டு ஹிட்டடிக்குது படம் மொக்கை வாங்குதே என யோசித்து வேண்டுமென்றே ரிவர்ஸ் டெக்னாலஜியில் பாடல்களை மொக்கையாக இசையமைத்தாற் போலிருக்கிறது.
ஆங்.. அப்புறம் படத்தில் காஜல் இருக்கிறார். எனக்கென்னவோ மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி மஹதீராவிற்கு பிறகு காஜலுக்கு சரியான கேரக்டர் மட்டும் அல்ல சரியான காஸ்ட்யூம் கூட தரப்படவில்லையென்ற குறை இருக்கிறது.
எனர்ஜியான், ஒலிம்பிக், டி.என்.ஏ, விஞ்ஞானம் என பல விஷயங்களை கலக்கியெடுத்து கே.வி.ஆனந்த் மாற்றானிலும், ஜுடோ, பேட்மேன், அயன்மேன், சுத்தியல் என மிஸ்கின் முகமூடியிலும் வரிந்து கட்டிக்கொண்டு மானாவாரியாக கதையை கொத்து போட்டு வெத்து ஆக்கியது போல அல்லாமல் 'ஸ்லீப்பர் செல்ஸ்' என்கிற ஒரேயொரு டாபிக்கை தேசபக்தி கொண்ட கதாநாயகன் மூலம் சுவாரஸ்யமாகவும் சிம்பிளாகவும் குழப்பாமல் சொல்லி ஜெயித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இனிமேல் விஜய் படங்களிலும் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்து அவரது அடுத்த படத்தை சாமான்ய ரசிகரையும் எதிர்பார்க்கச் செய்ய வைத்த வகையில் துப்பாக்கி மாபெரும் வெற்றி பெறுகிறது!
வெல்கம் பேக் விஜய்! வி ஆர் வெயிட்டிங்!
Friday, October 5, 2012
Saturday, September 1, 2012
முகமூடி - பிளாக் எழுதுபவர்களுக்கான தண்டனை
முகமூடி குறித்து மிஷ்கின் சில மாதங்கள் முன்பு விகடனுக்காக அளித்த பேட்டியின் வைர வரிகளின் தொகுப்பு :
"முகமூடி என் சின்ன வயசுக் கனவு."
படுக்கும்போது பக்கத்துல சாமி படம் வச்சிக்கிட்டு தூங்குனா இதுபோல கெட்ட கனாலாம் வராதுன்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நீங்க வேணா டிரை பண்ணி பாருங்களேன்.
"அம்புலி மாமா பாலமித்ரா முத்து காமிக்ஸ் படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக் கை மாயாவி இப்பவும் என் கனவில் வர்றான்."
எப்படியும் இன்னைக்கு முகமூடி பார்த்திருப்பான்..நாளையில இருந்து வர மாட்டான்... நீங்க நிம்மதியா தூங்கலாம்.
"முகமூடி ஸ்க்ரிப்ட் முடிச்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன்."
ஸ்க்ரிப்ட்டா.. அதெல்லாம் இருக்கா படத்துல.. கடைசி வரைக்கும் கண்ணுல காட்டவே இல்லீங்களே சார்...
"இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம்."
அதை விட நீங்க எடுக்கிறதை பார்க்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..
"கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர்க்கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்."
(இதை மட்டும் கில்லி விஜய் குரலில் படிக்கனும்) : அதுக்கு பேரு யோசிச்சுப்பார்த்தேன் இல்ல புவி... பேட்மேன் படம் பார்த்தேன்!
"ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி மாதிரி ஏதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை."
அதுக்காக இவ்ளோ சாகசமா சார் வைப்பீங்க படத்துல...? இதய நோய் உள்ளவர்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கெல்லாம் டிஸ்க்கிளைமர் போட வேணாமா...? ஆனாலும் ஸ்பைடர்மேன்லாம் உங்க சூப்பர் ஹீரோ மொட்டை மாடியில குரங்கு பல்டி அடிக்கிற சாகசத்தை பார்த்தான்... தானே சிலந்தி கயிறு விட்டு அதுல தூக்கு மாட்டி செத்தே போவான்..
"நான் செய்ததிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கிற படம் முகமூடிதான்"
சில பேருடைய சந்தோஷத்தில் பலருடைய துக்கம் இருக்கிறதுன்னு யாரோ அறிஞர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
"ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இது அதுமாதிரியான படம் இல்லை. புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? முகமூடி சோடா மூடின்னு தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க."
ப்ளாக்ல எழுதற எங்க மேல ஏதாச்சும் கோவம் இருந்தா நீங்க பேசி தீர்த்திருக்கலாம். ஆனா இப்படி ஒரு படத்தை எடுத்து எங்களை பார்க்க வச்சது ரொம்ப பெரிய தண்டனை சார்..
"ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை."
ஐ.. இது தெரியுமே. நீங்க மிஷ்கின்!
"எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன்"
ஆனாலும் இவ்ளோ தெளிவு தமிழ்நாடு தாங்காது சார் ... எதுக்கும் உங்க 3டி கண்ணாடியை கொடுங்க.. அதைப் போட்டு பார்த்தாலாவது தெளிவா தெரியுதா பாக்கேன்...
"இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும்."
அட.. இதை மொதல்லயே சொல்ல வேணாமா.. நான் தியேட்டர்ல வெச்சுல்ல படத்தை பார்த்தேன்.. அதான் எனக்கு புரியலையா??
"சூப்பர்மேன் டிரெஸ் தயாரிக்கச் துணி செலவே 45 லட்சத்தைத் தாண்டுச்சு."
எதுங்க அந்த நீல சொக்காவா..? சத்தியமா எங்க அக்கா பையன் ஸ்கூல் பேன்சி டிரஸ் காம்பெடிஷனுக்கு இதே டிரஸ்ஸை வடபழனில வாடகைக்கு எடுத்தேன். 150 ரூவால்ல முடிஞ்சிருச்சு.
"ஜீவாவுக்கு இன்னும் மரியாதையையும் பெருமையையும் இந்தப் படம் சேர்க்கும்"
அது தெரியலை.. பட் பாவமும் பரிதாபமும் ரொம்ப சேர்க்கும்.
"ஜீவா இந்த புராஜெக்ட்டுக்குள் முழுசா இறங்கிட்டார். என் மேல் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார்."
தெரியாம இறங்கிட்டேன்.. யார்னா தூக்கி விடுங்கய்யான்னு கதறியிருப்பாரே..
(பார்க்க மேலே இணைக்கப்பட்டுள்ள படம்!)
"இனி, ஒவ்வொரு வருஷமும் ஒரு படம் அவர்கூட பண்ணலாம்கிற அளவுக்கு நட்பு வளர்ந்திருக்கு."
இப்போ போன் பண்ணிப்பாருங்க.. உங்க நம்பர் பார்த்ததும், 'சஸ்கிரைபர் கெனாட் பி ரீச்ட்'னு அவரே குரல் மாத்தி லேடீஸ் வாய்ஸ்ல பேசுவார்!!!!
________
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல. கருத்து சுதந்திரம் உள்ள இந்தியத் திருநாட்டில், மேல் உள்ள பேட்டியில் கூறப்பட்ட பொருளுக்கான விளம்பரத்தை நம்பி 120 ரூபாய் காசு கொடுத்து பொருளை வாங்கி அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கஸ்டமர் எழுதியது. (120 ரூபாய்க்கு ரசீதும் உள்ளது.)
Subscribe to:
Posts (Atom)




















